அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் தேசிய இயக்குனர் மரியா ஸ்வார்ட்டுக்கு ஒரு பகிரங்க கடிதம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

May 22, 2021

மரியா ஸ்வார்ட்

தேசிய இயக்குனர்

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள்

அன்புடன் செல்வி. ஸ்வார்ட்,

மே 17 அன்று, உலக சோசலிச வலைத் தளம், முந்தைய வாரத்தில் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) உறுப்பினர்கள் ட்விட்டர், அறிக்கைகளை பரப்பி மற்றும் மீம்ஸ்களை இடுகையிட்டு அக்டோபர் புரட்சியின் தலைவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் 1940ஆம் ஆண்டு படுகொலையை கொண்டாடியதை பற்றி குறிப்பிட்டிருந்தது.

எரிக் லண்டன் இதுபற்றி எழுதிய அறிக்கையின்படி, இந்த பதிவுகள் மற்றும் மறு ட்வீட்ஸில் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுக்கள் (DSA) இன் அரசியல் அனுபவமற்ற உறுப்பினர்கள் அல்ல. மாறாக, லண்டன் எழுதியது போல:

ட்ரொட்ஸ்கியின் படுகொலையைக் கொண்டாடும் DSA இன் உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அலுவலக உறுப்பினர்கள் மற்றும் அதன் இளைஞர் பிரிவின் (YDSA) தலைவர்கள், கிளைத் தலைவர்கள், பல்கலைக்கழக வளாக கழகங்களின் தலைவர்கள், முக்கிய DSA இன் வலையொளி பரப்புபவர்கள், அத்துடன் கார்டியன் மற்றும் DSA க்களுடன் இணைந்த ஊடக நிறுவனங்களான ஜாக்கோபின் போன்ற பத்திரிகைகளும் உள்ளன."

இந்த முன்னணி DSA உறுப்பினர்களில்:

1. Nickan Fayyazi, YDSA இன் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், UC பார்க்கிளே பிரிவின் உபதலைவர்.

2. Jake Colosa, நியூ யோர்க் நகர DSA இன் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்.

3. Alex Lawson, வேர்மொன்ட் நகர DSA இன் ஒழுங்கமைப்பாளர்.

4. Honda Wang, கீழ் மான்ஹெட்டன் DSA இன் ஒழுங்கமைப்பாளர் குழு அங்கத்தவர்.

5. Kenzo Shibata, சிக்காகோவின் ஒரு முக்கிய DSA இன் உறுப்பினர்.

6. Brandon Henriquez, DSA இன் சிலிக்கோன் வலி கிளையின் உபதலைவர்.

7. Nate Knauf, DSA இன் தேசிய தேர்தல் குழுவின் அங்கத்தவர்.

8. Guy Brown, DSA இன் தேசிய அரசியல் கற்பித்தல் குழு உறுப்பினர் மற்றும் நோர்த் கரோலினாவினல் அவர்களின் உபதலைவர்.

9. Blanca Estevez, DSA இன் தேசிய அரசியல் குழு உறுப்பினர்.

10. Nate Stewart, YDSA தேசிய ஒழுங்கமைப்பு குழு உறுப்பினர்.

11. Alexander Hernandez, DSA இன் குடியேற்ற உரிமைகள் குழுவின் உபதலைவர்.

12. Austin Binns, தேசிய தேர்தல் குழு உறுப்பினர்.

13. Cole Schenley, பென் சில்வானியா, ஏரெரி நகர கிளையின் உபதலைவர்.

14. Kayleen Pena, நியூயோர்க் நகர DSA இன் ஒழுங்கமைப்பு குழுவின் உறுப்பினர்.

15. Michael Lumpkin, லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தொழிலாளர் குழுவின் உறுப்பினர்.

இந்த ட்ரொட்ஸ்கி எதிர்ப்பு பிரச்சாரத்தில், DSA க்களின் முன்னணி உறுப்பினர்களின் ஈடுபாடானது, ஆயிரக்கணக்கான DSA இன் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்ட அதன் காங்கிரஸின் அங்கத்தவரான ஒக்காசியோ-கோர்ட்டெஸை உலக சோசலிச வலைத் தளம் விமர்சித்ததற்கு இது ஒரு ஒருங்கிணைந்த பிரதிபலிப்பாக இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நியாயமான வாதங்களுடன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பதிலளிக்க முயற்சிப்பதை விட, DSA க்களின் தலைவர்கள் அரசியல் ஆபாசத்தின் நிலைக்கு இறங்கினர். வாஷிங்டன் டி.சி.யின் ஒரு முக்கிய DSA உறுப்பினர் பென் டேவிஸின் ட்வீட்டில், ட்ரொட்ஸ்கியை பின்னால் இருந்து பனிக்கோடாரி மூலம் தாக்க கொலையாளி தயாராவது பற்றிய வரைபடம் இடம்பெற்றது. இது 1936 இல் சோவியத் ஒன்றியத்தில் கட்டவிழ்த்துவிட்ட கொலை பயங்கரத்திற்கு ஒப்புதல் அளிக்க ஸ்ராலின் பயன்படுத்திய வார்த்தையான, “சீர்குலைப்பாளர்களை அழி” என்ற தலைப்பைச் சேர்த்தன் மூலம் டேவிஸ் தூண்டுகிறார்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை, 1936 மற்றும் 1940 க்கு இடையில் சோசலிச தொழிலாள வர்க்கத்தையும் புத்திஜீவிகளையும் குறிவைத்த கொடூரமான அடக்குமுறையின் உச்சக்கட்டமாகும். சோவியத் ஒன்றியத்திற்குள், ஸ்ராலின் தனது ஆட்சிக்கு எதிரான சோசலிச எதிர்ப்பை ஒழிப்பதற்கான முடிவின் விளைவாக சுமார் ஒரு மில்லியன் மரணதண்டனைகள் நிகழ்ந்தன. பாதிக்கப்பட்டவர்களில் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, அக்டோபர் புரட்சியிலும் சோவியத் குடியரசின் ஆரம்ப ஆண்டுகளிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த அனைவருமே அடங்குவர். ஸ்ராலினிச பயங்கரம் முக்கிய சோவியத் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களின் உயிரைக் கொன்றது.

சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அப்பால், ஜி.பீ.யூ (GPU) கொலை எந்திரம் ஸ்பெயினில் ஆயிரக்கணக்கான சோசலிஸ்டுகளை கொன்றது. இதில் POUM கட்சியின் தலைவர் ஆண்ட்ரூ நின் (சித்திரவதை செய்யப்பட்டார்) மற்றும் ட்ரொட்ஸ்கியின் செயலாளர் எர்வின் வொல்வ் உம் அடங்குவர். முதலாளித்துவ மக்கள் முன்னணி அரசாங்கத்தின் மீதான சோசலிச எதிர்ப்பாளர்களின் மீது ஸ்ராலினிச அடக்குமுறையின் மூர்க்கத்தனம், ஸ்பெயினின் உள்நாட்டுப் போரைப் பற்றிய பேர்னெட் பொல்லோட்டன் (Burnett Bolloten) இன் ஆய்வில் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, ஜோர்ஜ் ஓர்வெல்லின் Homage to Catalonia என்ற நூலும் இதைப் பற்றி இன்னும் விபரமாக குறிப்பிடுகின்றது.

பிரான்சில் GPU, ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் மற்றும் நான்காம் அகிலத்தின் செயலாளர் ருடோல்ப் கிளெமொன்ட் ஆகியோரை படுகொலை செய்தது. ஸ்ராலினிச கொலைகள் அமெரிக்காவிலும் கூட நீட்டிக்கப்பட்டன. மாஸ்கோ விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜூலியட் போயண்ட்ஸ் (Juliet Poyntz) 1937 இல் நியூ யோர்க் நகரில் கடத்தப்பட்ட பின்னர், மீண்டும் ஒருபோதும் அவரைக் காணவில்லை. 1943 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற இத்தாலிய-அமெரிக்க அராஜகவாத தலைவரும் ஸ்ராலினிசத்தை எதிர்த்தவருமான கார்லோ ட்ரெஸ்கா (Carlo Tresca) நியூயோர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

DSA அதன் வரலாற்றை அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் அவர்களின் நன்கு அறியப்பட்ட மற்றும் அடிப்படை அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நோர்மன் தோமஸ் (Norman Thomas) உட்பட அதன் மிக முக்கியமான தலைவர்கள் பலர் மாஸ்கோ வழக்குகளை எதிர்த்தனர். தத்துவஞானி ஜோன் டுவி தலைமையில், மாஸ்கோ வழக்குகள் தொடர்பான விசாரணை ஆணையத்தை நிறுவுவதற்கு அவர்கள் ஆதரவளித்தனர். இந்த ஆணைக்குழு, விரிவான விசாரணைகள் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் விசாரித்த பின்னர், ட்ரொட்ஸ்கி குற்றவாளி அல்ல என்று அறிவித்து, மாஸ்கோ வழக்குகள் ஒரு போலியானதாக கண்டனம் செய்தது.

சோசலிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ராலினிஸ்டுகள் கடுமையாக கண்டித்தனர். அவர்களின் தாக்குதல்களின் முக்கிய இலக்குகளில் நோர்மன் தோமஸும் இருந்தார். மார்ச் 18, 1938 இல் ஆற்றிய உரையில், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய ஸ்ராலினிச வால்பிடி ஏர்ல் ப்ரோடர் (Earl Browder), தோமஸ் “ஹிட்லரிடம் சரணடைந்து ட்ரொட்ஸ்கியுடன் இணைந்தார் என்று அறிவித்தார். நோர்மன் தோமஸின் அரசியல் சீரழிவு உட்பட இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளையும் மாஸ்கோ வழக்குகள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.” என்றார்.

DSA கடுமையான அரசியல் பிரச்சினைகளில் உள்ளது. அதன் தலைமையில் ஸ்ராலின் மற்றும் அவரது சர்வாதிகார அதிகாரத்துவ ஆட்சி செய்த கொடூரமான குற்றங்களுக்கு தங்கள் ஐக்கியத்தை அப்பட்டமாக அறிவிக்கும் நபர்கள் அடங்குவர். இதை வரலாற்று அறியாமையின் விஷயமாக மட்டும் வெறுமனே விளக்கமுடியாது. ட்ரொட்ஸ்கி எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக ஊக்குவிக்கும் நபர்கள் அரசியலில் புதியவர்கள் அல்ல.

உண்மையில், எரிக் லண்டன் தனது கட்டுரையில் ஆவணப்படுத்தியுள்ளபடி, இந்த நபர்களில் பலருக்கு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புகள் உள்ளன. அது அமெரிக்க கம்யூனிச எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்தியத்தின் கோட்டையாகும். அதன் அரசியல் மூலோபாயவாதிகள், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவ சார்பு ஜனநாயகக் கட்சியிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க முற்படும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஒரு வலிமையான எதிரியாகவே கருதுகிறது. ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியால் தீவிரமயமாக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தம்மை நோக்கி ஈர்க்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சாத்தியத்தை கண்டு அது அஞ்சுகிறது. பைடென் நிர்வாகத்தை ஒகாசியோ-கோர்ட்டெஸ் பாதுகாப்பதைப் பற்றி உலக சோசலிச வலைத் தளம் விமர்சித்ததற்கு கிடைத்த பரந்த அடிப்படையிலான பிரதிபலிப்பு இந்த சாத்தியத்தின் திறனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அவர்களின் பிரச்சாரத்தின் இன்றியமையாத அரசியல் நோக்கம்,

1) DSA க்குள் உள்ள அரசியல் சூழலை ஸ்ராலினிசத்திலிருந்து கையகப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான மார்க்சிச எதிர்ப்பு அசுத்தத்துடன் விஷமூட்டிக்கொள்வது.

2) கம்யூனிச எதிர்ப்பு, பேரினவாத மற்றும் வெளிப்படையாக கூறுவதானால் லியோன் ட்ரொட்ஸ்கியை நிராகரிக்க பயன்படுத்தப்படும் யூத விரோத கருத்துக்களால் ஈர்க்கப்படும் சமூகத்தின் பின்தங்கிய மக்களை DSA ஐ நோக்கி ஈர்ப்பது. ட்ரொட்ஸ்கி மீதான DSA தலைவர்களின் தாக்குதல்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட ட்வீட்களிலிருந்து ஆராயும்போது, பிரச்சாரம் உங்கள் அமைப்பைச் சுற்றி மிகவும் பிற்போக்குத்தனமான கூறுகளை இழுக்கிறது. அவர்களுக்கு ஒரு உண்மையான முற்போக்கான அமைப்பில் மட்டுமல்ல, சோசலிச அமைப்பில் எவ்வித இடமும் இல்லை.

"ஜனநாயக சோசலிசத்தை" ஆதரிப்பதாகக் கூறும் ஒரு அமைப்பு, இடதுசாரிகளாக இருக்கும் அதன் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களை நியாயப்படுத்தும் அறிக்கைகளை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஸ்ராலினிச பொய்களுக்கு புத்துயிர் அளிக்கும் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை கொண்டாடும் ட்விட்டர் இடுகைகளையும், வேறு எந்த ஊடகத்திலும் உள்ள அறிக்கைகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கவும், மறுக்கவும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பை சோசலிச சமத்துவ கட்சி முறையாக கோருகின்றது. ஸ்ராலினிச பொய்களின் பிரச்சாரம், இதன் மூலம் கடந்த காலத்தை மட்டுமல்லாமல், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீதான எதிர்கால தாக்குதல்களையும் அனுமதிப்பது சகித்துக்கொள்ளப்படாது மற்றும் அதன் அமைப்பில் உறுப்பினர்களுடன் பொருந்தாது என்பதை அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) தெளிவுபடுத்த வேண்டும்.

முடிவில், சோசலிச சமத்துவக் கட்சி, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் உடனான அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், வலதுசாரி அரசியலிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது என்பதை சுட்டிக்காட்ட அனுமதிக்கவும். காங்கிரஸின் அங்கத்தவர் ஒக்காசியோ-கோர்ட்டெஸை பாதுகாப்பதற்கான அறிக்கைகள் உலக சோசலிச வலைத் தளத்தில் முக்கியமாக வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர் போன்றவர்கள் தீவிர வலதுசாரிகளிடமிருந்து வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியபோதும் இதே கொள்கையையே நாங்கள் கடைப்பிடித்தோம்.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
David North
National Chairman
Socialist Equality Party (US)

Loading