மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பிரான்சின் நவ-பாசிசவாத தேசிய பேரணி (RN) கட்சியானது அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மக்ரோனின் இராணுவக் கொள்கைகள் மீதான அதன் தெளிவற்ற தந்திரோபாய விமர்சனங்களையும் மற்றும் நேட்டோவில் இருந்து பிரான்சைத் திரும்பப் பெறுவதற்கான அதன் பிரச்சார வாக்குறுதியையும் அது கைவிட்டு வருகிறது.
ஐரோப்பியத் தேர்தல்களில் முன்னணிக்கு வந்துள்ள RN, பாராளுமன்றத்தைக் கலைத்த பின்னர் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 இல் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் திட்டமிட்டுள்ள அடுத்த முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தல்களில் முன்னிலை வகிக்கிறது. மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி ஐரோப்பியத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. RN ஒரு அரசாங்கத்தை அமைத்தால், அது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்துகின்ற அதேவேளையில் ஒரு பொறுப்பற்ற போரைத் தொடுக்கும்.
ரஷ்யாவுக்கு எதிரான நேரடி இராணுவத் தலையீட்டிற்கான நேட்டோவின் நன்கு முன்னேறிய தயாரிப்புகளை தனது கட்சி சீர்குலைக்காது என்பதை RN இன் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா கடந்த புதனன்று தெளிவுபடுத்தினார். பாரிஸின் புறநகர் பகுதியான வில்பாந்தில் யூரோசேட்டரி பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு விஜயம் செய்த பார்டெல்லா, தான் அதிகாரத்திற்கு வந்தால் பாதுகாப்பு விடயத்தில் சர்வதேச அளவில் பிரான்சின் “பொறுப்புக்களை கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். “நமது ஐரோப்பிய பங்காளிகள் மற்றும் நமது நேட்டோ கூட்டாளிகளுடன் ஒரு நம்பகத்தன்மை பற்றிய கேள்வி உள்ளது,” என்று பார்டெல்லா தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனின் அதிவலது கைப்பாவை ஆட்சிக்கு நேட்டோ ஆயுதமளிப்பதை ஆதரித்த பார்டெல்லா, “உக்ரேனுக்க தேவையானவற்றை தக்க வைத்துக் கொள்ள அவசியமான அனைத்து வெடிகுண்டுகளையும் ஆயுத தளவாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்” என்று அவர் விரும்புகிறார். உக்ரேனிய போர் “ஐரோப்பாவின் நுழைவாயிலில்” உள்ள “மிகவும் தீவிரமான சர்வதேச உள்ளடக்கத்தை” அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யாவுடன் நேரடிப் போருக்கு வழிவகுக்கும் என்பதால், ரஷ்ய இலக்குகளுக்கு எதிராக வழங்கப்பட்ட ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற உடைக்கப்பட்ட நேட்டோவின் முந்தைய வாக்குறுதிகளை அவர் எதிரொலித்தார். குறிப்பாக, ஜூன் 2022 இல், “நாங்கள் ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல மாட்டோம்; எனவே, குறிப்பிட்ட சில ஆயுதங்களை, குறிப்பாக, தாக்குதல் விமானங்கள் அல்லது டாங்கிகளை வழங்குவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது” என்று மக்ரோன் அறிவித்திருந்தார்.
“கிழக்கு ஐரோப்பாவில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுத தளவாடங்களை அனுப்புவதை” அவர் எதிர்ப்பதால், அவரது “சிவப்புக் கோடு மாறாது” என்று பார்டெல்லா வாதிட்டார். “குறிப்பாக, ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்க உக்ரேனுக்கு உதவக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளையோ அல்லது ஆயுதங்களையோ வழங்க நான் விரும்பவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இவை வெறுமனே அரசியல் பொய்களாகும். பார்டெல்லா இப்போது போர் மற்றும் நேட்டோவுக்கு எதிரான அவரது வாய்வீச்சைக் கைவிட்டதைப் போலவே, நேட்டோ சக்திகளும் ஒவ்வொரு வாக்குறுதியையும் மீறியுள்ளன, அவைகள் வரைந்த ஒவ்வொரு “சிவப்புக் கோட்டையும்” கடந்துள்ளன. உண்மையில், ரஷ்ய இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அதிவலது உக்ரேனிய ஆட்சிக்கு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கிய பின்னர், மக்ரோனும் நேட்டோவும் உக்ரேனில் துருப்புகளை நிலைநிறுத்த திட்டமிட்டு வருகின்றன.
ஒரு பாரிய போர் இயந்திரத்தைக் கட்டமைக்க சமூக செலவினங்களில் இருந்து பணத்தை திசைதிருப்பும் மக்ரோனின் “யுத்தப் பொருளாதார” நடவடிக்கைகளை பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கும் பார்டெல்லா சூளுரைத்தார். இது சென்ற ஆண்டு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களின் மிகவும் அப்பட்டமான வடிவத்தை எடுத்தது. அவர் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உதவியுடன் ஓய்வூதியத்தில் இருந்து பணத்தை இராணுவச் செலவினங்களுக்குத் திருப்புவதற்காக வெட்டுக்களை திணித்தார்.
“இம்மானுவேல் மக்ரோனால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுத்தப் பொருளாதாரம் இப்போது இரண்டு ஆண்டுகளாக மிகவும் இலகுவானதாக உள்ளது. நமது பாதுகாப்பு தகைமைகள், இராணுவத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கு அதிகரிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நாங்கள் ஆதரித்த வரவு-செலவுத் திட்ட முயற்சிகள் ஆகிய இரண்டிலும் நாட்டை மீண்டும் ஆயுதபாணியாக்கும் இந்த முயற்சியைத் தொடர நான் உத்தேசித்துள்ளேன்” என்று பார்டெல்லா தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கள், RN அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய சமூக தாக்குதல்களை அதிகரித்து வரும் ஒரு வன்முறையான பிற்போக்குத்தனமான பாசிசவாத ஆட்சியாக இருக்கும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக மற்றும் சமூக போராட்டங்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற பொலிஸ் அரசு தாக்குதல்களை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளையில், அது ரஷ்யா மற்றும் பிரான்சின் முன்னாள் ஆபிரிக்க காலனி நாடுகளுக்கு எதிரான போர்களையும் தீவிரப்படுத்தும்.
நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சியின் இராணுவ வீழ்ச்சிக்கு விடையிறுப்பாக ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நேரடி இராணுவத் தலையீட்டிற்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், RN ஆனது மக்ரோனின் போருடன் அணி சேர்ந்துள்ளது. RN முதல் புதிய மக்கள் முன்னணியில் (NPF) இணைந்த போலி-இடது கட்சிகள் வரை, முழு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் தீவிர வலதுசாரி மறுசீரமைப்பை மேற்கொள்ள மக்ரோன் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது முன்னெப்போதிலும் பார்க்க இன்னும் தெளிவாக உள்ளது. இந்த அனைத்து சக்திகளும், ரஷ்யா, ஈரான் மற்றும் இறுதியில் சீனாவை இலக்கில் வைத்துள்ள அமெரிக்க-நேட்டோ போர்களில் பங்கெடுக்க தயார் செய்யப்பட்டு வருகின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 4 ஆம் தேதி திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னர் மக்ரோனின் முடிவு வந்துள்ளது. வாஷிங்டனில் ஜூலை 9-11 இல் வரவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக புதிய அரசாங்கங்கள் அமைக்கப்பட உள்ளன, அந்த உச்சிமாநாடு ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை விவாதிக்கும்
எவ்வாறிருப்பினும், RN ஆனது நேட்டோவின் அணியில் சேர்ந்து, இன்னும் சுதந்திரமான பிரெஞ்சு வெளியுறவு கொள்கைக்கு அழைப்புவிடுத்து நேட்டோவின் இராணுவ கட்டளையகத்தில் இருந்து விலகுவதற்கு அழைப்புவிடுத்த அதன் முந்தைய தேசியவாத வாய்வீச்சைக் கைவிட்டு வருகிறது. 2022 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, RN தலைவர் மரின் லு பென் பிரான்சின் “சுதந்திரத்தை” பாதுகாக்க நேட்டோவின் “ஒருங்கிணைந்த கட்டளையை விட்டு வெளியேறுவதாக” உறுதியளித்தார்.
ஆனால், முன்கூட்டியே வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கையில், அது ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்து வருகின்ற நிலையில், ரஷ்யாவுடன் ஆக்ரோஷமாக ஒரு நேட்டோ போரை நடத்துமென பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்கு RN ஆனது மும்முரமாக மறுஉத்தரவாதம் அளித்து வருகிறது.
பாரிஸில் பொலிடிகோ மற்றும் யூரோபா நோவா சிந்தனைக் குழுவிடம் பேசிய பார்டெல்லா, உக்ரேனில் போர் “இன்னும் நடந்து கொண்டிருக்கையில்” நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையை விட்டு வெளியேறுவதை எதிர்ப்பதாகக் கூறினார். “போர்க் காலத்தில் நீங்கள் ஒப்பந்தங்களை மாற்றுவதில்லை” என்று அவர் கூறினார். ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு, லு பென்னின் ஏப்ரல் 2022 கருத்துக்கள் குறித்து கேட்கப்பட்டபோது, பார்டெல்லா அவர்கள் “போரை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று பதிலளித்தார்.
பார்டெல்லாவின் போர்-ஆதரவு கருத்துக்கள், RN ஐ ஒரு ரஷ்ய-ஆதரவு கட்சியாக தாக்குவதற்கு புதிய மக்கள் முன்னணி மேற்கொண்ட முந்தைய முயற்சிகளின் பிற்போக்குத்தனமான மற்றும் தவறான குணாம்சத்தை வெளிப்படுத்துகின்றன. நிச்சயமாக சோவியத்துக்குப் பிந்தைய, ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தலைமையிலான பிற்போக்குத்தனமான முதலாளித்துவ ஆட்சியுடன் உல்லாசமாக இருந்து, மக்ரோனை விட குறைந்த இராணுவவாதம் கொண்டதாக தன்னைக் காட்டிக் கொள்ள RN தகைமை கொண்டிருந்தது. எவ்வாறிருப்பினும், அது அடிப்படையில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் வெளிநாட்டில் சூறையாடும் போர்கள் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போர் என்ற அதன் கொள்கையின் ஒரு அரசியல் கருவியாகவே இருந்து வந்துள்ளது.
இப்போது மெலெழுந்து வரும் உலகப் போரில், RN ஆனது இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாசி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியில் இருந்த அதன் முன்னோர்களின் பாரம்பரியத்தை அது கட்டமைத்து வருகிறது. உண்மையில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாசிக்களின் நிர்மூலமாக்கும் போரை நடத்த வாஃபென்-எஸ்எஸ் சார்லமேன் (Waffen-SS Charlemagne) பிரிவில் இணைய விச்சி ஆட்சி பிரெஞ்சு தன்னார்வலர்களை அனுப்பியது. அவர்கள் ஸ்டீபன் பண்டேரா தலைமையிலான உக்ரேனிய நாசி-ஒத்துழைப்புவாத சக்திகளுடன் இணைந்து போரிட்டனர். இப்போது அவர்கள் கியேவில் நேட்டோ தலைமையிலான கைப்பாவை ஆட்சியின் அதிகாரிகளால் வழிபடப்படுகிறார்கள்.
ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு RN இன் திடீர் அணிதிரள்வானது, முதலாளித்துவ ஊடகங்கள் “இடது” என்று சித்தரிக்கும் சக்திகளின் அரசியல் திவால்தன்மையை, அதன் வளர்ச்சி எந்த அளவிற்கு சார்ந்துள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. அடுத்தடுத்து வந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கங்களால் தொழில்துறை அழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரான்சின் முன்னாள் தொழில்துறை பிராந்தியங்களில் உள்ள தொழிலாளர்கள் RN இன் ஒரு முக்கிய வாக்களிப்புத் தளமாக உள்ளனர். ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மக்கள் முன்னணி கூட்டணியின் மையத்தில் சோசலிஸ்ட் கட்சி (PS) இப்போது உள்ளது.
ரஷ்யாவுடனான போருக்கான RN இன் பாசிசவாத அழைப்புகளுக்காக புதிய மக்கள் முன்னணி அதனைத் தாக்காது. ஏனென்றால் புதிய மக்கள் முன்னணி ரஷ்யா மீதான நேட்டோவின் போரையும் ஆக்ரோஷமாக ஆதரித்து வருகிறது. அதன் தேர்தல் வேலைத்திட்டம், “விளாடிமீர் புட்டினின் ஆக்கிரமிப்பு போரைத் தோற்கடிக்க” உக்ரேனுக்கு “பொருத்தமான ஆயுதங்களை வழங்குவதற்கும்” மற்றும் “அமைதி காக்கும் படையினரை அனுப்புவதற்கும்” அழைப்பு விடுக்கிறது.
தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தொழிலாளர்களும் இளைஞர்களும் RN மற்றும் புதிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டையும் எதிர்ப்பதன் மூலமாக மட்டுமே ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் நேட்டோ போரையும் அதனால் விளைந்த சமூக தாக்குதல்களையும் எதிர்த்துப் போராட முடியும். இதைச் செய்வதற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste - PES) முன்னெடுக்கும் புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.