மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 31 இல் வெள்ளை மாளிகை அறிவித்த மற்றொரு 700 மில்லியன் டாலர் இராணுவ உதவியின் பாகமாக, உக்ரேனிய இராணுவத்திற்கு அதிநவீன நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளான HIMARS ஐ (High Mobility Artillery Rocket System) வாஷிங்டன் வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை அறிவித்தார். இந்தச் சமீபத்திய நிலுவை, மூன்று மாதங்களுக்கு முன்னர் போர் தொடங்கியதில் இருந்து பைடென் நிர்வாகம் வாக்குறுதி அளித்த மொத்த நேரடி இராணுவ உதவியை 4.6 பில்லியன் டாலருக்குக் கொண்டு வருகிறது.
வாஷிங்டனில் இருந்து இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனும் பைடெனும் அமெரிக்கத் தயாரிப்பான M270 ரக சரமாரியாக ராக்கெட் ஏவும் தளவாடங்களை (Multiple Launch Rocket Systems - MLRS) அனுப்புவது குறித்து புதன்கிழமை காலை உரையாடியதாகவும், இங்கிலாந்து வெளியுறவுத் துறைச் செயலர் லிஸ் ட்ரஸூம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கெனும் அனுப்பப்படும் தளவாடங்களின் கூடுதல் விபரங்களை வியாழன் காலை விவாதிக்க இருப்பதாகவும் Politico குறிப்பிட்டது.
உக்ரேனில் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பினாமி போரில் சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவுக்கு எதிரான மொத்த ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களில், அவை தொலைதூர ஏவுகணைத் தளவாடங்களை வழங்குவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
HIMARS மற்றும் MLRS இரண்டுமே அதிநவீனத் தொலைதூர ஏவுகணை அமைப்புகளாகும், அவற்றின் வெடி பொருட்களைப் பொறுத்து, 300 கிலோ மீட்டர்கள் அல்லது 186 மைல்கள் வரைச் சென்று தாக்கும் ராக்கெட்களை அவற்றால் ஏவ முடியும். CNN தகவல்படி, அவ்விரண்டுமே 'நிலத்தின் இலக்குகளைக் குறி வைத்து நகரும் வாகனங்களில் இருந்து செலுத்தப்படும், இவை ரஷ்ய இலக்குகளை மிகவும் எளிதாக தாக்க உக்ரேனியர்களை அனுமதிக்கும்.”
வெடி பொருட்களைப் பொறுத்த வரை, 80 கிலோ மீட்டர்கள் அல்லது 50 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய, வழிநடத்தப்படும் பல ராக்கெட் ஏவும் அமைப்புகளுக்கான ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்கும். நியூ யோர்க் டைம்ஸின் பொது தலையங்க பக்கத்தில் பைடென் குறிப்பிடுகையில், இத்தகைய ஏவுகணைகள் 'உக்ரேன் போர்க் களத்தில் முக்கிய இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்க அவர்களுக்கு [உக்ரேனிய ஆயுதப் படைக்கு] உதவும்,” என்றார்.
இந்த அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவது, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமிப் போரில் ஈடுபட்டுள்ள சக்திகளின் சமநிலையை மீண்டும் உக்ரேனின் நேட்டோ ஆதரவு இராணுவத்திற்கு மாற்றுவதைத் தெளிவாக அர்த்தப்படுத்துகிறது.
போரின் முதல் கட்டத்தைப் போல் இல்லாமல், அதாவது உக்ரேன் இராணுவமும் துணை இராணுவப் படையும் ரஷ்யப் படைகளை இரத்தக்களரியான நகர்ப்புற சண்டையில் இழுத்துச் செல்ல முடியும் என்றில்லாமல், இந்தப் போர் இப்போது ஏறக்குறைய முழுவதும் கிழக்கு உக்ரேனில் சண்டையிடப் படுகிறது, பீரங்கிப் படைகள் அதிகமாக பாத்திரம் வகிக்கின்றன, இது ரஷ்யாவுக்கு ஆதாயமாக உள்ளது.
இந்தப் போரின் அவமானகரமான முதல் கட்ட மிகப் பெரிய இராணுவ இழப்புகளுக்குப் பின்னர், சமீபத்திய வாரங்களில் ரஷ்யா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. மூலோபாயத் துறைமுக நகரமான மரியுபோல் இப்போது ரஷ்யக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, இது கருங்கடலில் உள்ள கிரிமியன் தீபகற்பத்திற்கும் 2014 இல் இருந்து ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகள் வசமிருந்த டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இடையே கிரெம்ளினுக்கு ஒரு தரைப் பாலமாக அமைகிறது. ரஷ்யப் படைகள் மூலோபாய நகரமான செவெரோடோனெட்ஸ்க்கைக் (Severodonetsk) (அல்லது Sievierodonetsk) கைப்பற்றும் நிகழ்வுபோக்கில் இருப்பதாகவும் தெரிகிறது.
அவர் இராணுவம் டொன்பாஸ் போரில் ஒவ்வொரு நாளும் '60 இல் இருந்து 100 வரையிலான' ஆட்களை இழந்து வருவதாகவும், அதேவேளை ஒவ்வொரு நாளும் 500 பேராவது காயமடைந்து வருவதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி கடந்த வாரம் ஒப்புக் கொண்டார். உக்ரேனிய இழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று பலர் மதிப்பிடுகின்றனர்.
ஆனால், அனைத்திற்கும் மேலாக, HIMARS மற்றும் MLRS விநியோகங்கள் ரஷ்ய எல்லைக்குள் ஏவுகணைகளை ஏவுவதற்கான உக்ரேனின் நேரடி வாய்ப்பை உயர்த்துகின்றன. இந்தப் போர் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்தும், உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டினது எல்லைகளைக் கடந்து இந்தப் போரின் விரிவடையும் சாத்தியக்கூறுகள் குறித்தும் முன்னணி ரஷ்ய அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
வழங்கப்பட உள்ள இந்த ஆயுத அமைப்புகளைப் பற்றிய முதல் அறிக்கைகள் குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளியுறவுத் துறை மந்திரி சேர்ஜி லாவ்ரோவ், 'மேற்கு நாடுகள் உக்ரேனிய நவ-நாஜிக்களின் கரங்கள், உடல்கள், மூளைகளைக் கொண்டு, சாராம்சத்தில், ரஷ்யக் கூட்டாட்சிக்கு எதிராக ஏற்கனவே ஒரு பினாமிப் போரைத் தொடுத்துள்ளன என்பதை நாங்கள் மிகவும் தீவிரமான முறையில் மேற்கை எச்சரித்துள்ளோம், என்றாலும் இது [இது போன்ற வினியோகங்கள்] ஏற்றுக் கொள்ளவியலாத அதிகரிப்பை நோக்கிய மிகவும் தீவிரமான நடவடிக்கையாக இருக்கும்,” என்றார்.
ரஷ்யப் பாதுகாப்புக் கவுன்சில் தலைவரும், மாஸ்கோவில் உள்ள மிகவும் போர்க் குணமிக்க அரசியல்வாதிகளுள் ஒருவருமான டிமிட்ரி மெட்வெடேவ், மே 30 இல் எச்சரிக்கையில், ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால், ரஷ்யாவின் ஆயுதப்படைகள் இத்தகைய தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான முடிவெடுக்கும் மையங்கள் மீது தாக்குதல்களை நடத்தும் என்றார், “அவற்றில் சில கியேவில் இல்லை,” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
80 கிலோ மீட்டர்கள் அல்லது 50 மைல்கள் சென்று தாக்கக் கூடிய வெடிகுண்டுகளை 'மட்டுமே' அமெரிக்கா வழங்கும் என்ற வெற்று உத்தரவாதத்துடன், ரஷ்யாவின் இலக்குகளை அது தாக்காது என்பதற்கு உக்ரேனிய அரசாங்கம் 'உத்தரவாதங்கள்' வழங்கி இருப்பதாகவும் கூறி, வெள்ளை மாளிகை இந்த அசாதாரணமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையை அறிவித்தது.
இது ஒரு கேலிக்கூத்து. வெடி பொருட்களை வழங்குவதை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ள முடியும். உண்மையில் சொல்லப் போனால், கடந்த இரண்டு மாதங்களில் வாஷிங்டன் உக்ரேனுக்கு 54 பில்லியன் டாலருக்கும் அதிகமான உதவிகளை வழங்கி உள்ள நிலையில், அது முன்னர் 'வரம்பு மீறியதாக' இருந்ததை, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, மாற்றி அமைத்துள்ளது.
மே மாதம் உக்ரேனுக்கான 40 பில்லியன் டாலர் உதவி வரவு-செலவுத் திட்டத்தை வாஷிங்டன் முன்னெடுப்பதற்கு முன்னரே கூட, அமெரிக்கா 155 மிமீ 90 ஹோவிட்சர்களையும் 200,000 க்கும் அதிகமான 155 மிமீ குண்டுகளையும், 1,400 ஸ்டின்ஜெர் விமானத் தகர்ப்பு அமைப்புகளையும், 5,500 க்கும் அதிகமான ஜவலின் கவச அமைப்புகளைத் தகர்க்கும் தளவாடங்களையும், இன்னும் பிற 14,000 க்கும் அதிகமான கவச அமைப்புகளைத் தகர்க்கும் தளவாடங்களையும் வழங்க பொறுப்பேற்றிருந்தது. அப்போதிருந்தே டென்மார்க் வழியாக உக்ரேனுக்கு ஹார்பூன் கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளையும், அத்துடன் சுயமாக இயங்கக்கூடிய குண்டு துளைக்காத M109 Paladin ஹோவிட்சர், அதே போல கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள், அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப் படைப் பயன்படுத்தி வரும் இடம் விட்டு இடம் நகர்த்தக் கூடிய பீரங்கி அமைப்புகளையும் அமெரிக்கா வழங்கத் தொடங்கியது.
இப்போது, அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இந்த 40 பில்லியன் டாலர் போர் மசோதாவில் இருந்து 17 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத ஒப்பந்தங்களை எதிர்பார்க்கின்றனர்.
அசோவ் பட்டாலியனின் நவ-நாஜிகளை 'மாவீரர்களாகவும்' மற்றும் 'உக்ரேனின் சிறந்த பாதுகாவலர்களாகவும்' கூறி அதன் பின்னால் அணி வகுக்கும் உக்ரேனின் வொலொடிமிர் செலென்ஸ்கி அரசாங்கத்தின் வார்த்தையோ மதிப்பற்றது.
செவ்வாய்கிழமை இரவு ஒரு நேர்காணலில், செலென்ஸ்கி கூறுகையில், 'நாங்கள் ரஷ்யாவைத் தாக்க திட்டமிடவில்லை. அவர்களின் எல்லைக்குள் நாங்கள் சண்டையிடவில்லை. எங்கள் பிரதேசத்தில் தான் போர் நடக்கிறது,” என்றார்.
உண்மையில் சொல்லப் போனால், ரஷ்ய குர்ஸ்க் பிரதேசத்தின் கிராமங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது உக்ரேன் தரப்பில் இருந்து இலக்கு வைத்து அங்கே ஏற்கனவே பல வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. டஜன் கணக்கான ரஷ்ய மக்கள் காயமடைந்துள்ளனர், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; எல்லைப் பகுதியில் வசிக்கும் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் குர்ஸ்க் பகுதிக்கு அதன் துருப்புகள் மற்றும் பீரங்கிப் படைகளை அனுப்பியுள்ளது.
இத்தகைய தாக்குதல்களுக்குப் பின்புலத்தில் கியேவ் இருந்ததை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ உக்ரேனிய அதிகாரிகள் மறுத்து விட்டனர், ஆனால் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் போன்ற பத்திரிகைகளே கூட ரஷ்ய எல்லையில் உக்ரேன் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக வெளிப்படையாகவே எழுதுகின்றன.
அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள Izvestiia பத்திரிகையிடம் பேசிய ரஷ்ய அதிகாரி ஒருவர், கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாகவோ அல்லது டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகள் என்றழைக்கப்படுவதைச் சுதந்திரமானவை ஆகவோ அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே HIRMAS அல்லது MLRS கொண்டு இந்த பிராந்தியங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் கியேவ் மற்றும் வெள்ளை மாளிகை இரண்டையும் பொறுத்த வரையில் சட்டபூர்வமானதாக நியாயப்படுத்த முடியும் என்றாலும் அதுவும் ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரிய பதிலடியைத் தூண்டும். மார்ச் 2021 இல் இருந்து, டொன்பாஸ் மற்றும் கிரிமியா இரண்டையும் 'மீண்டும் கைப்பற்றுவதே' உக்ரேனின் உத்தியோகபூர்வ இராணுவக் கோட்பாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
நியூ யோர்க் டைம்ஸின் பொய் கூறும் ஒரு பொது தலையங்கத்தில், பைடென் கூறுகையில் அமெரிக்கா 'நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு போரை நாடவில்லை' என்றும், 'ரஷ்யாவுக்கு வலியை ஏற்படுத்த இந்த போரை நீடிக்க விரும்ப' வில்லை என்றும் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி அவர் வாசகர்களை முட்டாள்களாக எடுத்துக் கொள்கிறார்.
உக்ரேன் மீது ரஷ்யாவைப் படையெடுக்க செய்வது வேண்டுமென்றே பல ஆண்டுகளாக தூண்டி விடப்பட்டது என்பது மட்டுமல்ல. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அதன் பினாமிப் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா எடுத்துள்ள ஒவ்வொரு அடியும் இந்த மோதலை விரிவுபடுத்தி அதிகரிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகையும் அதன் கீழ்படிந்த ஊடகங்களும் இந்த பொறுப்பற்ற கொள்கைகளின் அபாயகரமான பாதிப்புகள் குறித்து பொதுமக்களை மழுங்கடிப்பதற்காக மேலதிக வேலைகளைச் செய்கின்றன, அவை அணு ஆயுத மோதலாக அதிகரிப்பதற்கான அச்சுறுத்தலை மறுக்கின்றன அல்லது குறைத்துக் காட்டுகின்றன, 'உக்ரேனிலோ அல்லது கருங்கடலைச் சுற்றியோ ரஷ்யா ஓர் அணு ஆயுத வெடிப்பை மேற்கொண்டால் திரு. பைடென் எவ்வாறு விடையிறுக்க வேண்டும் என்பதை வரையறுக்க நிர்வாகத்தினுள் தொடர்ச்சியாக பல அவசரக் கூட்டங்கள் நடந்துள்ளதையும், அத்தகைய உள்அலுவலகக் கூட்டங்களில் பேசப்படும் விஷயங்களின் பாதிப்புகளைக் குறித்து அதிகாரிகள் கூற மாட்டார்கள் என்றும்' வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இப்போது வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க
- கருங்கடலில் ரஷ்யாவிற்கு எதிராக கடற்படை தலையீடு செய்ய இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது
- திமோதி ஸ்னைடர் "ரஷ்யா பாசிச நாடு" என்று கூறுகிறார்: அமெரிக்க-நேட்டோ போர் பிரச்சாரத்திற்கான சேவையில் பொய்மைப்படுத்தல்
- உக்ரேனுக்கான 40 பில்லியன் டாலர் உதவிப் பொதியை செனட் நிறைவேற்றுகையில், சுவீடன், பின்லாந்துக்கான நேட்டோ உறுப்பினர் பதவிக்கு பைடென் நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது