இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
இன்று அதிகாலையில், நூற்றுக்கணக்கான இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்ட முகாம் மீது தாக்குதல் நடத்தினர். முகங்களை கருப்புத் துணியால் மூடக்கொண்டு, கனமாக ஆயுதங்களை ஏந்தி வந்த, அரச படைகள், கண்மூடித்தனமாக ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதுடன், டசின் கணக்கானவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாக புதன்கிழமை பதவியேற்ற பின்னர், அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலே அவரது முதல் நடவடிக்கையாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் வலதுசாரி, ஏகாதிபத்திய ஆதரவுத் தலைவர் எதற்குத் தயார் செய்கிறார் என்பதற்கான கடுமையான எச்சரிக்கையே இதுவாகும்.
தனது முன்னோடியான முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ கடந்த வாரம் ஒரு குற்றவாளியைப் போன்று நாட்டை விட்டு வெளியேறியதிலிருந்து, கடந்த மூன்று மாதங்களாக தீவை உலுக்கிய பாரிய எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்கு விக்கிரமசிங்க உறுதிபூண்டுள்ளார்.
இன்று காலை நடந்த தாக்குதல் விக்கிரமசிங்கவால் நேரடியாகத் தூண்டவிடப்பட்டது. அவர் புதன்கிழமை இரவு, அவர் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே இதை அறிவித்தார்: 'நாங்கள் அவர்களை சட்டத்தின்படி உறுதியாகக் கையாள்வோம். அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டும் என்று கோரும் அமைதியான பெரும்பான்மையினரின் அபிலாஷைகளை நசுக்க சிறுபான்மை எதிர்ப்பாளர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்கள் 'சிறுபான்மையினர்', அவர்கள் 'அமைதியான பெரும்பான்மையினரை' அடக்குகிறார்கள் என்ற கூற்றுக்கள் யாரும் நம்பாத பரிதாபகரமான பொய்கள் ஆகும். இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன. இந்த மகத்தான இயக்கத்தை நசுக்குவதற்கு பாரிய இராணுவப் படைகளை அனுப்புவதையே விக்கிரமசிங்க உண்மையில் முன்னறிவித்தள்ளார்.
காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியிருந்த போதிலும், இன்று காலை இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்கிரமசிங்க எச்சரித்ததற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர்களின் உறுதிமொழி இருந்தது. பெரும்பாலானோர் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆர்ப்பாட்டக்காரர்களைப் பிடிக்கவும், பரந்த வெகுஜன அணிதிரள்வு ஒன்று ஏற்பட்டு இந்த தாக்குதலை சவால் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவும், நள்ளிரவைக் கடந்து நேரம் ஒதுக்கப்பட்டது.
பிபிசி பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதலும் இந்த அரச கொடூரத்தில் அடங்கும். தாக்குதலுக்கு ஆளானவர்களில் கணக்கிலடங்கா எண்ணிக்கையிலானவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது, சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இந்த தாக்குதல் முதலாளித்துவ ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அரசியல் உயரடுக்கின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு முனையாகும். இது முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் வெகுஜன விரோதம் வளர்ச்சியடைந்துள்ள நிலைமையின் கீழ் நடக்கின்றது. இராஜபக்ஷவை பதவி விலக கோரிய எதிர்ப்பாளர்கள், விக்கிரமசிங்கவையும் பதவி விலகுமாறு கோருகின்றனர். அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை, ஆனாலும் அவர் சாதாரண மக்களால் அன்றி, பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'அனைத்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழிக' என்பது தொழிலாள வர்க்கம் மற்றும் எதிர்ப்பு இயக்கத்தின் நீண்டகால ஜனரஞ்சக கோரிக்கையாகும்.
எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதலை மேற்பார்வையிடும் போது, விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்றக் கட்சிகளையும் தனக்கு ஆதரவளிக்குமாறு தனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினார். புதன் கிழமையின் போலி தேர்தல் செயல்முறையை குறிப்பிட்ட அவர், “கடந்த 48 மணிநேரமாக நாங்கள் பிளவுபட்டிருந்தோம். அந்தக் காலம் முடிந்துவிட்டது. நாம் இப்போது ஒன்றாக வேலை செய்ய வேண்டும்,” என அறிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னிணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருமான டலஸ் அழகப்பெரும மற்றும் அவரை தேர்தலில் ஆதரத்த ஐக்கிய மக்கள் சக்தயின் (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாசவும் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரேமதாச விக்கிரமசிங்கவைச் சந்தித்தார், அவர் 'ஒரு சுமுகமான மற்றும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம்” இடம்பெற்றதாக அறிவித்ததோடு “துயரம் மற்றும் பேரழிவைத் தவிர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கும் எதிர்க்கட்சியின் உறுதிப்பாட்டை” மீண்டும் வலியுறுத்தினார். அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரும் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தங்கள் விருப்பத்தை முன்பே தெரிவித்துள்ளன.
விக்கிரமசிங்கவின் பதவிக்கு பெருவணிகத்தின் பிரதிபலிப்பு, புதனன்று அவர் தேர்வானதற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட உயர்வில் வெளிப்பட்டுள்ளது. இது சிக்கன நடவடிக்கைகளை அவர் ஈவிரக்கமற்று அமுல்படுத்துவது தங்களது இலாபத்தை பெருக்கும் என்று பெரும் வணிகர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையை சமிக்ஞை செய்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க மற்றும் இந்திய தூதர்கள் விக்கிரமசிங்கவின் தேர்தலை வரவேற்றுள்ளனர். புதன்கிழமை தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பாராளுமன்ற சபாநாயகர் அபேவர்தன, அமெரிக்கா, இங்கிலாந்து, கனேடிய, ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தூதுவர்களுடன் உயர்மட்ட கூட்டுக் கூட்டத்தை நடத்தினார்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும், அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை எதிரொலிப்பதாகவும் தனது ட்வீட் செய்தியில் தெரிவித்தார். 'இந்த சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது அவசியமாகும்,' என்று அவர் கூறினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நம்பகமான முகவராக விக்கிரமசிங்கவின் பதிவைக் கருத்தில் கொண்டு, சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ மூலோபாயத் தாக்குதலில் கொழும்பை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்க வாஷிங்டன் வேலை செய்யும்.
கொழும்பின் ஆளும் ஸ்தாபனத்திற்கு எதிரான இலங்கை மக்களின் ஆழமான வெறுப்பு மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி பற்றி நிலவும் விழிப்புணர்வையிட்டு, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் புதிய ஜனாதிபதியை அங்கீகரித்து கவனமாக அறிக்கையை வெளியிட்டது.
'இலங்கையின் நெருங்கிய நண்பர் மற்றும் அண்டை நாடு மற்றும் சக ஜனநாயக நாடு என்ற வகையில், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான இலங்கை மக்களின் தேடலுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்,' என அது கூறியது.
இந்தியன் எக்ஸ்பிரஸில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அநாமதேய சிரஷ்ட இந்திய அதிகாரி அறிவித்தாவது: 'அவர் மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்கிறார்... தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு விடயம், வேலையை [நேரத்தில்] செய்து முடிப்பதே அவரது உண்மையான சோதனை ஆகும்.'
இந்த அறிக்கைகள், சர்வதேச நாணய நிதியதம் திட்டமிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஏற்கனவே பட்டினியில் உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாது வெடிக்கும் எதிர்ப்பை அடக்குவதில் புதிய ஆட்சியின் திறனைப் பற்றிய இந்திய ஆளும் உயரடுக்கின் கவலைகளை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையில் அதிகரித்து வரும் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியானது உலகளாவிய பொருளாதாரக் கொந்தளிப்பின் கூர்மையான வெளிப்பாடாகும், இது தொடரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ முன்னெடுஃகும் பினாமி போரினால் இன்னும் மோசமடைகிறது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த ஐந்து மாதங்களில் இலங்கை மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பணவீக்க வீதமான சுமார் 50 வீதமானது 70 வீதத்திற்கு விரைவாக உயரும் என்று அவர் முன்னர் கணித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 'நிலையான' அரசாங்கம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ஆவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, அதன் மீட்புப் பேச்சுக்கள் என்று அழைக்கப்படுபவை 'முடிந்தவரை விரைவாக' முடிவடையும் என்று நம்புவதாக அறிவித்தார். 'நீடித்த பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லை என்று இங்கே ஒரு புரிதல் உள்ளது, [புதிய] அரசாங்கம் அமைந்த பிறகு மூன்று வாரங்களுக்குள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று அவர் மேலும் எச்சரித்தார்,
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனைத்து அரசியல் எதிர்ப்புகளையும் நசுக்குவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் தாக்குதல்களைத் திணிப்பதற்கும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பொலிஸ்-இராணுவப் பலத்தை இரக்கமற்ற முறையில் பயன்படுத்துவது உட்பட, தான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ள விக்கிரமசிங்கவிற்கு, சர்வதேச நாணய நிதியம் தனது செய்தியை வலுப்படுத்துகிறது.
அரசின் கைகளில் இருக்கும் அத்தியாவசிய சேவைகளை தனியார்மயமாக்குதல், அரச துறை முழுவதும் இலட்சக் கணக்கான வேலை வெட்டுக்கள், பொது சுகாதாரம் மற்றும் கல்வியை அகற்றுதல் மற்றும் இலட்சக் கணக்கான மக்கள் பிழைப்புக்காக சார்ந்திருக்கும் வரையறுக்கப்பட்ட மானியங்களை விலக்கிக்கொள்ளல் ஆகியவை திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்தத் தாக்குதல் தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை தீவிரப்படுத்தும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற முறையில், சிக்கன நடவடிக்கைகளின் அனைத்து எதிர்ப்பாளர்களுக்கும் எதிராக பொலிஸ் இராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு விக்கிரமசிங்க பரந்த அளவிலான எதேச்சதிகார அதிகாரங்களைக் கொண்டுள்ளார். வெள்ளியன்று நடந்த தாக்குதல், அவர் இன்னும் பரந்த அளவில் என்ன திட்டமிடுகிறார் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவி உயர்வு மற்றும் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் முழுக்க முழுக்க எதிர்கட்சிகள் மற்றும் அவற்றின் அடிவருடிகளை நம்பியே முன்னெடுக்கப்படுகிறது.
ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஐ.ம.ச. மற்றும் ஏனைய பாராளுமன்றக் கட்சிகள் இடைக்கால, சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுகையில், பல்வேறு போலி-இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த பிற்போக்கு சூழ்ச்சிகளின் பின்னால் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை திசைதிருப்பிவிட அயராது உழைத்து வருகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மாத்திரம், சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இந்த கொடூரமான, சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவான ஆட்சி மற்றும் முதலாளித்துவ இலாப முறைமைக்கு எதிராக, பாரிய போராட்டங்களுக்கு அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் இலங்கை தொழிலாள வர்க்கம் தயாராக வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி நேற்று வெளியிட்ட ஒரு முக்கியமான அறிக்கையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கூட்டுவதற்கான தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்தது. இந்த மாநாடு, அவர்கள் நுழையும் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களால் நிறுவப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அடித்தளமாகக் கொண்டதாக இருக்கும்.
ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான போராட்டம், அத்தகைய குழுக்களின் பரந்த வலையமைப்பை ஒருங்கிணைப்புக்கு கொண்டுவந்து, 'தொழிலாளர் வர்க்கம் அதன் சக்திகளை ஒருங்கிணைப்பதற்கும், கிராமப்புற மக்களின் தீவிர ஆதரவைப் பெறுவதற்கும், சோசலிச வழியில் சமூகத்தை மறுகட்டமைக்க அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் மூலம் அதன் சொந்த ஆட்சியை அமைப்பதற்கும் ஒரு அரசியல் மூலோபாயத்தை வழங்குகிறது.”
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள புரட்சிகர வேலைத்திட்டத்தை ஆய்வு செய்து, கலந்துரையாட வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும்.