இங்கிலாந்து

கோவிட் பூட்டுதலின் வேளையில் டோரி அரசாங்கத்தின் விருந்து கொண்டாட்டங்கள் பற்றி மேலும் செய்திகள் வெளிவருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு முந்தைய நாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இல்லத்தில் நடைபெற்ற விருந்துகளுக்காக டவுனிங் ஸ்ட்ரீட் வெள்ளிக்கிழமை இராணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பூட்டுதல் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி நடந்ததாக ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக சமீபத்தில் செய்திகள் கசிந்ததான அந்த இரண்டு விருந்துகளும் ஏப்ரல் 16, 2021 அன்று நடைபெற்றன. மறுநாள் இராணி எலிசபெத் தனது கணவரின் இறுதிச் சடங்கின் போது தனியாக அமர்ந்திருந்தது புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த விருந்து கூட்டங்கள், ஜோன்சனின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜேம்ஸ் ஸ்லாக், டவுனிங் வீதியில் இருந்து The Sun செய்தியிதழில் துணை ஆசிரியராக பதவி மாறுவது குறித்து நடத்தப்பட்டன. டெலிகிராஃப் செய்தியின்படி, “அதிகப்படியாக மது அருந்தி, ஒரு கட்டத்தில் விருந்தினர்கள் நடனமாடினார்கள்” என்பது தெரியவந்தது.

நவம்பர் 8, 2021, திங்கட்கிழமை, இங்கிலாந்தின் நோர்தம்பெர்லாந்தில் உள்ள ஹெக்ஸ்ஹாம் பொது மருத்துவமனை வழியாக முகக்கவசம் அணியாமல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடந்து செல்கிறார். (Peter Summers/Pool Photo via AP)

செய்தியிதழ் மற்றொரு கூட்டம் பற்றி தெரிவித்தது, “அருகிலுள்ள பரபரப்பான வீதியான ஸ்ட்ராண்டில் உள்ள கூட்டுறவு நிறுவனத்திற்கு ஒருவர் சூட்கேஸூடன் அனுப்பப்பட்டார், பின்னர் அதில் மது போத்தல்கள் நிரப்பப்பட்டு டவுனிங் வீதிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது... கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறியபடி, இரு கூட்டங்களிலும் சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.”

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில், 2 மீட்டர் இடைவெளியில், 30 துக்கம் அனுசரிப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அறிக்கைகளின்படி, மே முதல் டிசம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் டவுனிங் வீதி மற்றும் பிற அரசாங்க கட்டிடங்களில் குறைந்தது 11 விருந்து கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மே 20, 2020 அன்று நடத்தப்பட்ட கூட்டம் “வேலை நிமித்தமானது” என்பதால் தொற்றுநோய் பூட்டுதல் விதிகளிலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டது என்று ஜோன்சன் பொய் கூறினாலும், தனக்கு எதிராக பரவலான கோபம் அதிகரித்ததால், வேறுவழியின்றி புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் இன்னும் முதல் தேசிய பூட்டுதல் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது, அதாவது வீட்டிற்குள் அந்தந்த வீட்டு நபர்கள் தவிர பிற வீடுகளிலிருந்தும் நபர்கள் தொடர்பு கொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது. வெளியே, மக்கள் ஆறு பேர் என்ற வரையறைக்குள் அல்லது இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. 2020 இல் நடைபெற்ற விருந்து கொண்டாட்டங்களினால் தினசரி இறப்பு எண்ணிக்கை 284 (மே 23) க்குக் கீழே குறையவில்லை, அதிலும் டிசம்பர் 18 கிறிஸ்துமஸ் விழாக் கூட்டத்தின் போது அதிகபட்ச (586) இறப்புக்கள் பதிவாகின.

கோவிட் பணிக்குழுவின் தலைவரும் மற்றும் தற்போது ஷெஃபீல்ட் நகர மன்றத்தின் தலைமை நிர்வாகியுமான கேட் ஜோசப், டிசம்பர் 2020 இல் டவுனிங் வீதிக்கு அருகே இருக்கும் கேபினட் அலுவலகத்தில் விடைபெறுதல் குறித்து மது விருந்து கொண்டாட்டத்தை நடத்தியது பற்றி வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. கோவிட் பணிக்குழுவிடம்தான் “தொற்றுநோய் குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு உள்ளது” குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக வெளிவரும் புகைப்படங்கள், ஒரு நூற்றாண்டில் இங்கிலாந்து மிக மோசமான பொது சுகாதார பேரழிவை சந்திக்கும் போது, அரசாங்கம் அதன் கொள்கைகளின் பயங்கரமான விளைவுகளைப் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருப்பதைக் காட்டுகின்றன. அரை மில்லியன் உயிர்கள் வரை இழக்கப்படும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை கட்டாயப்படுத்தப்படும் வரை, பல துறைகளில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள், அதேவேளை அரசாங்கம் மார்ச் 12, 2020 இன் பிற்பகுதியில் இருந்து மக்கள் மத்தியில் பரவும் பாரிய நோய்தொற்று “விரும்பத்தக்கது” என்று கூறி அதன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை திட்டநிரலை இன்னும் போதித்து வருகிறது.

தேசிய பூட்டுதல் விதிக்கப்பட்டு வெறும் நான்கு நாட்களில், அதாவது மார்ச் 27, 2020 அன்று ஜோன்சனுக்கே கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது, பின்னர் ஏப்ரலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கவனிப்பில் இருந்தார்.

விடயங்களை ஒரு துளி கூட இது மாற்றவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது, அதாவது மிக மூத்த அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்து குடிபோதை விருந்துகளை நடத்துவதுடன், தொற்றுநோய் காலம் முழுவதும் ஒவ்வொரு கோவிட் விதிகளையும் மீறுகிறார்கள்.

ஜோன்சனின் மிகவும் தீவிரமான ஆதரவாளர்கள் கூட, அவரது வேகமாக சரிந்து வரும் கருத்துக்கணிப்பு மதிப்பீடுகளின்படி, அவர் கடனாக வழங்கப்பட்ட நேரத்தில் பதவியில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இருப்பினும், இந்த கட்டத்தில், டோரி அணிகளில் உள்ள ஒரே விவாதம், ஆழ்ந்த செல்வாக்கற்ற கட்சியில் அவருக்குப் பதிலாக சிறந்த வேறொருவரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதுதான். இதனால், அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது கட்சியின் வெறும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் மற்றும் ஸ்காட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரிடமிருந்தும் அழைப்பு வந்துள்ளது.

வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் நிகழாத வகையில், 176,000 க்கும் மேற்பட்ட மக்களின் சமூக படுகொலையையும் மற்றும் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாரியளவில் கோவிட் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டதையும் மேற்பார்வையிட்ட ஜோன்சனை பதவியிலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும்.

ஆனால் அவரும் அவரது வலதுசாரி குழுவினரும் இந்தக் குற்றங்களைச் செய்ய முடிந்தது, ஏனென்றால் முதலில் தலைவர் ஜேர்மி கோர்பினின் கீழ், மேலும் தொடர்ந்து அவரது பின்தொடர்பவர் சர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமையிலும், தொற்றுநோய்களின் போது “தேசிய நலன்” கருதி ஒரு “ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக” இருந்து அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று தொழிற் கட்சி அறிவித்ததன் பின்னர் அதனால் அவர்கள் ஆதரிக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபரில் கட்சியின் இணையவழி மாநாட்டின் போது, தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது முக்கிய உரையை வழங்குகிறார் (Stefan Rousseau/Pool Photo via AP) [AP Photo/Stefan Rousseau/Pool Photo]

சுகாதாரம், வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வெடித்தெழுந்த தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்கி வந்துள்ள தொழிற்சங்கங்களுடன் கூட்டு சேர்ந்து தொழிற் கட்சி இதைச் செய்தது.

ஜோன்சன் தானாக பதவி விலக வேண்டும் என்று தொழிற் கட்சி அழைப்பு விடுத்துள்ள போதிலும் இந்த நிலைமை தொடர்கிறது. எதிர்க் கட்சித் தலைவராக ஸ்டார்மர் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அவர் கட்டாயப்படுத்தவில்லை.

இது ஜோன்சனை விட வலதுசாரியான ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க டோரிக்கள் தயாராவதை அனுமதிக்கிறது, அதேவேளை தொழிலாள வர்க்க விரோத சர்வாதிகார திட்டநிரலை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அவர்கள் வலதுசாரி பத்திரிகைகளால் தவறாமல் ஆதரிக்கப்படுகிறார்கள். “கோடையில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து” ஜோன்சன் ஒரு “பெரும் அடி” எடுத்து வைத்தார், ஆனால் “அவர் [எஞ்சிய வரம்புக்குட்பட்ட] திட்டம் பி தடைகளையும் நீக்கினால்” மட்டுமே அவர்களின் ஆதரவை தக்கவைத்து கொள்வார், அதனால் “தொற்றுநோயிலிருந்து வெளியேறிய முதல் வளர்ந்த நாடாக இங்கிலாந்து ஆனது. பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் நாம் ஒரு முன்னேற்றத்தை அடைவோம். மேலும், மக்களை மீண்டும் வேலைக்கு திரும்ப வைப்பதற்காக சுய-தனிமைப்படுத்துதல் காலத்தை ஐந்து நாட்களாக குறைத்து அமைச்சர்கள் ஆதரவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்” என்று டெய்லி மெயில் குறிப்பிட்டது.

ஆளும் உயரடுக்கின் பாசாங்குகளுக்கு போட்டியிடுவதில் தொழிற் கட்சி மும்முரமாக உள்ளது. திங்கட்கிழமை மாலை, ஜோன்சன் வெளிப்பாடுகளின் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, நலன்புரிக் கொடுப்பனவுகள் மற்றும் வரிச் சலுகைகளுக்கு அரசாங்கம் செலவிடும் தொகையை வரம்புக்குட்படுத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்று தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்டார்மர் கட்டாயப்படுத்தினார். தொழிற் கட்சியின் 198 பாராளுமன்ற உறுப்பினர்களில் 14 பேரைத் தவிர அனைவரும் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றி, மசோதா எளிதாக நிறைவேற அனுமதித்தனர்.

வெட்டுக்கள் பேரழிவை ஏற்படுத்தும். ஏப்ரலில், வேலையற்ற மற்றும் குறைவூதியம் பெறும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், கடந்த செப்டம்பர் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் அவர்களின் நன்மைகள் வெறும் 3.1 சதவீதம் மட்டும் உயர்வதைக் காண்பார்கள், இவர்கள் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நடைமுறையில் இருந்த அனைவருக்குமான கடன் நலக் கொடுப்பனவில் வாரத்திற்கு 20 பவுண்டுகளை ஏற்கனவே இழந்தவர்களாவர். ஆனால், CPI பணவீக்க அளவீடு அந்த சமயத்தில் தோராயமாக 6 சதவீதம் என மதிப்பிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மற்றும் RPI பணவீக்கம் 7.1 சதவீத அளவிற்கு ஏற்கனவே அதிகமாக உள்ளது, இதன் பொருள், வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையிலான பெரும் உண்மையான தரவுகள் வீழ்ச்சியைக் குறிக்கின்றன.

தலைமைத்துவத்திற்கு சவால் விட தகுதியான சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித், திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கோவிட் சுய-தனிமைப்படுத்துதல் காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்படும் என்று நேற்று அறிவித்தார். நிழல் சுகாதாரச் செயலர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், “மக்களை விரைவாக வேலைக்குத் திரும்ப வைப்பதற்கு உதவுவதற்கான நடவடிக்கையை வரவேற்பதன் மூலம் பதலளித்தார்… ஆனால் [சுகாதாரத்துக்கான] அரசு செயலர் சஜித் ஜாவித்தை இதற்கு இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக்கொள்ள வைத்தது எது… என்று கேட்டார். மேலும், NHS உம், பொருளாதாரமும் எத்தனை நாட்களை இழந்துவிட்டது என்று அவர் யோசித்தாரா?” என்றும் கேட்டார்.

தொழிற் கட்சி இந்த வாரம் வருங்கால கட்சித் தலைவராகக் கூறப்படும் பிளேர் ஆதரவாளரான ஸ்ட்ரீட்டிங்குடன் மற்றொரு வலதுசாரி மாற்றத்தை மேற்கொண்டது, மேலும் பிபிசி இடம் கூறுகையில், தொழிற் கட்சி “தேசிய சுகாதார சேவைக்கான காத்திருப்பு பட்டியலை குறைக்க” அலுவலகத்தில் அது “பயனுள்ள” தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தும்” எனத் தெரிவித்தது. வியாழனன்று, ஜாவித், ஓமிக்ரோன் எழுச்சி ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளுக்கு 270 மில்லியன் பவுண்டுகள் வரை நிதி வழங்குமாறு NHS இங்கிலாந்திடம் கூறினார்.

வெள்ளிக்கிழமை, தொழிற் கட்சி, அரசாங்கத்தின் பொலிஸ் மசோதாவில் கொண்டுவரப்பட்ட சமீபத்திய சில கடுமையான திருத்தங்களுக்கு எதிராக அது அடுத்த வாரம் பிரபுக்கள் சபையில் வாக்களித்தாலும், சட்டத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அது எதிர்க்கவில்லை என அறிவித்தது.

இது ஒரு “முடங்கிப்போன” அரசாங்கம், இந்த அழுகிப்போன அமைப்புகளுக்கும் அவர்கள் தாங்கிப்பிடிக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான பாரிய கோபம் அணிதிரட்டப்பட வேண்டும் என்று வலதுசாரி Sun ஊடகம் விவரித்ததற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தொழிற் கட்சியும் தொழிற்சங்கங்களும் அனைத்தையும் செய்து வருகின்றன. இந்நிலையில், முதலாளிகள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் இலாப நலன்களுக்கு மேலாக, மனித வாழ்க்கையையும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளையும் முன்னிலைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பணியிடத்திலும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

Loading