முன்னோக்கு

ரஷ்யா தொடர்பான பைடெனின் பேச்சு: பாசாங்குத்தனம், பொய்கள் மற்றும் போர்வெறி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று ஒரு உரையில், அமெரிக்க ஜனாதிபதி பைடென், அமெரிக்கா கணித்த ரஷ்ய படையெடுப்பு நடக்கவில்லை என்றபோதிலும் கூட, ரஷ்யாவிற்கு எதிரான 'இரத்தம் தோய்ந்த அழிவுகரமான போர்' பற்றிய தனது அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தினார். முன்னதாக, பிப்ரவரி 16 அன்று உக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான ஆக்கிரமிப்பை நடத்தும் என அமெரிக்கா கூறியது.

இன்று முன்னதாக, உக்ரேனைத் தாக்கும் திட்டம் இல்லை என வலியுறுத்திய ரஷ்ய அரசாங்கம், பெலாரஸுடனான தொடர்ச்சியான கூட்டுப் போர் ஒத்திகையை முடித்ததைத் தொடர்ந்து உக்ரேன் எல்லையில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

திங்களன்று, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அதன் தூதரக ஊழியர்களை இடமாற்றம் செய்வதற்கான அமெரிக்காவின் முடிவைக் கண்டித்தார். அவரது 'மக்கள் சேவகர்' (“Servant of the People”) கட்சிக்கு நெருக்கமான ஒரு ஆதாரம், செய்தி இணைய தளமான Strana.ru இடம், 'நாடுகள் போரைப் பற்றி ஒரு கதையை உருவாக்குகின்றன,' 'அவர்கள் எங்களுடன் விளையாடுகின்றார்கள்' என்று கூறினார். கியேவின் நாடாளுமன்றத்தில் செலென்ஸ்கியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவரான டேவிட் அராகாமியா, 'ரஷ்யர்கள் நேரடியாக தயாராகி வருவதற்கான எந்த அறிகுறிகளையும் எங்கள் உளவுத்துறை காணவில்லை' என மேலும் கூறினார்.

ஜனாதிபதி ஜோ பைடென், செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 15, 2022, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் உக்ரேனைப் பற்றி பேசுகிறார்.(AP Photo/Alex Brandon)

உக்ரேன் மீதான 'உடனடி' படையெடுப்பு பற்றிய கூற்று அமெரிக்க அரசாங்கத்தால் முடிவில்லாமல் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு ஊடகங்களால் பரப்பப்பட்டன. செவ்வாயன்று அவர் ஆற்றிய உரையில், பைடென் ஒருபுறம் ரஷ்ய தாக்குதல் எதுவும் நிகழவில்லை என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். அதே நேரத்தில் அவர் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை இரட்டிப்பாக்கினார்.

பைடெனின் பேச்சின் ஒவ்வொரு பகுதியும் பாசாங்குத்தனம், பொய்கள் மற்றும் போர்வெறி ஆகியவற்றால் நிரம்பியிருந்தது. அவற்றில் ஒரு சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்டுவோம்.

'நெருக்கடியின் தொடக்கத்திலிருந்தே, நான் முற்றிலும் தெளிவாகவும் நிலையானதாகவும் இருந்தேன்: என்ன நடந்தாலும் அமெரிக்கா தயாராக உள்ளது.' என அறிவித்து பைடென் தனது கருத்துக்களைத் தொடங்கினார்.

'என்ன நடந்தாலும் பரவாயில்லை' என்பதில் அணுசக்தி போரும் உள்ளதா? அவ்வாறான சாத்தியமான ஒரு பேரழிவிற்கு அமெரிக்கா எப்படி 'தயாராக' இருக்கிறது? 'என்ன நடந்தாலும் பரவாயில்லை' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது, பைடெனும் அவரது ஆலோசகர்களும் அவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் பேரழிவுகரமான விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை என்று மட்டுமே அர்த்தப்படுகின்றது.

உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள நிலைகளில் இருந்து இராணுவப் பிரிவுகளை ரஷ்யா திரும்பப் பெற்றதைக் குறிப்பிட்ட பின்னர், பைடென் மேலும் பதட்டங்களைக் குறைக்க முற்படாமல் அமெரிக்காவின் போர்வெறியைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பதிலளித்தார். பைடென் பின்வருமாறு கூறினார்:

“அடிப்படை கொள்கைகளை நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம். நாடுகளுக்கு இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் உரிமை உண்டு. அவர்கள் தங்கள் சொந்த பாதையை அமைத்துக் கொள்ளவும், யாருடன் இணைந்திருக்கவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.

மற்ற நாடுகளின் இறையாண்மை என்பது அமெரிக்காவின் 'அடிப்படைக் கொள்கையாக' எப்போதிலிருந்து இருந்து வருகிறது? மற்ற நாடுகளின் 'இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு' மீதான அமெரிக்காவின் மீறலைப் பட்டியலிடுவதற்கான எந்தவொரு முயற்சியும் பல பக்கங்கள் நீளமானதாக இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் மிக மோசமான உதாரணங்களை மேற்கோள் காட்டினாலே போதுமானது:

  • சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1992 ஆம் ஆண்டில், அமெரிக்காவும் ஜேர்மனியும் குரோஷியாவை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தன. இதனால் யூகோஸ்லாவியா உடைந்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற இரத்தக்களரி உள்நாட்டுப் போரைத் தூண்டியது.
  • 1999 ஆம் ஆண்டில், கொசோவோவின் பிரிவினையை சேர்பியா ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்து அமெரிக்கா 78 நாள் குண்டுவீச்சை நடத்தியது. சேர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த கொசோவோ, குற்றவியல் போதைப்பொருள் வியாபாரிகளின் தலைமையிலான அரசாங்கத்துடன் ஒரு சிறிய நாடாக மாற்றப்பட்டது.
  • 2003 இல், அமெரிக்கா, 'பேரழிவு ஆயுதங்களை' உருவாக்குகிறது என்ற தவறான கூற்றின் அடிப்படையில் ஈராக் மீது படையெடுத்தது. அதில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அமெரிக்க ஆதரவு இராணுவப் படைகளால் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஆயிரக்கணக்கான கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்தன. இதில் இழிபெயர்பெற்ற அபு கிரைப் சிறைச்சாலையில் அமெரிக்க படையினர் கைதிகளை பாலியல் ரீதியாக அவமானப்படுத்தும் போது புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வெளியிட்டனர்.
  • 2011 ஆம் ஆண்டில், லிபிய அரசாங்கத்தை தூக்கி எறிந்த இஸ்லாமிய பயங்கரவாத சக்திகளை அமெரிக்கா ஆயுதமயமாக்கி மற்றும் அதன் ஜனாதிபதியை சித்திரவதை செய்து, ஆணவக் கொலை செய்து கொன்றது.
  • 2014 முதல் தற்போது வரை, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்-ஐச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து, சிரிய அரசைக் கவிழ்க்க போராடி வருகிறது. சிரிய மண்ணில் அமெரிக்கத் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இது சிரிய இறையாண்மையை மீறுவதாகும். இதில் சிரிய அரசாங்கம் அதன் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி, சிரிய மண்ணில் அமெரிக்க துருப்புக்கள் சிரிய இறையாண்மையை மீறுவது உட்பட பயங்கரவாத சக்திகளை அமெரிக்கா ஆயுதபாணியாக்குவது ஜனநாயகக் கட்சியினரால் நியாயப்படுத்தப்பட்டது. மறுபுறம், ட்ரம்ப் இதனை அங்குள்ள அமெரிக்க பணி 'எண்ணெய் எடுப்பது' என்று அப்பட்டமாக அறிவித்தார்.
  • 2019 ஆம் ஆண்டில், ஈரானிய தளபதி காசிம் சுலைமானி ஈரானிய அரசாங்கத்தின் சார்பாக ஈராக்கிற்கு உத்தியோகபூர்வ இராஜதந்திர பயணத்தை மேற்கொண்டிருந்தபோது பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அவரை அமெரிக்கா படுகொலை செய்தது.

வியட்நாம் போர், கொரியப் போர் மற்றும் நூறாயிரக்கணக்கான இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கூட்டாக கொன்று குவித்த எண்ணற்ற இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரங்களுக்கான அமெரிக்க அனுசரணையை பற்றி குறிப்பிடத்தேவையில்லை.

பைடென் பின்னர் தனது உரையில் அறிவித்தார்:

'உண்மை இவ்வாறாக உள்ளது: இப்போது, ரஷ்யா 150,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை பெலாருஸ் மற்றும் உக்ரேனின் எல்லையில் நிறுத்தி உக்ரேனை சுற்றி வளைத்துள்ளது.'

நான்கு நாட்களுக்கு முன்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், ரஷ்யா உக்ரேனுடன் 'எல்லையில் 100,000 துருப்புக்களுக்கு மேல் குவித்துள்ளது' என்று அறிவித்தார். அப்படியானால் அந்த கூடுதல் 50,000 துருப்புக்கள் நான்கு நாட்களில் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் யார்? அவர்கள் எங்கே? ரஷ்யா தனது படைகளைக் குறைப்பதாக உலகுக்குச் சொல்லும் போது, உக்ரேனைச் சுற்றி 50 சதவிகிதம் தனது படைப் பிரசன்னத்தை எவ்வாறு விரிவுபடுத்த முடிந்தது?

அமெரிக்க ஊடகங்களில் ஒரு தனிக்குரல் கூட இந்த மிக அடிப்படையான கேள்விகளைக் கேட்கவில்லை. இவ்வாறு கேட்டால் ஒரு நொடியில் அமெரிக்காவின் கூற்றுக்கள் தூய முட்டாள்தனம் என்பதை நிரூபித்துவிடும்.

பைடென் தொடர்ந்தார்:

“அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இல்லை. உக்ரேன் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை. உக்ரேனில் அமெரிக்காவினதும் அல்லது நேட்டோவினது ஏவுகணைகள் இல்லை. எங்களிடம் இல்லை, அவற்றையும் அங்கு வைக்கும் திட்டம் இல்லை. நாங்கள் ரஷ்ய மக்களை குறிவைக்கவில்லை. ரஷ்யாவை சீர்குலைக்க நாங்கள் முயலவில்லை. ரஷ்யாவின் குடிமக்களுக்கு: நீங்கள் எங்கள் எதிரி அல்ல.

அமெரிக்கா ரஷ்யாவை எப்படிப் பார்க்கிறது என்பது இங்கு விடயம் அல்ல, ஆனால் பொது அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் எதனை தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டில், அமெரிக்கா ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டு 'பயங்கரவாதம் அல்ல மாறாக நாடுகளுக்கு இடையேயான மூலோபாயப் போட்டிதான் இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முதன்மையான அக்கறை' என்று அறிவித்தது. இதில் ரஷ்யா சீனாவுடன் சேர்ந்து வெளிப்படையாக பெயர் குறிப்பிடப்பட்டது.

அக்டோபர் 2020 இல் CBS இன் '60 நிமிடங்கள்' நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில், பைடென் பின்வருமாறு அறிவித்தார், 'சரி, அமெரிக்காவிற்கு இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தல் ரஷ்யா தான். 2020 இல் CNN நிகழ்வில், 'ரஷ்யா ஒரு எதிரி என்று நீங்கள் நம்புகிறீர்களா?' என கேட்கப்பட்டபோது பைடென் 'ரஷ்யா ஒரு எதிரி என்று நான் நம்புகிறேன். நான் கண்டிப்பாக நம்புகிறேன்' என பதிலளித்தார்.

இந்த நோக்கத்திற்காகவே அமெரிக்கா ரஷ்யாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைத்து ரஷ்யாவின் வாசல்வரை நேட்டோவை பாரியளவில் விரிவுபடுத்துகிறது.

உக்ரேனில் அமெரிக்காவிடம் 'ஏவுகணைகள்' இல்லை என்ற குழப்பம்மிக்க கூற்றைப் பொறுத்தவரை, இது திசை திருப்பும் நடவடிக்கையாகும். அமெரிக்கா உக்ரேனுக்கு ஜவெலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் (Javelin anti-tank missiles) மற்றும் லித்துவேனியா வழியாக ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (Stinger antiaircraft missiles) மூலம் ஆயுதம் வழங்கியுள்ளது.

இங்கு மறைமுகமாக, பைடென் இடைத்தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் குறிப்பிடுகிறார். அவை அமெரிக்கா இணங்காது என்று அறிவித்த இடைத்தூர அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன. பைடெனின் மறுப்பு, ரஷ்யாவை தாக்கும் ஏவுகணைகள் மூலம் சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் தற்போதைய முயற்சியில் இருந்து கவனத்தை திசை திருப்ப உதவுகிறது. இதன் முடிவில் அது ருமேனியா மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளிலும் ஏஜிஸ் கரையோர ஏவுகணை எறிகணைகளை உருவாக்கியுள்ளது. இவை முன்னர் இடைத்தூர அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள அணுவாயுதங்களை தாங்கிய டோமாஹெவ்க் ஏவுகணைகளை ஏவக்கூடியவை.

அமெரிக்கா 'ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் இல்லை' என்று கூறிய பைடென், உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். பின்னர் அவர் மிரட்டினார்:

'எந்தத் தவறும் செய்யாதீர்கள், நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு அமெரிக்க பலத்துடன் அமெரிக்கா பாதுகாக்கும். ஒரு நேட்டோ நாட்டுக்கு எதிரான தாக்குதல் நம் அனைவருக்கும் எதிரான தாக்குதல். இதில் உடன்படிக்கையிலுள்ள ஐந்தாவது பிரிவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு புனிதமானது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடென் ரஷ்யாவிற்கும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிலிருந்து எழுந்த நிலையற்ற சிறிய நாடுகளில் ஒன்றுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்தால், அமெரிக்காவின் முழு இராணுவ ஆயுதங்களையும் பயன்படுத்துவதாகக் கூறினார்.

எஸ்தோனியாவின் மிக சமீபத்திய அமைச்சரவையில் பாசிச எஸ்தோனிய பழைமைவாத மக்கள் கட்சியும் இடம்பெற்றிருந்தது, அதன் உள்துறை அமைச்சர் பலமுறை இனவெறி சின்னங்களுடன் தனது படத்தை எடுத்துள்ளார். லாத்வியாவின் தற்போதைய அமைச்சரவையில் அதன் பொருளாதார அமைச்சர், கலாச்சார அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், பாசிச மற்றும் வெறித்தனமான ரஷ்ய-விரோத தேசிய கூட்டணியில் இருந்து வந்தவர்கள்.

உண்மையில் எடுத்துக் கொண்டால், பைடெனின் அறிக்கையின் அர்த்தம், அணு ஆயுதக் கிடங்கை கொண்டுள்ள ரஷ்யாவிற்கும் இந்த அரசியல்ரீதியாக நிலையற்ற சிறிய நாடுகளில் ஒன்றிற்கும் இடையே போர் வெடித்தால், அமெரிக்கா அணு ஆயுதங்களை ('அமெரிக்க சக்தியின் முழுப் பலம்') ரஷ்யாவிற்கு எதிராகப் பயன்படுத்துவதாக உறுதியளிக்கிறது. இது மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் மூன்றாம் உலகப் போரின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

அமெரிக்காவின் நிலைமை பற்றி குறிப்பிட்ட பைடென், ரஷ்யாவுடனான மோதல் அமெரிக்க மக்களுக்கு 'வலியற்றதாக இருக்காது' என்று கூறினார். இருப்பினும், அவர் வலியுறுத்தினார்:

'இந்த விடயம் குடியரசுக் கட்சியினரையும் ஜனநாயகக் கட்சியினரையும் இணைக்கும். எங்கள் மிக அடிப்படையான, இருகட்சி சார்ந்த, பெரும்பாலான அமெரிக்கக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக உறுதியுடன் பேசிய இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தக் கூற்றில் ஒரு உண்மையும் அப்பட்டமான பொய்யும் இணைத்துள்ளது. குடியரசுக் கட்சியினரையும் ஜனநாயகக் கட்சியினரையும் இணைக்கும் ஒரு 'விடயம்' உள்ளது. ஆனால் அதற்கு பைடென் கூறியது போல் 'சுதந்திரம்' மற்றும் 'தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மக்களின் உரிமை' போன்ற 'கொள்கைகளுடன்' எந்த தொடர்பும் இல்லாதது. மாறாக இது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற புவிசார் அரசியல் நலன்களுடனும் அமெரிக்காவிற்குள் உள்ள சமூக எதிர்ப்பின் வளர்ச்சி பற்றிய அதன் ஆழ்ந்த அச்சத்துடனும் இணைந்ததாகும்.

உக்ரேனில் 'சுதந்திரம்' பற்றி பைடெனின் அனைத்து பேச்சுகளும் ஒருபுறம் இருக்க, ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசாங்கத்தை தூக்கி எறிந்து தன்னை ஒரு ஹிட்லர் மாதிரியான சர்வாதிகாரியாக நிறுவ முயன்றார். ஜூலை 13, 2021 அன்று பைடென் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு அவர் “அமெரிக்காவில் இன்று ஒரு தொடர்ச்சியான தாக்குதல் நடைபெறுகிறது. இது வாக்களிக்கும் உரிமையையும் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களையும் அடக்குவதற்கும் தகர்ப்பதற்கும் ஒரு முயற்சியாகும். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என அறிவித்தார்.

ஆனால் இப்போது, சுதந்திரம் மற்றும் அமெரிக்கக் கொள்கைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில், 'சுதந்திரத்தின் மீதான தாக்குதலை' தொடங்கியவர்களுடன் 'ஒற்றுமையை' முன்மொழிகிறார் பைடென்!

பைடெனின் இறுதி வாக்கியம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது: 'நான் உங்களுக்கு தொடர்ந்து அறிவிப்பேன்' என்கி்றார்.

என்ன தகவலை தெரிவிக்கப் போகிறார்? அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் வெடித்தது பற்றியா? அணு ஆயுதங்களை ஏவுவது பற்றியா? அல்லது மூன்றாம் உலகப் போரின் ஆரம்பம் பற்றியா? அமெரிக்க ஜனநாயகத்தின் சீர்குலைவு இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது. முழு உலகத்தின் மக்கள் தொகையையும் பாதிக்கும் முடிவுகளை மட்டும் அமெரிக்க மக்களுக்கு 'தெரிவிக்க' வேண்டும் என ஜனாதிபதி நம்புகிறார்.

பைடென், பொய்கள் மற்றும் இரத்தத்தை உறைய வைக்கும் அச்சுறுத்தல்கள் நிறைந்த ஒரு பேச்சை சுதந்திரமாக வழங்க முடிகிறது, ஏனெனில் ஊடகங்களில் யாரும் அவரது கூற்றுக்கள், வரையறைகள் அல்லது வலியுறுத்தல்கள் பற்றி தீவிரமாக கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். முழு அரசியல் ஸ்தாபகமும் 'பெரும் சக்தி போட்டி' என்ற கோட்பாட்டிற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

இது பைடெனின் 'சமாதான' பேச்சு என்றால், போர் பேச்சு என்றால் என்ன? பைடெனின் உரையில் இருந்து எடுக்கப்பட வேண்டிய மிக அடிப்படையான முடிவு என்னவென்றால், அமெரிக்கா தனது உள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை வெளியே திருப்ப ஒரு இராணுவ மோதலை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க முதலாளித்துவம் போர்ப்பாதையில் நிற்கிறது.

Loading