முன்னோக்கு

அமெரிக்க செல்வந்த தட்டு மரணங்களுக்கு சார்பாக முடிவெடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரம்ப் நிர்வாகம் இந்த தொற்றுநோய் சம்பந்தமாக, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் பத்தாயிரக் கணக்கான மக்கள் இறப்பதில் போய் முடியும் —அதில் தான் போய் முடியுமென அதற்கு தெரியும்— ஓர் அணுகுமுறையைத் தழுவி உள்ளது என்பது அதிகரித்தளவில் வெளிப்படையாக உள்ளது.

அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் 100,000 பேர் உயிரிழப்பார்களென அவர் இப்போது எதிர்பார்ப்பதாக ஞாயிறன்று இரவு ட்ரம்ப் சர்வசாதாரணமாக அறிவித்தார், இது சுமார் 60,000 என்ற அவரின் முந்தைய மதிப்பீடுகளில் இருந்து அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் ஒன்றை பேரம்பேசுவது போல உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, ட்ரம்ப் அறிவிக்கையில், “நான் 65 ஆயிரம் என்று கூறியிருந்தேன், இப்போது நான் 80 அல்லது 90 ஆயிரம் என்று கூறுகிறேன். இது உயர்கிறது, இது வேகமாக உயர்கிறது. ஆனால் இன்னும் அதிகரிக்கலாம், நீங்கள் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்லாது அளவின் மட்டத்தின் மிகக்குறைவான முடிவிலேயே இருக்கப்போகின்றது,” என்றார். “பாருங்கள், நாம் 75, 80 ஆயிரத்தில் இருந்து 100 ஆயிரம் நபர்களை இழக்க இருக்கிறோம்,” என்பதையும் தனியாக சேர்த்துக் கொண்டார்.

அதாவது, ட்ரம்பின் சொந்த கணக்குப்படி, இன்னும் கூடுதலாக 40,000 நபர்கள் உயிரிழப்பார்கள். இந்த வைரஸைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்தால், குழந்தைகள், வாழ்க்கை துணை, குடும்பங்கள், அன்புக்குரியவர்களுடன் 40,000 பேர் உயிரிழக்காமல் செய்யலாம்.

உண்மையில் இது மிக அதிக குறைமதிப்பீடாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் மனிதவள சுகாதார சேவைகள் துறை (HHS) இன் உள்அலுவலக அறிக்கை ஒன்று திங்கட்கிழமை நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வந்தன. இந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு 200,000 புதிய நோயாளிகள் உருவாவார்கள், ஜூன் 1 வாக்கில் நாளொன்றுக்கு 3,000 உயிரிழப்புகள் ஏற்படலாமென அந்த அறிக்கை முன்கணிக்கிறது.

நாள்தோறும் நிஜமான மரணங்கள் அரசின் முன்கணிப்புகளைத் தொடர்ந்து கடந்து சென்றுள்ளதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகின்ற நிலையில், இது உயிரிழப்புகளின் எண்ணிக்கையை நூறாயிரக் கணக்கிற்குள் தள்ளும். அந்த விகிதத்தில் பார்த்தால், ஒரு மில்லியனில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் இந்த கோடை இறுதிக்குள் உயிரிழக்கலாம், ஓராண்டுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கலாம்.

ஏப்ரல் மாத மத்தியில் வெளியிடப்பட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு உத்தியோகப்பூர்வ முயற்சியையும் கைவிடுவதைக் குறிக்கிறது என்பதை CDC புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஏப்ரல் 17 இல் உலக சோசலிச வலைத்தளம் எச்சரித்ததைப் போல, வெள்ளை மாளிகையும் ஆளும் வர்க்கமும் "பாரியளவில் உயிரிழப்புகளை வழமையாக்க" முயன்று வருகின்றன, “இதில் கோவிட்-19 வெடிப்புகள் வியாபாரம் செய்வதற்கான விலையாக பார்க்கப்படுகின்றன.”

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்ளார்ந்த கணக்கீடுகள் துளி துளியாக வெளியிடப்பட்டு வருகின்றன. மார்ச் மாத இறுதியில், அமெரிக்க உயிரிழப்பு எண்ணிக்கை வெறும் 4,000 ஐ கடந்திருந்த போது, ட்ரம்ப் அறிவிக்கையில், மொத்தம் 100,000 உயிரிழப்புகள் என்பது அவர் நிர்வாகத்தின் "சிறந்த வேலையாக" இருக்கும் என்றார். இன்று, உத்தியோகப்பூர்வ உயிரிழப்புகளின் எண்ணிக்கை 70,000 ஐ கடந்துள்ளதுடன் நாளொன்றுக்கு 1,750இக்கும் அதிகமான சராசரி வேகத்தில் அதிகரித்து கொண்டே உள்ளது.

ஆனால், இதுவே கூட கோவிட்-19 தொற்றுகளாலும் மற்றும் இந்த தொற்றுநோயால் மருத்துவத் துறை மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தில் இருந்தும் விளைந்துள்ள உயிரிழப்புகளின் கணிசமானளவுக்கு குறைந்த மதிப்பீடாக உள்ளது. சராசரி வாராந்தர உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும் கூடுதலாக அதிக உயிரிழப்புகள், பல மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகளை விடவும் ஏறத்தாழ இரண்டு மடங்கிற்கும் கூடுதலாகும். இதற்கும் மேல், புளோரிடா மற்றும் டென்னஸ்ஸி, ஏற்கனவே மீண்டும் திறந்துவிடுவதற்கு நகர்ந்துள்ள இவ்விரு மாநிலங்களும் செயலூக்கத்துடன் அவற்றின் உத்தியோகப்பூர்வ உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மறைத்து வருகின்றன.

மீண்டும் குறிப்பிட்டாக வேண்டும்: பத்தாயிரக் கணக்கானவர்களின் அதிக உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்று தெரிந்தே வெள்ளை மாளிகை வேண்டுமென்றே நனவுப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய கொள்கைகளில் ஒரு சமூகவெறித்தனம் உள்ளது என்றாலும், அது ஓர் ஈவிரக்கமற்ற வர்க்க தர்க்கத்தைப் பின்தொடர்கிறது. வெள்ளை மாளிகையின் அடாவடித்தனம் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

இந்த தொற்றுநோய் இல்லையென்றால் அதீத கண்காணிப்பின் கீழ் வந்திருக்கக்கூடிய மற்றும் மக்களின் எதிர்ப்பைச் சந்தித்திருக்கக்கூடிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆளும் உயரடுக்கிற்கு இந்த தொற்றுநோய் சாக்குபோக்கை வழங்கி உள்ளது. கோவிட்-19 உருவாக்கிய நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால், செல்வந்தர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட 10 ட்ரில்லியன் டாலரை நியாயப்படுத்துவது சிக்கலாக இருந்திருக்கும். இதை ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி என ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஒருமனதாக ஆதரித்தது.

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், இந்த பிணையெடுப்பைப் பெற்றதும், எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பை உருவி எடுக்கும் வியாபாரத்திற்குள் திரும்ப நுழைய இதுவே சரியான தருணமாக உள்ளது.

இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஆளும் வர்க்கம் இரண்டே இரண்டு கவலைகளை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது.

முதலாவது, பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் தொழிலாளவர்களை எவ்வாறு மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்வது என்ற பிரச்சினை உள்ளது. பொருளாதார மிரட்டல் மற்றும் வறுமைப்படுத்தலே இங்கே விடையிறுப்பாக உள்ளது. இரவோடு இரவாக வேலையிலிருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான சம்பளம் ஒருபோதும் கிடைக்கவில்லை. பல மாநிலங்களும் வியாபார செயல்பாடுகள் மீதான அனைத்து தடைகளையும் நீக்கி வருகின்ற நிலையில், தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் அனைத்து உதவிகளும் வெட்டப்படும் அச்சுறுத்தலின் கீழ் அவர்கள் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்படுவார்கள்.

இரண்டாவது, தொழிலாளர்கள் உயிரிழப்புகளுக்கு நிறுவனங்கள் அவற்றின் பாகத்தில் சட்டப்பூர்வமாக பொறுப்பாகும் பிரச்சினை உள்ளது. ஏற்கனவே ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு டஜன் கணக்கானவர்கள் மரணித்துள்ள ஒரு மையமாக இறைச்சி வெட்டும் ஆலைகளைத் திறக்கவும் மற்றும் எந்தவொரு தொழிலாளர் மரணங்களுக்காக பெருநிறுவனங்கள் சட்ட நடைமுறைகளை எதிர்கொள்வதில் இருந்து பாதுகாக்கவும் உத்தரவிடுவதற்காக ட்ரம்ப் கடந்த மாதம் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலமாக திட்டநிரலை வகுத்தளித்தார்.

எதிர்காலத்தில் எந்தவொரு பிணையெடுப்பு பொதியும் அனைத்து முதலாளிமார்களுக்கும் ஈடு செய்யப்பட வேண்டுமென திங்கட்கிழமை செனட் சபை பெரும்பான்மையினர் தலைவர் மெக்கொன்னல் Fox News Radio இக்குத் தெரிவித்தார். “இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் தைரியமான மருத்துவத் துறை தொழிலாளர்கள் இருக்கிறார்கள், தங்களின் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடும் தொழில்முனைவோர்கள், என் பார்வையில், மீண்டும் திறந்து விடுவதென்ற அவர்கள் மேற்கொண்ட முடிவு பாதகமாக வேறு சிலரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று வாதிடும் … சந்தர்ப்பவாத சட்ட பிரச்சினைகளில் இருந்து பலமான பாதுகாப்புகளைப் பெறுவதற்குத் தகுதி உடையவர்களே,” என்றார்.

தங்கள் பணியாளர்களின் உயிர்கள் மீதான எந்த கடமைப்பாட்டில் இருந்தும் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொரோனா வைரஸ் அதன் வழியில் நாடெங்கிலுமான சமூகங்கள் மூலமாக சீரழித்தாலும் கூட வேலைக்குத் திரும்புவதும் வழமையான வாழ்க்கைக்கும் திரும்புவதும் பாதுகாப்பானதே என்ற எண்ணத்தை வழங்குவது, அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மற்றும் மரணங்கள் குறித்து முடிந்த வரை தகவல்களை மறைத்து வைப்பதுமே ஆளும் வர்க்கத்தின் இப்போதைய மூலோபாயமாக உள்ளது.

கோவிட்-19 ஆல் பட்டினியில் கிட அல்லது மரண அபாயத்தை எடு என்ற ஆளும் உயரடுக்கு முன்நிறுத்தும் மோசடி விருப்பத் தெரிவைத் தொழிலாளர்கள் நிராகரிப்பார்கள், நிராகரிக்க வேண்டும். இந்த "விருப்பத்தேர்வு" முதலாளித்துவ அமைப்புமுறையை ஒன்றும்செய்யவியலாது மற்றும் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களே இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பைக் கட்டளையிடும் என்பதை முதல்முகவுரையாக கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தினுள் எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு, பாதுகாப்பான வேலையிட நிலைமைகளை உறுதிப்படுத்தவும் மற்றும் அனைத்து அத்தியாவசியமல்லாத உற்பத்தியை மூடுதவற்காக போராடுவதற்கும் ஒவ்வொரு வேலையிடத்திலும் ஆலையிலும் சாமானிய தொழிலாளர்களின் சுயாதீனமான பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும். வேலையிடங்களை ஒழுங்கமைப்பதையும் செயல்படுத்துவதையும் முதலாளித்துவவாதிகளின் கரங்களில் விட்டு வைத்திருக்க முடியாது, இலாபங்களை திரட்டிக் கொண்டே இருப்பது மட்டுமே அவர்களின் ஒரே நலனாகும்!

இலாபத்தைக் கடந்து உயிர் வாழ்வுக்காகவும், இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட அனைத்து சமூக ஆதாரவளங்களையும் அணித்திரட்டும் விதத்தில் இந்த தொற்றுநோய்க்கு ஒரு விஞ்ஞானபூர்வ மற்றும் பகுத்தறிவார்த விடையிறுப்புக்காகவும் போராடுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் முயற்சி, தொழிலாளர்களை இன்னும் அதிகமாக நேரடியாகவும் பகிரங்கமாகவும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் மட்டும் மோதலுக்கு கொண்டு வரப் போவதில்லை, மாறாக கொள்கைகளைக் கட்டளையிட்டு வரும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு எதிராகவும் ,அதன் செல்வவளம் மற்றும் அதிகாரம் எதைச் சார்ந்துள்ளதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் கொண்டு வரும்.

Loading