இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி திசாநாயக்கவின் ஜே.வி.பி./தே.ம.ச. வெற்றி பெற்றமை அரசியல் நிலச்சரிவைக் குறிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆளும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) கூட்டணியானது, வியாழன் நடைபெற்ற தேசிய பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

வரவிருக்கும், 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் ஜே.வி.பி./தே.ம.ச. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும். இது எந்தவொரு பாராளுமன்ற எதிர்ப்புமின்றி தடையில்லாமல் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அதன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரத்தை அதற்கு வழங்கும்.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, 14 நவம்பர் 2024 அன்று இலங்கையின் கொழும்பில் பாராளுமன்றத் தேர்தல் வாக்களித்துவிட்டு வெளியேறிய போது. [AP Photo/Eranga Jayawardena]

இலங்கை மற்றும் சர்வதேச பத்திரிகைகள் ஜே.வி.பி./தே.ம.ச.யை 'இடதுசாரி' அல்லது 'சோசலிஸ்ட்' என்று வகைப்படுத்துவதுடன் ஜே.வி.பி., தே.ம.ச. இரண்டிற்கும் தலைமை தாங்கும் திசாநாயக்கவை 'மார்க்சிஸ்ட்' என்று அடிக்கடி குறிப்பிடுகின்றன. இவை பொய்யாகும். 2019 இல் தே.ம.ச.யை ஒரு பரந்த முன்னணியாக அமைத்த ஜே.வி.பி., 1960 களில் தோன்றம் பெற்றதில் இருந்தே இலங்கை தேசியவாதம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போன வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு கட்சியாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தலில், திசாநாயக்க வெறும் 3.1 சதவீத வாக்குகளையே பெற்றதோடு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலைக்கு மத்தியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஜே.வி.பி./தே.ம.ச. 3 ஆசனங்களையும் 445,958 வாக்குகளையும் மட்டுமே பெற்றன.

ஆயினும், செப்டெம்பரில், திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். பாரம்பரிய அரசியல் ஸ்தாபனத்தின் அழிவுகரமான முதலாளித்துவ கொள்கைகள் நாட்டை ஒரு பேரழிவு தரும், நடப்பு சமூக-பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ள நிலையில், அதற்கு எதிரான வெகுஜன கோபத்தின் அலையை திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் சுரண்டிக்கொண்டனர்.

திசாநாயக்க பதவியேற்ற உடனேயே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பரந்த அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்ட அவர், நவம்பர் 14 அன்று ஒரு உடனடித் தேர்தலை நடத்த அழைப்பு விடுத்தார். அவ்வாறு செய்வதன் மூலம், 'வலுவான' ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை தேர்ந்தெடுக்குமாறு அவர் இலங்கையர்களை வலியுறுத்தினார். ஊழலை வேரறுக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யின் 'தேசிய மறுமலர்ச்சி'க்கான திட்டங்களைத் தொடரவும் அத்தகயை அரசாங்கம் தேவை என்று அவர் வாதிட்டார். உண்மையில், திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.யும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு முன்னதாக, இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக தங்கள் கரத்தை பலப்படுத்திக்கொள்ள விரும்பினர்.

இலங்கை வாக்காளர்கள் பாரம்பரியமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவரின் கட்சிக்கு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆதரவுடன் வெகுமதி அளிப்பார்கள்.

இருந்தபோதிலும், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு இடையில் ஜே.வி.பி./தே.ம.ச.க்கான ஆதரவு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வியாழன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஜே.வி.பி./தே.ம.ச. 6,863,186 வாக்குகளைப் பெற்றன—அதாவது திசாநாயக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றதை விட 1.2 மில்லியன் வாக்குகள் அதிகம் ஆகும். வாக்காளர் பங்கேற்பில் ஒட்டுமொத்தமாக 10 சதவீத சரிவுக்கு மத்தியில், மக்களின் வாக்குகளில் ஜே.வி.பி./தே.ம.ச. பெற்ற பங்கு 42.3 சதவீதத்திலிருந்து 61.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 இல் தே.ம.ச. பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ் தேசியவாத இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு அடுத்தபடியாக தே.ம.ச. வென்றுள்ளது.

தேர்தல் முடிவுகள், அதிகரித்து வரும் வர்க்க பதட்டங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களின் சுமையின் கீழ், சமீப வருடங்களில் பிளவுபட்டு போன இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சிகளும், சுதந்திரத்திற்குப் பின்னர் அவற்றில் ஆதிக்கம் செலுத்திய சில குடும்பங்களும் வரலாற்று ரீதியில் நிராகரிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

எதிர்க்கட்சிகளில், ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மட்டுமே புதிய நாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். 18 சதவீத வாக்குகளுடன் ஐ.ம.ச. 40 ஆசனங்களைக் கைப்பற்றியது.

2022 ஜூலையில் வெகுஜனப் போராட்டத்தில் கோட்டாபய இராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று, செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்குத் தலைமை தாங்கினார். அவரின் சமீபத்திய அரசியல் வாகனமான, தேசிய ஜனநாயக முன்னணியானது வெறும் 4 சதவீத வாக்குகளையே பெற்று 5 ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஐ.ம.ச. மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியும், வலதுசாரி, பாரம்பரிய அமெரிக்க சார்பு கட்சியும் 1983 இல் மூன்று தசாப்த கால தமிழர்-விரோத உள்நாட்டுப் போரைத் தொடக்கி வைத்த, தற்போது செயலிழந்து போயுள்ளதுமான ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) இருந்து தோற்றம் பெற்றவை ஆகும்.

2005 முதல் 2022 வரை, இராஜபக்ஷ குடும்பம்/குழு இலங்கை அரசியல் வாழ்வின் மையமாக இருந்து வந்தது. மஹிந்த இராஜபபக்ஷ 2005 முதல் 2015 வரையிலும், பின்னர் அவரது சகோதரர் கோட்டாபய 2019 முதல் 2022 வரையிலும் ஜனாதிபதியாக பதவி வகித்தனர். வியாழன் தேர்தலில் இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, வெறும் 3.14 சதவீத வாக்குகளோடு வெறும் 3 ஆசனங்களுக்கு .மட்டுப்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஐ.ம.ச., ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இடதுசாரி என்று கூறப்படும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் 'ஆக்கபூர்வமாக' வேலை செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தன.

உழைக்கும் மக்கள் மத்தியில் பாரம்பரிய கட்சிகளுக்கு இருந்த வெகுஜன ஆதரவில் ஏற்பட்ட சரிவுக்கு மேலதிகமாக, அவற்றுக்கு இடையேயான தற்போதைய குழப்பத்துக்கும் நெருக்கடிக்கும் காரணம் எதுவெனில், இலங்கை ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளும், வாஷிங்டன் மற்றும் புதுடெல்லியும், வெகுஜன எதிர்ப்பின் மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான சிறந்த வழி இந்த நேரத்தில் 'ஸ்தாபனத்திற்கு எதிரானதாக” காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி./தே.ம.ச.யை ஆட்சிக்கு கொண்டுவருவதுதான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகும்.

திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் தங்கள் பங்கிற்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை அடிக்கடி சந்திப்பது உட்பட ஆளும் வர்க்க ஆதரவைப் பெறுவதற்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர். ஜே.வி.பி./தே.ம.ச.யின் தலைவர், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாசிச டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியதோடு, அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதியளிப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தது போல், பாராளுமன்றத் தேர்தலின் போதும் ஜே.வி.பி./தே.ம.ச. இரண்டு பக்கமும் பேசியது- அதன் பொய்கள்தான் மேலும் வெட்கமற்றவையாக இருந்தன.

திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்கள் முழுவதையும் செயல்படுத்துவோம் என அதற்கு வாக்குறுதி அளித்துள்ள மறுபக்கம், அதன் சிக்கன நடவடிக்கைகளின் அழிவுகளில் இருந்து மக்களின் மிகவும் ஏழ்மையான பிரிவினரை பாதுகாப்போம் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர். 400க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கல்/ மறுசீரமைத்தல், இலட்சக் கணக்கான அரசாங்க தொழில்களை அழித்தல், மேலும் வரி அதிகரிப்பு மற்றும் கட்டண உயர்வுகளை மேற்கொள்ளல் மற்றும் இலவச சுகாதார சேவை, இலவச கல்வி போன்ற பிரதான பொது சேவைகளில் மேலும் வெட்டுக்களை முன்னெடுப்பதும் இதில் அடங்கும்.

அதேபோன்று, திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் பயங்கரவாத தடைச் சட்டங்களை நீக்குவதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டுள்ளதோடு, ஒரு 'பலமான அரசாங்கத்தை' அமைத்தவுடன் வேலைநிறுத்தங்கள் கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும் என்றும் அறிவித்துவிட்டு, மறுபக்கம் தாங்கள் “ஜனநாயக” சீர்திருத்தங்களை ஏற்படுத்தப்போவதாகவும் கூறி வருகின்றனர்.

ஜே.வி.பி./தே.ம.ச.யும் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலுக்கான அதன் தயாரிப்புகளை மூடி மறைப்பதன் பேரில், பெருநிறுவன ஊடகங்கள் புதிய அரசாங்கத்திற்கு பிரகாசமான வண்ணம் தீட்டி :உதவும் அதேநேரம் தொழிற்சங்கங்களும் உதவுகின்றன. தொழிற்சங்கங்கள் 1.4 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்ததற்கு எதிராக, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்வது ஒருபுறம் இருக்க, எதிர்ப்புக் குரல் கூட எழுப்பவில்லை.

போலி-இடது கட்சிகள் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை 'முற்போக்கானது' மற்றும் இடதுசாரிகளின் அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று விளம்பரப்படுத்தவும் வேலை செய்துள்ளன. முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதை 'மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடு' என்று பாராட்டியதோடு, மக்கள் போராட்டக் கூட்டணி என்ற பரந்த முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. வலதுசாரி இனவாத ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் பக்கம் சமூக கோபத்தை திசை திருப்பும் அதன் திவாலான நோக்குநிலையை சுட்டிக்காட்டும் வகையில், முன்னிலை சோசலிசக் கட்சி-மக்கள் போராட்ட கூட்டணி, அதன் பிரதான பிரச்சார முழக்கமாக 'எதிர்க்கட்சியை மாற்ற வேண்டும்' என்பதை தூக்கிப் பிடித்தது.

ஜே.வி.பி.யின் வெற்றியின் மற்றொரு அம்சம், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் அதன் வாக்குகளில் கூர்மையான அதிகரிப்பு ஆகும். ஜே.வி.பி.க்கு தமிழர்-விரோத ஆத்திரமூட்டலையும் வன்முறைகளையும் தூண்டிவிட்ட நீண்ட மற்றும் இழிவான சரித்திரம் உள்ளது. பல தசாப்தங்களாக இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தின் சில பகுதிகளுடன் அது ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவுகளுக்கு இது ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் ஜே.வி.பி./தே.ம.ச.யை புறக்கணித்ததால் அது 10 சதவீத வாக்குகள் அல்லது அதற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றது.

ஆனால், வியாழன் அன்று நடந்த தேர்தலில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அது முதலிடம் பிடித்தது. வடக்கில் யாழ்ப்பாணத்தில் 25 வீத வாக்குகளைப் பெற்றது; கிழக்கில் திருகோணமலையில் 42 வீதமும், மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவில் 42 வீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதற்கு பல காரணிகள் பங்களித்தன. சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளையும் கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசாங்கங்களையும் ஆதரித்து வரும் பாரம்பரிய தமிழ் கட்சிகள் மீதான கோபம்; அரசியல் கைதிகளை விடுவிப்பது மற்றும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைப்பது போன்ற ஜே.வி.பி.யின் வாக்குறுதிகள் மீதான தவறான நம்பிக்கைகள்; மற்றும், முதலும் முக்கியமுமாக, ஜே.வி.பி.யின் “பக்கம் சாராமல் இருந்தால்” தமிழர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்களோ என்ற அச்சம் போன்றவை இந்த காரணிகளில் அடங்கும்.

திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்காக யாழ்பாணத்தில் பிரச்சாரம் செய்யும் போது, சிங்கள-பெரும்பான்மையினரின் விருப்பத்தை, 'வடக்கு' அதாவது தமிழ் சிறுபான்மையினர் தடுப்பதாகக் கருதப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று வெளிப்படையாக எச்சரித்தார்.

ஜே.வி.பி./தே.ம.ச.யின் வெற்றிக்கு இலங்கை ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஆர்வத்துடன் பிரதிபலித்துள்ளன. கொழும்பை தளமாகக் கொண்ட Daily FTயின் தலையங்கம் கூறியதாவது: 'பொது மக்களின் பார்வையில், முந்தைய நிர்வாகத்துக்கு நியாயப்பாடு இருக்கவில்லை. அதனால் அதன் தீர்க்கமான பொருளாதார மறுசீரமைப்பு திட்ட நிரலுக்கு மோசமாக குழிபறிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக விரும்பத்தகாத பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும், இன்றியமையாத அந்தக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஒரு வலுவான வெகுஜன ஆணையைக் கொண்ட அரசாங்கம், சிறந்த நிலையில் இருக்கும்.

அதன் 'ஸ்தாபன எதிர்ப்பு' தோரணை மற்றும் பொய் வாக்குறுதிகளின் அடிப்படையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திடம் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்பார்ப்பவற்றுக்கும், இலங்கை மற்றும் பூகோள மூலதனத்தின் சார்பில் அது அமுல்படுத்தும் பெருவணிக சார்பு, ஏகாதிபத்திய சார்பு திட்ட நிரலுக்கும் இடையே பெரும் முரண்பாடு உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் உலக மேலாதிக்கத்தை மீட்டெடுக்கும் அவநம்பிக்கையில், உலகளாவிய போர்க் கொள்கையை பின்பற்றும் நிலைமைகளின் கீழேயே ஜே.வி.பி./தே.ம.ச. தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ தூண்டிவிட்டுள்ள போரும், காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலையுடன் மத்திய கிழக்கு முழுவதற்கும் போரை விரிவுபடுத்துவதும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதல்களும் இந்தப் போரின் மூன்று முனைகளாகும்.

அமெரிக்காவும் அதனது தெற்காசிய நட்பு நாடான இந்தியாவும் முழு இந்தியப் பெருங்கடல் பகுதியையும், குறிப்பாக பிரதான கப்பல் பாதைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கையையும் சீன-விரோத போர் உந்துதலில் ஒருங்கிணைப்பதில் உறுதியாக உள்ளன. திசாநாயக்க, கடந்த மாதம் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைவரை வரவேற்றமை உட்பட, இலங்கையை சீனாவுக்கு எதிரான புவிசார் மூலோபாய அரணாக மாற்றுவதற்கான முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நகர்வுகளைப் பின்பற்றப் போவதாக மீண்டும் மீண்டும் சமிக்ஞை செய்துள்ளார். இது எந்த ஒரு வெகுஜன ஆலோசனையோ அல்லது ஆதரவோ இல்லாமல் செய்யப்படுகிறது.

இதனால் பதற்றமான போராட்டங்களுக்கு களம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. வரலாற்று ரீதியாக குட்டி முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, சோசலிசத்துடன் எந்த தொடர்பும் அற்ற, மாறாக பாசிசத்தை ஒத்திருக்கின்ற ஒரு வலதுசாரி, சிங்களப் பேரினவாத முதலாளித்துவக் கட்சியாகும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களையும் எச்சரிக்கிறது.

ஜே.வி.பி./தே.ம.ச., சர்வதேச நாணய நிதியத்தின் மரணகரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதற்கு மக்கள் ஆணையும் இல்லாவிட்டாலும், அதன் கொள்கைகளுக்கு எதிரான சகல தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் 'சட்டவிரோதமானது' என்று கண்டிப்பதற்காக இந்த தேர்தல் வெற்றிகளை பயன்படுத்திக்கொள்ளும். வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ளும் அரசாங்கம், இராணுவ-அரசு எந்திரத்தையும், அதன் முன்னோடிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களையும் பொலிஸ்-அரசு அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிடும். மேலும், இலங்கை முதலாளித்துவத்தின் கீழ்த்தரமான சாதனைகள் மற்றும் பிற்போக்கு 'பாரம்பரியங்களுக்கு' உண்மையாக இருக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் முயற்சியில் தமிழர்-விரோத சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தூண்டிவிடும்.

தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடனான மோதலுக்கு அரசியல் ரீதியாக தயார்படுத்துவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் தலையிட்டது. நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை உருவாக்குவது அவசியமாகும். இது ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசின் வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு கூட்டுப் போராட்டத்தில் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

Loading