இலங்கை தோட்டத்தொழிலாளர் வேலைச் சுமை அதிகரிப்புக்கும் ஊதிய வெட்டுக்கும் எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மஸ்கெலியா சாமிமலை கிளனுஜி தோட்ட டி சைட் பிரிவில் சுமார் 500 தொழிலாளர்கள் சமாளிக்கமுடியாத அளவிலான வேலை இலக்கு அதிகரிப்புக்கும் சம்பள குறைப்புக்கும் எதிராக செப்டம்பர் 21 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டிசைட் தோட்ட தொழிலாளர்கள், தோட்டத்திற்குள் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகிய தொழிற்சங்கங்களின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிசைட் தொழிலாளர்கள் (Photo credit: K. Kishanthan)

தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றன. டி சைட் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் கிளனுஜி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இணைந்துகொள்வதை அவர்கள் தடுத்து வேலைக்கு அனுப்பினர். இருப்பினும், கிளனுஜி தோட்டத்திலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமையிலான தொழிலாளர் நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் சமீபத்திய நாட்களில் மேற்கொண்ட தலையீட்டினால், தொழிற்சங்கப் பிரிவினைகளுக்கு அப்பால் செப்டெம்பர் 29 முதல் டீ சைட் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிளினுஜி தொழிலாளர்கள் இணைந்துகொண்டனர். டி சைட் பிரிவில் உள்ள தொழிலாளர்களையும் தங்களது நடவடிக்கை குழுவில் சேர்த்துக்கொண்டு அதை விரிவுபடுத்தவுள்ளதாக அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொழிற்சங்கத் தடைகள் மற்றும் பிளவுகளை தாண்டி தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதற்கு, தொழிலாளர்கள் மத்தியில் உள்ள வலுவான விருப்பத்தைக் குறிக்கிறது.

டீ சைட் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்ட கிளனுஜி தோட்டத் தொழிலாளர்கள் (Photo: WSWS Media)

நல்லதண்ணி மரே தோட்டத் தொழிலாளர்களும் வேலை இலக்குகள் அதிகரிக்கப்படுவதற்கும் ஊதிய குறைப்புக்கும் எதிராக செப்டெம்பர் 27ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மரே தோட்டத்தின் போரஸ், நல்லதண்ணி, வலதல, முள்ளுகாமம், புதுக்காடு மற்றும் ராஜமலை போன்ற 7 பிரிவுகளில் இருந்தும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளனர். அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்னால் மறியல் போராட்டம் நடத்தினர்.

அண்மையில் அதிகரிக்கப்பட்ட தினசரி ஊதியமான 1,000 ரூபாவை பெறுவதற்கு, இந்த தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தினமும் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தினசரி அறுவடையான 16 கிலோவிலிருந்து இது 4 கிலோ அதிகரிப்பு ஆகும். அந்த இலக்கை பூர்த்தி செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே தினசரி ஊதியம் 1,000 ரூபாய் கிடைக்கும் என்றும் தோட்ட முகாமையாளர்கள் கூறியுள்ளனர். 20 கிலோ பறிக்காவிட்டால், எத்தனை கிலோ பறித்துள்ளார்களோ அதற்கு ஏற்ப குறைக்கப்பட்ட ஊதியத்தையே தொழிலாளர்கள் பெறுவர்.

கிளனுஜி தோட்டத்தில் ஒரு கிலோ கொளுந்தின் விலை 40 ரூபா ஆகும். அதன்படி, 16 கிலோ கொழுந்து பறித்தால் ஒரு தொழிலாளிக்கு 640 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது 360 ரூபாய் சம்பள வெட்டு ஆகும். வானிலை அல்லது கொழுந்து பற்றாக்குறை காரணமாக கொழுந்து பறிக்கும் அளவு மேலும் குறைந்தால், இதே போன்ற ஊதிய வெட்டுக்கள் நிகழும்.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 1,000 ரூபா நாள் சம்பளம் கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராடினார்கள். கம்பனிகள், கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வந்தமையினால் தொழிலாளர்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்த கோபத்தையும், அமைதியின்மையையும் சமாளிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த இராஜபக்ஷ அரசாங்கம் தோட்டக் கம்பனிகளுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும், முதலில் அதை நிராகரித்த தோட்டக் கம்பனிகள், பின்னர் ஒப்புக்கொண்ட போதிலும், பதிலுக்கு வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை துரிதப்படுத்தின. சம்பள வெட்டின் ஒரு பகுதியாக, வாரத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கையும் 6 லிருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, சில தோட்டங்களில், மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.

இரசாயன உரங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததால், இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய ஆண் தொழிலாளர்கள் புற்களை வெட்டி சேகரிப்பதில் ஈடுபடுத்தப்படுவதோடு அவர்கள் ஒரு நாளைக்கு 700 கிலோகிராம் வெட்டவேண்டியிருக்கிறது. இது ஒரு கடினமான வேலை என டி சைட் தோட்டத் தொழிலாளர்கள் கூறினர்.

வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டு குறித்து டி சைட் தோட்டத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், “நிர்வாகம் நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கூறுகிறது, ஆனால் நாளொன்றுக்கு 16 கிலோவே அகக் கூடுதலாக பறிக்க முடியும்,” என கூறினார். “கம்பனிகள் தோட்டத்தை சரியாக பராமரிப்பதில்லை. அதனால் கொழுந்து அளவு மேலும் குறைகிறது. முன்னர், தோட்டத்தை சுத்தம் செய்வதற்கு, ஆண்களே வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இப்போது அவர்களும் கொழுந்து பறிக்கப் பயன்படுத்தப்படுகின்றனர். உரம் மற்றும் இரசாயனப் பொருட்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதால் விளைச்சல் குறைவாக உள்ளது. தோட்டத்தில் உள்ள 600 ஹெக்டயரில், 200 ஹெக்டயர் தேயிலை தோட்டங்கள் ஏற்கனவே கைவிடப்பட்டுள்ளன. பயிர் செய்யும் பரப்பும் குறைந்துள்ளது. எனவே, நிர்வாகம் கேட்கும் இலக்கை கொடுக்கவே முடியாது. தொழிற்சங்கங்களோ கொழுந்து பறிக்கும் இலக்கை கூட்டுவதற்கும் சம்பளத்தை வெட்டுவதற்கும் ஆதரவளிக்கின்றன” என அவர் மேலும் விளக்கினார்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பிரிக்க வேலை செய்கின்றன என்று டி சைட் தோட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் தெரிவித்தார். நாங்கள் வேலைநிறுத்தத்தில் இருக்கும்போது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மறுபக்கம் வேலைக்கு அனுப்புகின்றன. அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே கோரிக்கைகளை வெல்ல முடியும். எங்கள் போராட்டத்தை வெல்ல தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்கும் யோசனையுடன் நான் உடன்படுகிறேன்.

2016 இல் தோட்டத் தொழிலாளர்கள் வேலை சுமை அதிகரிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தபோது, அதை முறியடிக்கவும் முன்நிலையில் இருந்த தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கும் தொழிற்சங்கங்களும் தோட்ட முகாமையாளர்களும் எவ்வாறு கூட்டாக வேலை செய்தனர் என மோகன்தாஸ் விளக்கினார்: “வேலைநிறுத்தத்தின் போது ஏழு தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். எங்கள் சார்பாக எந்த தொழிற்சங்கமும் தலையிடவில்லை. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே எங்களுக்காக நின்றது. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது எனக்கு நினைவிருக்கின்றது. இது தொடர்பாக கூட்டமொன்றும் நடத்தப்பட்டது.'

சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், ஆனால் அரசாங்கம் கோரிக்கையை நிராகரித்தது என அவர் தெரிவித்தார். 'கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவசர காலச் சட்டங்களைப் பயன்படுத்தி, ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.' கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசாங்கத்தினதும் கம்பனிகளினதும் ஒடுக்குமுறைக்கு எதிராக, தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்திய பின்னர் வேலை இலக்குகளை அதிகரித்ததாக மரே தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறினார்: கனமழை மற்றும் வரட்சி காலங்களில் கொழுந்து பறிப்பது குறைவடையும். எனவே நிர்வாகம் கேட்கும் இலக்கை ஒவ்வொரு நாளும் கொடுக்க முடியாது. இந்த நாட்களில் கனமழை காரணமாக, ஒரு நாளில் ஏழு முதல் பத்து கிலோ கொழுந்தே பறிக்கமுடியும். ஒரு கிலோ 50 ரூபாய். சம்பளம் சுமார் 350 முதல் 500 ரூபா மட்டுமே. 1000 ரூபா சம்பள உயர்வுக்கு முன்பு நான் ஒரு நாளைக்கு குறைந்தது 730 ரூபா பெற்றேன். இப்போது இல்லை. பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நீங்கள் சம்பாதிப்பதில் உங்களால் வாழ முடியாது.”

இந்த தோட்டங்களில் மட்டுமல்ல, பெருநதோட்டத்துறை முழுவதும், வேலை வேகப்படுத்தப்பட்டு, சம்பள வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, ஹட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ மற்றும் தலவாக்கலை ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள் அந்த போராட்டங்களை தனிமைப்படுத்தி காட்டிக்கொடுத்த போதிலும், தொழிலாளர்கள் மத்தியில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அவசியமும் உத்வேகமும் வளர்ந்து வருகிறது.

தொழிற்சங்கங்களின் சிறையிலிருந்து விடுபட்டு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டங்கள், கொரோனா தொற்றுநோயால் ஆழப்படுத்தப்பட்ட முதலாளித்துவ நெருக்கடியை தம்மீது சுமத்துவதற்கு எதிராக, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பெருந்தோட்டக் கம்பனிகள், கொரொனா தொற்றுநோயால் அதிகரித்துள்ள தேயிலைத் தொழில் துறையிலான நெருக்கடியைத் தொழிலாளர்கள் மீது திணிப்பதன் மூலம், தங்களின் இலாபத்தைப் பெருக்குவதற்காக சம்பளத்தை வெட்டி, தொழிலாளர்களின் வேலை சுமையை அதிகரிக்கின்றன. தோட்ட நிறுவனங்களின் இந்த இலாப நலன்களுக்காக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் துணை நிற்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஏனைய அனைத்துப் பிரிவினரையும் போலவே, தோட்டத் தொழிலாளர்களும் இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் தோட்டக் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை தமது கையிலெடுத்து, தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே தங்கள் உரிமைகளை வெல்ல முடியும். அத்தகைய போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான முதல் நிபந்தனை, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகள் உட்பட முதலாளித்துவத்தின் நேரடி முகவர்களாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக செயல்படும் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதாகும். கிளனுஜி தொழிலாளர் நடவடிக்கை குழுவானது அந்தப் போராட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும்.

கிளனுஜி போராட்டத்தை தனிமைப்படுத்தி காட்டிக்கொடுக்க தொழிற்சங்கங்களுக்கு இடம் கொடுக்காமல், இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இத்தகைய நடவடிக்கை குழுக்களை அமைத்து போராட்டத்தில் சேர வேண்டும். இந்த நடவடிக்கை குழுக்களின் கூட்டணி மூலம், தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைச் சூழ தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரை அணிதிரட்டிக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Loading