மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான பினாமிப் போருக்கு மத்தியில், அட்லாண்டிக் இராணுவக் கூட்டணியைச் சீனாவுக்கு எதிராக ஆசிய-பசிபிக் வரை விரிவாக்குவதே மாட்ரிட்டில் இன்று தொடங்கும் நேட்டோ உச்சி மாநாட்டின் முக்கிய ஒருங்குவிப்பாக இருக்கும். அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு அது தலையாய அச்சுறுத்தலாகக் கருதும் பெய்ஜிங்குடன் வாஷிங்டன் விரைவாக மற்றும் ஆக்ரோஷமாக தீவிரப்படுத்தி வரும் மோதலில் இருந்து நேட்டோவின் திட்டநிரல் நேரடியாக தயாரிக்கப்படுகிறது.
நேற்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தின் போது, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் பேசுகையில், இந்த உச்சி மாநாடு முதல் முறையாக நேரடியாகச் சீனாவையும், 'நம் பாதுகாப்பு, நலன்கள் மற்றும் மதிப்புகளுக்குப் பெய்ஜிங் முன்நிறுத்தும் சவால்களையும்' கவனத்தில் கொண்டிருக்கும் என்று அறிவித்தார். நேட்டோ உறுப்பு நாடுகள் 'நம் தெற்கு அண்டைப் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்குக்கு நம் விடையிறுப்பைப் பரிசீலிக்கும்' என்றார்—அதாவது, தெற்கு அண்டைப் பகுதி என்பது, அருகாமையில் உள்ள நேட்டோ உறுப்பு நாட்டில் இருந்தே கூட பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில், உலகின் மறுபக்கத்தில் உள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் குறிக்கிறது.
ஸ்டொல்டென்பேர்க்கின் வார்த்தைகள் மூடிமறைப்பாக இருந்தாலும், என்ன முன்மொழியப்படுகிறது என்றால் ஒட்டுமொத்தமாக உலகெங்கிலும் நேட்டோவின் விரிவெல்லையை அசாதாரணமாக விரிவாக்குவதற்கு முன்மொழியப்படுகிறது, ரஷ்யாவுக்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் ஐரோப்பாவுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தனித்த அத்தியாயம் அல்ல, மாறாக உலகளாவிய தன்மையைக் கொண்டது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள நேட்டோ இராணுவப் படைகளின் பாரிய விரிவாக்கம், வெறுமனே ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாகச் சீனாவுக்கு எதிராகவும் நடத்தப்பட உள்ளது.
உச்சி மாநாட்டுக்கான தயாரிப்பின் போது, ஸ்டொல்டென்பேர்க் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்த ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். ஆச்சரியத்திற்கு இடமின்றி, அவர் வாஷிங்டனின் பிரச்சாரத்தைக் கிளிப்பிள்ளை போல கூறிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், ஸ்டொல்டென்பேர்க், கடந்த வாரம் Politico நடத்திய ஊடக மன்றத்தில் பேசும் போது, ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதலை 'ஜனநாயகம் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு இடையே' அதிகரித்து வரும் போட்டியாகச் சித்தரித்தார். 'மாஸ்கோவும் பெய்ஜிங்கும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றன,” என்றார். யதார்த்தத்தில், அமெரிக்கா தான் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது ஏற்படுத்திய விதிகளைக் கொண்ட ஒழுங்கமைப்பை, இராணுவ வழிவகைகள் மூலமாக, பேணுவதற்கு முயன்று வருகிறது.
வாஷிங்டனைப் போலவே, நேட்டோ தலைவரும் அந்தக் கருத்தரங்கில் கூறுகையில், அவர் 'சீனாவின் எழுச்சியை' குறித்து கவலை கொண்டிருப்பதாகவும், “உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் அணுஆயுத ஆற்றல்களைக் கணிசமாக அதிகரிப்பது, முக்கிய தொழில்நுட்பங்களில் முதலீடுகள் செய்வது உட்பட புதிய நவீன இராணுவத் தளவாடங்களில் பலமாக முதலீடு செய்து வருவதுடன், நமக்கு மிக நெருக்கமாக வரும் வகையில் ஐரோப்பாவின் முக்கிய உள்கட்டமைப்புகளையும் கட்டுப்படுத்த முயன்று வருகிறார்கள்,” என்றார்.
இந்த நேட்டோ உச்சி மாநாடு 2010 இல் இருந்து நடைமுறையில் உள்ள அதன் மூலோபாயக் கருத்தை மறுபரிசீலனைச் செய்யும், அதில் சீனாவைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. புதிய ஆவணம், பென்டகனின் மூலோபாய நோக்குநிலைக்கு இணங்க, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்' மட்டும் கவனம் செலுத்தப் போவதில்லை, மாறாக நேட்டோ துணைச் செயலாளர் ஜெனரல் மிர்சியா ஜியோனா (Mircea Geoană), ஜூன் 10 இல் கோபன்ஹேகன் மாநாட்டில் கூறியதைப் போல, வல்லரசு போட்டியிலும்—குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா மீது, ஒருமுனைப்பட்டு இருக்கும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு ஆசிய-பசிபிக் நாடுகளின் தலைவர்கள் முதல் முறையாக இந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய அனைத்தும் முறையான அமெரிக்க இராணுவ கூட்டாளிகள் ஆகும், அதேவேளையில் ஆஸ்திரேலியாவும் ஜப்பானும், அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து, சீனாவை இலக்கு வைக்கும் நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக் குழு (Quadrilateral Security Dialogue) அல்லது Quad அமைப்பின் பாகமாக உள்ளன.
சமீபத்தில் பதவியேற்ற ஆஸ்திரேலிய தொழிற் கட்சி பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ், மாட்ரிட்டில் வந்திறங்கியதுமே உடனடியாக, நேட்டோ பினாமி போருக்கு அவர் அரசாங்கத்தின் ஆதரவை மீள வலியுறுத்தியதுடன், சீனா 'அதிகரித்தளவில் ஆக்ரோஷமாக மாறி வருவது' குறித்தும் ரஷ்யாவுடன் அதன் 'நெருக்கத்தை' குறித்தும் அவரது கவலைகளை வெளிப்படுத்தினார். ஜப்பான், தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஏனைய 'ஆசியா-பசிபிக் நான்கு' நாடுகளுடன் ஆஸ்திரேலியா அதிக இராணுவ ஒத்துழைப்பை வரவேற்கும் என்றார். அந்த உச்சி மாநாட்டின் பக்கவாட்டில், அந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பும் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் பதவி ஏற்றதில் இருந்து, ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம் ஆசிய-பசிபிக் பகுதியில் வெறித்தனமான இராஜாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது — அலுவலகத்திற்கு வருவதற்குள்ளேயே டோக்கியோவில் நடந்த நாற்கர அணி (Quad) தலைவர்களின் கூட்டத்தில் பங்கெடுத்தமை, அப்பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாகப் பசிபிக் தீவு நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வொங்கை அனுப்பியமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். இந்தப் புதிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உடனான AUKUS உடன்படிக்கையை முழுமையாக அங்கீகரித்துள்ளது, சீனாவை இலக்காக வைத்துள்ள இந்த உடன்படிக்கை, தாக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஆஸ்திரேலியாவை ஆயுதமயப்படுத்தும்.
ஞாயிற்றுக்கிழமை, ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, பெரிதும் மூடிமறைப்பின்றிச் சீனாவை விளாசினார். ரஷ்யாவின் உக்ரேனியப் போரிலிருந்து மற்ற நாடுகள் 'தவறான பாடங்களை' பெறுவதைத் தடுக்க ஓர் ஐக்கிய முன்னணி அவசியம் என்றவர் அறிவித்தார். ஒரே சீனா கொள்கையின் கீழ், சீனாவின் பாகமாக அனைத்து நாடுகளாலும் பெயரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் தைவான் உடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்குச் சாக்குபோக்காக அத்தீவு மீது படையெடுக்க சீனா தயாரிப்பு செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டுவதில் அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளிகளுடன் ஜப்பானும் சேர்ந்துள்ளது.
நேட்டோவுடன் இணைந்து இந்தோ-பசிபிக் முழுவதும் இராணுவக் கூட்டணிகள், மூலோபாயப் பங்காண்மைகள் மற்றும் இராணுவத் தள ஏற்பாடுகளைக் கட்டமைக்கும் ஆக்ரோஷமான அமெரிக்கத் தலைமையிலான முயற்சிகள் குறித்து பெய்ஜிங் ஆழமாகக் கவலைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காகா ஆகிய நாடுகளின் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், 'பனிப்போர் மனப்பான்மையை' நிராகரிப்பதற்கு அழைப்பு விடுத்தார், மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் முடக்கும் வகையில் சுமத்தி உள்ள ஒருதலைப்பட்சமான தடையாணைகளுக்கு எதிராக எச்சரித்தார்.
கடந்த வியாழக்கிழமை, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ஆசியாவில் எதிர்விரோத முகாம்களை உருவாக்கும் 'மிகவும் அபாயகரமான' முயற்சியில் நேட்டோ ஈடுபட்டுள்ளதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். 'நேட்டோ ஏற்கனவே ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைத்துள்ளது. ஆசிய-பசிபிக் மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் அதையே செய்ய அது முயற்சிக்கக் கூடாது,” என்றார்.
சீனா மற்றும் ரஷ்யாவுடன் மோதலை நோக்கிய நேட்டோவின் திருப்பம், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரமின்மையுடன் தொடர்புடைய புவிசார் அரசியல் பதட்டங்களின் கூர்மையான அதிகரிப்புடன் பிணைந்துள்ளது. முன்னர் ஐரோப்பிய சக்திகள் சீனாவுடன் அவற்றின் பொருளாதார உறவுகளையும் அமெரிக்காவுடன் அவற்றின் இராணுவக் கூட்டணியையும் சமநிலைப்படுத்திக் கையாள முயன்றன. இப்போது அவை உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான போரில் இணைந்துள்ள அதேவேளையில், இந்தோ-பசிபிக்கில் இன்னும் பெரியளவில் இராணுவப் பாத்திரம் வகிக்கத் தயாராகி வருகின்றன.
2019 இல் தான் நேட்டோ உச்சி மாநாட்டில் முதல்முறையாக ஒரு வரியில் சீனா குறிப்பிடப்பட்டது, பெய்ஜிங் 'வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டையும்' கொண்டிருப்பதாக அது குறிப்பிட்டிருந்தது. ஆனால் 2021 இல் நேட்டோவின் கூட்டறிக்கை, “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு அமைப்புரீதியான சவால்களை' ஏற்படுத்துவதாக சீனாவைக் குற்றஞ்சாட்டி, கூர்மையாக ஒரு வித்தியாசமான அணுகுமுறையை ஏற்றது.
கடந்தாண்டு AUKUS கூட்டணியில் இணைந்த பிரிட்டன், சீனப் பெருநிலப் பகுதிக்கு அருகில் தென் சீனக் கடலுக்கு போர்க் கப்பல்களை அனுப்பத் தொடங்கியது. பிரான்ஸூம் ஜேர்மனியும் கூட இத்தகைய முக்கிய மூலோபாய கடற்பகுதிக்கு போர்க் கப்பல்களை அனுப்பி உள்ளன.
நேட்டோ உச்சி மாநாடு ரஷ்யாவுடன் தீவிரமடைந்து வரும் பினாமி போரில் ஒரு கூர்மையான திருப்புமுனையைக் குறிப்பதுடன், சீனாவுடனான வாஷிங்டனின் ஆக்ரோஷமான மோதலில், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ நட்பு நாடுகளின் ஈடுபாடு அணுஆயுதச் சக்திகளுக்கு இடையே மிகவும் நிஜமான ஓர் உலகளாவிய போர் அபாயத்தை முன்னிறுத்துகிறது.
மேலும் படிக்க
- தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் அமெரிக்கா தலைமையிலான ‘ஆத்திரமூட்டும்’ இராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனா எச்சரிக்கிறது
- ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகள்: தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசிய கூட்டணி மீது ஆழ்ந்த விரோதத்தைக் காட்டுகிறது
- அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இராணுவ ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான போருக்கு அச்சுறுத்துகிறது