முன்னோக்கு

தொற்றுநோயும், இலாபங்களும் மற்றும் துயரத்தினதும் மரணத்தினதும் மீதான முதலாளித்துவ நியாயப்படுத்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைக்குப் பலவந்தமாக திரும்ப செய்வதையும் வணிகங்களையும் விரைவாக மீண்டும் திறப்பதையும் சட்டபூர்வமாக்க உதவும் வகையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் எரிச்சலூட்டும் மோசடியான "வழிகாட்டி நெறிமுறைகளின்" அறிவிப்பு, அமெரிக்காவுக்குள் உடல்நலனுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் மற்றும் COVID-19 தொற்றுநோயின் வேகத்தை எதிர்த்துப் போராடி மனித உயிர்களைக் காப்பாற்றுவதிலும் ஒரு திட்டமிட்ட ஒருங்கிணைந்த முயற்சியைக் குறித்த எந்தவொரு பகிரங்க பாசாங்குத்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் முடுக்கி விட்டு வரும் முன்கூட்டியே வேலைக்குத் திரும்புதல் என்பது எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கானவர்களின் மரணங்களுக்கு இட்டுச் செல்லும், பரிசோதனை மற்றும் தொற்றின் தடங்களை பின்தொடர்வதற்கான பாரிய வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புடன், கடுமையான சமூக விலகல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரவிருக்கும் முக்கியமான மாதங்களின் போது அது நீடித்தால் மட்டுந்தான் இத்தொற்றுநோயைத் தடுக்க கூடியதாக இருக்கும்.

ட்ரம்பின் அறிவிப்பை நியாயப்படுத்துவதற்கு மேற்கோளிடுவதற்கு எந்தவொரு விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வும் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அங்கே உள்ளவாறே எடுத்துரைக்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க தகவல்களும் கூட முற்றிலுமாக இல்லை. முன்னணி தொற்றுநோய் நிபுணர்கள் வெள்ளை மாளிகை பயன்படுத்தி வரும் புள்ளிவிபர மாதிரிகளின் செல்லுபடித்தன்மையை ஏற்கனவே பகிரங்கமாக சவால் விடுத்துள்ளனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சுகாதார புள்ளிவிபரங்கள் மற்றும் மதிப்பீடு அமைப்பின் முன்வரைவுகளைச் சுட்டிக்காட்டி, Fred Hutchinson புற்றுநோய் மையத்தின் தொற்றுநோய் துறை நிபுணர் Ruth Etzioni மருத்துவ இதழ் STAT க்குக் கூறுகையில், “IHME மாதிரி தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதே அதை ஒரு முன்கணிப்புக்கான கருவியாக நம்பக முடியாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது. அது கொள்கை முடிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதுடன் அதன் முடிவுகள் தவறாக பொருள் விளங்கப்படுத்தப்படுகின்றன என்பது நம் கண்களுக்கு முன்னால் ஒரு கேலிக்கூத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.”

இந்த தொற்றுநோய் பயங்கர எண்ணிக்கையில் மனித உயிர்களைப் பறித்து வருகிறது. ட்ரம்பின் அறிக்கைக்குப் பிந்தைய 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் இந்த COVID-19 கொரொனா வைரஸிற்கு 4,591 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் இறந்த 2,569 உயிரிழப்புகளை விட 75 சதவீதத்திற்கும் கூடுதலாகும். கடந்த மூன்று நாட்களில், தேசியளவிலான மரண எண்ணிக்கை 26,000 இல் இருந்து 36,000 ஆக அதிகரித்துள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கையை கணிசமானளவுக்கு குறைத்துக் கணக்கிடுகின்றன என்று பரவலாக கருதப்படுகிறது. இரண்டு வெவ்வேறு வயோதிபர் பராமரிப்பு மனைகளில் வயது முதிய நோயாளிகளின் சடலங்கள் கண்டறியப்பட்டிருப்பது உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கைக்கும் நிஜமான இறப்பு எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளியின் மிகவும் பீதியூட்டும் சான்றுகள் மட்டுமேயாகும். இந்த தருணத்தில், COVID-19 தொற்றுநோய் கண்டறியப்படாமல் உயிரிழப்பவர்களோ அல்லது இந்த தொற்றுநோய் சம்பந்தப்பட்டு உயிரிழப்பவர்களோ, மருத்துவமனைகளுக்கு வராமல் வெளியே உயிரிழப்பவர்களின் மீது நம்பகமான கணக்கு எதுவும் இல்லை.

இதுவொரு உலகளாவிய தொற்றுநோய். இதை எழுதிக் கொண்டிருக்கையில், அங்கே 2,216,000 நோயாளிகளும், 151,000 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த புள்ளிவிபரங்கள் அமெரிக்கா வழங்கிய புள்ளிவிபரங்களை விட அதிகமாகவே நம்பக்கூடியவையாக உள்ளன. முன்னர் அறிவிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அதிகப்படுத்தப்பட்டு ஏற்கனவே மீளத்திருத்தப்பட்டு வருகின்றன.

ட்ரம்பின் அப்பட்டமான அலட்சியமும் குண்டர் பாணியிலான தனிமனிதயியல்பும், பொதுமக்கள் முன்னிலையில் அவர் தோன்றும் அனைத்து நிகழ்வுகளிலும் மேலோங்கியுள்ள பொதுவான அருவருக்கத்தக்க சூழலும் மற்றும் சமூக வெறித்தனமும் இந்த வழிகாட்டல் பற்றிய இந்த அறிவிப்பிலும் உள்ளடங்கியிருந்தது. அவரின் கொள்கைகள் வெறுமனே தனிநபரின் கொள்கைகள் அல்ல. அந்த கொள்கைகளில் முன்வைக்கப்படும் குற்றவியல் வடிவம் ட்ரம்ப் சேவையாற்றும் அந்த வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நலன்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோயானது, வேறு அனைத்திற்கும் மேலாக, ஒரு பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் பிரதான நோக்கம் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைக் குறித்ததாக இருக்கவில்லை மாறாக நிதியியல் சந்தைகளின் நிலைகுலைவு, இலாபம் உறிஞ்சும் நிகழ்ச்சிப்போக்குக்கு ஏற்படும் தொந்தரவு, அத்துடன் நிச்சயமாக, செல்வந்த தட்டுக்களின் உறுப்பினர்களது தனிப்பட்ட செல்வவளத்தில் கணிசமான வீழ்ச்சி ஆகியவற்றைக் குறித்ததாக இருந்தது.

பெப்ரவரி மற்றும் மார்ச்சில், ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கமாகவே இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைத்துகாட்டிய அதேவேளையில் நிதித்துறை மற்றும் பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் 2008 நிதியியல் பொறிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பிணையெடுப்புகளையே விஞ்சிவிடும் அளவுக்கு பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பை வடிவமைத்து நடைமுறைப்படுத்த பிரதான வங்கிகளுடன் நெருக்கமான கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர்.

மார்ச் முதல் மூன்று வாரங்களின் போது, சர்வதேச அளவிலும் தேசியளவிலும் பொதுமக்கள் உடல்நலம் மீது இந்த தொற்றுநோயின் அதிகரித்த தாக்கமே செய்திகளில் நிரம்பி இருந்தன. பொதுமக்களின் கவனம் கடற்பயண கப்பல்களின் உள்ளோரின் துன்பங்கள் மீதும், இத்தாலியில் உயிரிழப்புகள் மீதும் மற்றும் வாஷிங்டன் மாநிலத்தில் இந்த தொற்றுநோய் குறித்த ஆரம்ப செய்திகள் மீதும் ஒருங்குவிக்கப்பட்டன. சமூக தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்துவதும் அத்தியாவசியமல்லாத வணிகங்களை நிறுத்துவதும் உடனடியான அவசியம் என்பது, ட்ரம்ப்பை தவிர, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

மார்ச் 19 இல், செனட்டில் “CARES சட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த நிதித்துறைக்குமான பிணையெடுப்பு வேகமாக நிறைவேற்றப்பட்டமை முழு ஒப்புதலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையில் காங்கிரஸில் உள்ள தங்களின் அரசியல் சேவகர்களால் நன்கு தகவல்களை அறிந்திருந்த பெருநிறுவன செயலதிகாரிகள், CARES சட்டம் இறுதியில் நிறைவேற்றப்பட்டதும் அதை தொடர்ந்து ஏற்படக்கூடிய பாரியளவிலான ஓட்டத்தை அனுமானிப்பதில் நிறுவன பங்குகளை பில்லியன் கணக்கில் வாங்கி விற்பதற்காக வோல் ஸ்ட்ரீட் சரிவை ஆதாயமாக்கி கொண்டார்கள்.

CARES சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, ஊடகங்களின் கவனம் வேலைக்கு திரும்புவதற்கான ஓர் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை நோக்கி திரும்ப தொடங்கியது. அங்கே எந்த தாமதமும் இருக்கவில்லை. ஊகவணிக மூலதனத்தின் பாரிய அதிகரிப்பு —டிஜிட்டல் முறையில் தோற்றுவிக்கப்பட்டு 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்— ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் பெடரல் ரிசர்வின் இருப்புநிலை கணக்கில் சேர்க்கப்பட இருந்தது. ட்ரில்லியன் கணக்கில் பெறப்பட்ட இன்னும் கூடுதல் கடன்களும் வரவிருக்கும் மாதங்களில் சேர்க்கப்படும். இறுதி பகுப்பாய்வில், இது நிஜமான மதிப்பில் உரிமைகோருவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, நிஜமான மதிப்பையோ தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு சக்தியைச் சுரண்டுவதன் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டாக வேண்டும். அரசு அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட ஊகவணிக மூலதனம் எந்தளவுக்கு அதிகமாக கடனை ஏற்படுத்துகிறதோ அந்தளவுக்கு இலாபத்தை உறிஞ்சுவதற்கான நிகழ்ச்சிப்போக்கின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளை வேகமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கையும் அதிகளவில் அவசரமாக இருக்கும்.

ஆகவே, மார்ச் 22 இல், CARES சட்டம் நிறைவேற்றப்படுவதை நோக்கி அதன் வழியில் சென்று கொண்டிருக்கையிலேயே கூட, நியூ யோர்க் டைம்ஸின் முன்னணி கட்டுரையாளர் தோமஸ் ஃபிரெட்மன் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார்: “நமக்குநாமே என்ன நரகத்தை ஏற்படுத்தி வருகிறோம்? நம் பொருளாதாரத்திற்கும் தான்? அடுத்த தலைமுறைக்கும் தான்?” என்று கூச்சலிட்டார். “இந்த குணப்படுத்தல் —சிறிது காலத்திற்கு இருந்தாலும் கூட—நோயை விட மோசமாக இருக்காதா?” என்றார்.

அந்த கடைசி வாக்கியம் ஒரு பிரச்சாரத்திற்கான முழக்கமாக மாறியிருந்ததுடன், அந்த பிரச்சாரம் அடுத்தடுத்து வந்த வாரங்களில் அதிகரித்தளவில் வலியுறுத்தலாக மாறியது. மனித உயிர்களின் பாதுகாப்பு பற்றிய பெருங்கவலைக்கு எதிரான வாதங்கள் இன்னும் அதிக ஆணவமாக வெளிப்பட்டன. இந்த தொற்றுநோய்க்கு ஒரு சிறந்த நடைமுறை விடையிறுப்பைத் தடுத்திருந்த சமூக-பொருளாதார நலன்களை ஆய்வுக்குட்படுத்துவதைக் கைவிட்டு விட்டு, டைம்ஸ் மனித துயரங்களால் கிடைக்கும் ஆதாயங்களை மெச்ச தொடங்கியது. “நாம் என்ன தான் விரும்பினாலும், துயரங்களை நம்மில் யாராலும் தவிர்க்க முடியாது,” என்று ஏப்ரல் 7 இல் கட்டுரையாளர் Emily Esfahani கருத்துரைத்தார். “ஆகவேதான் துயரப்படுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்,” என்றார்.

டைம்ஸ், ஏப்ரல் 11 இல், துயரங்கள் மற்றும் உயிரிழப்புகளின் ஆதாயங்களின் மீது இன்னும் அதிக கருத்துக்களைத் தொகுத்தளித்தது. “தொற்றுநோயும் கடவுளின் விருப்பமும்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் Ross Douthat, “துயரம் எவ்வாறு ஒரு தெய்வாதீனமான திட்டத்திற்குப் பொருந்துகிறது,” என்பதைப் பரிசீலிக்குமாறு வாசகர்களுக்கு அழைப்புவிடுத்தார். நியூ யோர்க் நகரின் New School இன் Simon Critchley எழுதிய மற்றொரு கட்டுரை, “எவ்வாறு மரணிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதை தத்துவமயமாக்குவதற்காக" என்று பிரகடனப்படுத்தியது. பாசாங்குத்தனமாக, Descartes, Boethius, More, Gramsci, Heidegger, Pascal, T.S. Eliot, Montaigne, Cicero, Dafoe, Camus, Kierkegaard மற்றும் Boccaccio ஐ கூட அதிகாரபூர்வமாக கையிலெடுக்கும் இந்த கல்வித்துறை தற்பெருமைவாதி —அவர்கள் அனைவரும் ஒரே பத்திரிகை கட்டுரையில் உள்ளடக்கப்படுகின்றனர்— அவரது வாசகர்களுக்கு, “மரணத்தை முகங்கொடுப்பதே நமது சுதந்திரத்திற்கும் உயிர்வாழ்வுக்குமான திறவுகோல்,” என்று ஆலோசனை வழங்குகிறார்.

துயரம் மற்றும் மரணத்தைக் குறித்த இத்தகைய ஆன்ம பிதற்றல்களின் அடியிலிருக்கும் கொடூரமான நடைமுறை திட்டம், டைம்ஸ் ஒழுங்கமைத்த ஒரு வட்ட மேசை காணொளி கருத்தரங்கின் வரிகளில் அப்பட்டமாக வெளிப்பாட்டைக் கண்டது. உடல்நல ஆய்வாளர்கள் 75 வயதைக் கடந்து நீண்டகாலம் வாழ நினைக்கக்கூடாது என்ற வாதிட்டதற்காக இழிபெயரெடுத்த Zeke Emanuel உம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிர்நெறிசார் அறிவியல் பேராசிரியர் பீட்டர் சிங்கரும் இதில் பங்கெடுத்திருந்தனர். இரண்டாவது நபர், உடல்-உளகுறைபாடுகளுள்ள மழலை குழந்தைகளுக்குக் கருணை கொலையைப் பரிந்துரைத்த இவரது பரிந்துரை 20 ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழக பதவியில் நியமிக்கப்பட்டதற்காக எதிர்ப்பு போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது. அவர் பிரின்ஸ்டனில் நியமிக்கப்பட்ட போது உருவான சர்ச்சை குறித்து இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அது விரிவாக எழுதியிருந்ததால், சிங்கரின் கண்ணோட்டங்கள் மீது டைம்ஸிற்கு நன்றாக பரிச்சயம் உண்டு.

“அமெரிக்காவை மீண்டும் தொடங்குவது என்பது மக்கள் மரணிப்பார்கள் என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே அதை நாம் எப்போது செய்வது? ஐந்து சிந்தனையாளர்கள் ஒரு நெருக்கடியில் தார்மீக வாய்ப்புகளைச் சிந்திக்கிறார்கள்,” என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஏப்ரல் 10 இன் அதன் இணையவழி பதிப்பில் அந்த காணொளி கருத்தரங்கின் எழுத்து வடிவத்தைப் பிரசுரித்தது.

அந்த எழுத்து வடிவத்தில் அதன் அறிமுகத்தில், டைம்ஸ் வலியுறுத்துகையில், அங்கே "உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கும் இடையிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள்" இருப்பதை ஏற்றுக் கொள்வது அவசியமாகும் என்று வலியுறுத்தியது. குறுகிய காலத்திற்கு இரண்டு நோக்கங்களும் ஒரேசேர செல்லக்கூடும் என்றாலும், “நீண்டகால ஓட்டத்தில், பொருளாதாரம் ஆழமாக பின்னடைவுக்குள் சரிந்து கொண்டிருப்பதால், வரவிருக்கும் மாதங்களில் வர்த்தகப் பரிவர்த்தனை மிகவும் அவசரமானதாக எழும் என்பதை ஒப்புக் கொள்வது முக்கியமாகும்" என்று குறிப்பிட்டது.

“வர்த்தகப் பரிவர்த்தனை" குறித்த அதன் பகுப்பாய்வில், டைம்ஸ், பொருளாதார நலன்கள் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்கள் மட்டுமே மற்றும், இந்த இலாபகர அமைப்புமுறை, உற்பத்தி சக்திகளின் தனியார் சொத்துடைமை மற்றும் பரந்த செல்வ வளம் ஆகியவை மாற்ற முடியாத நிலைபேறானவை என்ற கேள்விக்கிடமில்லா மூலக்கூற்றிலிருந்து நகர்கிறது. ஆகவே, “வர்த்தகப் பரிவர்த்தனை" என்பது, தவிர்க்கவியலாமல், மனித உயிர்களின் தியாகத்தை, குறிப்பாக உழைக்கும் மக்களின் உயிர்களைக் கோருகிறது.

ஓராண்டுக்கோ அல்லது 18 மாதங்களுக்கோ "அனைவருக்கும் உதவிப் பொதி" வழங்குவது சாத்தியமில்லை என்று சிங்கர் அறிவித்தார். “இதனால் தான் நாங்கள் கூறுகிறோம், ஆம், நாம் திறந்துவிட்டால் மக்கள் இறப்பார்கள் தான், ஆனால் திறந்துவிடாமல் இருப்பதன் விளைவுகள் அதை விட கடுமையாக இருக்கும், அதை எவ்வாறாயினும் செய்தே ஆக வேண்டும்.”

செயலதிகாரிகளையும் பங்குதாரர்களையும் காப்பாற்ற காங்கிரஸ் சற்று காலத்திற்கு முன்னர் தான் பல ட்ரில்லியன் டாலர்களை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கஜானாவுக்குள் பாய்ச்சியது என்ற உண்மையின் மீது டைம்ஸ் பேச்சாளர்களில் யாருமே கவனத்தில் கொண்டு வரவில்லை என்பது கவனிக்காமல் விடப்படுகிறது. அல்லது அமெரிக்காவில் அங்கே அண்மித்து 250 பில்லியனர்கள் இருக்கிறார்கள், அவர்களின் செல்வவளத்தின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 9 ட்ரில்லியனுக்கு நெருக்கமாக உள்ளது என்பதையோ அது குறிப்பிடவில்லை. இந்த செல்வ வளம் பறிமுதல் செய்யப்பட்டு அமெரிக்காவின் 100 மில்லியன் வறிய குடும்பங்களுக்குச் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 18 மாதங்களுக்கு மாதத்திற்கு 5,000 டாலர் வருவாய் வழங்கும்.

தனிநபர்கள் வசம் குவிந்திருக்கும் இந்த செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதென்பது —முற்றிலும் இது சட்டபூர்வமானதும், பாரிய சமூக நெருக்கடியின் உள்ளடக்கத்தில் அவசியமானதும் கூட என்கின்ற நிலையில்— இதுவொரு விருப்பத்தெரிவு இல்லை, டைம்ஸூம் அதன் பேச்சாளர்களும் இதை ஒரு தத்துவார்த்த சாத்தியக்கூறாக பரிசீலிக்கக்கூட தயாராக இல்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்பை நடைமுறை விடயமாக அதாவது முதலாளித்துவ தேவைப்பாடாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்கள்.

உயிரை இலாபகர அமைப்புமுறைக்கு அடிபணிய வைப்பது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. அது ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளாலும் ஓர் உலகளாவிய கோட்பாடாக பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது. சுவிஸ் ஆளும் வர்க்கத்தின் பிரதான குரலான Neue Zurcher Zeitung பத்திரிகையில் நேற்று ஒரு கட்டுரையை பிரசுரித்தது, அதில் அவர் பின்வருமாறு வினவியது:

நீங்கள் காலாகாலத்திற்கும் வாழ விரும்புகிறீர்களா? 1757 இல் கொலோன் போரில் சிப்பாய்கள் எதிரிகளுக்கு வழி விட்டபோது, பிரெட்ரிக் மாவீரர் அவர் சிப்பாய்களைப் பார்த்து கேட்ட கேள்வி இது. ஒருவர் ஒருபுறம் கொரொனா நோயாளிகள் மற்றும் உயிரிழப்பவர்களுக்கும் மறுபுறம் ஒட்டுமொத்தமாக மக்கள் மற்றும் ஏனைய பொதுவான நோய்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கும் இடையே சர்ச்சைக்குரிய உறவுகளைப் பார்வையில் எடுத்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

இங்கே நேரடியான அர்த்தத்தில் சில விடயங்கள் பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் இந்த பொருளாதார சீரழிவைப் பொறுப்பின்றி விரும்பி ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் உயிராபத்தான நோய் இழப்புகள் ஒட்டுமொத்த கேள்வியை எழுப்புகிறது. இதை கடுமையாக கூற விரும்பும் எவரொருவரும் இவ்வாறு கூறுவார்: வழமையான சூழல்நிலையில் கூடியகாலம் உயிர்வாழ்வாரென எதிர்பார்க்கப்படும் வயதான நபர்கள் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னரே இறப்பதைத் தடுப்பதற்காக நாம் பொருளாதார தற்கொலையைத் தேர்ந்தெடுத்தோம்.

வயதானவர்களையும் பலவீனமானவர்களையும் வாழத் தகுதியற்றவர்களாக ஏற்றுக் கொள்ளும், அறிவுறுத்தும் ஒரு கொள்கை ஏப்ரல் 13 இல் ஜேர்மன் செய்தியிதழ் Der Spiegel இல் வெளியான ஒரு நீண்ட கட்டுரையில் வெளிப்பாட்டைக் காண்கிறது. “நாம் உயிரிழந்து கொண்டிருப்பவர்களைக் குறித்து பேச வேண்டியுள்ளது,” என்று தலைப்பிடப்பட்ட அக்கட்டுரையை பசுமை கட்சியுடன் இணைந்துள்ள ஒரு சமூகவியலாளர் பேர்னார்ட் ஜில் எழுதியிருந்தார்.

விஞ்ஞான அபிவிருத்தி மீதான ஒரு பலமான தாக்குதலில், ஜில் குறிப்பிடுகையில், “நுண்கிருமிகளை வெளிப்படுத்திக் காண்பித்து, கையாளவும் அவ்விதத்தில் கட்டுப்படுத்தவும் செய்த மாவீரர்களாக" தலைசிறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளான Louis Pasteur மற்றும் Robert Koch ஐ கொண்டாடும் "வீரஞ்செறிந்த சொல்லாடலை" கண்டித்தார். ஜில் பின்வருமாறு எதிர்க்கிறார்:

இந்த உயிரின் படைப்பு தொடர்பான வரலாற்றில், நுண்கிருமிகள் வேற்றுகிரகவாசிகளாக எம்மை அச்சுறுத்துகின்றன, இதனால் அவை அழிக்கப்பட வேண்டியவை. “அவற்றின்" உயிர்களுக்கு எதிராக "நமது" உயிர்கள் — விஞ்ஞானபூர்வ அறிவும், சுகாதாரத்தில் இறுதி வெற்றிக்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு சக்தியும் கிருமிகள் அற்ற உலகில் நீடித்த உயிர்வாழ்வும் என்பதை அர்த்தப்படுத்துகின்றது.

ஆனால் இதுவொரு இயற்கை மீறல். ஜில் அறிவிக்கிறார், “நம் வாழ்க்கை,” “மரணமின்றி சிந்திக்கப்படுவதில்லை.” ஆனால் "எல்லா வழிவகைகளையும் கொண்டு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த” முயல்பவர்கள், "எல்லா வழிவகைகளையும் கொண்டு உயிரிழப்பவர்களுக்காகவும் போராடுகிறார்கள்."

“மரணிப்பதை ஒரு இயற்கை நிகழ்வுபோக்காகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்டரீதியில் வலி நிறைந்ததாக இருக்கும் என்றாலும் தொலைதூரத்தில் வைத்து பார்த்தால் புதிய உயிர்களுக்கு இடமளிக்கின்றனர்" என்று பார்க்கும்—"பெருந்திரளான மக்களுக்கு எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்" வேலைத்திட்டத்தின் அடிப்படையில்— இந்த தொற்றுநோயை இயற்கையான பரவலாக ஏற்றுக் கொள்வதை ஜில் அறிவுறுத்துகிறார்.

நாஜி தலைவர் அடோல்ப் ஹிட்லர் அவரின் பேர்லின் பதுங்கிடத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதம் தற்கொலை செய்து கொண்ட அவரின் வாதங்களுடன் பொருந்தும் இந்த வாதங்கள் ஏற்கனவே ஏற்கப்பட்டிருக்கும்.

ஆழ்ந்த பிற்போக்குத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற கருத்துக்கள் ஜேர்மனியில் சுழன்று வருகின்றன. ஆனால், அமெரிக்காவுக்கு குறைவின்றி, அங்கேயும் அவை நோய்வாய்ப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் தேவைகளில் இருந்து எழுகின்றன.

அதே பதிப்பு, ஜில்லுக்கு ஒரு களத்தை வழங்கும் Der Spiegel, ஜேர்மன் வாகனத் தொழில்துறை நீண்டகால அடைப்பைத் தாங்காது என்று எச்சரிக்கிறது.

எந்தளவுக்கு நீண்ட நாட்களுக்கு கொரோனா நெருக்கடி நீள்கிறதோ, நிறுவனங்களுக்கு சில திட்டமிட்ட பாதுகாப்பை வழங்குவதற்காக இறுதியில் அடைப்பைத் தளர்த்துவதற்கான ஒரு தேதியைக் குறிப்பிடுமாறு அந்தளவுக்கு பலமாக தொழில்துறையிலிருந்து அரசியல்வாதிகளுக்கு அழைப்புகள் அதிகரிக்கும்...

குறிப்பாக வாகனத் தொழில்துறை பலப்பரீட்சையை முகங்கொடுத்து வருகிறது இதற்கு வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லை. ஒரு பொறிவைத் தடுப்பதற்காக, இந்த வசந்த காலத்தில் நிறுவனங்கள் மீண்டும் ஆலைகளைத் திறக்க வேண்டியுள்ளது.

உலகளாவிய போட்டித்தன்மையின் முக்கிய பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, Der Spiegel தொடர்ந்து குறிப்பிடுகிறது:

அங்கே புவிசார்மூலோபாய நலன்களும் உள்ளன. ஐரோப்பாவில் நிறுவனங்களின் செயலதிகாரிகள் ஐரோப்பிய சந்தையை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு எதிர்பலமான பொருளாதார சக்திகளாக ஸ்தாபிப்பதற்காக அதை பலப்படுத்த விரும்புகிறார்கள்.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனா உலகின் ஏனைய நாடுகளை விட வேகமாக இந்த நெருக்கடியிலிருந்து மேலெழுந்து வருவதாக தெரிகிறது என்பதால் இது அனைத்தையும் விட மேலான உண்மையாக உள்ளது.

COVID-19 கொரோனா வைரஸ் ஒரு விஞ்ஞான-மருத்துவப் பிரச்சினையுடன் மட்டும் மனிதயினத்தை எதிர்கொள்ளவில்லை, மாறாக ஓர் அரசியல் மற்றும் சமூக சவாலையும் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கங்களின் விடையிறுப்பானது, அதன் நலன்கள் மனித வளர்ச்சிக்கும் மற்றும் மனிதகுல உயிர்பிழைப்புக்கே கூட பொருத்தமற்றது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த தொற்றுநோய்க்கு எதிராக அது தயாரிப்பு செய்திருக்க தவறியதிலும், இந்த வெடிப்பு தொடங்கியதும் கொரோனா வைரஸிற்கு அது குழப்பமாகவும் ஒழுங்குமுறையின்றியும் விடையிறுக்க தவறியதில் இருந்தும், ஒவ்வொரு சமூக தேவையையும் அதன் சொந்த பொருளாதார நலன்களுக்கு அது கீழ்படிய வைத்திருப்பதிலும், இந்த நோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய விடையிறுப்புக்கான அனைத்து சாத்தியக்கூறையும் தேசிய அடித்தளத்தில் அது நாசமாக்கியிருப்பதிலும், சமூக கருணைக்கொலை குறித்த பிற்போக்குத்தனமான நவ-பாசிசவாத வேலைத்திட்டத்தை அது பகிரங்கமாக நியாயப்படுத்துவதனாலும், ஆளும் வர்க்கம் சோசலிசத்திற்கான அவசியத்தை எடுத்துக் காட்டி வருகிறது.

மனிதகுலம் உயிர்பிழைக்க வேண்டுமானால், சமூகத்தை பணப் பைத்தியம் பிடித்த முதலாளித்துவ உயரடுக்குகளுக்குக் கீழ்படிய வைத்திருப்பது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

Loading