மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆபிரிக்காவின் குற்றகரமான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் ஒரு பிரதான வடிவமைப்பாளரும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் பாதுகாப்பு செயலராக இருந்த டொனால்ட் ரம்ம்ஃபெல்ட், நியூ மெக்சிகோவின் அவரது பண்ணையில் 'அவரது குடும்பம் சூழ்ந்திருக்க' காலமானதாக புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரம்ஸ்ஃபெல்ட், தனது குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படாமல், ஒரு போர்க்குற்றவாளியாக ஒருபோதும் விசாரிக்கப்படாமல் 88 வயதை எட்டியுள்ளார் என்பது அமெரிக்க இராணுவவாதத்தின் இடைவிடாத தாக்குதலின் கீழ் சர்வதேச சட்டத்தின் சரிவுக்கு ஒரு சான்றாகும். இது, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் சேர்ந்து, பாரிய படுகொலை மற்றும் சித்திரவதை குற்றங்களில் அமெரிக்க ஸ்தாபகமும், அதன் இரண்டு பிரதான கட்சிகளும், அதன் பெருநிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை அமைப்புகளும் ஒவ்வொன்றும் உடந்தையாய் இருந்ததன் விளைவாகும், இதில் ரம்ஸ்ஃபெல்டின் பெயர் எப்போதும் ஒத்த அர்த்தத்தில் இடம் பெற்றிருக்கும்.
அவர் பதவியில் இருந்த போது ஒரு பயங்கரமான விதிவிலக்கு சம்பவமாக பரவலாக பொருள்விளக்கம் செய்யப்பட்ட இத்தகைய குற்றங்கள், அதற்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும் முற்றிலும் வழமையாக்கப்பட்டுள்ளன.
ரம்ஸ்ஃபெல்ட் ஓர் அரசின் ஆளாக இருந்தார், மூன்று முறை காங்கிரஸ் உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் நிக்சன் நிர்வாகத்தில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனினது பெருஞ்சமூக திட்டத்தின் (Great Society program) பாகமாக உருவாக்கப்பட்ட ஒரு முகமையான பொருளாதார வாய்ப்புவள அலுவலகத்தின் இயக்குனராக சேர்ந்தார். அதன் வறுமை-ஒழிப்பு திட்டங்களை அகற்றும் வெளிப்படையான நோக்கத்திற்காக அவர் பணி அமர்த்தப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் உட்பட ஏனைய பதவிகளை வகித்தார். நிக்சன் அவரது வெள்ளை மாளிகை ஒலிநாடாக்களில் ரம்ஸ்ஃபெல்டை 'ஓர் ஈவிரக்கமற்ற தரங்கெட்டவர்,” என்று விவரித்தது பதிவாகி இருந்தது, சந்தேகத்திற்கிடமின்றி இது அவரிடமிருந்து வரும் மிக உயர்ந்த பாராட்டு வார்த்தை தான்.
நிக்சன் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட பின்னர், ரம்ஸ்ஃபெல்ட் வெள்ளை மாளிகைக்கு ஜெரால்ட் ஃபோர்டு வருவதற்குத் தலைமை தாங்கினார், அதையடுத்து ஜனாதிபதியின் தலைமைத் தளபதி ஆனார், பின்னர் ஓராண்டுக்கும் சற்று கூடுதலாக அவர் பாதுகாப்புத்துறை செயலளராக சேவையாற்றினார், அப்போது அவர் அணுஆயுத குறைப்புகள் சம்பந்தமாக சோவியத் ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்குக் குழிபறிக்க செயல்பட்டதுடன், கடற்படை ஏவுகணைகள் மற்றும் B-1 குண்டுவீசி போன்ற புதிய ஆயுத முறைகளைக் கட்டமைப்பதற்குப் பாதுகாவலராக விளங்கினார். வியட்நாமில் அமெரிக்க போரைப் அபாயகரமாக கீழறுத்த பல்வேறு விதமான மக்கள் அழுத்தங்களில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்றி வைக்க எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையான, முற்றிலும் சுய-ஆர்வலர்களைக் கொண்ட ஆயுதப் படைகளைக் கொண்டு கட்டாய இராணுவப் படையைப் பிரதியீடு செய்வதையும் அவர் மேற்பார்வையிட்டார்.
புஷ் நிர்வாகத்தில் இணைவதற்கு முன்னதாக, மீண்டுமொருமுறை பாதுகாப்புச் செயலராக, ரம்ஸ்ஃபெல்ட் பல பெருநிறுவனங்களின் நிர்வாகியாக பெருஞ்செல்வம் ஈட்டினார் மற்றும் நவ-பழமைவாத சிந்தனைக் குழாமான New American Century (PNAC) திட்டத்தின் ஓர் உறுப்பினராக இருந்தார். முதல் பாரசீக வளைகுடா போர் மற்றும் 2003 ஈராக் படையெடுப்பு இரண்டுக்கும் இடைப்பட்ட தசாப்தத்தில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ பலத்தைக் கட்டுப்பாடின்றி பயன்படுத்துவதன் மூலம் அதன் நலன்களை பாதுகாக்க முடியும் என்ற முன்னோக்கை PNAC முன்னெடுத்தது. ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பெறவும் மற்றும் 'அமெரிக்க கோட்பாடுகள் மற்றும் செல்வவளத்திற்குத் தனித்துவமாக நேசமாக ஓர் உலகளாவிய பாதுகாப்பு ஒழுங்கை' உறுதிப்படுத்தவும் அது ஈராக்கில் இராணுவத் தலையீட்டுக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் ஏற்பாடுகளைச் செய்தது.
ரம்ஸ்ஃபெல்டுடன் சேர்ந்து, PNAC இன் ஸ்தாபக அறிக்கையில் கையெழுத்திட்ட ஏனைய ஒன்பது பேரும் கூட ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தில் இணைந்தனர், துணை ஜனாதிபதி டிக் செனி, துணை பாதுகாப்புத்துறை செயலர் பௌல் வொல்ஃபோவிட்ஸ் மற்றும் ஏனைய மூத்த பென்டகன் அதிகாரிகளும் அதில் உள்ளடங்குவர்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டிலும் ஆட்சி மாற்றத்திற்கான போர்களை நடத்துவதற்கு செப்டம்பர் 11, 2001 இல் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்கள் சாக்குப்போக்கை வழங்கின, ரம்ஸ்ஃபெல்ட் இந்த போர்களுக்கு தலைமை ஆலோசகராகவும் மற்றும் அவற்றின் மூத்த மூலோபாயவாதியாகவும் பணியாற்றினார்.
சதாம் ஹூசைனின் மதசார்பற்ற ஈராக்கிய ஆட்சி மற்றும் அல் கொய்தாவுக்கு இடையே இல்லாத உறவுகளை இருப்பதாகவும், அதன் மீது 'சர்ச்சைக்கிடமற்ற' ஆதாரம் இருப்பதாகவும் கூறினார், 'பேரழிவு ஆயுதங்கள்' குறித்தும் பொய்களை ஊக்குவித்த மிக முக்கியமானவர்களில் ரம்ஸ்ஃபெல்டும் ஒருவராவார் — 'அவை எங்கே இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும்,” என்றவர் ஊடங்களுக்குக் கூறினார்.
போருக்குச் சேவையாற்றிய இந்த பொய்கள் ஊடகங்களால் விரிவுபடுத்தப்பட்டன, ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் குரலான நியூ யோர்க் டைம்ஸ் இதில் முன்னணியில் இருந்தது. அப்போது, பத்திரிகைகளால் ரம்ஸ்ஃபெல்ட் மிகவும் மதித்து மரியாதை செய்தன, அவர் முகம் பத்திரிகை அட்டைகளில் இடம் பெற்றிருந்தன மற்றும் இராணுவத்தை மாற்றுவது மீதான அவரின் வெற்றுரைகளும் மற்றும் 'அறியப்படாதவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்' ஆகியவையும் மேதையின் குரலாக கையாளப்பட்டன. அந்த நேரத்தில் US News & World Report, ரம்ஸ்ஃபெல்ட் 'தொடர்ந்து தொண்டையை அழுத்துவது முழுக்க சிரிக்க வைக்கிறது' என்று குறிப்பிட்டது. ஊடகங்கள் எதை நகைச்சுவைக்குரியதாக கண்டதோ அவை அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் ஜனநாயக உணர்வுகள் பிரமாண்டமாக சிதைந்து கொண்டிருப்பதைப் வெளிப்படுத்தின.
ரம்ஸ்ஃபெல்ட் எந்த போர்களுடன் அடையாளம் காணப்படுகிறாரோ அவை ஆக்கிரமிப்பு போர்களாகும், மூன்றாம் குடியரசின் ஏனைய எல்லா கொடூர குற்றங்களும் இத்தகைய போர்களில் இருந்து தான் பெருக்கெடுத்தன, இவை உயிர்பிழைத்திருந்த ஜேர்மனியின் நாஜி ஆட்சி தலைவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான குற்றச்சாட்டாக இருந்தன.
இந்தப் போர்களின் மனித இழப்பு அதிர்ச்சியூட்டுகிறது. பிரெளன் பல்கலைக்கழகத்தின் போர் செலவு திட்ட விபரங்களின்படி, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான் மற்றும் யேமனில் அமெரிக்காவின் 'பயங்கரவாதத்தின் மீதான போரில்' நேரடியாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தோராயமாக 800,000 ஆகும், அதேநேரத்தில் உள்கட்டமைப்பை அழித்ததன் விளைவாகவும், மருத்துவக் கவனிப்பின் சீரழிவு மற்றும் பாரிய பட்டினி ஆகியவற்றால் ஏற்பட்ட 'மறைமுக உயிரிழப்புகள்' 3.1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும். அந்த முடிவற்ற அமெரிக்க ஏகாதிபத்திய போரின் இரண்டு தசாப்த காலத்தில் முழுமையாக 37 மில்லியன் பேர் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாரிய படுகொலைகள் மீது அலட்சியமாக இருந்த ரம்ஸ்ஃபெல்ட், அந்த அருவருக்கத்தக்க காலனித்துவ-பாணியிலான போர்களுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க சிப்பாய்களின் வாழ்க்கை குறித்தும் அதேயளவு அக்கறையின்றி இருந்தார். தங்களுக்குப் போதிய பண்டங்கள் வினியோகிக்கப்படவில்லை என்றும் ராக்கெட்-பாயும் கையெறி குண்டுகள் மற்றும் சாலையோர கன்னிவெடிகளால் அவர்களின் இராணுவ வாகனங்கள் பாதிக்கப்படுவதால் அமெரிக்க பாதுகாப்புப்படை சிப்பாய்கள் அவரை குவைத்தில் சந்தித்து உதவி கோரிய போது, ரம்ஸ்ஃபெல்ட் அவரின் பாசாங்குத்தனமான பிதற்றல்களில் ஒன்றை வெளிப்படுத்தினார், “நாங்கள் எங்களிடம் இருக்கும் இராணுவத்துடன் தான் போருக்குச் செல்கிறோம், நாங்கள் விரும்பும் ஆயுதப்படைகளுடன் அல்ல, அல்லது பிற்காலத்தில் நாங்கள் விரும்பும் இராணுவத்துடன் அல்ல,” என்றவர் அறிவித்தார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் 7,000 க்கும் அதிகமான அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நூறாயிரக் கணக்கானவர்கள் கடுமையான உடல் மற்றும் உளவியல் காயங்களுடன் திரும்பி வருகின்றனர். 2018 வரை, 1.7 மில்லியன் இராணுவத்தினர் அவர்கள் நிலைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஊனங்களை அறிவித்திருந்தனர்.
பாரிய படுகொலைகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், அசாதாரண ஒப்படைப்புகள் மற்றும் சித்திரவதை ஆகியவற்றிலும் ரம்ஸ்ஃபெல்ட் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார். ஈனத்தனமான குவாண்டனமோ சிறை முகாம் உருவாக்கத்தையும், அதையும் மற்றும் 'நவீன விசாரணை நுட்பங்கள்' என்றழைக்கப்பட்ட—அதாவது சித்திரவதைக்கான ஏனைய இடங்களைப் பயன்படுத்துவதையும் அவர் தனிப்பட்டரீதியில் மேற்பார்வையிட்டார்.
'எதிரி கைதிகளை விசாரிப்பதில்' பயங்கரவாதத்திற்கு எதிரான போர் 'ஜெனீவாவின் வழக்கற்றுப் போன கடும் வரம்புகளை விதிக்கிறது' என்று அறிவித்து, ஜனவரி 2002 இல், ரம்ஸ்ஃபெல்ட் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அந்த சுற்றறிக்கை கைதிகளைக் கையாள்வதற்கான ஜெனீவா தீர்மான விதிகளை 'விசித்திரமானவை' என்று குறிப்பிட்டது. ஈராக்கின் அபு கிரைப் சிறைச்சாலையில் அமெரிக்காவின் சித்திரவதை மற்றும் கைதிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக புகைப்படங்கள் 2004 இல் வெளியான போது, இராணுவம் எவ்வாறு அவற்றை இரகசியமாக வைத்திருக்க தவறியது என்பதே பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகைக்குள் பிரதான கவலையாக இருந்தது.
அமெரிக்க இராணுவத்தின் சீருடை அணிந்த கட்டளையகத்திற்குள் இருந்து வந்த கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்தும், போருக்கு எதிராக மக்களிடையே அதிகரித்து வந்த கோபத்தை முகங்கொடுத்தும், இது பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் இரண்டிலும் குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டை இழக்க இட்டுச் சென்ற நிலையில், ரம்ஸ்ஃபெல்ட் பாதுகாப்புச் செயலர் பதவியை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.
அவர்களின் பங்குக்கு, தளபதிகள் இன்னும் விருப்பத்திற்குரிய நிர்வாக தலைமையின் கீழ் போர்களைத் தொடர விரும்பினர். ஜனநாயகக் கட்சியினரை பொறுத்த வரையில், அவர்கள் போர்களை நிறுத்த தவறியது மட்டுமல்ல, மாறாக மற்றொரு இரத்த ஆறு தீவிரமடைவதற்கு வழிவகுத்த ஈராக்கில் 'அதிகரிப்புக்கு' நிதியளிக்கவும் வாக்களித்தனர்.
2011 இல், ரம்ஸ்ஃபெல்ட் அறிந்தவை-அறியப்படாதவை (Known and Unknown) என்ற தலைப்பில் அவர் நினைவுகளை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த போது, அவர் ஒரு பேட்டியாளருக்குக் கூறினார்: “தேச பாதுகாப்பு சட்டம், குவாண்டனமோ வளைகுடா [சிறை] மற்றும் வேறு பல விசயங்கள், இராணுவ கமிஷன்கள். … என ஜனாதிபதி புஷ் நடைமுறைப்படுத்தி உள்ள விசயங்களுக்காக — அவர் மீதும் மற்றும் அவரைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைப் பொறுத்த வரையில். … உண்மையில், அவை இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன. அவை ஏன் இன்னனமும் நீடிக்கும்? ஏனென்றால் அவை 21 ஆம் நூற்றாண்டிலும் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. அவை அவசியப்படுகின்றன. அதை மாற்றுவதற்கு வேறு சிறந்த வழி எதையும் புதிய நிர்வாகத்தால் காண முடியவில்லை,” என்றார்.
உண்மையில், ஒபாமாவின் கீழ், ஈராக்கில் தொடரப்பட்ட அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் பாரியளவில் ஆப்கானிஸ்தானில் தீவிரப்படுத்தப்பட்டன, லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பேரழிவுகரமான போர்களாக விரிவுபடுத்தப்பட்டன. புஷ்ஷின் கீழ் விரிவாக்கப்பட்ட அருவருக்கத்தக்க போர் உத்திகள் உலகெங்கிலும் டிரோன் ஏவுகணை படுகொலை திட்டமாக விரிவாக்கப்பட்டது, அதேவேளையில் அமெரிக்கா மற்றும் உலக மக்களை ஒட்டுமொத்தமாக உளவு பார்க்கும் திட்டமும் ஆழப்படுத்தப்பட்டது.
இன்று, குவாண்டனமோ சிறை முகாம் இன்னமும் திறந்து தான் இருக்கிறது. இவ்வாரம் ஈராக்-சிரியா எல்லை பகுதிகளின் இரண்டு தரப்பிலும் உள்ள இலக்குகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த பைடென் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஈராக் போர் ஐந்து மாதங்களுக்கு அதிகமாக தொடராது என்று ஊடகங்களுக்கு ரம்ஸ்ஃபெல்ட் உத்தரவாதம் அளித்த போராகும்.
ஏகாதிபத்திய கொள்கையின் இந்த தொடர்ச்சி தான் ரம்ஸ்ஃபெல்டின் குற்றகரமான மரபியத்தை மறைப்பதற்கான முயற்சியை விவரிக்கிறது. பைடென் நிர்வாகத்திற்காக பேசிய பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், ரம்ஸ்ஃபெல்டின் 'எல்லையற்ற ஆற்றல், தேசத்திற்கு சேவையாற்ற அவரின் ஆழ்ந்த ஆய்வறிவு மற்றும் நிலையான அர்ப்பணிப்பு' ஆகியவற்றுடன் சேர்ந்து, அவரின் 'குறிப்பிடத்தக்க வாழ்க்கையை' பாராட்டினார்.
அசோசியேட்டட் பிரஸ் இன் இரங்கல் அவரை 'இலட்சியவாதியாக, நகைச்சுவையான, ஆற்றல்மிக்க, ஈடுபாடு கொண்ட மற்றும் தனிப்பட்ட பெரும் அரவணைப்பு தன்மை கொண்டவராக' விவரித்தது, 'ஒரு நவீன அமெரிக்காவின் தொலைநோக்கு கொண்ட திறமையான அதிகாரத்துவவாதியாக [அவரின்] மதிப்பு இந்த நீண்ட மற்றும் செலவு மிக்க ஈராக்கிய போரில் எடுத்துக்காட்டப்பட்டது,” என்று அது வருந்தியது.
என்ன இழிவான முட்டாள்தனம்! ஒரு திறமையான இராணுவ மூலோபாயவாதியாக ஹிட்லரின் மதிப்பு சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான 'நீண்ட மற்றும் செலவு மிக்க' போரில் எடுத்துக்காட்டப்பட்டது என்றும் ஒருவர் கூறலாம்.
மிகப்பெரும் விமான சக்தி மற்றும் துல்லியமாக வழிநடத்தப்படும் ஆயுத தளவாடங்களின் உதவியுடன் கூடிய சிறிய தரைப்படைகளைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் அடிபணிய செய்யலாம் என்பதே இராணுவத்திற்கான ரம்ஸ்பெல்டின் 'தொலைநோக்குப் பார்வையாக' இருந்தது. ஆனால் வேறுவிதமாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டிலும், அந்த தந்திரோபாயங்கள் பாரிய படுகொலைகளிலும், ஒட்டுமொத்த சமூக அழிப்புகள் மற்றும் மக்கள் எதிர்ப்பு வெடிப்பிலும் போய் முடிந்தது.
உலகைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளைப் பொறுத்த வரை, ரம்ஸ்ஃபெல்ட் எதனுடன் சம்பந்தப்பட்டிருந்தாரோ அந்த போர்கள் ஒன்று மாற்றி ஒன்றாக தோல்விகளில் போய் முடிந்தது. 2003 ஈராக் படையெடுப்பின் போது அப்போதே WSWS பின்வருமாறு முன்கணித்தது:
- தொடங்கியுள்ள மோதல்களின் ஆரம்ப கட்ட விளைவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது உலகை வெல்ல முடியாது. அது மத்திய கிழக்கு மக்கள் மீது மீண்டும் காலனித்துவ தளைகளைத் திணிக்க முடியாது. அதன் உள்நாட்டு சிக்கல்களுக்கான ஒரு நம்பகமான தீர்வை அது போர் மூலமாக காண முடியாது. அதற்கு மாறாக, போரால் தோற்றுவிக்கப்படும் எதிர்நோக்கவியலாத இடர்பாடுகளும் பெருகிவரும் எதிர்ப்பும் அமெரிக்க சமூகத்தின் அனைத்து உள் முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தும்.
ஆனால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ரம்ஸ்ஃபெல்டுடன் தொடர்புடைய தோல்விகளிலிருந்து பின்வாங்காமல், அமெரிக்க ஆளும் வர்க்கம் அமெரிக்க இராணுவவாதத்தின் இன்னும் அதிக அபாயகரமான வெடிப்புக்கு மட்டுமே தயாரிப்பு செய்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக, 'வல்லரசு' மோதலை நோக்கி அது திரும்பியிருப்பது, உலகளவில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்ட ஒரு போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகிறது. இது ஏகாதிபத்திய போருக்கும் அதன் மூலக்காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேசிய தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான அவசரத்தை முன்வைக்கிறது.