முன்னோக்கு

மிக்கைல் கோர்பச்சேவ் மரணமும், ஸ்ராலினிச எதிர்புரட்சியின் மரபும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கம்யூனிஸ்ட் கட்சியின் (CP) முன்னாள் பொதுச் செயலரும், சோவியத் ஒன்றியத்தின் தலைவருமான மிக்கைல் கோர்பச்சேவ் செவ்வாய்க்கிழமை அவரின் 91வது வயதில் மாஸ்கோ மருத்துவமனையில் காலமானார். சில ஆண்டுகளாகவே அவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

1950 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கோர்பச்சேவ், மூன்றரை தசாப்தங்களாக சோவியத் அதிகாரத்துவத்திற்கு விசுவாசமான சேவகராக இருந்தார். சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பறித்து, அதாவது முழுமையான முதலாளித்துவ மீட்டமைப்பு செய்து சோவியத் ஒன்றியத்தை ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகளாக கலைத்து விட்டு, தங்களை மேலுயர்த்திக் கொண்ட ஒட்டுண்ணிகளால் நடத்தப்பட்ட இறுதிக் காட்டிக்கொடுப்பு நடவடிக்கைக்கு அவர் பொறுப்பேற்று இருந்தார். பரம பிற்போக்குவாதியான மார்கரெட் தாட்சரின் வார்த்தைகளில் கூறுவதானால், “வியாபாரம் பேச' அவர் சரியான ஆளாக இருந்தார்.

Soviet President Mikhail Gorbachev addressing a group of 150 business executives in San Francisco on June 5, 1990. [AP Photo/David Longstreath] [AP Photo/David Longstreath]

1980 கள் மற்றும் 1990 களின் முற்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கோர்பச்சேவின் புனர்நிர்மாண (பெரஸ்துரொய்கா - perestroika) கொள்கை, 1917 ரஷ்யப் புரட்சியில் இருந்து உருவான தேசியமயமாக்கப்பட்ட சொத்து அமைப்பு முறையை முறைப்படி கலைக்கத் தொடங்கியது. வெளிநாட்டு வர்த்தகம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி, சிறு வணிகங்களை சட்டபூர்வமாக்கிய, பெரஸ்துரொய்கா கொள்கை, முக்கிய தொழில்துறைகளுக்கான மானியங்களை நிறுத்தியது, தொழிலாளர் சட்டங்களை வீசி நிராகரித்தது, சோவியத் பொருளாதாரம் மற்றும் சோவியத் சமூகத்தை சீர்குலைத்தது.

திடீரென 'சுய-நிதி முதலீட்டு' முறைக்கு (self-financing system) தள்ளப்பட்ட நிறுவனங்கள், உற்பத்திக்கும், சம்பளத் தொகைகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமையாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தின் முதுகெலும்பாகவும் இருந்த சலுகைகள் மற்றும் சமூக சேவைகளுக்கும் நிதி ஒதுக்கத் தேவையான வளங்களை பாதுகாக்க முடியாமல் ஆயின. இலாபத்திற்காக உற்பத்தி செய்யுமாறு அரசால் வழிநடத்தப்பட்ட, மிகவும் நல்ல நிலையில் இருந்த தொழிற்சாலைகளின் நிர்வாகிகள், நாட்டின் பொருளாதார துறையிலிருந்து பண்டங்களைத் திசைத்திருப்பி, நுகர்வோருக்கு மிகவும் அவசியமான பொருட்களைக் கூட சந்தைக்கு ஏற்ற விலையில் விற்றனர்.

அந்த சீர்திருத்தங்கள் அரச சொத்துக்களை மொத்தமாக கொள்ளையடிக்கும் செயல்முறையை தொடங்கி வைத்தன. வணிகங்கள் திறக்கவும், சோவியத் சொத்துக்கள் மற்றும் வளங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்கவும், கம்யூனிச இளைஞர் அமைப்பான கொம்சோமோல் (Komsomol) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சிறப்பு சலுகைகளை உயரடுக்கின் பிள்ளைகள் ஆதாயமாக்கிக் கொண்டனர். ஒட்டுமொத்தமாகப் பின்புல வங்கித் தொழில் உருவெடுத்தது, நிறுவன நிதி கணக்குகளைக் கையாண்டவர்கள் அந்த நெருக்கடியில் இருந்தும் சமூக விரக்தியில் இருந்தும் இலாபமீட்டும் வகையில் கடன் வழங்கும் செயல்பாடுகளை தொடங்கினார்கள்.

1989 வாக்கில், சோவியத் ஒன்றியத்தில் சுமார் 43 மில்லியன் பேர் மாதத்திற்கு 75 ரூபிள்களுக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தார்கள், அது சுமார் 200 ரூபிள்களான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்கும் கீழே இருந்தது. ஆராய்ச்சியாளர் ஜோன் எலியட் 1995 இல் எழுதுகையில் பின்வருமாறு விவரித்தார், 'தரந்தாழ்வு, பண்டங்களின் பற்றாக்குறை, சிறப்பு வினியோக வழிகளின் பெருக்கம், நீண்ட மற்றும் நெடுநேரம் காத்திருக்கும் வரிசைகள், நீடிக்கப்பட்ட பங்கீட்டு முறை, விலை உயர்வுகள் … மருத்துவ மற்றும் கல்விச் சேவையில் நடைமுறையளவிலான தேக்கம், பண்டமாற்று முறையின் அதிகரிப்பு, பிராந்திய சுயசார்பு மற்றும் உள்ளூர் பாதுகாப்புவாதத்தின் அதிகரிப்பு' ஆகியவற்றால் அந்தச் சகாப்தம் குணாம்சப்பட்டிருந்ததாக விவரித்தார். 1990 இல் சுமார் 4 மில்லியன் பேர் உத்தியோகபூர்வமாக வேலைவாய்ப்பின்றி இருந்தனர் என்றாலும், இதை மிகவும் குறைமதிப்பீடாகவும், நிஜமான எண்ணிக்கை ஏறக்குறைய 20 மில்லியனாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் வாதிடுகிறார்கள். நிறைய பேர் நொறுங்கிப் போனார்கள், அதற்கடுத்து வந்த ஆண்டுகளில் குடி, போதைப்பொருள் பயன்பாடு, விரக்தியால் ஏற்பட்ட மரணங்கள் அனைத்தும் வெடித்தன.

இவை அனைத்திற்காகவும், கோர்பச்சேவ் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் பரவலாகவும் மிகச் சரியாகவும் வெறுக்கப்படுகிறார்.

பெரெஸ்துரோய்காவின் போது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே, செழுமை மற்றும் 'சோசலிச நீதியின்' ஒரு புதிய சகாப்தம் வரப் போவதாகவும், அதில் ஊழல்வாதிகள் வெளியேற்றப்பட்டு தகுதியானவர்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்றும் கோர்பச்சேவ் கூறிய கூற்றுக்களை நிராகரித்த ஒரே அரசியல் போக்காக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? கோர்பச்சேவ்வும் ஸ்ராலினிச நெருக்கடியும் என்ற 1987 அறிக்கையில், ICFI பின்வருமாறு எச்சரித்தது:

சோவியத் ஒன்றிய தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களைப் பொறுத்த வரையில், கோர்பச்சேவின் இந்தச் சீர்திருத்தக் கொள்கை என்று அழைக்கப்படுவது ஒரு மோசடியான அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இது அக்டோபர் புரட்சியின் வரலாற்று வெற்றிகளை ஆபத்திற்கு உட்படுத்துவதுடன், உலகளவில் ஏகாதிபத்தியத்துடனான அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதுடன் பிணைந்துள்ளது.

கோர்பச்சேவ் மற்றும் அவர் கொள்கைகள் என்ன என்பதை அம்பலப்படுத்தும் டஜன் கணக்கான அறிக்கைகளை ICFI வெளியிட்டது. அரசியல் பகுப்பாய்வின் இந்த அசாதாரண பதிவை இங்கே காணலாம். இப்போதைய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், நிகழ்வுகளில் தலையிட 1989 இல் சோவியத் ஒன்றியத்திற்குப் பயணித்தார். கோர்பச்சேவின் போலி சீர்திருத்த திட்டநிரல் முன்னிறுத்திய அரசியல் ஆபத்துகள் குறித்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் அவர் உரையாற்றினார்.

சோவியத் அதிகாரத்துவம் 'சுய-சீர்திருத்த' நிகழ்வுபோக்குக்குள் சென்று கொண்டிருக்கிறது என்ற எந்தவொரு கருத்தையும் எதிர்ப்பதில், ICFI, கோர்பச்சேவை ஆதரித்த மற்றும் உற்சாகப்படுத்திய சோசலிஸ்டுகள் என்று கூறிக் கொண்ட அனைவருக்கு எதிராகவும் நின்றது. அவர்களில் முன்னணியில் இருந்தவை பப்லோவாதக் கட்சிகள், ஸ்ராலினிசம் தூக்கி எறியப்பட வேண்டியதில்லை, மாறாக இடது நோக்கி நகர அழுத்தம் கொடுக்கலாம் என்ற அடிப்படையில், 1953 இல், இவை ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டன. அதற்கடுத்த அரை தசாப்த காலத்தில் இவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஸ்ராலினிசத்தின் பல குற்றங்களை மூடிமறைத்து, அவற்றுக்கு ஒத்துழைத்தன. 1980 களின் போது, இந்த சோவியத் தலைவரை தலைசிறந்த விடுதலை வீரர் (great liberator) என்றும், தனிப்பட்ட சொத்துக்களை வெட்கமின்றி பகட்டாரவாரமாக வெளிக்காட்டியதற்காக சோவியத் ஒன்றியத்தில் வெறுக்கப்பட்ட அவரது மனைவியை உண்மையான முதல் பெண்மணி என்றும் புகழ்ந்த 'கோர்பிமேனியா' ஆல் (Gorbymania) பப்லோவாதிகள் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

1989 இல் எழுதுகையில், பப்லோவாதத்தின் முன்னணி நபரான எர்னஸ்ட் மண்டேல், அவர் நூலான Beyond Perestroika என்பதில், 'சோவியத் உழைக்கும் மக்கள் மற்றும் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், கோர்பச்சேவ் தான் இன்று சோவியத் ஒன்றியத்திற்குச் சிறந்த தீர்வாக இருப்பார்' என்று அறிவித்தார். அந்த ஆண்டு மட்டும், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, சோவியத் ஒன்றியம் வேலைநிறுத்த நடவடிக்கைகளால் 7.3 மில்லியன் வேலை நாட்களை இழந்தது, இது பெரிதும் சுரங்கத் தொழிலாளர்களின் பாரிய அமைதியின்மையால் உந்தப்பட்டிருந்தது. அதற்கடுத்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அந்த எண்ணிக்கை 13.7 மில்லியனாக உயர்ந்தது.

பப்லோவாதிகளும் இன்னும் பலரும் கூறியதைப் போல, கோர்பச்சேவ் ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொள்ளவில்லை மாறாக அதை அதன் தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்று ICFI வலியுறுத்தியது. ஸ்ராலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போராட்டத்திலும், அதற்குப் பின்னர் பப்லோவாதத்திற்கு எதிராக ICFI இன் மோதலிலும் வேரூன்றிய ஒரு வரலாற்று முன்னோக்கின் மீது ICFI அதன் பகுப்பாய்வை அமைத்திருந்தது.

1917 ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் சேர்ந்து தலைமை கொடுத்து, பின்னர் ஸ்ராலினுக்கு எதிரான சோசலிச எதிர்ப்புக்குத் தலைமை கொடுத்த ட்ரொட்ஸ்கி விவரிக்கையில், அறுவடையிலிருந்து கிடைக்கும் சல்லிப் பைசாவைக் கூட கட்டுப்பாட்டில் எடுக்கும் ஒரு பொலிஸ் படையைப் போல சோவியத் ஒன்றியத்தின் பின்தங்கிய நிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் இருந்து அதிகாரத்துவம் உருவெடுத்தது என்று விளக்கினார். பெரும்பாலும் அது அவ்விதமாகவே இருந்தது என்பதை அது உறுதிப்படுத்தியது.

உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாக்கிய செல்வம் மீது அவர்களின் சொந்த உரிமைக் கோரிக்கைகளுக்கும் மற்றும் புரட்சியின் சமத்துவக் கொள்கைகளும் முரணாக, அதிகாரத்துவம் பலத்தைக் கொண்டு ஆட்சி செய்தது. 1940 இல் ஒரு ஸ்ராலினிச உளவாளியால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதில் உச்சமடைந்த, 1930 களின் பெரும் பயங்கரவாதம் (Great Terror), புரட்சியாளர்களின் ஒட்டுமொத்தத் தலைமுறையையும் அழித்தொழித்து, பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை வன்முறையாக நசுக்க முயன்றது.

ஆனால் அந்த பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனம் சோவியத் அதிகாரத்துவத்திற்குத் தொழிலாள வர்க்கத்தின் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. ஏறக்குறைய பெரும்பாலும் ஆளும் உயரடுக்கு 1917 புரட்சியில் இருந்து எழுந்த தேசியமயப்பட்ட சொத்துக்களில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், சோவியத் ஒன்றியத் தொழிலாளர்கள் ஒருமுறைக் கைப்பற்றி இருந்தவை மீது மீண்டும் அவர்களின் உரிமைக்கோரல்களை வலியுறுத்தவார்கள், அவ்வாறு செய்கையியல் அதிகாரத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள் என்பதை அது அறிந்திருந்தது. காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கி எழுதினார், 'அதிகாரத்துவம் தொழிலாளர்களின் அரசை விழுங்குமா அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை அகற்றுமா?' என்பது தான் கேள்வி. 1956 இல் ஹங்கேரியில், 1968 இல் செக்கோஸ்லோவாக்கியாவில், 1980-1981 இல் போலந்தில் என ஸ்ராலினிசத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுந்த போது, அவை கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்டிப் படைத்தது பயமுறுத்தியது.

இந்தக் காலகட்டத்தில் கட்சி அதிகாரத்துவத்தின் பதவிகளில் கோர்பச்சேவ் வளர்ந்து கொண்டிருந்தார். ஸ்ராலினின் குற்றங்களைக் குருசேவ் சகாப்த பாகமாக மாற்றுவதற்காக வந்த சில விமர்சனங்களைப் போல் இல்லாமல், அந்தச் சர்வாதிகாரியின் இரத்தந்தோய்ந்த ஆட்சியில் முழுமையாக பங்கெடுத்திருந்த சக்திகளின் ஆதரவுடன் கட்சி வட்டாரங்களில் கோர்பச்சேவ் முன்பினும் உயர் பதவிகளுக்குச் சென்றார். அவர்கள் தங்கள் சொந்தத் தனிச்சலுகை மற்றும் அதிகாரம், அவர்களின் சௌகரியமான அடுக்குமாடி வீடுகள், விடுமுறைக் கால வசிப்பிடங்கள், பிரத்யேக வாகன வசதிகள், சிறப்புப் பொருட்களும் அது போன்றவற்றையும் அவர்கள் மட்டுமே வாங்கக் கூடிய பிரத்யேக அங்காடிகள் ஆகியவற்றின் முழுமையான கேள்விக்கிடமற்ற பாதுகாவலர்களாக இருந்தனர்.

லியோனிட் பிரெஷ்நேவ் (Leonid Brezhnev) ஆதரவுடன், கோர்பச்சேவ் 1970 களில் போது கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உயரடுக்குக்குள் நகர்ந்தார். அவர் ஸ்ராலினிச இரகசிய பொலிஸின் தலைவரும் பெரெஸ்துரோய்கா சீர்திருத்தங்களின் ஆரம்ப வடிவமைப்பாளருமான யூரி ஆந்திரோபோவுக்கு அரசியல்ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் நெருக்கமாக இருந்தார். அவர்கள் ஒன்றாக விடுமுறை கழிக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்.

1984 இல் ஆந்திரோபோவின் மரணத்திற்குப் பின்னர், கோர்பச்சேவ், சோவியத் ஒன்றியத்தில் சாத்தியமானளவுக்கு விரைவாக முதலாளித்துவத்தை மீட்டமைக்க நகர்வதே — அதாவது ட்ரொட்ஸ்கி அனுமானித்ததைப் போல, பாட்டாளி வர்க்கம் அதற்கு எதிராக நகர்வதற்கு முன்னரே ஒரு நிஜமான உடைமை வர்க்கமாக தன்னை மாற்றுவதே — அதன் தனிச்சலுகைகளைப் பாதுகாக்க ஒரே வழி என்று நம்பிய, கம்யூனிஸ்ட் கட்சி அணியில் முன்னணி பிரதிநிதியாக ஆனார். 1980 களின் பிற்பகுதியில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் சோவியத் ஒன்றியத்தைத் தாக்கிய போது, மற்றும் ஏனைய தொழில்துறையின் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பெரெஸ்துரோய்கா கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் வேலைகளில் இருந்து வெளிநடப்பு செய்த போது, அந்த அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்டமைப்பு நிகழ்ச்சிப்போக்கைத் தீவிரப்படுத்தியது.

பெரெஸ்துரோய்காவுடன் சேர்ந்து, கோர்பச்சேவ் கிளாஸ்த்நோஸ்ட் (ஒளிவுமறைவின்மை) கொள்கையைத் தொடங்கினார். பல தசாப்தங்களில் முதன்முறையாக, அது ஸ்ராலினிச குற்றங்கள் பற்றிய கூடுதல் வெளியீடுகள் உட்பட சோவியத் வரலாற்றைப் பற்றிய பொது சர்ச்சை மற்றும் விவாதத்தை அது அனுமதித்தது. ஆனால், சோவியத் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது கிளாஸ்த்நோஸ்டின் நோக்கமாக இருக்கவில்லை, அதன் சொந்த அரசு விவகாரங்களைக் குறித்து ஏதேனும் கூறுவதற்கான உரிமை தொழிலாள வர்க்கத்திற்குக் கொடுக்கப்படவில்லை. மாறாக, வளர்ந்து வந்த சோவியத் குட்டி முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதற்குள் நுழைய முயன்று கொண்டிருந்த அடுக்குகளை அரசியல் விவகாரங்கள் குறித்து பேச அனுமதிப்பதன் மூலமும், சோவியத் வரலாறு பற்றி கம்யூனிச விரோதமான மற்றும் ட்ரொட்ஸ்கி மீதான ஸ்ராலினிச தாக்குதலைப் பாதுகாத்த ஒரு தாராளவாத ஜனநாயக மறுபொருள்விளக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும், அவர்களிடையே முதலாளித்துவ மீட்டமைப்புக்கான ஒரு வட்டாரத்தை உருவாக்குவதே கோர்பச்சேவின் நோக்கமாக இருந்தது. முடிவில்லா வரலாற்று பொய்களின் ஒரு விஷயமாக வைக்கப்பட்டிருந்ததற்குக் கூடுதலாக, ட்ரொட்ஸ்கி ஒரு 'சமத்துவ-வெறியர்' என்று இழிவுபடுத்தப்பட்டார்.

கிளாஸ்த்நோஸ்ட் வளர்ந்து கொண்டிருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சி சமத்துவக் கோட்பாட்டின் மீது ஒரு வக்கிரமான தாக்குதலை ஊக்குவித்தது. அது சோவியத் ஒன்றியத்தின் எண்ணற்ற பிரச்சினைகளின் நிஜமான ஆதாரமாக அடையாளப்படுத்தப்பட்டது. குறிப்பாக பழிவாங்கும் விதமாக அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்டது, அவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆனால் மிகவும் குறைவாக வேலை செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. கோர்பச்சேவ் சகாப்தத்தில் பல முன்னாள் புரட்சியாளர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட அதேவேளையில், ட்ரொட்ஸ்கியோ உத்தியோகப்பூர்வ வெறுப்பு மற்றும் பொய்மைப்படுத்தல்களின் விஷயமாக வைக்கப்பட்டிருந்தார். 1917 புரட்சியின் 70 ஆம் நினைவாண்டு கொண்டாட்டத்தில் 1987 இல் கோர்பச்சேவ் வழங்கிய உரையில், கோர்பச்சேவ் வெளிப்படையாகவே ட்ரொட்ஸ்கியை மதங்களுக்கு எதிரானவர் என்றும், “எப்போதுமே தடுமாற்றம் மிக்க, மோசடியான, அதிகளவில் தற்பெருமை கொண்ட அரசியல்வாதி' என்றும் கண்டனம் செய்தார். அந்த கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஒருபோதும் மறுவாழ்வளிக்கவில்லை.

1990 இல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு அவர் வழங்கிய உரையில், கோர்பச்சேவ் அறிவிக்கையில், அவர் சீர்திருத்தங்கள் 'வரலாற்றின் மீளமுடியாத அமைதி காலகட்டத்திற்கும் மற்றும் மனிதகுலத்தின் உலகளாவிய பிரச்சினைக்கான தீர்வுக்கும் சடரீதியான அடித்தளங்களை' அமைத்திருப்பதாக அறிவித்தார். இதில் எதுவுமே நடைமுறை ஆகவில்லை. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, உலகப் போரைத் தவிர வேறெப்போதும் பார்த்திராத ஆயுட்கால வீழ்ச்சியை உருவாக்கியது.

ரஷ்யாவில் புட்டின் இந்த ஆட்சி, அரசு சொத்துக்களை கலைத்து விட்டதில் இருந்து தன்னை வளப்படுத்திக் கொண்ட தன்னலக் குழுவின் ஒரு கன்னையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பரந்த பெரும்பான்மையினர் வறுமையில் இருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்கு உரிய ஒரு பொருளாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த ஒழுங்கமைப்புகளில் மிகச் சொச்சமே எஞ்சி உள்ளது. மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் எரிந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் பாகமாக உக்ரேன் அழிக்கப்பட்டு வருகிறது. உலகம் முன்னெப்போதையும் விட அணுஆயுதப் பேரழிவுக்கு நெருக்கத்தில் உள்ளது.

ICFI பல தசாப்தங்களாக வாதிட்டு வருவதைப் போல, சோவியத் அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் வெற்றியைக் குறிக்கவில்லை, மாறாக அது எப்போதும் ஆழமடையும் ஒரு நெருக்கடியில் இறங்குவதற்கான ஆரம்ப அறிகுறியாக இருந்தது. 1980 கள் மற்றும் 1990 களில், போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் தேசிய-அரசு அமைப்புமுறை பூகோளமயமாக்கலின் அழுத்தத்தின் கீழ் உடைந்து கொண்டிருந்தது, தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்படுத்தவும் கட்டிப் போடவும், அதன் போராட்டங்களைத் தேசிய எல்லைகளுக்குள் அடைத்து வைக்கவும் பயன்படுத்தப்பட்ட அனைத்து சக்திகளும் — ஸ்ராலினிசவாதிகளில் இருந்து சமூக ஜனநாயகவாதிகள் வரை, தொழிற்சங்கங்கள் வரை அனைத்து சக்திகளும் — உடைந்து வந்தன. உலக அமைப்பு முறையை அரசியல் ரீதியில் ஸ்திரப்படுத்த நீண்ட காலமாக ஸ்ராலினிசவாதிகளை சார்ந்திருந்த ஏகாதிபத்தியவாதிகள், ஆதார வளங்கள் மற்றும் சந்தைகள் மீது கட்டுப்பாட்டை எடுக்கும் போட்டியில், மீண்டும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பிடிக்கும் நிலையில் இருந்தார்கள்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்று எழுதிய பிரகடனத்தில் டிசம்பர் 25, 1991 இல் கோர்பச்சேவ் கையெழுத்திட்டார். அப்போதிருந்து, 30 ஆண்டுகளாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. செவ்வாய்கிழமை அவர் இறந்து சிறிது நேரத்தில், மேற்கத்திய பத்திரிகைகளின் பக்கங்கள் அந்த முன்னாள் சோவியத் தலைவருக்குப் புகழ்பாடும் பஜனைகளால் நிரம்பி இருந்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்தக் கடைசி எதிர்புரட்சியாளர் மீது கண்ணீர் சிந்தும் இதே பத்திரிகை நிறுவனங்கள் தான், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா நேட்டோவின் போரையும் புகழ்பாடி வருகின்றன. அவை இந்த இரத்த ஆறை முடிவுக்குக் கொண்டு வரக் கோரவில்லை மாறாக அதை விரிவாக்க கோருகின்றன.

கோர்பச்சேவின் உண்மையான மரபு, முதலாளித்துவத்தின் நற்பண்புகளாக கூறப்படுபவை மற்றும் ஏகாதிபத்தியத்தின் பழங்கதைகளாக இருக்கக்கூடியவை மீதான அவரின் முட்டாள்தனமான அறிவிக்கைகள் மீது தங்கியில்லை, மாறாக ரஷ்யாவை உடைக்கும் இலக்கில் உக்ரேனைத் தற்போது சின்னாபின்னமாக்கி வரும், அமெரிக்கா மற்றும் நேட்டோ தயாரித்த, சகோதரத்துவச் சண்டையில் தங்கி உள்ளது.

கோர்பச்சேவின் சீர்திருத்தங்களும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் 'வரலாற்றின் முடிவு' மற்றும் தாராளவாத உலக ஒழுங்கின் வெற்றியைப் பறைசாற்றியது என்ற மேற்கத்திய பிரகடனங்களைப் பொறுத்த வரையில், அவை சம அளவில் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனநாயகம் மரணத்திற்கு நெருக்கமான நிலையில் உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நெருக்கத்தில் இருந்த அதிவலது ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு பத்தொன்பது மாதங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி பைடென் அச்சுறுத்தலில் உள்ள அமெரிக்க ஜனநாயகத்தின் பொறிவு குறித்து இன்று பேச இருக்கிறார். இதற்கிடையே, இந்தப் பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கம் காட்டிய படுபாதக விடையிறுப்பின் காரணமாக அமெரிக்காவில் வாழ்க்கை ஆயுள் காலம் மலைப்பூட்டும் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் உலகளாவிய முதலாளித்துவத்தின் வெற்றி குறித்து ஸ்ராலினிச அதிகாரத்துவங்களும் ஏகாதிபத்தியங்களும் எந்தளவுக்குத் தவறாக இருந்தார்களோ, அதேயளவுக்கு அவர்கள் வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசத்தின் முடிவு எனப்படுவது குறித்தும் தவறாக இருக்கிறார்கள். சமூக சமத்துவமின்மையின் பாரியளவிலான அதிகரிப்பு, நவீன அரசியலின் விகாரமான நிலை, வாழ்வின் ஒவ்வொரு நாளும் நடக்கும் காட்டுமிராண்டித்தனமும் உலகெங்கிலும் பத்து மில்லியன் கணக்கானவர்களை போராட்டத்திற்குள் இழுத்து வருகிறது. இவர்களைப் பொறுத்த வரையில் சோசலிசம் சோவியத் ஒன்றியத்துடன் இறந்து விடவில்லை மாறாக அது இன்றைய நாளின் மிக முக்கியப் பணியாக உள்ளது.

Loading