மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 இன் டெல்டா வகை, விரைவில் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளை விஞ்சி விடக்கூடியளவில், இங்கிலாந்தில் வெடிப்பார்ந்து அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு (PHE) நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள், முன்னிருக்கும் அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தோலுரிக்கின்றன.
PHE தகவல்களின்படி, பிரிட்டனின் புதிய நோயாளிகளில் 96 சதவீதத்தினருக்கு இப்போது இந்த டெல்டா வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆல்ஃபா வகையை விட சுமார் 60 சதவீதம் அதிகம் பரவக்கூடியது. இந்த 60 சதவீத விபரத்தை பேராசிரியர் நெய்ல் பெர்குசனும் இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் உலகளாவிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையமும் உறுதிப்படுத்தியுள்ளது: “இது உறுதி செய்யப்பட்டது. 60 சதவிகிதம் என்பது சிறந்த மதிப்பீடாக கருதுகிறோம் ஆனால் 40 முதல் 80 சதவீத அனுகூலம் இருக்கக்கூடும் என்று நினைக்கிறோம்."
கடந்த வாரம் பகுதியாக விரைவு மரபணு தொடர் பரவல் முறையின் (faster genome sequencing method) காரணமாக, உறுதி செய்யப்பட்ட இந்த வகை நோயாளிகள் 12,431 இல் இருந்து 42,323 ஆக, 240 சதவீதம் அதிகரித்தனர்.
இந்த டெல்டா வகை, ஆல்ஃபா வகை வைரஸை விட இரண்டு மடங்கு அதிகமாக மக்களை மருத்துவமனையில் அனுமதிக்க செய்யக்கூடும் என்றும் PHE ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.
இந்த வைரஸின் அதிகரித்த பரவும் தன்மை நாடு முழுவதும் நோய்த்தொற்றுகளை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை, 8,125 புதிய கோவிட்-19 நோயாளிகள் பதிவானார்கள், இது பெப்ரவரி 26 க்குப் பின்னர் அதிகபட்ச எண்ணிக்கையாகும். கடந்த 7 நாட்களில் 45,895 க்கும் அதிகமான நோயாளிகள் பதிவாகி உள்ளனர் — இது முந்தைய வாரத்தை விட 58.1 சதவீத அதிகரிப்பாகும்.
இலண்டன் கிங்ஸ் கல்லூரியின் ZOE கோவிட் அறிகுறி ஆய்வு மென்பொருள் விபரங்களின்படி, யதார்த்தத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 11,908 நோயாளிகள் உள்ளனர், இது கடந்த வார ஆய்வில் பதிவான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அவசர காலங்களுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவில் (SAGE) உள்ள அரசு ஆலோசகர்கள், பிரிட்டனில் மறுஉற்பத்தி மதிப்பு (R) 1.2 முதல் 1.4 வரை இருப்பதாக மதிப்பிடுகின்றனர். பிரிட்டனின் R மதிப்பு வெவ்வேறு பிராந்தியங்களில் 1.2 முதல் 2.5 வரை இருப்பதாகவும், சராசரி 1.5 என்றும் பெர்குசன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்தொற்றுகளின் எண்ணிக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு 4.5 நாட்கள் முதல் 11.5 நாட்களுக்குள் இரட்டிப்பாவதாக PHE தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர், வடமேற்கு மிக அதிகபட்ச எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளது, அங்கே நோய்தொற்று விகிதம் இப்போது 100,000 பேருக்கு 149.6 நோயாளிகள் என்றுள்ளது — இது கடந்த வாரம் 89.4 ஆக இருந்தது. இந்த பிராந்தியம், ஜூன் 6 வரையிலான காலத்தில் மிகப் பெரிய வாராந்தர அதிகரிப்புகளைக் கொண்ட ஐந்து பகுதிகளைக் கொண்டிருந்தது: டார்வெனுடன் சேர்ந்த பிளாக்பர்ன் (438.9 முதல் 625.9 வரை), தெற்கு ரிப்பிள் (128.2 முதல் 305.1), பர்ன்லி (135.0 முதல் 303.6), ரிப்பிள் பள்ளத்தாக்கு (149.5 முதல் 310.4) மற்றும் சால்போர்ட் (131.4 முதல் 265.4).
பிரிட்டனின் 10 உள்ளூர் பகுதிகளில் ஒன்றாவது, தற்போது 100,000 க்கு 100 ஐ விட அதிகமான நோய்தொற்று விகிதங்களைப் பதிவு செய்கிறது.
நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து மருத்துவமனை அனுமதிகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தேசியளவில், இந்த எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் சற்றே உயர்ந்து 1,000 க்கு சற்று அதிகமாக உள்ளது என்றாலும், அதிக புதிய நோயாளிகளைக் கொண்ட பிராந்தியங்களின் கூர்மையான அதிகரிப்புகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. வடமேற்கில், கோவிட்-19 நோயுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மே 16 இல் குறைந்தளவாக 149 இல் இருந்ததில் இருந்து ஜூன் 11 இல் 271 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தளவான 12 இல் இருந்து ஜூன் 6 இல் 45 ஆக அதிகரித்துள்ளது.
ஐயத்திற்கிடமின்றி தடுப்பூசி கணிசமான பாதுகாப்பை வழங்குகிறது என்றாலும், டெல்டா வகை வைரஸ் இந்த பாதுகாப்பைக் குறைக்கிறது. முதல் தடுப்பூசி செலுத்தி இருந்தால், அறிகுறியுடன் கூடிய நோய்க்கு எதிராக அது 15-20 சதவீதம் எதிர்ப்புதிறனில் குறைந்திருப்பதாகவும், இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தி இருந்தாலும் கூட அது சிறிது குறைகிறது என்றும் PHE குறிப்பிடுகிறது.
இங்கிலாந்தில் பெப்ரவரி மற்றும் ஜூன் 7 க்கு இடையே டெல்டா வகையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 383 பேரில், 251 பேர் தடுப்பூசி போடாதவர்கள், 86 பேர் முதல் கட்ட தடுப்பூசி மட்டும் செலுத்தி இருந்தனர், 42 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தி இருந்தனர். இறந்த 42 பேரில், 23 பேர் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள், 7 பேர் ஒரு முறை மட்டும் தடுப்பூசி செலுத்தி இருந்தனர், 12 பேர் இரண்டு முறையும் தடுப்பூசி பெற்றிருந்தனர்.
மூன்றாவது அலையின் அபாயங்கள் குறித்து கருத்து தெரிவித்த பெர்குசன், அதன் மாதிரி "கணிசமான மூன்றாவது அலையின் ஆபத்து இருப்பதைக் காட்டுகிறது, (ஆனால்) அது இரண்டாவது அலையை விட கணிசமாக குறைவாக இருக்கலாம் அல்லது அது அதே அளவில் இருக்கலாம் — அதன் அளவைக் குறித்து நாம் உறுதியாக கூற முடியாது," என்றார்.
வைரஸ் எவ்வாறு பரவும், அது எப்படி மருத்துவமனையில் அனுமதிக்க செய்யும் என்பது பற்றி "இன்னமும் நிறைய நிச்சயமற்றதன்மை" இருப்பதாக அவர் வலியுறுத்தினார். தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தால் இறப்புக்கள் "அநேகமாக குறைவாக இருக்கும்", "ஆனால் அதுவும் கவலைக்குரியதாகவே இருக்கலாம்," என்றார்.
கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் தேவையென பரிந்துரைக்கும் எந்தவொரு மருத்துவர்கள் அல்லது விஞ்ஞானிகளுக்கு எதிரான வலதுசாரி அச்சுறுத்தல் சூழல் நிலவுகிறது. ஜூன் 21 இல் திட்டமிடப்பட்டுள்ள "சுதந்திர தின" நிகழ்வை தள்ளி வைக்கலாமா, எவ்வளவு காலம் தள்ளி வைக்கலாம் என்பது பற்றிய அபத்தமான விவாதத்துடன் இந்த ஆபத்தான நிலைமை எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கடைசி மிச்சமீதிகளையும் வெறும் ஒரு வாரத்திற்குள் அகற்றுவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பேரழிவுகரமாக இருக்கும். ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் சேர்ந்து, பொருளாதாரம் ஏற்கனவே அதிகளவில் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய ஆட்சி முறையின் கீழ் நோயாளிகள் எண்ணிக்கை ஏற்கனவே வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த அதிகரிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர என்ன அவசியப்படுகிறது என்றால், தடுப்பூசித் திட்டத்தை பாதுகாப்பாக நிறைவேற்றவும், விளிம்பு வரையில் முறையான பரிசோதனை மற்றும் தடம் அறியும் நெறிமுறைகளை ஸ்தாபிக்கவும் ஏற்ற வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மீள வலுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் அவற்றின் விளைவுகள் மீது அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை. கடைகள் மற்றும் உபசரிப்பு துறைகளை மீண்டும் திறந்து விட்டதால் ஏப்ரல் மாதம் இங்கிலாந்து பொருளாதாரத்தின் 2.3 சதவீத வளர்ச்சி எண்ணிக்கை மட்டுமே அவர்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கும் ஒரே எண்ணிக்கை உள்ளது — இது கடந்த ஜூலைக்குப் பின்னர் மிக வேகமாக அதிகரிப்பாகும்.
இதே நிகழ்வுபோக்கு தான் ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருக்கிறது, டெல்டா வகையை முகங்கொடுத்தாலும், அங்கே கடந்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளால் நோயாளிகள் குறைந்துள்ளனர் என்ற உண்மையை அந்த அரசாங்கங்கள், கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர ஒரு சாக்குபோக்காக பயன்படுத்துகின்றன.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, ஐரோப்பாவின் 53 நாடுகளில் 36 நாடுகள் தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.
இந்த வாரம், தேனீர் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிடவும், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்கவும் பிரான்ஸ் அனுமதித்து, இரவு 9 மணி ஊரடங்கை இரவு 11 வரை தள்ளிவைத்துள்ளது. பெல்ஜியமும் இத்தாலியும் அவற்றின் ஊரடங்கு உத்தரவுகளை மட்டுப்படுத்தியதுடன், மதுக்கூடங்கள் மற்றும் உணவகங்களில் உட்புற சேவையை மீண்டும் திறந்து விட்டன. ஜேர்மனி பள்ளிகளை மீண்டும் முழுமையாக திறந்துவிட்டது, வகுப்புகளைப் பிரித்து நடத்துவது மற்றும் பகுதி-நேர வகுப்புகள் போன்ற நடவடிக்கைகளை நீக்கியது, பயணக் கட்டுப்பாடுகளை அகற்றியது.
ஐரோப்பியர்களில் வெறும் 35 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 20 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். ஆகவே டெல்டா வகை வைரஸ் காட்டுத்தீ போல மக்களிடையே பரவி, அதிகமானவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும் இறப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பிரான்சில் ஏற்கனவே நோய்பரவல் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்த புதிய வகை வைரஸ் ஜேர்மனியில் உத்தியோகபூர்வமாக 2.5 சதவீதம் உள்ளது.
ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் க்ளூக் இவ்வாரம் கூறுகையில், இந்த வகை வைரஸ் "இப்பிராந்தியத்தைப் பாதிக்கத் தொடங்கும்,” என்று எச்சரித்தார். அவர் விளக்கினார், "நாம் முன்னரே இந்த நிலையில் இருந்திருக்கிறோம். கடந்த கோடையில், நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக இளம் வயது குழுவினரிடையே அதிகரித்தன, பின்னர் வயதானவர்கள் குழுவுக்கு நகர்ந்து, நாசகரமாக… 2020 இன் இலையுதிர் காலம் மற்றும் கோடை காலத்தில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. இதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் எண்ணிக்கை இன்னமும் "மீளெழுச்சியிலிருந்து அப்பிராந்தியத்தைப் பாதுகாக்க போதுமானதாக இல்லை… 60 வயதுக்கு மேற்பட்ட பாதிக்கப்படக்கூடியவர்களில் பெரும்பான்மையினர் பாதுகாக்கப்படாமலேயே உள்ளனர்,” என்றார்.
இந்த எச்சரிக்கைகள் எல்லாம் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்கு எதையும் அர்த்தப்படுத்தவில்லை, அவர்கள் மக்களை "வைரஸுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்" கொள்கைக்கு பின்னால் அணிவகுக்க மக்கள் மீது தீவிர அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இது ஒரு முன்னணி ஜேர்மன் நுண்கிருமியியல் துறை நிபுணரான Christian Drosten இன் கருத்துக்களில் புதன்கிழமை தொகுத்தளிக்கப்பட்டது, அவர் இந்த தொற்றுநோயை அரசாங்கம் கையாளும் முறை மீது முன்னர் விமர்சனபூர்வமாக இருந்தவர். ஒரு புதிய அலையின் சாத்தியக்கூறை ஒப்புக்கொண்ட அவர், அதன் தீவிரத்தைக் குறைத்துக் காட்டினார், இப்போது சாதாரண வாழ்வின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டிய மற்றும் தடுப்பூசி மூலம் கையாளக்கூடிய ஒரு வைரஸ், "எதிர்காலத்தில், முதல் தொற்றுநோயைப் போலவே, சாதாரண குளிர்கால பாதிப்பு என்று கூறப்படலாம்,” என்றார்.
இந்த அபாயங்கள் அமெரிக்காவில் இன்னும் அதிக முன்னேறிய நிலையில் உள்ளன, அங்கே நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவல்படி, டெல்டா வகை வைரஸ் 6 சதவீத நோயாளிகளைக் கணக்கில் கொண்டுள்ளது, இது ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட ஆறு மடங்கு அதிகமாகும். அமெரிக்காவின் சில மேற்கு மாநிலங்களில், டெல்டா வைரஸ் நோயாளிகள் 18 சதவீதத்தினர் உள்ளனர். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் ஏறக்குறைய இங்கிலாந்தில் போலவே உள்ளது, அதேவேளையில் தடுப்பூசி போடப்படும் விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா 10 சதவீத புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் சோசலிசத்திற்கான ஓர் உலகளாவிய போராட்டமே கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான ஒரே முன்னோக்காகும், அவர்கள் நோய்தொற்றுக்களைக் குறைக்கும் திறம்பட்ட கட்டுப்பாடுகளுக்காகவும், அந்த வைரஸை ஒழிப்பதற்காக முழுமையான ஆதாரவளம் வழங்கப்பட்ட ஒரு பொது சுகாதார அமைப்புமுறைக்காகவும் போராட வேண்டும்.
மேலும் படிக்க
- கோவிட் -19 இனால் அமெரிக்காவில் 600,000 பேர் இறந்துள்ளனர்: அமெரிக்க முதலாளித்துவம் பாரிய இறப்புக்களை "வழமையானதாக்கிறது"
- "வூஹான் ஆய்வக" பொய்யும், விஞ்ஞானத்திற்கு எதிராக அரசியல் வேட்டையாடலும்
- பிரிட்டன் அரசாங்கத்தின் கோவிட்-19 விடையிறுப்பு "தவிர்த்திருக்கக்கூடிய பாதிப்பைப் பெருஞ்சுழலாக" உருவாக்கி விட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ இதழ் கூறுகிறது