மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் டிசம்பர் 9 திகதியன்று "பிரிவினைவாதத்திற்கு" எதிரான ஒரு வரைவு மசோதாவை அறிமுகப்படுத்துவார் என்று வெள்ளியன்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார். வெளிப்படையாக இஸ்லாமை இலக்காகக் கொண்டு முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தின் அரசியலமைப்பு-விரோத தன்மை மீது அதிகரித்துவரும் எதிர்ப்பை முகங்கொடுத்த அரசாங்கமானது அதற்கு பதிலாக அது மதசார்பின்மை பற்றிய ஒரு சட்டமாக சமர்ப்பிக்கப்படும் என்று செவ்வாயன்று அறிவித்தது.
21 ஆம் நூற்றாண்டு முழுவதும், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மதச்சார்பின்மையை பாதுகாக்கும் மறைப்பின் கீழ், மோசமான முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை ஊக்குவித்து வந்ததுடன், ஜனநாயக உரிமைகளை காலடியின்கீழ் போட்டு மிதித்தது. 2004 ஆம் ஆண்டில் இஸ்லாமிய தலைமறைப்புக்களை (headscarves) பொதுப் பள்ளிகளில் அணிய தடை விதித்த பின்னர், அது 2010 இல் பொது இடங்களில் பர்காவை (burqa) அணியத் தடை செய்தது. இந்தச் சட்டங்கள் மத விவகாரங்களில் அரசு நடுநிலைமையானது என்ற மதச்சார்பற்ற கொள்கையை கிழிக்கின்றன. அவர்கள் நூற்றுக்கணக்கான இளம் சிறுமிகளை பள்ளிகளிலிருந்து வெளியேற்றுமாறு கட்டாயப்படுத்தினர், மேலும் பர்கா அணிந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையை ஊக்குவித்தனர்.
அதன் "பிரிவினைவாத" மசோதாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸின் அரசாங்கத்தின் "மதச்சார்பற்ற" முகமூடிப் பிரச்சாரம் கழண்டுவிழுந்துடன், அதன் ஏகாதிபத்திய சார்பு மற்றும் பாசிசவகைப்பட்ட முஸ்லீம் விரோத முகத்தையும் வெளிப்படுத்துகிறது.
மக்ரோனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரைவு மசோதாவானது 1905 ஆண்டு மதச்சார்பின்மை சட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மற்றும் ஒரு பொலிஸ் அரசையும் நிறுவுகிறது. அது முஸ்லீம் மதத்தின் மீது நேரடி அரச கட்டுப்பாட்டையும், பிரெஞ்சு பிரதேசத்தை போலீஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள் முழுக் கண்காணிப்பையும் செயற்படுத்தவும், மேலும் உள்துறை அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்டபடி அனைத்து அமைப்புகளும் (associations) "குடியரசு மதிப்புகளுக்கு" விசுவாசத்தை தெரிவிக்க ஒரு உறுதிமொழியையும் எடுக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் பொலிசாரால் கடுமையாக துன்புறுத்தப்படும் இஸ்லாம் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர்கள் மீது ஒரு விரலைச் சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்ட அரசு விரும்புகிறது.
"தீவிர இஸ்லாம்" பிரான்சை கைப்பற்ற விரும்புவதாக குற்றம் சாட்டி, தீவிர வலதுசாரி முஸ்லீம்-விரோத வெறித்தனத்தின் மெல்லிய மறைக்கப்பட்ட பதிப்பை மக்ரோன் முன்வைத்துள்ளார். இஸ்லாத்தின் "ஆழமான நெருக்கடியானது இஸ்லாமிய பிரிவினைவாதத்தை" தூண்டுவதும்... இது குடியரசின் மதிப்புகளிலிருந்து மீண்டும் மீண்டும் வேறுபடுவதில் வெளிப்படுகிறது என்று அவர் அதைக் கண்டித்தார். "தீவிரவாதத்தை நிராகரிப்பதில், எடுத்துக்காட்டாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம்" மற்றும் ஒரு தீவிரமயமாக்கல் "சில நேரங்களில் ஜிஹாத்துக்கு வழிவகுக்கும்" என்று அவர் இஸ்லாத்தை குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்த தீவிரவாத இஸ்லாத்தில் உள்ளது… ஒரு வெளிப்படையான மற்றும் பிரகடனப்படுத்தப்பட்ட ஆசை, குடியரசின் சட்டங்களை மீறி ஒரு இணையான ஒழுங்கை உருவாக்குவதும், பிற மதிப்புகளை நிறுவுவதற்கும், சமூகத்தின் மற்றொரு அமைப்பை உருவாக்கி முதலில் பிரிவினைவாதியாக இருந்து, ஆனால் அதன் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதே இறுதி நோக்கமாகும். இதுதான் படிப்படியாக பேச்சு சுதந்திரம், மனசாட்சி, அவதூறு உரிமை ஆகியவைகளை நிராகரிக்க வழிவகுக்கிறது.”
2015 இல், முகமது பற்றிய கேலிச் சித்திரங்களுக்கு சார்லி ஹெப்டோவை பழிக்குப் பழி வாங்குவதற்காக இஸ்லாமிய அரசினால் (Islamic State) நடத்தப்பட்டது என்று கூறப்பட்ட அந்த இதழின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய குறிப்பைத் தவிர, இளம் பெண்கள் முகத்திரை (veils) அணிந்து செல்லும் தனியார் பள்ளிகளை மக்ரோன் கண்டித்தார்.
2015 பயங்கரவாத தாக்குதல்களைச் சுற்றியுள்ள உண்மைகள் குறித்து மக்ரோன் செவிட்டுக்காது போல் ஒரு மெளனத்தைக் கடைப்பிடித்தார். சிரிய அரசாங்கத்திற்கு எதிரான இஸ்லாமிக் அரசு ஆயுதக்குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் ஆதரவளித்ததோடு, அதே படைகளுக்கு லாபார்ஜ் சிமென்ட் கார்ப்பரேஷன் மூலம் நிதியளித்தபோதுதான் அவர்கள் இதற்குத் தயார்படுத்தப்பட்டார்கள். பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த அவரது குறிப்பு பொதுவாக இஸ்லாத்தை மிகக் கீழ்த்தரமாக்குவதில் நோக்கமாகக் கொண்டது, மேலும் குறிப்பாக தலைக்கவசம் அணியும் பெண்களை நோக்கமாகக் கொண்டது.
பெண்கள் தலைக்கவசம் அணிய அனுமதிக்கப்பட்ட இஸ்லாமிய பள்ளிகளை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று மக்ரோன் முன்மொழிந்தார், மேலும் மூன்று வயதிலிருந்தே அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் கட்டாயக் கல்வியைக் கோரினார். பிரான்சிற்கும் வெளிநாடுகளிற்கும் இடையிலான இஸ்லாத்திற்கான அனைத்து உத்தியோகபூர்வ மற்றும் நிதி தொடர்புகளையும் உடைக்கும் பொருட்டு பிரெஞ்சு இமாம்கள் மற்றும் பாடகர் குழுத் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நேரடியாக கட்டுப்படுத்தவும் அவர் அரசுக்கு அழைப்பு விடுத்தார்.
எவ்வாறாயினும், வலதுசாரி ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பதற்காக, தனியார் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு எந்தவொரு மேலதிக ஒழுங்குவிதிகளும் சமர்ப்பிக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டார். மக்ரோனின் கூற்றுப்படி, "எங்கள் குடியரசில் கல்விச் சுதந்திரம் முக்கியமானது, அதை கேள்விக்குள்ளாக்குவதும், நம் நாடு ஏற்கனவே அறிந்திருக்கும் உணர்ச்சிகளுக்கு புத்துயிர் கொடுப்பதும் கேள்விக்கு புறம்பானது, அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்."
மக்ரோனும், உள்துறை அமைச்சரும் தொழிலாள வர்க்கத்தின் பெரிய அளவிற்கு ஒடுக்கப்பட்ட அடுக்குகளை கொண்ட முஸ்லீம் சமூகத்தை, இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகின்றனர். இது மக்கள் தொகை மீது அதிகரித்த கண்காணிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அவர்கள், இரகசிய சேவையினால் நெருக்கமாக கண்காணிக்கப்படுவார்கள்.
2017 இல் தொடங்கி, "அரசின் ஒவ்வொரு மட்டத்தையும் உள்ளடக்கிய தீவிரமயமாக்கலை எதிர்ப்பதற்கான திட்டங்கள், அனைத்து அரசாங்கத் துறைகளையும், உள்ளூர் நீதிபதிகள் மற்றும் உளவுத்துறை சேவைகளின் மிகவும் திறமையான செயற்பாட்டையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்யும் வகையில், மிகவும் இரகசியமான முறையில் 15 பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று மக்ரோன் கூறினார். 212 குடிபானக் கடைகள், 15 பிரார்த்தனை இடங்கள், நான்கு பள்ளிகள் மற்றும் 13 கலாச்சார சங்கங்கள் மூடப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன, மில்லியன் கணக்கான யூரோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிடைத்த இந்த முடிவுகள், இந்த முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த நம்மை இட்டுச் செல்கின்றன" என்று மக்ரோன் கூறினார்.
பாதுகாப்பு நிறுவனங்கள் எங்கும் நிறைந்திருப்பதை உறுதி செய்யும் பணியை மக்ரோன் தனக்குத் தானே வழங்கிக்கொண்டார். அதாவது "எங்கள் முன்னோக்கு எளிதானது: ஒவ்வொரு அடுக்குமாடி கட்டிட தொகுதியின் நுழைவிடத்திலும், ஒவ்வொரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழும் குடியரசின் பிரசன்னத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
இது மக்கள் தொகை மீது உளவு பார்ப்பதன் மூலம் மட்டுமல்லாமல், அரச உதவியை நாடும் அனைத்து அமைப்புகளின் கடுமையான கருத்தியல் கோட்பாட்டுக் கட்டுப்பாட்டினாலும் அடையப்படும், இது மக்ரோனின் கூற்றுப்படி, “குடியரசு மதிப்புகளை மதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.”
உள்துறை அமைச்சகத்தால் வரையறுக்கப்படும் இந்த மதிப்புகளை மதிக்காத எந்தவொரு அமைப்பும் சாத்தியமான கலைப்பை எதிர்கொள்கிறது. "அரசாங்கத்தால் அமைப்புகளை கலைப்பதற்கான நோக்கங்கள் இதுவரை மிகக் குறைவாகவே இருந்தன, பயங்கரவாதம், இனவாதம் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. மனித கெளரவத்திற்கு மரியாதை இல்லாமை, அல்லது உளவியல் அல்லது உடல்ரீதியான அழுத்தம் போன்ற பிற நோக்கங்களுக்கும் அவை நீட்டிக்கப்படும்.” இந்த தெளிவற்ற மற்றும் அகநிலை நோக்கங்களின் அடிப்படையில் கலைக்கப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள், அனைத்து அரச உதவிகளையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
1905 சட்டத்தின் 115 வது ஆண்டு விழாவான டிசம்பர் 9 ஆம் தேதி டார்மனன் மசோதாவை அறிமுகப்படுத்துவதாக மக்ரோன் அறிவித்தார். இது 1905 ஆம் ஆண்டின் சட்டத்தின் தொடர்ச்சியாக தீவிர வலதுசாரி சட்டத்தை இயற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். ஆனால் பிரெஞ்சு முஸ்லிம்கள் மீதான இந்த வன்முறைத் தாக்குதல்களை, மதசார்பின்மை மற்றும் மத விவகாரங்களில் அரசு நடுநிலைமையானது அல்லது பிற ஜனநாயக உரிமைகளுடன் சமரசம் செய்வது சாத்தியமில்லை.
ட்ரேஃபுஸ் விவகாரம் (Dreyfus Affair) மற்றும் பிரான்சில் அரசியல் யூத-விரோதத்திற்கு ஏற்பட்ட முதல் தோல்வியை தொடர்ந்து 1905 சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தேவாலயம் மற்றும் Action Française போன்ற ஜனரஞ்சகக் கட்சிகள், 1894 ஆம் ஆண்டில், உளவு பார்த்ததாக ஒரு யூத அதிகாரியான கேப்டன் ஆல்பிரட் ட்ரேஃபுஸ் என்பவரை தவறாக அவர் மீது சாட்டிய குற்றச்சாட்டை ஆதரித்தன. ஜோன் ஜோரேஸ் (Jean Jaurès) தலைமையிலான சோசலிச தொழிலாளர் இயக்கம், ஒரு நீண்ட அரசியல் சமருக்குப் பின்னர் அவரை குற்றமற்றவராக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. தேசிய வெறுப்புகளைத் தூண்டுவதன் மூலம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்த முதலாளித்துவத்தின் முயற்சிகளை இது நேரடியாக நிராகரித்தது.
"மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மீது கலகப் போலீசாரை கட்டவிழ்த்துவிடுவதற்கு முன்னர், ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை பாராட்டிய மக்ரோன், ஒரு விரோத மரபில் செயற்படுகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் போது அவரது கொடிய வேலைக்கு மீண்டும் திரும்புதல் மற்றும் பள்ளிக்கு மீண்டும் செல்லுதல் நடவடிக்கையின் பின்னணியில், ஒரு மத சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும் அவரது முயற்சிகள், மத மற்றும் நிற வெறுப்பைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், 1905 சட்டத்தை நிராகரிப்பதற்கான சாத்தியத்தைத்தான் கருத்தில் கொண்டதாக மக்ரோன் தெளிவாக அறிவித்தார், இஸ்லாத்திற்கு "ஒரு மத உடன்படிக்கை அணுகுமுறையை" (“a concordat approach”) தான் கருதுவதாக வலியுறுத்தினார். 1905 ஆம் ஆண்டு சட்டத்தால் இரத்து செய்யப்பட்ட ரோமில் ஹோலி சீ (Holy See) மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இடையிலான 1801 உடன்படிக்கையை அவர் குறிப்பிட்டார்.
இந்த பிற்போக்குத்தனமான நடைமுறையை நிராகரித்ததற்காக அவர் கொடுத்த காரணம் என்னவென்றால், பிரெஞ்சு முஸ்லிம்களிடையே வளர்ந்து வரும் காலனித்துவ எதிர்ப்பு உணர்வை ஒரு ஒற்றுமை ஊட்டம்கொடுக்கும் என்று அவர் அஞ்சினார், அதே நேரத்தில் பாரிஸ் அதன் முன்னாள் முஸ்லீம் காலனிகளில் பலவற்றில் மாலி முதல் சிரியா வரை போர்களை நடத்தி வருகிறது. பிரான்ஸ், "ஒரு காலனித்துவ கடந்த காலத்தைக் கொண்ட மற்றும் அதிர்ச்சிகளை அனுபவித்த ஒரு நாடு... எங்கள் கூட்டு ஆன்மாவின் அடித்தளத்தை உருவாக்கும் உண்மைகளுடன்" என்று அவர் கூறினார். வெளிப்புற இஸ்லாமிய அதிகாரங்களுடனான எந்தவொரு உடன்படிக்கையும் ஆபத்தானது, மக்ரோனின் கூற்றுப்படி, அதாவது முஸ்லிம்களின் "காலனித்துவத்திற்கு பிந்தைய அதிதபெருமை" தான் என்று அவர் கூறிய கருத்தை தீவிரப்படுத்தியது.
இந்த நிகழ்வுகளானது பிரான்சிலும் சர்வதேச அளவிலுமுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக அமைகின்றன: அதாவது ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயக நிறுவனங்கள் நிலைகுலைந்து சரிந்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை மதிக்க மாட்டேன் என்று வாக்குறுதியளிக்கும் அதேவேளை, பிரெஞ்சு தேசியவாதத்தை முன்மொழிபவர்கள், பிரான்சில் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பும் ஒரு புரட்சிகர போராட்டத்தில் அணிதிரட்டப்பட்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டும்தான் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஒரே சக்தியாகும்.