மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பாசிச முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரே இரவில், மாநில வாரியாக வெளிவந்த முடிவுகளின் கணிப்புகளின்படி, வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளை விட, 276 தேர்தல் வாக்குகளை ட்ரம்ப் பெற்றுள்ளார்.
இன்னும் பல மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஏழு முக்கிய மாநிலங்களில் மூன்றில் இன்னும் பத்திரிகை செய்திகள் மூலம் அறிவிக்கப்படவில்லை. ட்ரம்ப், வடக்கு கரோலினா, ஜோர்ஜியா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இது ட்ரம்பிற்குக் கிடைத்த வெற்றியல்ல, மாறாக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த படுதோல்வியாகும். தற்போதைய துணை ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், 2020 இல் கிட்டத்தட்ட அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் மாவட்டத்திலும், ஜனாதிபதி ஜோ பைடெனை விட மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றார்.
பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிக ஜனநாயகக் கட்சி ஆதரவு மேற்குக் கடற்கரை பகுதிகளை தவிர, ட்ரம்ப் ஐந்து மில்லியன் வாக்குகளை, 51-47 சதவீத வித்தியாசத்தில் கமலா ஹாரிஸிலும் பார்க்க முன்னிலையில் இருக்கிறார். ட்ரம்ப், அரசியலமைப்பை தூக்கியெறிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு கொடூரமான மற்றும் இனப்படுகொலை ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை அடையாள அரசியலுக்கான முறையீடுகளுடன் இணைக்கும் ஜனநாயகக் கட்சியின் மூலோபாயத்தின் வீழ்ச்சியை வெளிவரும் கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. வாக்களித்த இளைஞர்களிடையே ட்ரம்ப் கணிசமான ஊடுருவலைச் செய்து, பெரும்பான்மையான இளைஞர்களை வென்றுள்ளார்.
நாடு முழுவதும் முதல் முறையாக இளம் வாக்காளர்களில், 2020ல் பைடெனிடம் 30 புள்ளிகள் இழப்புடன் ஒப்பிடும்போது, இம்முறை ட்ரம்ப் 9 சதவீதம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பென்சில்வேனியாவில் பெரும்பான்மையான லத்தீன் வாக்காளர்களையும், மிச்சிகனில் பெரும்பான்மையான இளம் வாக்காளர்களையும், வடக்கு கரோலினாவில் பெரும்பான்மையான லத்தீன் ஆண்களையும் ட்ரம்ப் வென்றுள்ளதாக மாநிலங்களில் இருந்து வெளிவரும் வாக்குப்பதிவு தரவுகள் காட்டுகின்றன. மற்றும் விஸ்கான்சினில் உள்ள ஆப்பிரிக்க-அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் அவர் தனது ஆதரவை இரட்டிப்பாக்கியுள்ளார்.
தேர்தலில் வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அதிகமாக இருந்ததாகத் தெரிய வருகிறது. மேலும் பொருளாதார நிலைமைகள் மீதான ஆழ்ந்த சமூக கோபத்தால் வாக்காளர்கள் உந்துதல் பெற்றதாக வெளியேறும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாகவும், 35 சதவீதம் பேர் மட்டுமே நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். பாதிக்குக் குறைவான வாக்காளர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தங்கள் சொந்த பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். பைடென் நிர்வாகத்தின் கீழ், தங்கள் பொருளாதார நிலைமை மேம்பட்டதாகக் கூறியதை விட, இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த வாக்காளர்கள் 40 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹாரிஸை விட ட்ரம்பிற்கு வாக்களித்துள்ளனர்.
75 சதவீதம் பேர் பணவீக்கம் கடந்த ஆண்டில் தங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தாங்கள் நாட்டின் நிலை குறித்து கோபமாகவோ அல்லது அதிருப்தியாகவோ இருப்பதாகக் கூறியுள்ளனர். 7 சதவீதம் பேர் மட்டுமே ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். பென்சில்வேனியாவில், நாடு இயங்கும் விதத்தில் எவ்வளவு மாற்றம் தேவை என்று வாக்காளர்களிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு 81 சதவீதம் பேர் “மொத்த எழுச்சி” அல்லது “கணிசமான மாற்றம்” என்று பதிலளித்தனர்.
ஜனநாயகக் கட்சியின் சில பாரம்பரிய கோட்டைகளில் கூட கமலா ஹாரிஸுக்கு சரியாக கிடைக்வில்லை. நியூ யோர்க் நகரில் 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹாரிஸ் வெறும் 68 சதவீத வாக்குகளுடன் ட்ரம்பை விட முன்னணியில் இருந்தார்—இது 1988 க்குப் பின்னர் எந்தவொரு ஜனநாயகக் கட்சியாளரையும் விட மிகக் குறைந்த வித்தியாசமாகும். காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையில் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் ஈடுபாட்டிற்கு பாரிய எதிர்ப்பு உள்ள மிச்சிகனில் உள்ள தெற்கு டியர்போர்னின் அரபு-அமெரிக்க சுற்றுப்புறத்தில் ஹாரிஸ் தோற்றுள்ளார். பைடென் 2020 இல் தெற்கு டியர்போர்னில் 88 சதவீதம் வெற்றி பெற்றிருந்தார்.
செனட்டின் கட்டுப்பாட்டை வென்றுள்ள குடியரசுக் கட்சியினர், குறைந்தபட்சம் மேற்கு வேர்ஜீனியா, மொன்டானா மற்றும் ஓஹியோவை ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து புரட்டிப் போட்டுள்ளனர். குடியரசுக் கட்சியினர் தற்போது பென்சில்வேனியா மற்றும் நெவாடாவில் உள்ள ஜனநாயகக் கட்சி இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையின் நெருக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் குறைந்தது பல நாட்களுக்கு பின்பே தெரியவரும்.
ஆரம்ப முடிவுகள் குறித்து கருத்துரைக்கையில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் டேவிட் நோர்த், “ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து, பைடெனும் நான்சி பெலோசியும் ஒரு ‘வலுவான குடியரசுக் கட்சி’யின் அவசியத்தை வலியுறுத்தி வந்தனர். சரி, ஜனநாயகக் கட்சியினர் சாதித்துள்ள ஒரு முக்கிய நோக்கம் இதுதான். இந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், அவர் தனது வெற்றிக்கு ஜனநாயகக் கட்சிக்கு கடன்பட்டுள்ளார் என்று அர்த்தமாகும்” என்று எழுதினார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் கருத்து தெரிவிக்கையில், “ஒரு பாசிசவாத மற்றும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ட்ரம்ப் வெற்றி பெற்றால், அதற்கான பொறுப்பு போர் மற்றும் இனப்படுகொலையின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் மீதே இருக்கும். வோல் ஸ்ட்ரீட்டின் இந்த அழுகிப்போன கட்சி மற்றும் தனிச்சலுகை பெற்ற, மெத்தனமான உயர் நடுத்தர வர்க்கத்தின் மூலமாக அதிவலதின் அபாயத்தை எதிர்ப்பது சாத்தியமில்லை” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஹாரிஸின் பிரச்சாரத் தலைவர் ஜென் ஓ’மாலி தில்லான் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்: “இதைத்தான் நாம் உருவாக்கினோம், எனவே இன்றிரவு நமக்கு முன்னால் இருப்பதை முடித்துவிட்டு சிறிது தூங்குவோம், நாளை வலுவாக முடிப்பதற்கு தயாராக இருப்போம்,” என்று 2016 இல் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தால் அனுப்பப்பட்ட இதேபோன்ற குறிப்பை நினைவூட்டுகிறது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒரு ஹோட்டலில் ஹாரிஸின் நிகழ்வில் ஒரு “இறுதிச் சடங்கு” மனநிலை ஊடுருவியிருப்பதாக உதவியாளர்கள் விவரித்தனர்.