மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக மைக் பொம்பியோவின் கடைசி நடவடிக்கைகளில் ஒன்றில், இவ்வாரம் அவர் சீனாவின் முஸ்லீம் வீகர்ஸ் இன சிறுபான்மை மக்களை அந்த ஆட்சிக் கையாண்ட விதத்தை "இனப்படுகொலையாக" முத்திரை குத்தினார் — இது சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் போருக்குத் தயாரிப்பு செய்து வரும் பிரச்சாரத்தின் பாகமாக உள்ள ஒரு பொய்யான மற்றும் பாசாங்குத்தனமான அறிவிப்பாகும்.
புதிய பைடென் நிர்வாகமும் ஏறத்தாழ முழுமையாக இந்த உயர்ந்தளவில் ஆத்திரமூட்டும் மொழியை ஆமோதித்துள்ளது. பைடெனின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில், சீனா மீது ட்ரம்பை விட கடுமையாக இருக்கப்போவதை எடுத்துக்காட்ட முயன்றபோதே, அவர் ஏற்கனவே வீகர்ஸ் மக்களுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) நடவடிக்கைகளை "இனப்படுகொலையாக" முத்திரை குத்தியிருந்தார்.
இதேபோல, இவ்வாரம் அவரின் செனட் சபை வேட்பாளர் விவாதத்தின் போது, வெளியுறவுத்துறை செயலருக்கான பைடெனின் விருப்பத்தெரிவான ஆண்டனி பிளிங்கென் சீனாவுக்கு எதிரான ட்ரம்பின் ஆக்ரோஷமான எதிர்ப்புக்கு ஆதவை வெளிப்படுத்தினார். வீகர்ஸ் மக்கள் மீதான இனப்படுகொலை என்று கூறப்படுவதன் மீது சீனாவை தாக்கிய பொம்பியோவின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட போது, அவர் திட்டவட்டமாக அதில் உடன்பட்டார்.
ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" உடன் தொடங்கி, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்ட சீனாவுக்கு எதிரான போர் முனைவை பைடென் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என்பதை இத்தகைய அறிக்கைகள் உறுதியாக எடுத்துக்காட்டுகின்றன. ஆழ்ந்த பொருளாதார அரசியல் நெருக்கடி மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றால் தூண்டிவிடப்பட்ட சமூக நெருக்கடி ஆகியவற்றில் சிக்கியிருந்தாலும் கூட, அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் ஒட்டுமொத்தமாக, அதன் கையிலிருக்கும் எல்லா வழிவகைகளைக் கொண்டும், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்குச் சீனா சவால்விடுப்பதைத் தடுக்க தீர்மானகரமாக உள்ளது.
எந்தவொரு துணுக்கு ஆதாரமும் காட்டாமல், பொம்பியோ அவர் அறிக்கையில் அறிவிக்கையில், “சீனக் கட்சி-அரசு" தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாகவும், “வீகர்ஸ் மக்களை அழிக்கும் திட்டமிட்ட முயற்சியில்" ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை எதேச்சதிகாரமாக தடுப்புக்காவலில் வைத்திருப்பது, பலவந்தமாக கருத்தடை செய்வித்தல், சித்திரவதை மற்றும் ஏனைய ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உட்பட, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதாக அவர் பெய்ஜிங் மீது குற்றஞ்சாட்டினார்.
இந்த கூற்றுக்களில் ஒன்று கூட நிரூபிக்கப்பட்டவை இல்லை. ஜின்ஜியாங்கில் பலவந்தமாக அடைக்கப்பட்டிருப்பவர்களாக அமெரிக்கா காட்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, ஒரு சிறிய விளக்கமோ அல்லது ஆதாரமோ இல்லாமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. செனட்டர் மார்கோ ரூபியோ போன்ற சீன-விரோத வெறியர்கள் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சபை நிர்வாகக் குழு கடந்த வாரம் வெளியிட்ட வருடாந்தர சீன அறிக்கை அந்த எண்ணிக்கையை 1.8 மில்லியனாக குறிப்பிடுகிறது — அந்த எண்ணிக்கை எவ்வாறு ஒரு மில்லியனில் இருந்து இவ்வளவு தாவியது என்பதற்கு எந்தவொரு குறிப்பும் வழங்காமல் தன்னிச்சையாக முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் விமர்சனபூர்வமின்றி முடிவில்லாமல் மறுசுழற்சி செய்யப்படும், பொம்பியோ மற்றும் ஏனைய சீன-விரோத பிரச்சாரகர்களின் அறிக்கைகள், அமெரிக்க வீகர்ஸ் கூட்டமைப்பு (American Uyghur Association) மற்றும் உலக வீகர்ஸ் சபையை (World Uyghur Congress) செயல்படுத்தி வரும் பிரபல, பெரும் செல்வசெழிப்பான, வெளிநாடு வாழும், வலதுசாரி கம்யூனிஸ்ட் விரோத கல்வித்துறைசார் பிரமுகர்களின் ஆதாரமற்ற வாதங்கள் மீதான நம்பமுடியாத ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டுள்ளன, இவ்விரு அமைப்புகளுமே சிஐஏ முன்னிலை அமைப்பான ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையிலிருந்து (National Endowment for Democracy) நிதியுதவி பெறும் அமைப்புகளாகும்.
இதுபோன்றவொரு "வல்லுனர்,” ஜேர்மன் கல்வியாளர் அட்ரியன் ஜென்ஸ், இவரின் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் மேற்கோளிடப்படுகின்ற நிலையில், இவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் வலதுசாரி சிந்தனைக் குழாம் வலையமைப்பில் சுழல்பவராவார், இந்த வலையமைப்பில் ஜேர்மனியில் உள்ள கலாச்சாரம் மற்றும் வேதாந்தத்திற்கான (Theology) ஐரோப்பிய பள்ளி மற்றும் கம்யூனிச விரோத பிரச்சாரத்தை இட்டுக்கட்டும் வாஷிங்டனில் உள்ள வகுப்புவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு அமைப்பு ஆகியவை உள்ளடங்கும். ஜென்ஸின் ஒருதலைப்பட்சமான ஆய்வறிக்கைகள் சமீபத்திய காங்கிரஸ் சபை அறிக்கையில் மேற்கோளிடப்பட்ட ஆதாரங்கள் என்று கூறப்படுபவைகளில் பெரிதும் இடம் பெறுகின்றன.
பெய்ஜிங் ஆட்சி அதன் பொலிஸ்-அரசு அணுகுமுறைகளுக்கு இழிபெயரெடுத்துள்ளது, மேலும் முஸ்லீம் வீகர்ஸ் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களிடையே நிலவும் பிரிவினை உணர்வை ஒடுக்க முயலுகையில் ஜின்ஜியாங்கில் அது ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகத்திற்குப் பொறுப்பாகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்திற்கும் மேலாக சீனா உள்ளடங்கலாக இந்த பெருந்தொற்று தொடர்ந்து எண்ணிக்கையில் அதிகரித்து வருகையில், மற்றும் சமூக பதட்டங்கள் அதிகரித்து வருகையில், பெய்ஜிங் ஆட்சியின் பரந்த அரசு எந்திரம் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க திருப்பிவிடப்படுகின்றன.
ஆனால், ட்ரம்ப் மற்றும் பொம்பியோவை தொடர்ந்து, பிளின்கென் மற்றும் பைடெனுக்கு ஜின்ஜியாங் வீகர்ஸ்களின் ஜனநாயக உரிமைகள் மீதோ, நிச்சயமாக சீனத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதோ சிறிதும் அக்கறை இல்லை, இவர்கள் மீதான சுரண்டல் தான் அமெரிக்க பெருநிறுவனங்களின் மிகப்பெரும் இலாபங்களுக்கு ஆதாரமாக உள்ளது. மாறாக, இதர பிறவற்றைப் போலவே, இந்த அமெரிக்க "மனித உரிமைகள்" பிரச்சாரமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்க நிர்வாகங்கள், சவூதி அரேபியாவின் எதேச்சதிகார முடியாட்சி போன்ற அதன் கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளின் அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவாறு, அதன் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், அத்துடன் நவ-காலனித்துவ போர்களை நியாயப்படுத்த மீண்டும் மீண்டும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுக்களை தம்பட்டமடித்துள்ளன. அனைத்திற்கும் மேலாக, அதன் 2003 ஈராக் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத படையெடுப்பில் ஒரு மில்லியன் ஈராக்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போன்ற கொடூரமான குற்றங்களுக்கு வாஷிங்டனில் யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லை.
குறிப்பாக "இனப்படுகொலை" என்ற இந்த குற்றச்சாட்டு விசித்திரமாக உள்ளது. ஜின்ஜியாங்கில் CCP என்ன துஷ்பிரயோகங்கள் நடத்தி வந்தாலும், அது வீகர்ஸ் மக்களை அடியோடு அழிப்பது அல்லது கொத்துகொத்தாக படுகொலை செய்வதில் ஈடுபடவில்லை. குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமைமீறல்களை இனப்படுகொலை என்று விவரிப்பதன் மூலம், அந்த வார்த்தைக்குப் பொருத்தமாக இருக்கக்கூடிய நாஜி மனிதப்படுகொலை போன்ற 20 ஆம் நூற்றாண்டின் குரூர குற்றங்களைச் சிறுமைப்படுத்துவதும், அந்த சொல்லின் அர்த்தத்தைக் குறைத்துக் காட்டுவதாகவும் உள்ளது.
“இனப்படுகொலை" என்ற குற்றச்சாட்டு ஒரு போர் பிரகடனத்திற்கு நிகரானதாகும். உண்மையில், 1999 இல், சேர்பியா மற்றும் அதன் மக்களை அழித்து வெள்ளமென மரணங்களை ஏற்படுத்திய மாதக்கணக்கில் நீண்ட ஒரு குண்டுவீச்சைத் தொடங்குவதற்கு சாக்குப்போக்காக, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் கொசோவா மக்கள் மீதான சேர்பிய "இனப்படுகொலை" என்ற மோசடியான குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தின. முக்கிய மூலோபாய பால்கன் பிரதேசங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதே அதன் நோக்கமாக இருந்தது.
இதேபோல, கடந்த காலத்தில் தாலிபான்கள் சம்பந்தமாக செய்ததைப் போலில்லாமல், ஜின்ஜியாங்கில் வீகர்ஸ் மக்கள் மீது கவனத்தை ஒருமுனைப்படுத்துவது என்ற அமெரிக்காவின் முடிவு அதன் மூலோபாய பரிசீலனைகளுடன் பிணைந்துள்ளது. சீனாவின் மேற்கில் தொலைதூரத்திலுள்ள அந்த மாகாணம் மத்திய ஆசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு அருகாமையில் இருப்பதுடன், அதன் சொந்த எரிசக்தி ஆதாரவளங்களையும் கொண்டுள்ளது. சீனாவைச் சுற்றி வளைப்பதற்கான அமெரிக்க முயற்சிகளை எதிர்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் ஒரே இணைப்பு ஒரே பாதை முனைவுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கான பாதையாகவும் விளங்குகிறது.
இன்னும் பரந்தளவில் பார்த்தால், அமெரிக்கா, சீனாவைப் பலவீனப்படுத்தி இறுதியில் அதை உடைக்கும் ஒரு முயற்சியில், அது வெறுமனே ஜின்ஜியாங் குறித்து மட்டுமல்ல மாறாக ஹாங்காங், திபெத் மற்றும் மங்கோலியா சம்பந்தமாகவும் அதன் மனித உரிமைகள் மீதான போலி பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.
ஒபாமா நிர்வாகத்துடன் தொடங்கிய இந்த மோதல் ட்ரம்ப் நிர்வாகத்தால் எல்லா தரப்பிலிருந்தும் தீவிரப்படுத்தப்பட்டது — சீனாவுக்கு எதிராக கடுமையான வர்த்தகப் போர் நடவடிக்கைகளைத் திணித்தமை, தென் சீனா மற்றும் கிழக்கு சீனா கடல்களில் அமெரிக்க கடற்படையின் பல ஆத்திரமூட்டல்களை அதிகரித்தமை, தாய்வானுக்கு அதிகளவில் ஆயுதங்கள் விற்பனை, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைத் தழுவிய, “ஜனநாயகங்களின்" நாற்கர இராணுவக் கூட்டணியை நோக்கிய நகர்வுகள் ஆகியவை அதில் உள்ளடங்கும். அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படைகளில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பிரதேசத்தில் நிலைநிறுத்தும் பணி, முதலில் ஒபாமாவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இது, நிறைவடைந்துள்ளது.
பைடென், இத்தகைய நடவடிக்கைகளில் எதுவொன்றையும் திரும்ப பெறாமல், சீனாவை நேருக்கு நேராக எதிர்கொள்ள இன்னும் கூடுதலாக கூட்டணிகளையும் பங்காண்மைகளையும் ஒன்றுதிரட்டும் அவரது உத்தேசத்தைத் தெளிவுபடுத்தி உள்ளார். ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்களின் கீழ் குணாம்சப்பட்டிருந்த ஈவிரக்கமற்ற வெளியுறவுக் கொள்கைகள் பைடென் கீழும் தொடரப்படும், இது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு முற்றுமுதலான போர் மற்றும் உலகளாவிய பேரழிவின் அபாயத்தைத் தீவிரப்படுத்துகிறது.