மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், தங்கள் பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. ட்ரம்ப் தனது பிற்போக்குத்தனமான தேசியவாத நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாக விரிவான வரி விதிப்புகளை அமல்படுத்தினால், அது அவர்களின் பொருளாதாரங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை மதிப்பிடுவதே இந்த ஆலோசனைகளின் நோக்கமாகும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அமெரிக்க சுங்கவரி உயர்வுகள், 1930களில் உலகளாவிய வர்த்தகப் போருக்கு வித்திட்ட பிரபலமற்ற ஸ்மூட்-ஹவ்லி (Smoot-Hawley) நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகள் உள்ளன. இந்த நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுத்ததுடன், இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன.
சீன ஆளும் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் மிக தீவிரமான விவாதங்கள் நடைபெறும். அமெரிக்காவுக்கான அனைத்து சீன ஏற்றுமதிகள் மீதும் 60 சதவீத சுங்கவரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள், ஏற்கனவே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மிகக் குறைந்த அளவில் உள்ள சீனப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 1.75 முதல் 2.5 சதவீதப் புள்ளிகள் வரை குறைக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகள் உள்ளன.
ட்ரம்ப் தனது முதல் ஜனாதிபதி பதவியில் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கத் தொடங்கியபோது, அவை ஓரளவு சிதறடிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாணியிலான அணுகுமுறையை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அதன் பின்னர், பைடென் நிர்வாகத்தின் போது, பொருளாதாரப் போர் மிகவும் தீவிரமாகிவிட்டது.
பைடென் பெரும்பாலும் ட்ரம்ப் நடவடிக்கைகளைத் தக்க வைத்துக் கொண்டதுடன், “தேசியப் பாதுகாப்பு” காரணங்களை முன்னிறுத்தி, மிக நவீன கணினி சில்லுகள் (chips) மற்றும் சில்லு உற்பத்தித் தொழில்நுட்பங்களை அணுகுவதைத் தடுக்கும் பல்வேறு தடைகள் மூலம் அமெரிக்காவின் தாக்குதலை கணிசமாக விரிவுபடுத்தினார். ஜி ஜின்பிங் அரசின் “உயர்தர புதிய உற்பத்தி சக்திகளை” மேம்படுத்தும் முக்கிய பொருளாதார மூலோபாயத்திற்கு இத்தொழில்நுட்பங்களை அணுகுவது மிகவும் அவசியமானதாகும்.
ட்ரம்பைச் சூழ்ந்துள்ள தீவிர சீன-எதிர்ப்பு பொருளாதார தேசியவாதிகளில், குறிப்பாக அவரது முதல் நிர்வாகத்தின் வர்த்தகப் பிரதிநிதியாக இருந்த மற்றும் அப்பதவிக்கு மீண்டும் வரக்கூடிய ரோபர்ட் லைட்ஹைசர் போன்றோரின் மதிப்பீட்டின்படி, சமீப ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதாலும், ஏற்றுமதிகளை அதிகம் சார்ந்திருப்பதாலும், சீனா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.
சமீபத்திய வர்த்தகப் புள்ளிவிவரங்கள் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன. சீனாவின் வர்த்தக உபரி, அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு, இந்த ஆண்டு 1 டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 இன் முதல் 10 மாதங்களில் வர்த்தக உபரி 785 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும். மேலும், இது 2023ன் இதே காலகட்டத்தை விட 16 சதவீதம் அதிகமாகும்.
X (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், வெளியுறவுக் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் பிராட் செட்ஸர் (Brad Setser) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “சீன ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையிலும், ஏற்றுமதி அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சீனப் பொருளாதாரம் மீண்டும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகிறது என்பதே இதன் முக்கியச் செய்தியாகும்.”
ட்ரம்ப் முதல் நிர்வாகத்தின் போது, உலகளாவிய ஏற்றுமதியில் சீனாவின் உற்பத்தியின் அளவு 12 சதவீதமாக இருந்தது. பின்னர் அந்த அளவு 17 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான டி.எஸ். லம்பார்டின் (TS Lombard) மதிப்பீடு தெரிவிக்கிறது.
கட்டிட மனை (real estate) மற்றும் கட்டுமானத் துறையில் தொடரும் பிரச்சினைகள், தேக்கமடைந்துள்ள நுகர்வோர் தேவை, பணவீக்கக் குறைவு அழுத்தங்கள் மற்றும் தொழில்துறை இலாபங்களின் சரிவு காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவிழந்து வரும் சூழலில், “சுமார் 5 சதவீதம்” என்ற இலக்கு அளவில் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு ஏற்றுமதிகள் முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் சீனப் பிரிவை ஒருமுறை வழிநடத்திய கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஈஸ்வர் பிரசாத் (Eswar Prasad), சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டதாவது: “அதிகார சமநிலை நிச்சயமாக அமெரிக்காவுக்கு சாதகமாக மாறியுள்ளது. சீனப் பொருளாதாரம் முற்றிலும் தோல்வியுறவில்லை, ஆனால் அது வெகுகாலமாகச் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.”
சீனா பதிலடி கொடுக்க முடியாமல் இல்லை. இது அமெரிக்க விவசாய இறக்குமதிப் பொருட்களின் இறக்குமதிகளை நிறுத்த முடியும் — அது ஏற்கனவே பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள விநியோகிப்பாளர்களிடமிருந்து சோயாபீன்களை பெற முயன்றது— மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்துறை கூறுகளுக்குத் தேவையான முக்கிய கனிமங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் முடியும்.
வாஷிங்டனில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் சீன வல்லுநர் ஸ்காட் கென்னடி, நியூயார்க் டைம்ஸில் மேற்கோள் காட்டப்பட்டபடி கூறியதாவது: “சீனா இப்போது முன்பை விட அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது. ட்ரம்ப் வெளிப்படையான பொருளாதாரப் போரைத் தொடுக்கிறார் என்று கருதினால், அமெரிக்கப் பொருளாதாரத்தை எதிர்க்கவும், அதற்கு சில இழப்புகளை ஏற்படுத்தவும் சீனா பயன்படுத்தக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.”
சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஆசியா முழுவதும் கவலைகள் எழுந்துள்ளன. ஜப்பானிய வாகன நிறுவனமான ஹோண்டா, மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல், தனது செயல்பாடுகளில் “மிகப் பெரும் தாக்கத்தை” ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுடன் பெரும் வர்த்தக உபரியைக் கொண்டுள்ள நாடுகள், தாங்கள் ட்ரம்பின் வர்த்தக நடவடிக்கைகளின் இலக்காக மாறுவோமா என்ற கவலையில் உள்ளன.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவுடனான தென் கொரியாவின் வர்த்தக உபரி சாதனை அளவான 44.4 பில்லியன் டாலர்களை எட்டியது. இதில் கார் ஏற்றுமதி அமெரிக்காவிற்கான மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதமாக இருந்தது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தைவானின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 24.6 பில்லியன் டாலர்கள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 57.9 சதவீதம் அதிகமாகும். வியட்நாமின் அமெரிக்காவுடனான வர்த்தக உபரி இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 90 பில்லியன் டாலர்களாக இருந்தது.
அமெரிக்காவிற்கு கணினி சில்லுகளை ஏற்றுமதி செய்வதால் தைவான் வர்த்தகப் போர் நடவடிக்கைகளிலிருந்து விலக்கு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தைவானிய நிறுவனங்கள் அமெரிக்க சில்லுத் தொழிலை “திருடுவதாக” ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சில நிறுவனங்கள் அமெரிக்க வரிவிதிப்புகளின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு மாற்றியுள்ளன. எனினும், அவை இப்போதும் இலக்காக்கப்படலாம் என்று தெரிகிறது. அமெரிக்காவில் முதலீடு செய்த பின்னர் பில்லியன் கணக்கான மானியங்களைப் பெற்றுள்ள டிஎஸ்எம்சி (TSMC) என்ற தைவானிய நிறுவனம் “தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று ட்ரம்ப் கூறியதாக பதிவாகியுள்ளது.
சீனாவில் தைவான் நிறுவனங்களும் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளால் அவற்றில் நூற்றுக்கணக்கான தாய்வான் நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது. சுங்கவரிகளின் தாக்கம் “மிகப்பெரியதாக” இருக்கும் என்று பொருளாதார அமைச்சர் எச்சரித்திருந்த நிலையில், கடந்த வாரம் தைவான் அரசாங்கம் இந்த வணிகங்களை இடமாற்றம் செய்யப்போவதாகக் கூறியிருக்கிறது.,
ட்ரம்பின் முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில், ஐரோப்பா கடும் அழுத்தத்திற்கு உள்ளானது. எஃகு மற்றும் அலுமினியம் மீது வரிகள் விதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் உள்ளிட்ட பல தொழில்துறை பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் இருந்தது. தற்போதைய சூழலில், ஐரோப்பிய தொழில்துறைகள், குறிப்பாக ஜேர்மன் கார் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை, முந்தைய ட்ரம்ப் ஆட்சியின் வரிப் போரை விட மிகவும் கடுமையானதாக உள்ளது.
வோல்க்ஸ்வாகன் (Volkswagen) ஏற்கனவே பெருமளவிலான வேலை நீக்கங்களையும், தொழிற்சாலை மூடல்களையும் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைகள் இந்நிறுவனத்தை கடுமையாக பாதிக்கக்கூடும். சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா வோல்க்ஸ்வாகனின் இரண்டாவது பெரிய சந்தையாகும். கடந்த ஆண்டு அமெரிக்காவில் 713,000 வாகனங்களை விற்பனை செய்த வோல்க்ஸ்வாகன், அவற்றில் 243,000 வாகனங்களை ஜேர்மனியில் தயாரித்தது. இவை பெரும்பாலும் உயர்தர சந்தைப் பிரிவில் விற்கப்பட்டன.
அகராதியில் மிக அழகான வார்த்தையென்றால் அது “வரி”தான் என்று கூறிய ட்ரம்ப், ஐரோப்பாவைத் தாக்க அவர் உத்தேசித்திருப்பதைக்கூட இரகசியமாக வைக்கவில்லை.
“அவர்கள் நம் கார்களை வாங்குவதில்லை, நம் விவசாய பொருட்களை வாங்குவதில்லை, எதையுமே வாங்குவதில்லை,” என்று ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். மேலும், ஐரோப்பாவை “சிறிய சீனா” என்று வர்ணித்தார், ஆனால் “அவ்வளவு சிறியது அல்ல” என்றும் சேர்த்துக் கொண்டார்.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கத் தலைவர்கள், பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் வரிப் போரின் தாக்கத்தைத் தவிர்க்க முடியும் என்றும், அமெரிக்காவுடன் ஒரு சமரச உடன்பாட்டை எட்ட வழிகளைக் கண்டறியலாம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அமெரிக்கா முன்னின்று நடத்தும் வரிப் போர் எவ்வாறு துல்லியமாக உருவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்றை உறுதியாகக் கூறலாம்: போருக்குப் பிந்தைய சுதந்திர வர்த்தக ஒழுங்குமுறை, ட்ரம்ப் மீண்டும் வருவதற்கு முன்பே தளர்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியது, இப்போது முற்றிலும் அதன் மரணப்படுக்கையில் உள்ளது. தீவிரமடைந்த வர்த்தக மற்றும் பொருளாதார மோதல்களின் புதிய காலகட்டம் தொடங்கியுள்ளது. 1930களில் இருந்ததைப் போலவே, இராணுவ மோதல் தான் இதன் புறநிலை தர்க்கமாகும்.