ரக்பி ஆட்டக்காரர் ஃபெடரிகோ அரம்புருவின் தீவிர வலதுசாரி கொலையில் பிரெஞ்சு பொலிஸூக்கு தொடர்புள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் சர்வதேச ரக்பி ஆட்டக்காரர் ஃபெடரிகோ மார்ட்டின் அரம்புரு (Federico Martin Aramburu) மத்திய பாரிஸில் உள்ள ஒரு அவென்யூவில் மார்ச் 19 அதிகாலையில் தீவிர வலதுசாரி செயர்பாட்டாளர்களான லொய்க் லு பிரியோல் (Loik Le Priol) மற்றும் ரொமான் பூவியே (Romain Bouvier) ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருப்பினும், இந்த கொடூரமான கொலையை பிரெஞ்சு ஊடகங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன, நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென் ஏப்ரல் 2022 தேர்தல்களில் பெரும்பாலும் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்ற நிலையில் இது நடந்துள்ளது.

கொலையாளிகளுக்கும் பிரெஞ்சுப் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் 20 அன்று, அதாவது லு பென்னுக்கும், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் இடையிலான போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், பிரெஞ்சு ரக்பி இணைய தளமான quinzemondial.com இவ்வாறு அறிவித்தது: “லொய்க் லு பிரியோலின் வீட்டில் பொலீஸ் சின்னங்களுடன் கூடிய பொருட்களும், மற்றவையும், கண்டெடுக்கப்பட்டன. மேலும், நீதித்துறை காவல்துறையின் பிராந்திய இயக்குநரகத்தின் ஒரு பொலீஸ்காரர் கடுமையான வாக்குவாதம் மற்றும் துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்கு முன்னர், லு பிரியோல் மற்றும் பூவியே ஆகியோரை மாலையில் சிறிது நேரம் சந்தித்துச் சென்றதாக கூறப்படுகிறது.”

மார்ச் 25, 2022 வெள்ளிக்கிழமை, பிரான்சின் பியாரிட்ஸில் உள்ள டவுன் ஹாலின் பால்கனியில் தொங்கும் ஆர்ஜென்டினா, பிரெஞ்சு மற்றும் பாஸ்க் கொடிகளின் கீழ் ஃபெடரிகோ மார்ட்டின் அரம்புருவின் உருவப்படம் தொங்கவிடப்பட்டுள்ளது. (AP Photo/Bob Edme)

நிகழ்வுகளின் போக்கு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. Le Mabillon மதுக்கடையில், லு பிரியோலும் பூவியேயும், அடையாளம் தெரியாத வீடற்ற மனிதனைப் பாதுகாக்க முயற்சித்ததற்காக, அரம்புருவையும் அவரது நண்பரான முன்னாள் ரக்பி ஆட்டக்காரர் ஷான் ஹெகார்ட்டியையும் (Shaun Hegarty) தாக்கினர். அந்த வீடற்ற நபர் ஒரு சிகரெட் கேட்டதன் பின்னர், பூவியேயும் லு பிரியோலும் அவரை ‘இழிநிலை மனிதன்’ (‘Subhuman’) என அழைத்து, அவருக்கு எதிராக இனவெறி துவேஷத்துடன் வசைபாட ஆரம்பித்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். அரம்புருவும் ஹெகார்ட்டியும் இவர்கள் இருவரையும் மிகுந்த மரியாதையுடன் நடக்கும்படி கேட்டுக் கொண்டனர், அதற்கு அவர்கள் “நாங்கள் எங்கள் நாட்டில் இருக்கிறோம்,” “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லத் வேவையில்லை” என்று பதிலளித்தனர்.

அங்கு நடந்த கடுமையான வாக்குவாதத்தில் தலையிட்டு மதுக்கடை ஊழியர்கள் தடுப்பதற்கு முன்னர், கடையின் பாதுகாப்பு கேமராக்களின் பார்வையில் லு பிரியோலும் பூவியேயும் ஹெகார்ட்டி மற்றும் அரம்புருவை மீண்டும் மீண்டும் தாக்கினர்.

இரண்டு முன்னாள் ரக்பி ஆட்டக்காரர்களும் மதுக்கடையை விட்டு வெளியேறி, Boulevard Saint Germain வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நின்றனர். அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேறியபோது, லு பிரியோலின் காதலி லீசன் ரோஷ்மிர் ஓட்டி வந்த கார் ஒன்று அவர்களுக்குப் பக்கத்தில் வந்து நின்றது. அப்போது பூவியேயும் லு பிரியோலும் காரை விட்டு வெளியேறி, அரம்புரு மற்றும் ஹெகார்ட்டி மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரம்புரு முதுகில் நான்கு முறை தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அரம்புருவை சுட்டுக் கொன்றுவிட்டு, அந்த தாக்குதல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல் நடந்து சில நாட்களில் ரோஷ்மிரும் பூவியேயும் பிரெஞ்சு பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மார்ச் 23 அன்று உக்ரேனிய எல்லையில் உள்ள சாஹோனி என்ற கிராமத்தில் ஹங்கேரிய பொலீசாரால் லு பிரியோல் பிடிக்கப்பட்டார். அவர் தான் இராணுவப் பயிற்சி பெற்றிருப்பதாகவும், ‘உக்ரேனுக்கு சண்டையிடப் போவதாகவும்’ பொலீசாரிடம் கூறினார். அவரது வாகனத்தில் இராணுவ தளவாடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், லு பிரியோல் மார்ச் 31 அன்று பிரான்சுக்குத் மாற்றப்பட்டார்.

அரம்புருவைத் தாக்கிய மூவரும் காவலில் உள்ளனர். ரோஷ்மிர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பூவியேயும் லு பிரியோலும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். லு பிரியோலின் வழக்குரைஞர் தனது கட்சிக்காரரின் குடும்பத்திற்கு “பாஸ்க் சமூகம், தீவிர மற்றும் அதிதீவிர இடதுசாரிகளிடமிருந்து” கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகக் கூறி, அவரது ஆரம்ப விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட வேண்டும் என்று வெற்றிகரமாக மனு அளித்துள்ளார்.

அரம்புரு ஆர்ஜென்டினாவின் லா பிளாட்டாவில் பாஸ்க் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவராவார் மற்றும் ரக்பி ரசிகர்கள் மூலம் பாஸ்க் நாட்டுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். ஏராளமான பாஸ்க் ஆதரவாளர்களுடன் Biarritz ஒலிம்பிக்கில் அவர் தனது தொழில் வாழ்க்கையின் மிகுந்த வெற்றிகரமான காலகட்டத்தை கொண்டிருந்தார்.

2012 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அரம்புரு பிரான்சிலும் சர்வதேச அளவிலும் விளையாடி வெற்றிகரமான வாழ்க்கையை கொண்டிருந்தார். 2004 இல் 15 பேர் கொண்ட விளையாட்டாக ரக்பி மாறுவதற்கு முன்னர் 7 பேர் கொண்ட ரக்பி விளையாட்டில் இருந்து அவர் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது எட்டு வருட கால தொழில் வாழ்க்கையில் பியாரிட்ஸ் ஒலிம்பிக் அணிக்காக அவர் 50 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றார், இரண்டு முறை பிரெஞ்சு சாம்பியன்ஷிப்பை வென்றார், மேலும் ஆர்ஜென்டினா தேசிய அணிக்காக 22 முறை போட்டிகளில் பங்கேற்றார், 2007 ரக்பி உலக கோப்பை போட்டியில் தீவிரமாக முயற்சி செய்தார். அவர் பிரான்சில் பெர்பிக்னன் மற்றும் யுஎஸ் டாக்ஸ் அணிகளுக்காகவும், ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ வாரியர்ஸ் அணிக்காகவும், மற்றும் ஆர்ஜென்டினாவில் கிளப் அட்லெட்டிகோ சான் இசிட்ரோ (Club Atletico San Isidro) அணிக்காகவும் தொழில் ரீதியாக விளையாடினார்.

அரம்புருவின் கொலையை ரக்பி சமூகம் கண்டித்துள்ளது. ஏப்ரல் 18 அன்று, விளையாட்டு செய்தியிதழான L’Equipe, “ஃபெடரிகோ மார்ட்டின் அரம்புரு, தனது மதிப்புக்களை பாதுகாத்ததற்காக படுகொலை செய்யப்பட்டார்” என்ற தலைப்பில் ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டது. இது, “தீவிரவாத மற்றும் பாசிச கருத்துக்களை எதிர்த்ததற்காக [அரம்புரு] கொல்லப்பட்டார். … மீண்டும் ஒருபோதும் இந்த நிலைமைகளின் கீழ் ஒரு மனிதன் இறக்கக்கூடாது, தீவிர வலதுசாரி சித்தாந்தத்தின் காரணமாக ஒரு குடும்பம் மீண்டும் ஒருபோதும் இவ்வாறு துக்கப்படக்கூடாது, எங்கள் மதிப்புக்கள், எங்கள் யோசனைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நம் நாட்டில் வெறுப்புணர்வை நுழைய விட விரும்புபவர்களுக்கு எதிராக எப்போதும் நாங்கள் போராடுவோம்” என்று தெரிவிக்கிறது.

அரம்புருவின் மரணம் அரசியல் சார்பற்றது அல்லது தனிமைப்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டதை கடிதம் நிராகரித்தது: “இல்லை, நம்மில் சிலர் நம்புவது போல், ஃபெடரிகோவின் மரணம் ஒரு செய்தி அல்லது பொதுவான குற்றம் அல்ல” என்கிறது.

உண்மையில், சில அறிக்கைகள், அரம்புருவை தாக்கியவர்கள் பிரெஞ்சு அரசுடன் கொண்டிருந்த உறவுகள், அவர்களின் முந்தைய, தண்டிக்கப்படாத குற்றங்கள் அல்லது தற்போதைய பொலீஸ் அதிகாரிகளுடன் அவர்கள் கொண்டிருந்த நட்பு ஆகியவற்றை விவரித்துள்ளன.

லு பிரியோல் 17 வயதில் கடற்படைக்குள் நுழைந்தார். மாலியில் கமாண்டோக்களில் பணியாற்றிய போது, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பல திடீர் சோதனைகளில் பங்கேற்று, இரண்டு இராணுவப் பாராட்டுக்களைப் பெற்றார். Marianne இன் கூற்றுப்படி, 2015 இல் ஜிபூட்டியில் பணியாற்றிய போது, அவர் ‘ஒரு விபச்சாரியை அடித்து கழுத்தை நெரித்தார்,’ என்பதால் அவரை விடுவிக்க பிரெஞ்சு அரசு 350,000 ஜிபூட்டி பிராங்குகளை (1,700 யூரோ) செலுத்த நேரிட்டது. தண்டனையிலிருந்து தப்பித்த பின்னர், அவர் உத்தியோகபூர்வமாக இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் பிரெஞ்சு இராணுவ ஒப்பந்தங்களின் பேரில் அவர் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பணியாற்றினார். அவர் பெரும் குடிகாரர் என்று கூறப்படுகிறது, மேலும் அவருக்கு PTSD இருப்பதாக அவரது வழக்குரைஞர் கூறுகிறார்.

பூவியே Paris-Assas பல்கலைக்கழகத்தில் படித்தார், அவர் லு பிரியோலை தீவிர வலதுசாரி Groupe Union Defense (GUD) இல் சந்தித்ததில் இருந்து இருவரும் நண்பர்களாயினர். 2012 வாக்கில், அவர்கள் இருவரும் மரின் லு பென்னின் தேசிய பேரணியின் முன்னாள் இளைஞர் இயக்கமான Young National Front இன் முன்னாள் தலைவரான ஜூலியன் ரோச்செடியை அறிந்திருந்தனர்.

2015 இல் இராணுவ சேவையிலிருந்து திரும்பியதன் பின்னர், லு பிரியோல் GUD இல் மிகத் தீவிரமாக செயலாற்றினார். அந்த ஆண்டு பெப்ரவரியில், ஒரு இரவு விடுதிக்கு வெளியே பித்தளை கைக்காப்பு போன்ற கருவியால் இரண்டு 19 வயது இளைஞர்களை லு பிரியோலும் பூவியேயும் குடிபோதையில் தாக்கியதற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர், ஆனால் ஒரு வருடம் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையை மட்டுமே அனுபவித்தனர்.

அக்டோபர் 2015 இல், முன்னாள் GUD தலைவர் எட்வார்ட் க்ளீனை அடித்து பாலியல் ரீதியாக அவமானப்படுத்தும் வகையில் லு பிரியோல் தன்னையும், பூவியேயும் மற்றும் மற்றவர்களுடன் படம்பிடித்து சித்திரவதையில் ஈடுபட்டதற்காக இந்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது பூவியே காவலில் வைக்கப்படவில்லை, அதே நேரத்தில் 25,000 யூரோ பிணையில் வெளிவருவதற்கு முன்னர் லு பிரியோல் 10 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் என்று GUD உடன் தொடர்புடைய ஒரு தெளிவற்ற நிதி நிறுவனமான Financiere Agos ஆல் தகவல் வெளியிடப்பட்டது. தாக்குதல் 2015 இல் நடந்திருந்தாலும், லு பிரியோலின் விசாரணை ஒருபோதும் நடைபெறவில்லை, மேலும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 1, 2022 விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு இராணுவத்திற்கான லு பிரியோலின் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த வழக்கிற்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்தன, பின்னர் ஒரு உள் விசாரணையை தொடர்ந்து 2017 இல் தான் ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில், மரின் லு பென்னின் மக்கள் தொடர்பு ஆலோசகராக இருந்த முன்னாள் GUD தலைவரான ஃபிரடெரிக் சாத்திலோனின் மகளுடன் லு பிரியோல் காதல் உறவு கொண்டிருந்தார். அவர் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளார்.

முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் அரம்புருவின் படுகொலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது. பிரெஞ்சுத் தேர்தலின் முதல் சுற்றுக்கான இறுதிப் பிரச்சாரத்தின் போது இந்தக் கொலை நடந்தது, மேலும் ஏப்ரல் 24 அன்று தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு சற்று முன்னர் லு பிரியோலின் பொலீஸ் உறவுகள் பற்றிய வெளிப்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

ஆயினும்கூட, அறியப்பட்ட தீவிர வலதுசாரி குற்றவாளி, சித்திரவதைக்காக ஜாமீனில் வெளியே வந்தவர், ஒரு மனிதனைக் கொல்வதற்கு முன்பு போலீஸ் அதிகாரிகளுடன் மாலை நேரத்தைக் கழிக்கும் வழக்கின் உண்மைகள், தங்களை 'இடதுசாரி' என முன்னிலைப்படுத்துபவர்கள் உட்பட, ஜனாதிபதி வேட்பாளர்கள் எவராலும் கருத்து தெரிவிக்கப்படவில்லை. லு பென்னின் பரிவாரங்களுடனான லு பிரியோலின் உறவுகள் பற்றிய ஒரு தீவிரமான பொது விவாதமானது நவ-பாசிச அரசியலின் உண்மைத் தன்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் என்பது வெளிப்படையானது. ஆயினும்கூட, அத்தகைய விவாதம் பிரெஞ்சு வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மறுக்கப்பட்டது என்பதே உண்மை.

Loading