அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் இணைந்து கொண்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆசிரியர்கள் 15 மார்ச் 2023 அன்று ஹோமாகமவில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மருத்துவர்கள், தாதிமார் உட்பட பொது சுகாதார ஊழியர்கள், துறைமுகம், மின்சாரம், தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் மற்றும் புகையிரத சாரதிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தபால், தொலைத்தொடர்பு, மின்சாரம் போன்ற சேவைகள் முடங்கின.

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் உட்பட சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்கள், ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளால் ஊக்குவிக்கப்பட்ட இனவாத பிளவுகளை கடந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட நடவடிக்கைகளில், தொழிலாளர்களின் சம்பளத்தில் ஊதியத்தை ஒத்த வரி திணிப்பு, அதிக வங்கிக் கடன் வட்டி விகிதங்கள், மின்சார மற்றும் பிற கட்டணங்கள் அதிகரிப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் வெட்டு, அரசுத் துறை தனியார்மயமாக்கல் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரச துறை தொழில்களை நீக்குதலும் அடங்கும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் விலக்கிக்கொள்ளுமாறும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியாக, செவ்வாயன்று விக்கிரமசிங்க அத்தியாவசிய சேவை விதிமுறைகளை புகையிரதம் மற்றும் தபால் சேவைகளுக்கும் விரிவுபடுத்தினார். தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது. இந்த அத்தியாவசிய சேவைகள் சட்டம் ஏற்கனவே மின்சாரம், பெட்ரோலியம், துறைமுகம், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய வேலைநிறுத்தத்துக்கு முன்னதாக, தொழிலாளர்களின் நடவடிக்கையை 'தேசத் துரோகம்' என்று முத்திரை குத்திய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான பந்துல குணவர்தன, அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு 'குழிபறிக்கின்றனர்' என ஊடகங்களிடம் தெரிவித்தார். அத்தியாவசிய சேவை உத்தரவை மீறும் எவரும், 'சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்ள நேரிடும்' என்று அவர் அறிவித்தார்.

15 மார்ச் 2023 அன்று தேசிய வேலைநிறுத்த நடவடிக்கையின் போது கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இராணுவம்.

வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ஆயுதம் ஏந்திய இராணுவ சிப்பாய்களை ரயில் நிலையங்களிலும் கொழும்பு துறைமுகத்திலும் நிலைநிறுத்திய அதே வேளை, தொழிலாளர்கள் இந்த துறைகளில் போராட்டத்தை மேற்கொண்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட துறைமுக ஊழியர்கள் துறைமுக வளாகத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

நேற்றைய வேலைநிறுத்த நடவடிக்கையானது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை சக்தி வாய்ந்த முறையில் வெளிப்படுத்தியது. எனினும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்களின் குறிக்கோள் அதுவாக இருக்கவில்லை. பிரதானமாக சுகாதார தொழிலறிஞர்கள் சங்க கூட்டமைப்பு (HPF), அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட டசின் கணக்கான தொழிற்சங்கங்கள் உள்ளடங்கிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையமும் (TUCC) மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்பும் (TUMO) போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தவற்றில் அடங்குகின்றன.

இந்த வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்தை, ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற பாராளுமன்ற எதிர்க்கட்சிகளுடன் கட்டி வைத்திருப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீவிரமான சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, சுகாதாரம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்களின் சங்கங்கள், அனைத்து நடவடிக்கைகளையும் சுகயீன விடுமுறை பிரச்சாரத்திற்கு மட்டுப்படுத்தின. கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு கடமைக்கு சமூகமளிக்குமாறும் ஆனால் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர்களது தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொழிலாளர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்வதற்கு அதைரியமடைய செய்யப்பட்டனர்.

பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் தேசிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. அந்த தொழிற்சங்கம் ஏன் வேலைநிறுத்தத்தில் இணையவில்லை என்று உலக சோசலிச வலைத் தளம் கேட்டபோது, ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல, மற்ற தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன் வேலைநிறுத்தங்கள் எதுவும் இருக்காது என்று அறிவித்தார்.

எவ்வாறாயினும், பல தொழிற்சங்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்றைய தேசிய நடவடிக்கையில் இணைந்தனர். ரன்வலவின் நிலைப்பாடு ஜே.வி.பி.யின் முதலாளித்துவ சார்பு அரசியலில் இருந்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கான அதன் ஆதரவிலிருந்துமே வெளிப்படுகின்றது.

ஜே.வி.பி.யின் ஒரு தலைவரும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவருமான கே.டி. லால் காந்த, திங்களன்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலறிஞர்களின் சங்க கூட்டத்தில், மார்ச் 15க்கு அப்பாலும் 'தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் திட்டங்களுடன் தனது தொழிற்சங்க முன்னணி உடன்படவில்லை' என்று கூறினார்.

தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தைப் போலவே, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்திருப்பதுடன், இந்த இயக்கத்தை அடக்குவதற்கு தங்களால் இயன்றதைச் செய்கின்றன.

மருத்துவ தொழிலறிஞர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ், கடந்த ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்திற்கு மறு நாள் மார்ச் 2 அன்று இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அனைவரும் வீதிக்கு வருவார்கள். நாங்கள் மக்களை அடக்கி வைத்திருக்கிறோம், இந்த வகையான வேலைநிறுத்தங்களை நாங்கள் அழைக்க முடியாது என்று அவர்களிடம் கூறுகிறோம்,” என்று அவர் அறிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நடந்து வரும் அமெரிக்க-நேட்டோ போரினால் உக்கிரமடைந்த ஒரு பெரும் நிதியப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விக்கிரமசிங்க அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது அதன் முழுச் சுமையை திணிப்பதில் உறுதியாக உள்ளது. அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தத்தை பிரயோகித்தால் அதன் சமூகத் தாக்குதல்களை விலக்கிக்கொள்ள அது நிர்ப்பந்திக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தும் அதேவேளை, விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஒன்றுவிடாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களினதும் உறுப்பினர்கள், புதன் கிழமை வேலைநிறுத்தத்தில் தலையிட்டு, 'ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!” என்ற நடவடிக்கை குழுக்களின் கூட்டறிக்கையின் பிரதிகளை விநியோகித்தனர்.

'நமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொழிற்சங்க கட்டமைப்பின் மூலம் கட்டி வைக்க இடமளிக்க முடியாது' என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது. “முதலாளித்துவ அமைப்புடன் ஆயிரம் நூல்களால் பிணைக்கப்பட்டிருக்கும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் நமது போராட்டங்கள் தொடர்ந்தால், நாங்கள் நிச்சயமாக காட்டிக்கொடுக்கப்படுவோம்,” என்று அது எச்சரித்தது.

“நமது உரிமைகளுக்கான போராட்டத்தை எங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் நமது சுற்றுப்புறங்களிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.”

சோசலிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கும் போராடுவதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைப்பதாகும், என அறிக்கை விளக்கியது. 

நேற்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் பேசிய வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் தொழிற்சங்கங்களைக் கண்டனம் செய்தனர்.

கொழும்பில் இருந்து 22 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹோமாகமவில் உள்ள பல பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழு, ஹோமாகம நகரில் காலை 10 மணி முதல் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 'தாங்க முடியாத வாழ்க்கைச் செலவைக் குறைத்திடு', 'நியாயமற்ற வரிக் கொள்கையை விலக்கிக்கொள்' மற்றும் 'ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்திடு' உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஒரு ஆசிரியர், போதுமான உணவு மற்றும் உடைகள், மருந்துகள் போன்ற பிற அத்தியாவசியமான பொருட்களின் பற்றாக்குறை உட்பட, அவரது குடும்பத்தினரும் அவரது பல மாணவர்களும் எதிர்கொண்டுள்ள தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை விவரித்தார், 

'எனக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், இந்த [வேலைநிறுத்தம்] நடவடிக்கைகள் எந்தவிதமான உறுதிப்பாட்டுடன் எடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தைப் பாருங்கள். இதுவும் அடுத்த நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி எந்த திட்டமும் இல்லாமல், இன்னும் சிறிது நேரத்தில் தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படும்,” என அவர் கூறினார்.

நேற்றைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னதாக ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற ஹோமாகமவில் உள்ள மற்றொரு பெரிய பாடசாலையின் ஆசிரியர் ருசிர மாதவ கூறியதாவது: 'இந்த வேலைநிறுத்தத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது முதலாளித்துவ முறைமைக்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பாகமாக இருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களாகிய நாம், நிச்சயமாக தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமான போராட்டத்தை நடத்த வேண்டும்.

ருசிர மாதவ

“இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் உலகளாவிய நிதி மூலதனத்தை எதிர்கொண்டுள்ளனர். எனவே தொழிற்சங்கங்கள் கூறுவது போல் முதலாளித்துவ அமைப்பிற்குள் இந்த நிலைமையை மாற்ற எங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி வீச, சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் மூலம் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை தோற்கடிக்க முடியும்,' என்று அவர் கூறினார்.

கொழும்பில் இருந்து 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டாரவளையில், ஒரு தபால் ஊழியர், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை எவ்வாறு தடம் புரட்டுவதற்கு முயற்சிக்கின்றன என்பதை விளக்கினார்.

'காலை 10 மணிக்கு நகரின் மையத்தில் போராட்டம் நடக்கும் என்று கேள்விப்பட்டேன். நாங்கள் அந்த நேரத்தில் அங்கு சென்றோம், ஆனால் எதுவும் இல்லை. மதியம் 1 மணி என்று மற்ற செய்திகள் தெரிவித்தன. அதனால் நான் மீண்டும் சென்றேன். அங்கு ஒரு சிலரே இருந்தனர். அங்கு நான் எந்த தொழிற்சங்கத் தலைவர்களையும் பார்க்கவில்லை. உண்மையில், தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களை மனச்சோர்வடையச் செய்து இந்த போராட்டத்தை கலைக்க வேலை செய்கிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சி சொல்வது உண்மைதான். நமது வேலைத் தளங்களில் நமது சொந்த அமைப்புகளாக செயல்படும் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பதை இந்தப் போராட்டம் தெளிவாக்குகிறது,” என அவர் தெரிவித்தார்.

மத்துகம பெலவத்தையில் உள்ள இலங்கை வங்கி ஊழியர் ஒருவர், நேற்றைய வேலைநிறுத்தத்தில் பங்குபற்றிய பெரும்பாலான ஊழியர்கள், வங்கியின் மனிதவளப் பிரிவு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக விடுத்த அச்சுறுத்தலை மீறியே போராட்டம் செய்ததாக விளக்கினார்.

'இன்றைய நெருக்கடி சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் பற்றிக்கொண்டுள்ளது, எனவே ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட விரும்புகிறார்கள். ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. நீங்கள் விளக்கியது போல், தொழிற்சங்கங்கள் சாராத நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற ஒருங்கிணைந்த போராட்டத்தை எங்களால் நடத்த முடியும்,” என அவர் மேலும் கூறினார்.

15 மார்ச் 2023 அன்று விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொடூரமான சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக மொரட்டுவ பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கல்விசாரா ஊழியர், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த நடவடிக்கையை எதிர்ப்பதற்காக விமர்சித்தார்: 'இந்த தொழிற்சங்கங்களுடன் நாம் எவ்வாறு ஐக்கியப் போராட்டத்தை நடத்த முடியும்? வரி செலுத்த கற்பிப்போர் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளன. வரியைக் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கை. கல்வி சாரா ஊழியர்களுக்கு வரி செலுத்த போதுமான ஊதியம் இல்லை, ஆனால் புதிய வரிக் கொள்கையை தோற்கடித்து வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியத்தை நாம் அனைவரும் கோர வேண்டும்.”

அவர் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரியவைக் குறிப்பிட்டு, 'தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் எவ்வாறு துரோகம் செய்கின்றன என்பதற்கு அவர் சிறந்த உதாரணம்' என்று கூறினார். ரத்னப்ரிய அரசாங்கத்தின் சிக்கன திட்டத்தை ஆதரிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்களும் கலந்துகொண்டனர். “அனைத்து வரிகளையும் ரத்து செய்,” “பெற்றோர் மீது பாடசாலைகளின் மின் கட்டணத்தை திணிக்காதே,” “பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு வழங்கு”, “அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

15 மார்ச் 2023 அன்று யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஒரு ஆசிரியர் கூறியதாவது: “அரசு ஊழியரான என்னால், முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வால் எனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அரசு ஊழியர்களின் வருமானத்தை மேம்படுத்த வேறு வழியில்லாததால் எங்களுக்கு சம்பள உயர்வு தேவை. உண்மையில், நான் என் மனைவியின் தாலியை அடகு வைக்க வேண்டியிருந்தது, இன்று, நான் என் மோதிரத்தை அடகு வைக்கப் போகிறேன்.”

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பல ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு வேலை தேடும் நிலைக்குத் தள்ளுவதாக அவர் மேலும் கூறினார். 'இது கற்பித்தலில் வெற்றிடங்களை உருவாக்குவதுடன் பல பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்கு விஞ்ஞான மற்றும் ஆங்கில பாடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது,' என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களை நசுக்குவதில் இலங்கை தொழிற்சங்கங்களின் துரோக பாத்திரம்

இலங்கையின் ஜே.வி.பி. 'நாட்டைக் காப்பாற்ற' அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றது

Loading