மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு சென்று பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க உள்ளார். மற்ற அரபுத் தலைவர்களுடனான சந்திப்புக்களையும் மற்றும் இஸ்ரேலுக்கான விஜயத்தையும் உள்ளடக்கிய இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு பரந்த ஆதரவைக் கட்டியெழுப்புவதாகும்.
நியூ யோர்க் டைம்ஸ், இந்த பொருள் தொடர்பான அதன் கட்டுரையில், “வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் கூற்றுப்படி, தார்மீக சீற்றம் குறித்த உண்மையான அரசியலின் வெற்றியை இது பிரதிபலிக்கிறது” என்று கருத்து தெரிவித்தது. டைம்ஸ் மற்றும் “வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள்” தரப்பில், உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரங்களில் ஒன்றாக உக்ரேன் இருந்தாலும், இது, அங்கு ‘ஜனநாயகத்தை’ பாதுகாப்பதாக கூறப்படும் அமெரிக்க கூற்றுக்களின் மறுக்க முடியாத பாசாங்குத்தனத்தை சரிகட்டுவதற்கான ஒரு கண்ணியமான வழியாகும் என்று கூறப்படுகிறது.
2018 இல் பின் சல்மானின் உத்தரவின் பேரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜமால் கஷோகியின் விஷயம் பற்றி பைடென் பேசுவாரா அல்லது கஷோகியின் சிதைந்த உடல் எங்கே உள்ளது என கேட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இரத்தம் தோய்ந்த சவுதி ஆட்சிக்கு எதிரான முக்கிய அரசியல் எதிர்ப்பாளர்களான 81 கைதிகள் மார்ச் 12 அன்று தூக்கிலிடப்பட்டது குறித்து பைடென் தனது ‘தார்மீக சீற்றத்தை’ வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பிப்ரவரி 24 படையெடுப்பைத் தொடர்ந்து 100 நாட்களில் சுமார் 4,200 பொதுமக்கள் கொல்லப்பட்ட உக்ரேனில் ரஷ்யா 'போர்க்குற்றங்கள்' மற்றும் 'இனப்படுகொலை' செய்ததாக பைடென் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. எவ்வாறாயினும், 'இனப்படுகொலை' என்ற சொல்லை தற்போதைய போருக்குப் பயன்படுத்த முடியுமானால், அது ஒபாமா நிர்வாகத்தின் கீழ் 2015 இல் தொடங்கிய யேமனுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு சவுதி போரும் அத்தகையதாக இருக்கும்.
மிக வறிய நாட்டில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் பட்டினியால் உயிரிழந்தவர்களின் கணக்கீடுகள் தான் மாறுபடுகின்றன, ஆனால் தற்போது குறைந்தது 400,000 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி அறிக்கை (UNDP) ஏழு மாதங்களுக்கு முன்பு நவம்பர் 2021 இல் ஒரு அறிக்கை வெளியிட்டது, அது அப்போரில் 377,000 பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ளது. இது யேமனின் 30 மில்லியன் மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கு சற்று அதிகமாகும்.
கொல்லப்பட்டவர்களில் 260,000 க்கும் அதிகமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று UNDP மதிப்பிட்டுள்ளது, இது பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சவுதி முற்றுகையால் உருவான பசி மற்றும் நோயினால் நிகழ்ந்ததாகும். இந்த அறிக்கை மேலும், 2030 ஆம் ஆண்டளவில் இறப்பு எண்ணிக்கை 1.3 மில்லியனாக உயரும் என்று மதிப்பிட்டுள்ளது, இதில் 70 சதவிகிதம் பேர் போரின் பேரழிவுகரமான சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தால் கொல்லப்படுவார்கள் என்கிறது. மேலும், 2030 ஆம் ஆண்டளவில் கடும் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அவசர நிதி அமைப்பு (UNICEF) மார்ச் மாதம் வெளியிட்ட ஒரு சிறப்பு அறிக்கை, யேமனில் 538,000 குழந்தைகள் ஏற்கனவே கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளது, ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இது 2.2 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதன் ஒரு பகுதியாக அது நிகழும். 2015 ஆம் ஆண்டு முதல் 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் குண்டுவீச்சுத் தாக்குதலால் நேரடியாக கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று UNICEF உம் மதிப்பிட்டுள்ளது.
சவுதி தலைமையிலான கூட்டணியால் பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களால் இது போர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 21 அன்று, அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர் Raytheon வழங்கிய லேசர்-வழிகாட்டும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி சாடாவில் உள்ள ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 266 பேர் காயமடைந்தனர். 120,000 மக்களுக்கான சுத்தமான குடிநீரை துண்டிக்கும் வகையில் சனாவின் தலைநகரில் உள்ள பொதுக் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
யேமனுக்கு எதிரான சவுதியின் ‘போர்க்குற்றங்கள்’ நடந்த நேரத்தில் அமெரிக்க ஊடகங்களில் எந்த கண்டனமும் வெளிவரவில்லை, மேலும் போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போலி-இடது ஆதரவாளர்களிடமிருந்து எந்தவித அலறலும் இல்லை. இருப்பினும், இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், 50 பேரை கொன்ற உக்ரேன் இரயில் நிலையத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல், அதில் கடுமையான சந்தேகங்கள் இருந்தபோதிலும் ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டு, உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ ஆதரவை கணிசமாக அதிகரிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதை 'இனப்படுகொலை' என பைடென் அறிவித்தார்.
ஜனவரி 2021 இல் அவர் ஆட்சிக்கு வந்ததும், பைடென், குறிப்பாக கஷோகியின் கொலைக்கு சவூதி ஆட்சியை 'விலை செலுத்த' செய்வேன் என்று கூறினார், மேலும் அவரது நிர்வாகம் 'அவர்களை புறக்கணிக்கப்பட்டவர்களாக மாற்றும்' என்று கூறினார். யேமன் போரில் 'தாக்குதல் நடவடிக்கைகளுக்கான அமெரிக்க ஆதரவை' தனது நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவர் தெளிவற்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
இருப்பினும், இது முழுக்க முழுக்க நடிப்பாக இருந்தது. இராணுவ ஆயுதங்கள் தொடர்ந்து சவுதிக்கு வாரி வழங்கப்படுகின்றன. சவுதி அரேபியாவிற்கு முதன்மை ஆயுத விநியோகிப்பாளராக அமெரிக்கா உள்ளது (புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, 73 சதவிகித ஆயுத இறக்குமதி அமெரிக்காவிலிருந்தே பெறப்படுகிறது). அமெரிக்க வெளியுறவுத்துறை இணைய தளத்தின்படி, “சவுதி அரேபியா அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவ விற்பனையின் (FMS) வாடிக்கையாளராக உள்ளது, தற்போது 100 பில்லியன் டாலர் மதிப்பிலான FMS கொள்முதல்களை கொண்டுள்ளது. FMS மூலம், சவுதி அரேபியாவில் உள்ள மூன்று முக்கிய பாதுகாப்பு உதவி அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது, அவை பாதுகாப்பு அமைச்சகம், தேசிய காவலர் படை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை ஆகும்.
அதாவது, யேமனில் குண்டுவீசுவதற்கும் பொருளாதார முற்றுகையை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அமெரிக்கா வழங்குவது மட்டுமல்லாமல், உள்நாட்டு அடக்குமுறையின் எந்திரத்தை வலுப்படுத்தவும் பயன்படுத்துகிறது - உள்துறை அமைச்சகம் மரணதண்டனைக்கு பொறுப்பான நிறுவனமாகும்.
பைடெனின் பயணத்திற்கு முன்னதாக, நிர்வாகம் சவூதி ஆட்சி பற்றிய அதன் உத்தியோகபூர்வ மதிப்பீட்டை மறுசீரமைக்க செயற்படுகிறது. கடந்த வாரம் தான், பைடென் பின் சல்மானை 'புறக்கணிக்கப்பட்டவர்' என்று கருதுவதாக முந்தைய அறிக்கையை வெள்ளை மாளிகை மீண்டும் வலியுறுத்தியது. எவ்வாறாயினும், வியாழன் அன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜோன்-பியர், யேமனில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை 'ஒருங்கிணைக்க' உதவியதற்காக சவுதி அரேபியாவை பாராட்டினார். அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் அது நடத்திய இரத்தக்களரியான படுகொலைக்கு ஒரு பகுதி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அப்பால், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலையும் சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா விவாதிக்கும். அமெரிக்க ஆளும் வர்க்கம், எரிபொருள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் கடும் விலையேற்றங்கள் குறித்து நாட்டிற்குள் பெருகிவரும் சமூகத்தின் சீற்றத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவை அதன் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வாஷிங்டன் முயல்கிறது. வெளியுறவுச் செயலர் ஆன்டனி பிளிங்கெனின் கூற்றுப்படி, இந்த சந்திப்பு, “அந்த உறவில் எங்கள் அனைத்து நலன்களையும்' குறிக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான பாசாங்குத்தனமானது, 'மனித உரிமைகள்' என்ற கிழிந்த மற்றும் இரத்தம் தோய்ந்த பதாகையின் கீழ் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய அறப்போருக்கு முழு ஆதரவை வழங்குவதில் இருந்து ஊடகங்கள் மற்றும் கல்வித்துறையில் உள்ள பெரு முதலாளித்துவ ஒழுக்கவாதிகளை தடுக்காது என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும்.