ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது இலங்கை நீதிமன்றம் கடுமையான பிணை நிபந்தனைகளை விதிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

புதன்கிழமை, மத்திய இலங்கையின் ஹட்டனில் உள்ள நீதவான் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட 22 ஓல்டன் தொழிலாளர்களுக்கு பிணை வழங்கியுள்ள போதிலும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களில் பலர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். தோட்ட முகாமையாளர் சுபாஷ் நாராயணனை தாக்கியதாக அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் விதிக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறை பிணை நிபந்தனைகள் பின்வருமாறு:

· ஒரு தோட்டத் தொழிலாளியின் சராசரி மாத ஊதியத்தை விட கூடுதலான, 15,000 ரூபாய் (76.34 டொலர்) ரொக்கப் பிணை.

· இரு உறவினர்களின் சரீரப் பிணை. அவர்கள் ஒவ்வொருவரும் பிரதேச கிராம அலுவலரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

· மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக் கிழமையும் ஓல்டனுக்கு அருகிலுள்ள மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று சந்தேக நபர்கள் பதிவேட்டில் கையொப்பமிடுதல்.

பிணை வழங்கப்பட்ட தொழிலாளர்கள் அவர்களது வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. அவர்களிடம் கடவுச் சீட்டு இல்லையென்றால், அதை உறுதிப்படுத்தும் சத்தியப்பிரமாண கடிதத்தை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓல்டன் தோட்டத்தில் லயன் வீடுகள் (WSWS Media)

குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களில் 10 பேர், பெப்ரவரி 18 அன்று எட்டு பேரும் மார்ச் 1 அன்று இரண்டு பேருமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) உதவியுடன் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 12 தொழிலாளர்களை செவ்வாய்க்கிழமை இ.தொ.கா. பொலிசில் ஒப்படைத்தது. மறுநாள் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் முழு பட்டியலையும் இ.தொ.கா.வின் உதவியுடன் பொலிசும் ஓல்டன் தோட்ட நிர்வாகமும் உருவாக்கின. அடுத்த விசாரணை ஏப்ரல் 28 அன்று நடைபெற உள்ளது.

தங்களது நியாயமான உரிமைகளுக்காக வெறுமனே போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை தோட்ட கம்பனிகளும் பொலிசும் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தியுள்ளன. எந்தவொரு பிணையும் வழங்குவதற்கு தோட்ட உரிமையாளர்களின் வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததோடு, தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், திருடர்கள் போல் நடந்துகொண்டதாகவும், சொத்துக்களை அழித்ததாகவும் கண்டனம் செய்தார்.

தொழிலாளர் தரப்பு சட்டத்தரணி நேரு கருணாகரன், இந்த கூற்றுக்களை எதிர்த்து, தொழிலாளர்கள் தலைமறைவாகி இருக்கவில்லை, மாறாக தாங்களே நீதிமன்றத்தின் முன் வந்துள்ளனர், என விளக்கினார். ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் "சட்டவிரோதமாக ஒன்றுகூடல்" மற்றும் தோட்ட முகாமையாளருக்கு "கடுமையான காயத்தை" ஏற்படுத்தியமைக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளதுடன் முகாமையாளர் தாக்கப்பட்டதற்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென மறுத்துள்ளனர். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், "கடுமையான காயத்தை" ஏற்படுத்தியமைக்கு ஏழு ஆண்டுகள் வரையும் மற்றும் "சட்டவிரோத ஒன்றுகூடலுக்கு" ஆறு மாதங்கள் வரையும் சிறையில் அடைக்கப்படலாம்.

புதன்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபை, “தோட்டப்புறங்களில் பாதுகாப்பு” பற்றி கலந்துரையாட திட்டமிட்டது.

தோட்டப்புற வன்முறை என்று கூறப்படுபவையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தோட்ட உரிமையாளர்கள் ஆயுதங்களும் ஆயுதப் பயிற்சியும் கோருவதால், இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, முன்னாள் ரியர் அட்மிரலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொலிஸ் ரோந்து உள்ளிட்ட தோட்டங்களில் "கூடுதலான பாதுகாப்பு" கோரி மார்ச் 3 அன்று சுமார் 500 தோட்ட துறைமார் ஹட்டனில் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

பாதுகாப்புச் சபை இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதா, என்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. உயர்மட்ட அமைப்பில் நடவடிக்கைகள் பொதுவாக இரகசியமானவை என்றாலும், குறித்த விவாதங்கள், கைது செய்யப்பட்ட ஓல்டன் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் அடக்குமுறை பிணை நிபந்தனைகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

கடுமையான சிறைத் தண்டனைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் உட்பட, ஓல்டன் தொழிலாளர்கள் மீதான கொடூரமான அரச அடக்குமுறையானது, முதலாளிமாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக இப்போது போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களையும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரையும் அச்சுறுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.

அரசாங்கம் மற்றும் தோட்ட உரிமையாளர்களின் கூற்றுக்களுக்கு மாறாக, சம்பள உயர்வு கோரி பெப்ரவரி 2 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை கட்டவிழ்த்துவிட்டது ஓல்டன் நிர்வாகமே ஆகும். தோட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூளை கொண்டு செல்வதை தொழிலாளர்கள் தடுத்தபோது, அவர்களை முகாமையாளர் அடித்தார். அதில் ஒரு பெண் தொழிலாளி மோசமாக காயமடைந்தார்.

முகாமையாளரின் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மறுநாள் ஓல்டன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக (டொலர் 5.00) உயர்த்தக் கோரி பெப்ரவரி 5 அன்று இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய ஒரு தேசிய வேலை நிறுத்தத்திலும் இணைந்துகொண்டனர்.

பெப்ரவரி 5 வேலைநிறுத்தம், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் வறிய மட்ட ஊதியத்தை அதிகரிக்க மறுத்ததை எதிர்த்து, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் கோபத்தை தணிப்பதற்காக இ.தொ.கா. எடுத்த முயற்சியாகும். இ.தொ.கா.வும் அதன் தலைவரான தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளாகும்.

ஓல்டன் முகாமையாளர், பெப்ரவரி 5 வேலை நிறுத்தத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடந்த ஓல்டன் தொழிலாளர்களின் வேலைநிறுத்ததை முறியடிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். தேயிலை கொழுந்துகளை வேறொரு தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக அவர் முயற்சித்தார். பெப்ரவரி 17 அன்று அவரது பங்களாவுக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்துடன் தொழிலாளர்கள் இந்த ஆத்திரமூட்டலை எதிர்த்தனர். இந்த சம்பவத்தையே வன்முறை என்று பொய்யாக குற்றம் சாட்டுவதற்கு நிர்வாகம் பற்றிக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் பகுதியினரான தோட்டத் தொழிலாளர்கள், 2015 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மூலம் 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தை கோரி வருகின்றனர். இந்த போராட்டங்கள் இ.தொ.கா. மற்றும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களால் தொடர்ச்சியாக காட்டிக் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்களுடனும் முதலாளிகளுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தித்திறன் அதிகரிப்பையும் உற்பத்தி செலவின குறைப்பையும் கோருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், தோட்ட உரிமையாளர்கள் வருமான பகிர்வு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்த வருமானப்-பகிர்வு முறையின் கீழ், தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகள் ஒதுக்கப்படுகின்றன. அவை முழு குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட வேண்டும். கம்பனி, உரம் மற்றும் உபகரணங்கள் போன்ற பொருட்களின் விலையை கழித்துக்கொண்டு, அதன் இலாபத்தை எடுத்துக் கொண்ட பின்னர், அறுவடையில் இருந்து தொழிலாளர்களுக்கு "வருமானத்தின் ஒரு பங்கு" வழங்கப்படுகிறது.

தோட்ட உரிமையாளர்கள் சில தோட்டங்களில் இந்த முறையை திணிக்க முயன்றபோது, இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வது சாத்தியமில்லை என்றும், தற்போதுள்ள ஓய்வூதியங்களை இழக்க நேரிடும் என்றும் அறிந்துகொண்ட பின்னர், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாத தொடக்கத்தில், இராஜபக்ஷ அரசாங்கம் 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தை வர்த்தமாணியில் அறிவித்தது. இதில் அடிப்படை ஊதியம் 900 ரூபாயும் 100 ரூபாய் கொடுப்பனவும் அடங்கும். பெருந்தோட்டக் கம்பனிகள் இதை உடனடியாக நிராகரித்ததுடன், கொழும்பு புதிய 1,000 ரூபாய் சம்பளத்தை விதித்தால், வருடாந்திர உத்தரவாத வேலை நாட்களைக் குறைப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளன.

சமீபத்திய மாதங்களில், சில தோட்டங்கள், அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களை தோட்ட மேற்பார்வையாளர்களாக நியமிக்கத் தொடங்கியுள்ளன. மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் தொலைதூர பிரதேசமான ராகலவில் உள்ள மாகுடுகல மற்றும் கிலாந்தவன தோட்டத்தில் இராணுவ மேற்பார்வையாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதாக தமிழ் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 8 அன்று, தோட்டத்தின் சில பகுதிகளில் தேயிலை உற்பத்தியைக் குறைக்க நிர்வாகம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும், வேலை நிறுத்தத்துக்கான உண்மையான காரணம், இராணுவ சிப்பாய்களை நியமிப்பதற்கு எதிரான தொழிலாளர்கள் எதிர்ப்பதாகவே தெரிகிறது.

எவ்வாறாயினும், இராஜபக்ஷ ஆட்சியும் தோட்ட முதலாளிகளும் தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் அதிகரித்து வரும் கோபம் மற்றும் தொழில்துறை நடவடிக்கை குறித்து மட்டும் கவலைப்படுவதில்லை, மாறாக சுகாதாரம், ரயில்வே மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் வளர்ந்து வருவதையிட்டும் விழிப்படைந்துள்ளது. வளர்ந்து வரும் அமைதியின்மை மற்றும் கொவிட்-19 இன் சமூக தாக்கத்தால் பீதியடைந்த இராஜபக்ஷ ஆட்சியும் ஆளும் உயரடுக்கும், சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு தயாராகி வருகின்றன.

தோட்டங்களில் அதிகரித்து வரும் அரச அடக்குமுறையானது அரசியல் பொலிஸ்படையாக செயல்படும் இ.தொ.கா.வின் துரோகத்தை மட்டுமன்றி ஏனைய அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாய தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், அல்லது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட எந்தவொரு தோட்டத் தொழிற்சங்கமும், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அரச சூழ்ச்சிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்க்கவில்லை.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக திரும்பப் பெறவும், அனைத்து ஓல்டன் தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும், சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வரும் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அனைவருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஆதரவு அறிக்கைகளை இங்கே அனுப்பி வையுங்கள்.

Loading