மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சி, அல்-கொய்தாவுடன் இணைந்த குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS - Hayat Tahrir al-Sham) இன் கரங்களில் வீழ்ச்சியடைந்ததை அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் பிராந்திய சக்திகள் அனைத்தும் வரவேற்றுள்ளன.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பல தசாப்தங்களாக வாஷிங்டனின் முதல் எதிரியாக இருந்து வருவதாக கூறப்படுகின்ற போதிலும், அவர்கள் அனைவரும் போரினால் நாசமாக்கப்பட்டுள்ள நாட்டில் தங்கள் புவிசார் மூலோபாய நலன்களை மேம்படுத்துவதற்கு HTS ஐ தங்கள் துணை ஒப்பந்தக்காரராகப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.
2013 ஆம் ஆண்டில், ஐ. நா தீர்மானம் 2254 ஆனது, HTSஸின் முன்னோடி அமைப்பான அல்-நுஸ்ரா முன்னணியை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அமெரிக்காவைப் போலவே, அல்-கொய்தாவுடனான இந்த அமைப்பின் தொடர்பு காரணமாக. 2018 ஆம் ஆண்டில், வாஷிங்டன் HTS ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, அதன் சிரியத் தலைவர் அஹ்மத் அல்-ஷராவின் தலைக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்தது.
அசாத் வீழ்ச்சியடைந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்கா அல்-ஜொலானி மீதான வெகுமதியை நீக்கியது. சிரியாவில் பயங்கரவாதத்தை கைவிடவும், நாட்டில் உள்ள எந்த இரசாயன ஆயுதக் கிடங்கையும் அழிக்கவும் உறுதியளித்தால், புதிய அரசாங்கத்தை அங்கீகரித்து ஆதரிப்பதாக பைடென் நிர்வாகம் இப்போது கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், புதிய சிரிய அரசாங்கம் “சிறுபான்மையினரின் உரிமைகளை முழுமையாக மதிக்கவும், தேவைப்படும் அனைவருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தெளிவான உறுதிப்பாடுகளை நிலைநிறுத்த வேண்டும்” மற்றும் “சிரியா பயங்கரவாதத்திற்கான தளமாக பயன்படுத்தப்படுவதை அல்லது அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். அவ்வாறான நிலையில், “நாங்கள் எடுத்துள்ள பல்வேறு தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை நாங்கள் கவனிப்போம்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் அனைத்தும் டமாஸ்கஸில் HTS அமைப்பின் அதிகாரிகளை சந்தித்துள்ளன. பிரித்தானிய இராஜதந்திரிகள் அல்-ஷராவுடன் கலந்துரையாடல் நடத்தியதுடன், அவருடன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர். இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக HTS இருந்தாலும், இந்தக் குழுவிற்கு ஆதரவை வெளிப்படுத்துவது என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். சிரிய அகதிகளுக்கு மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் பவுண்டுகளை (63 மில்லியன் டாலர்) அனுப்புவதாக லண்டன் அறிவித்துள்ளது. சிரியாவின் புதிய தலைவர்களுடனான இராஜதந்திர உறவுகளை கத்தார் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
HTS அமைப்புடன் நெருங்கிய உறவுகள் இருந்தபோதிலும், நீண்டகாலமாக நேரடி ஆதரவை மறுத்து வந்த துருக்கி, டமாஸ்கஸில் தனது தூதரகத்தை மீண்டும் திறந்துள்ளது. துருக்கிய வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடான் துருக்கிய தொலைக்காட்சியில் அறிவிக்கையில், “துருக்கியை விட வேறு எவரும் இந்தக் குழுவை நன்கு அறிந்திருக்க முடியாது,” என்று குறிப்பிட்டார். HTS அமைப்புக்கு இராணுவ மற்றும் தளவாட ஆதரவை வழங்க உறுதியளித்துள்ள ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், வளைகுடா நாடுகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறார். இது, சிரியா அங்காராவுடன் ஒரு மூலோபாய உறவை வளர்க்கும் என்று அல்-ஷராவை அறிவிக்கத் தூண்டியது. மேலும், “மூலோபாய உறவுகளை கொண்டிருக்கும், புதிய சிரிய அரசை மறுகட்டுமானம் செய்வதில் துருக்கிக்கு பல முன்னுரிமைகள் உள்ளன” என்று அவர் துருக்கிய செய்தித்தாள் யெனி சஃபாக்கிடம் கூறினார்.
ஈரானைப் பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்துவதற்கு CIA, சவூதி அரேபியா, கட்டார், துருக்கி மற்றும் இஸ்ரேலால் நிதியாதாரம் மற்றும் ஆயுத வினியோகம் வழங்கி முடுக்கிவிடப்பட்ட நிலையில், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பினாமிப் போர் தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளாகிவிட்டன. ஏகாதிபத்திய மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய சக்திகள் சிரியாவைச் சூறையாடுவதற்கு, அல்-கொய்தாவுடன் இணைந்த பினாமிகளுடன் அவற்றின் கூட்டுறவை ஆழப்படுத்தி வருகின்றன. இப்பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கட்டுப்படுத்துவதற்கும் மத்திய கிழக்கில் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும் அவர்களின் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இது இருந்து வருகிறது.
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு உலகளாவிய போர் பற்றிய குறித்த வாய்வீச்சுக்கள் இருந்து வருகின்ற போதிலும், 1953 இல் ஈரானில் மொசாடெக் அரசாங்கத்தை CIA/MI6 உளவு அமைப்புக்கள் தூக்கியெறிந்ததோடு, 1965 இல் இந்தோனேசியாவில் CIA ஆதரவிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் பாரிய படுகொலைகள் உட்பட, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் இடது தேசியவாத மற்றும் சோசலிச இயக்கங்களை ஒடுக்க அமெரிக்கா நீண்டகாலமாக பிற்போக்குத்தனமான இஸ்லாமிய குழுக்களைப் பயன்படுத்தி வந்துள்ளது.
இந்த அமைப்புகளில் மிகவும் நன்கறியப்பட்ட அல்-கொய்தா, 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்பு ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட போரின் போது, சவூதி முடியாட்சியின் உதவி மற்றும் நிதியுதவியுடன், CIA மற்றும் பாகிஸ்தானிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய முஜாஹிதீன் ஆயுதக் குழுக்கள் பாக்கிஸ்தான் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பப்பட்டு சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க பினாமிகளாக சேவை செய்ய அனுப்பப்பட்டனர்.
பெரும்பாலும் மாஸ்கோவின் ஸ்ராலினிச ஆட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்த மதச்சார்பற்ற தேசியவாத ஆட்சிகள் மற்றும் கட்சிகள் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவோ அல்லது ஏகாதிபத்தியத்தில் இருந்து எந்தவொரு அர்த்தமுள்ள சுயாதீனத்தையும் கொண்டிருக்கவோ இல்லை. இதைத் தவறியதன் விளைவாக, மத்திய கிழக்கில் மக்களின் பரந்த அடுக்குகளின் சமூக அதிருப்தியை சுரண்டிக் கொண்டதன் மூலமாக, இந்த இஸ்லாமியவாத குழுக்களால் அப்பிராந்தியத்தின் மிகவும் வறிய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் ஓரளவிற்கு ஆதரவைத் திரட்ட முடிந்தது.
வாஷிங்டன் மற்றும் அல்-கொய்தா போன்ற சன்னி ஜிஹாதி குழுக்களுக்கு இடையேயான உறவானது, (அவர்களின் மத வெறி, முதலாளித்துவத்திற்கான அர்ப்பணிப்பு, கடுமையான கம்யூனிச எதிர்ப்பு மற்றும் ஷியா இஸ்லாம், ஷியா பெரும்பான்மை ஈரான் மற்றும் அசாத் சேர்ந்த சமூகமான அலாவைட்டுகள் மீதான வன்முறை விரோதம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது) அதன் கூட்டாளிகள் மற்றும் பினாமிப் படைகளில் இருந்து பலமுறை பரிணாம வளர்ச்சியடைந்து, சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட எதிரிகளாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அனைத்து பொய்கள் மற்றும் பாசாங்குத்தனங்களுடன் மீண்டும் மீண்டும் உருவாகி வந்துள்ளது.
அல்-ஜொலானி / அல்-ஷரா மற்றும் HTS இன் தோற்றம்
அல்-ஜொலானி 1982 இல் சவூதி அரேபியாவில் ஒரு நடுத்தர வர்க்க சிரிய குடும்பத்தில் பிறந்து டமாஸ்கஸின் ஒரு வசதியான பகுதியில் வளர்ந்து வந்துள்ளார். அவரது தந்தையின் உறவினரான ஃபாரூக் அல்-ஷாரா நீண்டகால வெளியுறவு அமைச்சராகவும், பின்னர் 2014 வரை சிரியாவின் துணை ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார்.
2003 ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு, அல்-ஜொலானி ஈராக்கிற்குச் சென்று அல்-கொய்தா தலைமையிலான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான சன்னி பிரிவு கிளர்ச்சியில் இணைந்து கொண்டார். 2006ல் அமெரிக்கப் படைகளால் பிடிக்கப்பட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளை ஈராக்கில் சிறைகளில் கழித்தார்.
2011 இல் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தபோது, 2004 இல் உருவாக்கப்பட்ட அல்-கொய்தாவின் ஒரு பிரிவான அப்போதைய ஈராக் இஸ்லாமிய அரசு (ISI) என்ற அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதியின் சார்பாக அல்-நுஸ்ரா முன்னணியை அமைக்க ஜெலானி மீண்டும் சிரியாவுக்குச் சென்றார். அல்-கொய்தா மற்றும் ISI குழுக்கள் உட்பட பல்வேறு சலாபி ஜிஹாதி குழுக்களை ஒன்றிணைத்து, சிரிய ஆட்சியைத் தூக்கியெறிந்து ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவதே அல்-நுஸ்ரா முன்னணியின் நோக்கமாக இருந்தது. அடுத்த ஆண்டு, ஐ.நா அல்-நுஸ்ரா முன்னணியை ஒரு பயங்கரவாத குழுவாக அறிவித்தது.
அதன் பின்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலான இணைப்புகள், பிளவுகள் மற்றும் பிற ஜிஹாதி குழுக்களுடனான கொடிய மோதல்கள், (குறிப்பாக அமெரிக்கா மற்றும் துருக்கியின் பரந்த ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில்) அதன் முன்னாள் கூட்டாளிகள் மற்றும் மிகவும் வெறுக்கத்தக்க நடைமுறைகளில் இருந்து விலகியதன் மூலம் பின்தொடர்ந்தன.
அல்-நுஸ்ரா முன்னணி, சிரிய ஆட்சிப் படைகளுக்கு எதிராக, குறிப்பாக வடமேற்கு சிரியாவில்—அலெப்போ, ஹமா, லட்டாகியா மற்றும் இட்லிப்பில்— சில ஆரம்ப வெற்றிகளை ஈட்டியது. இது, இஸ்லாமிய அரசு என்ற பரந்த போர்வையின் கீழ், சிரியாவிற்குள் ISI அமைப்பை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அல்-பாக்தாதி விடுப்பதுக்கு இட்டுச் சென்றது. ஆனால், சிரியாவில் ஆளணிகளுக்காக போட்டியிட்டுக்கொண்ட பிரிவுகள், விரைவிலேயே தமக்கிடையே மோதிக் கொண்டன. இம்மோதலில், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 2013 இல், அல்-ஜொலானி, IS அமைப்புடன் முறித்துக் கொண்டு, ஆளணிகள், ஆயுதங்கள் மற்றும் பணத்தை வழங்கிய அல்-கொய்தாவின் தலைவரான ஒசாமா பின்லேடனின் (2011 இல் நடந்த கொலையைத் தொடர்ந்து) வாரிசான “ஷேக் அய்மான் அல்-ஜவாஹிரிக்கு அல் நுஸ்ரா முன்னணியின் பிள்ளைகளின் விசுவாசத்தை உறுதியளிப்பதாக” அறிவித்து ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தியை வெளியிட்டார்.
துருக்கி, ஈராக் மற்றும் லிபியாவில் இருந்தும், அத்துடன் செச்சென்யா மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்தும் வந்த இஸ்லாமியவாதிகளை உள்ளடக்கிய அல்-கொய்தாவுடன் தொடர்புபட்ட ஆளணி குழுக்கள், அசாத்துக்கு எதிரான சக்திகளில் மேலாதிக்கம் செலுத்தின. CIAயின் ஆயுதங்கள் மற்றும் நிதிகள் என்பன, சிரிய கிளர்ச்சியாளர்களை “பரிசோதித்து மிதப்படுத்தப்” போகின்றன என்று கூறினாலும், அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் பணிக்காக CIAயின் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்தில் இந்தக் குழுக்கள் மிகப்பெரிய பயனாளிகள் ஆனார்கள்,
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக போரில் ஈடுபட்ட பிரதான சக்தியாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கருதிக் கொண்டிருந்த இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் (ISIS) மேலாதிக்கம் 2014 இல் சிரியாவில் இருந்து வடக்கு ஈராக்கிற்குள் பரவி, அமெரிக்க நலன்களை அச்சுறுத்தத் தொடங்கிய போது, வாஷிங்டன் குதிரைகளை மாற்றி, சிரிய ஜனநாயகப் படைகளை உருவாக்கியது. அதில் அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் தேசியவாத மக்கள் பாதுகாப்புப் பிரிவுகள் (YPG) முதுகெலும்பாகவும், அதன் முக்கிய பினாமி படையாகவும் உள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் ISISக்கு எதிராக அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடங்கியபோது, அல்-ஜொலானி அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று விவரித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு சண்டையை எடுத்துச் செல்வது உட்பட “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன்” போரிடப் போவதாகவும் கூறினார். ISIS அமைப்புக்கு எதிரான போரில் மேற்கு நாடுகளின் உதவியை ஏற்க வேண்டாம் என்று தனது சிப்பாய்களுக்கு அவர் வலியுறுத்தியிருந்தார்.
2016 ஆம் ஆண்டில், அல்-நுஸ்ரா முன்னணி, அல்-கொய்தாவிலிருந்து பிரிந்து, ஜபத் ஃபதா அல்-ஷாம் (JFS) என்று பெயரை மாற்றிக்கொண்டது. அல்-நுஸ்ரா முன்னணி, அவ்வாறு செய்வதில் அதிருப்தியை சந்தித்தாலும், அடுத்த ஆண்டு இதர நான்கு சலாபி ஜிஹாதி ஆயுதக் குழுக்களுடன் இணைந்து HTS ஐ உருவாக்கியது. அமெரிக்கா, இன்னும் அல்-கொய்தாவின் துணை அமைப்பாகவே HTS இருப்பதாகவும், இது “சிரிய புரட்சியை கடத்திச் செல்வதற்கான முயற்சி” என்றும், இது மிதவாதத்தை நோக்கி நகரவில்லை என்றும், அதை உலகளாவிய பயங்கரவாத அமைப்பு என்றும் கூறியது.
சுமார் 10,000 ம் ஆயுததாரிகளைக் கொண்ட HTS ன் படை, இதர இஸ்லாமிய பிரிவுகளில் பெரும்பாலானவற்றை அதன் தலைமையின் கீழ் கொண்டு வந்தது. சிரியாவின் இட்லிப் மாகாணம் மற்றும் அண்டை பகுதிகளின் பாதியை HTS தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, இரக்கமற்ற வன்முறை மற்றும் அரசியல் வற்புறுத்தலின் கலவையின் மூலம் இந்தப் பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாக மாறியது. மேலும், துருக்கியிடமிருந்து HTS கணிசமான ஆதரவையும் பெற்றது. இந்த மாகாணத்தில் துருப்புக்களை நிலைநிறுத்திய துருக்கி, குர்திஷ் படைகளுக்கு எதிராக HTS மற்றும் பிற இஸ்லாமிய ஆயுததாரிகளை பயன்படுத்திக் கொண்டது. மேலும், அமெரிக்க ஆதரவுடன் HTS, வடகிழக்கு சிரியாவில் ஒரு தன்னாட்சி நிலப்பகுதியை அமைத்தது. துருக்கி அதன் தெற்கு எல்லையில் ஒரு குர்திஷ் அரசு உருவாகுவதையும், துருக்கியில் உள்ள பெரிய குர்திஷ் மக்களிடையே பிரிவினைவாத உணர்வுகள் வளர்ச்சியடைவதையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
வடமேற்கு சிரியாவின் பல மாகாணங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அங்காரா, முன்னாள் சுதந்திர சிரிய இராணுவத்தின் (FSA) வாரிசு அமைப்பான சிரிய தேசிய இராணுவத்தை (SNA) நேரடியாக ஆதரிப்பதன் மூலமும், HTS ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதை ஆதரிப்பதன் மூலமும், 2016 லிருந்து துருக்கி சிரியாவில் பல இராணுவ தலையீடுகளை மேற்கொண்டு வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், ரஷ்யா மற்றும் அசாத் ஆட்சியுடன் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, சிரியாவின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 2 மில்லியன் பேர் உட்பட HTS படைகளும் அவர்களது கூட்டாளிகளும் இட்லிப் மாகாணத்துக்குள் தள்ளப்பட்டனர். இப்போது 4.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாகாணம், ஆட்சி மாற்றத்திற்கான அதன் போரை முன்னெடுத்த வாஷிங்டனின் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் கடைசி கோட்டையாக மாறியது.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவரித்ததைப் போல, சித்திரவதைகள், காணாமல் ஆக்குதல்கள், பகிரங்கமாக கல்லெறிந்து கொல்லுதல், உடனடி மரணதண்டனைகள், சிறைவாசம், மற்றும் HTS துப்பாக்கி ஏந்தியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் கடுமையாக ஒடுக்கும் ஆட்சியாக, அது மாறியது. .
HTS க்கு மறுவாழ்வு கொடுக்கும் வாஷிங்டன்
இவை எதுவுமே வாஷிங்டனை HTS க்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் இருந்து நிறுத்தவில்லை. ரஷ்யா, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் ஆதரவுடனான அசாத்தின் ஆட்சியானது, அதிகாரத்தின் மீது தனது பிடியைத் தக்க வைத்திருந்த சிரியாவில், அல்-கொய்தா மீண்டும் ஒருமுறை அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை இவை சமிக்ஞை செய்கின்றன. இட்லிப் மாகாணத்தில் உள்ள சரகேப் மற்றும் ஜிஸ்ர் அல் ஷுகுர் ஆகிய இடங்களில் இருந்த ISIS ஆயுதக் குழுக்களுடன் மோதி, HTS அமெரிக்காவுக்கு தனது சேவைகளை வழங்கி வந்தது. 2019 ஆம் ஆண்டில், இட்லிப் மாகாணத்தில் ISIS தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டபோது, அவரது மரணத்தை HTS வரவேற்றிருந்தது.
பிப்ரவரி 2021 இல், அமெரிக்காவின் பொது ஒளிபரப்பு சேவையின் (PBS) முன்னணி நிகழ்ச்சி, சிரியாவில் HTS இன் குற்றங்களை மூடிமறைக்கும் நோக்கில் இட்லிப் மாகாணத்தில் அல்-ஜொலானியுடன் ஒரு அசாதாரண நேர்காணலை நடத்தியது. இதன்மூலம், அல்-கொய்தாவுடனான அவரது கடந்தகால தொடர்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள PBS ஒளிபரப்பு சேவை அவருக்கு வாய்ப்பளித்தது. அசாத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதில் HTSஸின் பங்கை அல்-ஜொலானி இந்த நேர்காணலில் வலியுறுத்தியிருந்தார். மேலும், “மக்களைப் பாதுகாப்பது, அவர்களின் தற்காப்பு, அவர்களின் மதம், அவர்களின் கௌரவம், அவர்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் பஷர் அல்-அசாத் போன்ற ஒரு குற்றகரமான கொடுங்கோலனுக்கு எதிராக நிற்பது” தான் தமது நோக்கம் என்று அல்-ஜொலானி கூறினார்.
அமெரிக்காவிற்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் ஆதரவளிக்க மாட்டேன் என்று உறுதியளித்த ஜொலானி, தனக்கும் HTSஸுக்கும் இணைக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையை “நியாயமற்றது” மற்றும் “அரசியல்” என்று கண்டனம் செய்தார். “இந்த புரட்சியில் எங்களது 10 ஆண்டு பயணத்தின் மூலமாக, நாங்கள் மேற்கத்திய அல்லது ஐரோப்பிய சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்க மாட்டோம்: அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை, எதுவுமே இல்லை” அவர் ஜெலானி அறிவித்தார். இட்லிப்பில் எந்தவொரு வடிவிலான கருத்து வேறுபாட்டையும் வன்முறையாக ஒடுக்கியது தொடர்பான பரவலான குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அல்-ஜொலானி அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களை “ரஷ்யாவின் முகவர்கள்” அல்லது “அசாத் ஆட்சியின் முகவர்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
அதே நிகழ்ச்சியில், ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் மத்திய கிழக்கு தூதரான ஜேம்ஸ் ஜெஃப்ரி, அல்-ஜொலானியும் HTS அமைப்பும் சிரியாவில் அமெரிக்காவின் “சொத்து” என்பதை உறுதிப்படுத்தினார். “இட்லிப்பில் உள்ள பல்வேறு விருப்பங்களில் இவை மிகக் குறைந்த மோசமான விருப்பமாகும், மேலும் இட்லிப் சிரியாவின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும், இது இப்போது மத்திய கிழக்கில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அடுத்த ஆண்டில், ISIS அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-குராஷி இட்லிப்பில் அமெரிக்க இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது, இதர இஸ்லாமிய குழுக்கள் அமெரிக்காவுடன் HTS ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டின, இருப்பினும் HTS அமெரிக்க நடவடிக்கையை முறையாக கண்டித்தது.
டமாஸ்கஸை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதில் இருந்து, HTS அமைப்பானது, வாஷிங்டனில் உள்ள அதன் எஜமானர்களுக்கு விசுவாசத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
லெபனானில், ஈரானையும் ஹிஸ்புல்லாவையும் இல்லாது ஒழிப்பதற்கு உதவிய இஸ்ரேலுக்கு HTSன் தலைவர்கள் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சிரியாவிற்கும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளுக்கும் (1974 போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் நிறுவப்பட்டது) மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி குனிட்ரா மாகாணத்தில் உள்ள கிராமவாசிகள் இடம்பெயர்ந்ததற்கும் இடையே உள்ள இராணுவமயமாக்கப்படாத மண்டலத்தை இஸ்ரேல் கைப்பற்றியதற்கு அல்-ஷரா எந்த கண்டனத்தையும் வெளியிடவில்லை. சிரிய இராணுவத் தளங்கள், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள், வெடிமருந்து கிடங்குகள், தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணை கையிருப்புகள் மற்றும் சிரிய கடற்படை கப்பல்களை அழித்த நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் குறித்தோ அல்லது சிரியாவின் இறையாண்மையை மீறி 75 க்கும் அதிகமான அமெரிக்க விமானத் தாக்குதல்கள் குறித்தோ அவர் எதனையும் கூறவில்லை. எந்தவொரு தற்காப்புத் திறனையும் நாட்டிலிருந்து அகற்றுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிரியாவின் 80 சதவீத இராணுவ நிறுவல்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
அதற்கு பதிலாக, வான்வழித் தாக்குதல்கள் மூலம் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொண்ட இஸ்ரேல் இப்போது சிரியாவை விட்டு அமைதியாக வெளியேற வேண்டும் என்று அல்-ஷரா கூறுகிறார். அவர் பிரிட்டனின் டைம்ஸ் பத்திரிகையிடம், “இஸ்ரேலுடன் அல்லது வேறு யாராக இருந்தாலும் நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை. மேலும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு சிரியாவை ஒரு ஏவுதளமாக பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று ஜொலானி கூறினார்.
இங்கிலாந்தின் சேனல் 4 செய்தி சேவையானது, சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து HTS செய்தித் தொடர்பாளரிடம் அழுத்தம் கொடுத்து கேட்க முயன்றபோது, அவருடைய பதில், “பாதுகாப்பு மற்றும் சேவைகளை மீட்டெடுப்பது, குடிமக்கள் மற்றும் நிறுவனங்களை மீட்டெடுப்பது மற்றும் புதிதாக விடுவிக்கப்பட்ட நகரங்களை பராமரிப்பது எங்களது முன்னுரிமை” என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு எதிரான “எதிர்ப்பின் அச்சுகளாக” இருக்கும் ஈரானையும் ஹிஸ்புல்லாவையும் சிரியப் பகுதிக்கு வெளியே வைத்திருப்பதாக HTS சபதம் செய்துள்ளது.