இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் "மட்டுப்படுத்தப்பட்டவை" மற்றும் "இலக்குவைக்கப்பட்டவை" என்று அழைக்கும் வெள்ளை மாளிகை ரஃபா படுகொலையை முழுமையாக அங்கீகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பைடென் நிர்வாகம் தெற்கு காஸாவில் உள்ள ரஃபா அகதிகள் முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முழுமையாக அங்கீகரித்துள்ளது, இந்த தாக்குதல்களில் ஞாயிற்றுக்கிழமை 45 பேர்களும், செவ்வாய்கிழமை 21 பேர்களும் கொல்லப்பட்டனர்.

காஸாவிலுள்ள ரஃபா நகரத்திற்கு மேற்கே UNRWA வசதிக்கு அருகில், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சால் அழிக்கப்பட்ட தங்கள் கூடாரங்களை பார்வையிடுகிறார்கள், செவ்வாய்க்கிழமை, மே 28, 2024 [AP Photo/Jehad Alshrafi]

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ஹமாஸ் இயக்கத்தின் உறுப்பினர்களைக் “இலக்கு” வைத்து கொன்றதாக இந்த வான்வழித் தாக்குதலை நியாயப்படுத்தினார். மேலும், “அவர்கள் ஹமாஸ் உறுப்பினர்களைக் கொன்று, அவர்களின் ஒரு வளாகத்தையும் தாக்கினர். அவர்கள் ஹமாஸை இலக்கு வைத்து, துல்லியமான வழியில் பின்தொடர முயற்சிக்கவில்லை என்பதை எவரும் எப்படி மறுக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று டசின் கணக்கானவர்களைக் கொன்ற மற்றும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பொதுமக்களைக் காயப்படுத்திய குண்டுவீச்சு குறித்து கிர்பி கூறினார்.

காஸாவில் இஸ்ரேலின் தற்போதைய வான்வழித் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதலை முழுமையாக ஆதரித்துள்ள கிர்பி, “ஹமாஸ் போய்விட்டது என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் ரஃபாவில் இருந்தோ அல்லது காஸாவில் இருந்தோ போய்விடவில்லை. இஸ்ரேல் தேசத்தை நோக்கிய தங்கள் இனப்படுகொலை நோக்கத்தை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே அந்த வகையான அச்சுறுத்தலுக்கு அருகில் வாழ விரும்பாமல் இருக்க இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆம், ஹமாஸ் பின்தொடர்ந்து தாக்குவதற்கான திறன்களை நாங்கள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு வழங்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.

சமீபத்திய பாரிய படுகொலைகளுக்குப் பின்னர், அமெரிக்காவின் தரப்பில் “கொள்கை மாற்றங்கள் எதுவும் இருக்காது” என்று கிர்பி விளக்கினார். இந்த கொள்கைக்கு பெருவாரியான மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும் வெள்ளை மாளிகை ஏன் தொடர்ந்து வரம்பற்ற ஆதரவை வழங்கி வருகிறது என்று வினவிய போது, “ஜனாதிபதி மக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை அல்லது கொள்கையை செயல்படுத்துவதில்லை” என்று கிர்பி அறிவித்தார்.

ஒரு தனி விளக்கத்தில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் “மட்டுப்படுத்தப்பட்டது” என்று கூறினார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்துள்ள காஸாவின் தென்பகுதி நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் ஒரு “சிவப்புக் கோடு” ஒன்றை பைடென் நிர்வாகம் அமைத்திருப்பதாக பல வாரங்களாக அமெரிக்க ஊடகங்கள் கூறி வந்தன. ஆனால் யதார்த்தத்தில், நெதன்யாகுவை விமர்சிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடும் போது, “​​ரஃபாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதை” இஸ்ரேலுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வெள்ளை மாளிகை வெளிப்படையாக அறிவித்தது.

ஒட்டுமொத்த உலகின் கண்களுக்கு முன்னால், பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் கூற்றுகள் ஒரு முழுமையான மோசடியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நெத்தன்யாகுவுடன் சேர்ந்து போர் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து வருகின்ற காஸா இனப்படுகொலையின் முன்னணி சர்வதேச ஆதரவாளராக பைடென் தெளிவாக வெளிப்படுகிறார்.

ரஃபாவில் நடந்துவரும் தொடர்ச்சியான படுகொலைகள் மற்றும் பைடென் நிர்வாகத்தால் அவை பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, ரஃபாவில் பாலஸ்தீனியர்களைக் கொல்வதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு கட்டளையிட்ட சர்வதேச நீதிமன்றத்தின் கடந்த வார தீர்ப்புக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பதிலைக் குறிக்கிறது. நெத்தன்யாகு மற்றும் பைடென் நிர்வாகங்கள் சர்வதேச சட்டம் மற்றும் பாரிய மக்கள் எதிர்ப்பு இரண்டையும் மீறி எந்தவொரு குற்றத்தையும் செய்வதற்கான அவற்றின் உரிமையை வலியுறுத்தி வருகின்றன.

இனப்படுகொலையில் பைடென் நிர்வாகத்தின் பங்கை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்கின்றன.

“நாம் தெளிவாக இருக்க வேண்டும்: இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்து வருகிறது. அமெரிக்கா இனப்படுகொலைக்கு உடந்தையாக உள்ளது” என்று இனப்படுகொலை தடுப்புக்கான லெம்கின் பயிலகம் எழுதியது. “குறிப்பாக அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய தலைவர்களால் நாங்கள் வெறுப்படைந்துள்ளோம். அவர்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மற்றும் மனித உரிமைகள் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதை மட்டும் நிரூபித்துள்ளனர். ஆனால், அவர்கள் தளபாடங்கள் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கும்போது, ஒரு கூட்டாளியை அட்டூழியக் குற்றங்களை செய்ய அனுமதிக்க தயாராக உள்ளனர் என்பதையும் அவர்கள் நிரூபித்துள்ளனர். ... ஆதலால், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) ஒரு அறிக்கையில், “நாளுக்கு நாள், படுகொலைக்கு மேல் படுகொலை, மற்றும் பைடென் நிர்வாகம் பாலஸ்தீனிய குழந்தைகள், பெண்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், சர்வதேச உதவிப் பணியாளர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களைப் படுகொலை செய்வதற்கு, அதிவலது மற்றும் பகிரங்கமாக இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து குண்டுகளை அனுப்புகிறது, மேலும் சர்வதேச பொறுப்புக்கூறலில் இருந்து இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை ரஃபா படுகொலைக்கு ஒப்புதல் அளித்ததை, கள நிலவரம் பற்றிய அபத்தமான, தவறான அறிக்கைகளுடன் இணைத்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் ரபாவின் மையப்பகுதியை டாங்கிகள் ஆக்கிரமித்திருப்பது பற்றிய புகைப்படங்களையும் ஒளிப்பதிவுகளையும் வெளியிட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்கள் தரைப்படைகள் நகரத்திற்குள் நுழையவில்லை என்பதை மறுத்தனர்.

“அவர்கள் பிலடெல்பி என்று அழைக்கப்படும் தாழ்வாரம் வழியாக நகர்கிறார்கள், இது நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ளது, சரியான நகரத்தில் இல்லை,” என்று கூறிய கிர்பி, “நாங்கள் அங்கு ஒரு பெரிய தரைப்படை நடவடிக்கையை காணவில்லை” என்று அறிவித்தார். இதே நாளில்தான் பைனான்சியல் டைம்ஸ் அதன் பிரதான செய்தியில், “இஸ்ரேலிய டாங்கிகள் மத்திய ரஃபாவுக்குள் நுழைகின்றன” என்று அறிவித்தது, இஸ்ரேல் “அந்த நடவடிக்கைக்கு சர்வதேச கண்டனம் அதிகரித்து வருகின்ற போதிலும், காஸாவின் தெற்கு நகரத்தின் இதய பகுதிக்குள் டாங்கிகளை அனுப்பி வருகிறது” என்று குறிப்பிட்டது.

செவ்வாயன்று, இஸ்ரேலிய படைகள் ரபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட குறைந்தபட்சம் 21 பேரைக் கொன்றன. அல்-மவாசியில் நடந்த தாக்குதல் குறித்து செய்தி சேகரித்த பாலஸ்தீனிய பத்திரிகையாளர் பிசான் ஓவ்டா ஒரு வீடியோவில், “எனக்குப் பின்னால், குறைந்தபட்சம் இதுவரை 30 நிமிடங்களுக்கு முன்பு 18 பேர் கொல்லப்பட்டனர், அங்கு பொதுமக்கள் மட்டுமே இருந்தனர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்த கூடாரத்தை குறிவைத்து அவர்கள் குண்டுகளை வீசினர். இந்த மக்கள் அனைவரும் ஒரு கூடாரத்தில் மதிய உணவு சாப்பிட தயாராகிக் கொண்டிருந்தனர், அவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன, அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்” என்று கூறினார்.

ஓவ்டா மேலும், “மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், மக்களால் பேச முடியாது, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மனித உடல்ககளை, எச்சங்களை சேகரித்தனர். எனவே, என்னால் எதையும் விவரிக்க முடியாது, ஏனென்றால் மக்கள் இன்னும் மனித துண்டுகளை சேகரிக்கிறார்கள், என் காலடியை பார்க்க நான் பயப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இன்றுவரை, ஒரு மில்லியன் மக்கள் ரஃபா நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று தெரிவித்துள்ளது. ரஃபா மீதான தாக்குதல் காஸா முழுவதிலும் மனிதாபிமான உணவு விநியோக முறையை சிதைத்துள்ளது, பஞ்சத்தின் விளிம்பில் உள்ள பிராந்தியத்திற்குள் எந்த உணவும் நுழையவில்லை.

“ரஃபாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை, காஸா மக்களுக்கு ஏற்படுத்திய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் எல்லையே இல்லை....” என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா துணை பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறினார். “[அது] தெற்கு காஸாவிற்குள் உதவி வருவதை துண்டித்துள்ளதுடன், ஏற்கனவே அதன் முறிவு நிலைக்கு அப்பால் நீண்டு கிடந்த ஒரு மனிதாபிமான நடவடிக்கையை முடக்கியுள்ளது. அது தெற்கில் உணவு விநியோகத்தை நிறுத்தி, காஸாவின் வாழ்வாதாரங்களுக்கான (குடிநீர், பேக்கரிகள், மருத்துவமனைகள்) எரிபொருள் விநியோகத்தை வெறும் சொட்டு சொட்டாக குறைத்துள்ளது... காஸா மக்களை பஞ்சம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.”

Loading