காலநிலை மாற்றம், தொற்றுநோய் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கு தேவை!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை, ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க அரசாங்கங்கள் மறுப்பதை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றுகூடுவார்கள்.

முதலாளித்துவத்தின் பாரிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் போராட்டங்கள் நிகழ்கின்றன. கோவிட்-19 தொற்றுநோய், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் ஒரு அணுசக்தி போரின் பெருகிவரும் அச்சுறுத்தல் ஆகியவை இலாப நோக்கு அமைப்புமுறை மனிதகுலத்தை ஒரு படுகுழிக்கு கொண்டு செல்கிறது என்ற ஒரே அடிப்படை உண்மையில் ஒன்றோடொன்று தொடர்புடைய வெளிப்பாடுகளாகும்.

மெல்போர்னில் 2018 காலநிலை மாற்ற பேரணியின் ஒரு பகுதி (WSWS media)

அனைத்து இடங்களிலும் முதலாளித்துவ அரசாங்கங்களின் தலைமையில் பல தசாப்தங்களாக அதிகமான கரியமிலை வாயு வெளியேற்றத்திற்கு பின்னர், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஏற்கனவே உணரப்படுகின்றன. வெப்பநிலை அதிகரித்து வருகிறது, கடல் மட்டங்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. காட்டுத்தீ முதல் வறட்சி மற்றும் வெள்ளம் வரை பேரழிவு தரும் காலநிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

தசாப்தத்தின் இறுதிக்குள் இவ்வெளியேற்றம் அதிகமாகக் குறைக்கப்படாவிட்டால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து மீளமுடியாது என விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளால் இந்த நெருக்கடியின் அவசரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலைமை தீவிரமாக இருந்தபோதிலும், உலகில் எங்கும் ஒரு அரசாங்கமோ அல்லது உத்தியோகபூர்வ அரசியல்வாதியோ கூட பேரழிவைத் தவிர்க்க ஒரு சாத்தியமான முன்னோக்கைக் கொண்டிருக்கவில்லை. சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறிய பெருநிறுவன தன்னலக்குழுவின் இலாபத்திற்கு சிறிதளவேனும் தடையாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் அனைவரும் எதிர்க்கின்றனர்.

கடந்த ஆண்டு அனுபவங்கள், இந்த நிலைமை, காலநிலையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று 1930களில் இருந்து காணப்படாத முதலாளித்துவ அமைப்பின் நிலைமுறிவு மற்றும் தோல்வியைக் குறிக்கிறது. நோயின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு அதன் உயிரியல் கட்டமைப்பை விட, விரிவடைந்துள்ள மருத்துவ பேரழிவுடன் முதலாளித்துவத்தின் சமூக உறவுகளே காரணமாக உள்ளன.

பல தசாப்தங்களாக, அவற்றின் சாத்தியம்பற்றி மருத்துவ நிபுணர்களின் அவசர எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள் நிதி ஒதுக்க மறுத்துவிட்டன. கோவிட்-19 உலகம் முழுவதும் பரவியபோது, அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களின் பதிலும் டிரில்லியன் கணக்கான டாலர்களை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு ஒப்படைப்பதாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு பிணையெடுப்பு வழங்கப்பட்டதிலிருந்து, பூட்டுதல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விரைவாக அகற்ற அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர்.

எல்லா இடங்களிலும், ஆளும் உயரடுக்கின் கோரிக்கை வைரஸ் பரவுவதைப் பொருட்படுத்தாமல் "பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டும்", மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு தள்ளப்படவேண்டும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் அனுப்பப்படுவதாகவே இருந்தது. அதன் இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு எதுவும் குறுக்கே நிற்கு அனுமதிக்கக்கூடாது என்ற பெருநிறுவன உயரடுக்கின் வற்புறுத்தலால் இந்த பிரச்சாரம் கட்டளையிடப்பட்டுள்ளது. இது “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்ற படுகொலை பதாகையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, வேண்டுமென்றே வைரஸ் பரவ அனுமதிக்கப்பட்டது.

இதன் விளைவாக, உலகளவில் முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் சுமார் 600,000 பேர் இறந்துவிட்டனர். ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். பேரழிவு முடிவடைவதற்குப் பதிலாக, 2020 இன் கொடூரத்தை விட 2021 இல் மோசமானது என்று கணிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைப்பு அதிகமாக சுமையேறி இருக்கும் இந்தியா உட்பட உலகின் பெரும் பகுதிகளில் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் தொற்றுநோயை ஒரு தூண்டுதல் நிகழ்வு என்று வர்ணித்துள்ளது, இது பல தசாப்தங்களாக உருவாகியுள்ள முதலாளித்துவ அமைப்பின் அனைத்து சமூக, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளை ஆழமாக்கியுள்ளது.

இதற்கு இராணுவவாதம் மற்றும் போரை குறிப்பிடத்தக்க வகையில் தீவிரப்படுத்தியதன் மூலம் அரசாங்கங்கள் பதிலளித்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற பிரதான சக்திகளின் முழு ஆதரவோடு பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் கொடுக்கும் படுகொலை இதன் கூர்மையான வெளிப்பாடு மட்டுமே.

பைடென் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனா மற்றும் ரஷ்யாவுடனான மோதல்களை முடுக்கிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், ஒரு பெரிய போரை ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர, அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்கள் நிகழ்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவுடன் இராணுவ மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க தளபதிகள் அறிவித்துள்ளனர்.

உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போருடன் போருக்கான உந்துதலும் உள்ளது. டிரில்லியன் கணக்கான பொது நிதிகள் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. மேலும் ஆளும் உயரடுக்கு உழைக்கும் மக்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது. வேலையின்மை மற்றும் வறுமை குறித்த குறியீடுகள் மிக அதிகமான நிலையில் உள்ளன.

சமூக சமத்துவமின்மையின் பாரிய அதிகரிப்பும் போருக்கான திட்டங்களும் ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாது. எல்லா இடங்களிலும், பெருகிவரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை அடக்குவதற்கு அரசாங்கங்கள் பெருகிய முறையில் சர்வாதிகார ஆட்சிக்கு மாறுகின்றன. ஜனவரி 6 ம் தேதி தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பில், அமெரிக்க தேர்தல் முடிவை அகற்ற டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி, ஆளும் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஊக்கத்தோடு, பாசிச சக்திகள் மீண்டும் காட்சிக்கு வந்துள்ளன என்பதற்கான கூர்மையான எச்சரிக்கையாகும்.

உலக நெருக்கடியிலிருந்து ஆஸ்திரேலியா விலக்கப்படவில்லை. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களான தொழிற் கட்சி மற்றும் தாராளவாதிகள், தொற்றுநோய்க்கு இலாபத்தை ஈட்டும் பிரதிபலிப்புக்கு தலைமை தாங்கினர். பெருவணிகத்தின் தூண்டுதலின் பேரில் அவர்கள் மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கி, கொடிய வெடிப்புகளுக்கு வழிவகுத்தனர். ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் பொது சுகாதார அமைப்பை மேம்படுத்த எதுவும் செய்யாததுடன் மற்றும் மோசமான உல்லாசவிடுதி தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி திட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.

தொழிற் கட்சியும் தாராளவாதிகளும் ஆஸ்திரேலியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலின் முன்னணியில் வைத்திருக்கிறார்கள். அண்மையில் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் “மீண்டும் நம் வீரர்களை போராட அனுப்ப” நாடு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவித்ததன் மூலம் இது எடுத்துக்காட்டுகிறது. முழு அரசியல் ஸ்தாபகமும் பெய்ஜிங்குடன் பதட்டங்களைத் தூண்டுகிறது மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான பொய்யான "மனித உரிமைகள்" நியாயங்களை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவிற்குள் "சீன தலையீட்டிற்கு" எதிராக மெக்கார்த்தியவாத மற்றும் இனவெறி பிரச்சாரத்தை நடத்துகிறது.

சமூகத்துறையில், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அரசாங்கங்கள் 400 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கொடுத்துள்ளன. இப்போது, அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில், பெருவணிகத்தின் இலாபங்களை மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு வணிக சார்பு மறுசீரமைப்பை அமுல்படுத்துகின்றனர்.

போர்கள், புரட்சிகள் மற்றும் அரசியல் எழுச்சிகள் ஆகியவற்றின் ஒரு காலகட்டத்தின் ஊடாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் முதலாளித்துவத்தால் மனிதகுலத்தின் மீது மேற்கொண்ட அனைத்து கொடூரங்களும் மீண்டும் தலையை தூக்குகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது பெருவணிக மற்றும் வங்கிகளின் பிற கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ தீர்க்க முடியும் என்ற கூற்று ஒரு மாயையை விட மோசமானது. இது ஒரு அரசியல் பொறியாகும். இது காலநிலை பேரழிவு மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அனைத்து தாக்குதல்களுக்கும் காரணமான அதே சக்திகளுக்கு பின்னால் இளைஞர்களை திசை திருப்ப உதவுகிறது.

காலநிலைக்கான பள்ளி வேலைநிறுத்தம் (School Strike 4 Climate) அமைப்பின் தேசிய அமைப்பாளர்களால் வெளியிடப்பட்ட இன்றைய போராட்டங்களுக்கான அறிவிப்பு, இந்த திவாலான முன்னோக்கை சுருக்கமாகக் கூறுகிறது. இந்த அறிக்கை உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தொற்றுநோய், இராணுவவாதத்தின் அதிகரிப்பு மற்றும் பாரிய சமூக சமத்துவமின்மை ஆகியவை பற்றி ஒரு குறிப்பைக்கூட கூறவில்லை.

மோரிசன் அரசாங்கம் எரிவாயு ஆய்வு மற்றும் பிற புதைபடிவ எரிபொருட்களை ஊக்குவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது "காலநிலை நெருக்கடிக்கு தூண்டுகின்ற பன்னாட்டு எரிவாயு நிறுவனங்களின் பணப்பைகளை நிரப்புவதாகும்." ஆனால் வேலைநிறுத்தத்தின் நோக்கம் "எங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் பணத்தை எரிவாயுவில் வீசுவதை நிறுத்த வேண்டும் என்று மோரிசன் அரசாங்கத்திடம் கூறுவதே" என்று அது அறிவிக்கிறது.

இது ஒருவரின் முழங்கால்களுக்கு எதிராக கலகம் செய்வதாகும். அந்த அறிக்கை அபத்தமாக "மோரிசன் அரசாங்கம் எங்கள் காலநிலை, நிலம் மற்றும் நீரைப் பாதுகாக்கும்," புதுப்பிக்கத்தக்க வளங்களை அபிவிருத்தி செய்யலாம்" என்று அறிவிக்கிறது. யாரை ஏமாற்றுவதாக இந்த அமைப்பாளர்கள் நினைக்கிறார்கள்? மோரிசனின் அரசாங்கம் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் உட்பட வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நலன்களின் சார்பாக நிற்கின்றது. 2019–2020 காட்டுத்தீ நெருக்கடிக்கு மதிப்பிழந்தமுறையில் ஹவாயில் விடுமுறை இருந்து பதிலளித்த பிரதமர் நாடு எரிகையில் எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டார்.

இந்த அறிக்கையில் தொழிற் கட்சி மற்றும் பசுமைவாதிகளின் பற்றி எவ்வித கருத்தும் இல்லாதுள்ளது. கடந்த காலத்தைப் போலவே, பேச்சாளர்கள் இந்த அமைப்புகளை "குறைவான தீமைகளாக" முன்வைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அக்கட்சிகளை அரசாங்கத்தை உருவாக்க அனுமதித்தால் முற்போக்கான கொள்கைகளை அவை இயற்றும் என்று கூறுவர்.

தொழிற் கட்சியோ அல்லது அதனுடனான ஒரு கூட்டணியோ பெருவணிகத்தின் போருக்கு ஆதரவான கட்சியாகும். சுற்றுச்சூழல் மற்றும் பிற ஒவ்வொரு துறையிலும் ஒரு பிற்போக்குத்தனமான வரலாற்றுப் பதிவைக் கொண்டுள்ளது. ஜூலியா கில்லார்ட்டின் பசுமைக் கட்சி ஆதரவுடனான தொழிலாளர் அரசாங்கம் ஒரு கரியமிலவாயு வரியை அறிமுகப்படுத்தியது. அதன் சொந்த மதிப்பின்படி, எதிர்வரும் எதிர்காலத்தில் கரியமிலவாயு உமிழ்வு அதிகரிக்கும். அதே நேரத்தில், இது நூறாயிரக்கணக்கான ஒற்றை பெற்றோர்களுக்கு கிடைக்கும் உதவிகளின் மீது தாக்குதல் செய்தது. ஆஸ்திரேலியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த உந்துதலுடன் இணைத்து மற்றும் அகதிகளை மோசமாக துன்புறுத்தியது.

தங்கள் பங்கிற்கு, பசுமைவாதிகள் முதலாளித்துவத்தை பாதுகாக்கிறார்கள் மற்றும் தொழிற் கட்சி அல்லது தாராளவாதிகளுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல்களில் முக்கிய கட்சிகளிடம் அழைப்புவிடுகிறார்கள். பசுமைவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட பல்வேறு கரியமிலவாயு கட்டுப்பாட்டு திட்டங்கள், அவை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வாயுவெளியேற்றத்தை குறைக்க வழிவகுக்கவில்லை. அதற்கு பதிலாக புதிய மற்றும் இலாபகரமான நிதிச் சந்தையை உருவாக்குகின்றன.

ஆஸ்திரேலியாவின் நிலைமையே உலகளவில் பிரதிபலிக்கிறது. எண்ணற்ற உலக உச்சிமாநாடுகளில், முதலாளித்துவ அரசியல்வாதிகள் வாயுவெளியேற்றத்தைக் குறைப்பதற்கான போலி மற்றும் முற்றிலும் போதாத உறுதிமொழிகளை வழங்குகிறார்களே தவிர அவற்றை நிறைவேற்றும் எண்ணம் இல்லை. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த முயற்சிகளை ஒரு "வெற்றி" என்று பாராட்டுவதுடன், மேலும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் மட்டுமே தேவை என்று வலியுறுத்துகின்றன.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) இந்த திவாலான கூற்றுக்களை நிராகரிக்கின்றனர். இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முறையிடுவது அல்ல, மாறாக இலாபநோக்கு அமைப்பு முறையை இல்லாதொழிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை உருவாக்குவதாகும்.

முதலாளித்துவத்தின் கீழ், ஒவ்வொரு சமூக கேள்வியும் பெருநிறுவன உயரடுக்கின் இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு அடிபணிய செய்யப்படுகின்றது. ஒரு சில பில்லியனர்கள் மற்றும் மாபெரும் நிறுவனங்கள் பொருளாதாரம், முக்கிய அரசியல் கட்சிகள், பாராளுமன்றங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு உத்தியோகபூர்வ நிறுவனத்தையும் கட்டுப்படுத்துகின்றன. சமுதாயத்தின் மீது இந்த தன்னலக்குழுவின் இடுக்கி போன்ற பிடியை உடைக்காமல், காலநிலை மாற்றம் அல்லது வேறு எந்த பிரச்சினையிலும் ஒரு படி கூட முன்னேற முடியாது.

முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பின் கட்டமைப்பிற்குள் இவை எதுவும் தீர்க்கப்பட முடியாது. இளைஞர்கள் மற்றும் மனிதசமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலகளாவியவையாகும். அவற்றை தீர்ப்பதற்கு உலகின் வளங்கள் மற்றும் உற்பத்தி திறன்கள் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்படும் தீர்வு தேவைப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இது போட்டி முதலாளித்துவ குழுக்களின் நலன்களைக் பிரதிநிதித்தவப்படுத்த பூகோளத்தை விரோதமான தேசிய அரசுகளாகப் பிரிப்பதன் மூலம் தடுக்கப்படுகிறது.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு உண்மையை கூறுகிறது: இதற்கு ஒரே மாற்று சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டமாகும்!

முக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பொது உடைமையாக்கப்பட்டு மற்றும் ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். காலநிலை நெருக்கடிக்கு, உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் சமூக உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவும், ஒழுங்கான, நல்ல ஊதியம் தரும் வேலைகள், உயர்தர பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றிற்கும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும். அத்தகைய வளர்ச்சிக்கான மூலவளங்கள் உள்ளன. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கூட்டுழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதுபோன்ற ஒரு வேலைத்திட்டத்தை ஒரு புரட்சிகர இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதற்கு முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும், தனியார் இலாபத்திற்காக அல்லாது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் அடித்தளத்தல் உலக சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு அனைத்து மாணவர்களையும் இளையோர்களையும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க அழைப்புவிடுகின்றது.
பொதுக் கல்வியைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இணையுங்கள்! பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாது திரும்ப வேண்டாம்!

Loading