மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, பெய்ட் லாஹியாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலிய இராணுவம் சோதனை நடத்தி, நோயாளிகளையும் ஊழியர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின்னர், மருத்துவமனையை தீயிட்டுக் கொளுத்தினர். அக்டோபர் 2023 இல், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து வடக்கு காஸாவில் இயங்கிவந்த கடைசி மருத்துவ வசதி இந்த மருத்துவமனையாகும்.
ஹமாஸின் செயல்பாட்டாளர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ள இந்த மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா உட்பட 240 க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. சியோனிச இராணுவம், சோதனைக்கு முன்னதாக 350 நோயாளிகளையும் ஊழியர்களையும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக கூறுவதன் மூலம் அதன் மிருகத்தனமான தாக்குதலின் விளைவுகளை மூடிமறைக்க முயன்றது.
எவ்வாறாயினும், வலுக்கட்டாயமாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால், குறிப்பாக மோசமாக நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது உயிர்காக்கும் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. தற்போதைய இராணுவ நடவடிக்கை காரணமாக, குழப்பமான சூழ்நிலை நிலவி வருவதால், அங்கிருந்த நோயாளிகள் மாற்றப்பட்ட மருத்துவமனைகள் அல்லது தங்குமிடங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த சோதனை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு காஸாவின் கடைசி பெரிய மருத்துவமனையும் செயல்படாததால் அதன் சேவைகளை நம்பியிருக்கும் சுமார் 75,000 குடியிருப்பாளர்களின் உயிர்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறியது.
காஸாவின் சுகாதார உள்கட்டமைப்பை திட்டமிட்டு இஸ்ரேல் அழித்ததை விமர்சித்த உலக சுகாதார அமைப்பு, மீதமுள்ள மருத்துவமனைகள் கமல் அத்வானில் இருந்து வரும் நோயாளிகளின் வருகையைக் கையாள போதுமான வசதிகளில்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியது. இந்த சோதனை நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய மருத்துவ மற்றும் மனிதாபிமான குழுக்கள், மோசமான நிலைமைகளின் கீழ் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு டாக்டர் சஃபியாவின் அர்ப்பணிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தின.
தீவிரவாதிகள் மருத்துவமனையை ஒரு கட்டளை மையமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற இஸ்ரேலின் கூற்றை ஹமாஸ் மறுத்துள்ளதுடன், காஸாவிலுள்ள மருத்துவ வசதிகளைப் பாதுகாக்க சர்வதேச தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தது. இந்த சம்பவமானது, சண்டை இடம்பெறும் மண்டலங்களில் உள்ள சுகாதார நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான இராணுவ நடவடிக்கைகளின் மனிதாபிமானற்ற தாக்கம் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
இந்த சோதனை நடவடிக்கையின் போது மருத்துவமனையின் ஆய்வகம், அறுவை சிகிச்சை பிரிவு, பொறியியல் மற்றும் பராமரிப்பு துறை, அறுவை சிகிச்சை அரங்கம், மருந்துக் கடை உள்ளிட்ட சில பகுதிகள் எரிக்கப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய நாள், ஒரு பெண் சுகாதார ஊழியர் உட்பட பன்னிரண்டு நோயாளிகளை, அழிக்கப்பட்ட மற்றும் செயல்படாத நிலையிலுள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எந்த கவனிப்பையும் வழங்க முடியாத நிலையில், பெரும்பாலான ஊழியர்கள், நிரந்தர நோயாளிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
கூடுதலாக, சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு தெற்கு காஸாவை நோக்கி நடக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக, ஆஸ்பத்திரியைச் சூழவுள்ள பிரதேசம் மிகவும் கொந்தளிப்பான நிலைமையில் இருந்து வந்ததோடு, ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கிட்டத்தட்ட அன்றாடம் இடம்பெற்று வருகின்றன. இந்த வாரம், அதன் சுற்றுப்புறத்தில் நடந்த குண்டுவீச்சில் கமால் அத்வான் மருத்துவமனையின் ஐந்து சுகாதார ஊழியர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமல் அத்வான் மருத்துவமனை இப்போது காலியாக இருக்கிறது. … இத்தகைய நிலைமைகளின் கீழ், இந்த முக்கியமான நோயாளிகளின் மருத்துவமனையும், சிகிச்சையும் அவர்கள் உயிர்வாழ்வதற்கான கடுமையான அபாயங்களை ஏற்படுத்துகின்றன. அவர்களின் நல்வாழ்வுக்காகவும், சோதனை நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கமல் அத்வான் மருத்துவமனை இயக்குநருக்காகவும் உலக சுகாதார அமைப்பு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. மேலும், இந்த சோதனை நடவடிக்கை தொடங்கியதிலிருந்து உலக சுகாதார அமைப்பு அவருடனான தொடர்புகளை இழந்துள்ளது.
கமால் அட்வான் மருத்துவமனை கடந்த 14 மாதங்களாக இஸ்ரேலிய படைகளின் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகளின் இலக்காக இருந்து வருகிறது.
அக்டோபர் 25 அன்று, இஸ்ரேலிய படைகள் இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு சுமார் 600 நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளே அடைத்து வைத்தனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது காயமடைந்த மருத்துவ ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இயக்குனர் Dr. சபியா இஸ்ரேலிய டாங்கிகள் மருத்துவ நிலையத்தை சுற்றி வளைத்து, மின்சாரத்தை துண்டித்து கட்டிடத்தின் மீது குண்டுகளை வீசி, இரண்டாவது, மூன்றாவது தளங்களை குறிவைத்து தாக்கின என்று குறிப்பிட்டார். இந்த சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, குண்டுவீச்சின் காரணமாக முக்கிய உபகரணங்கள் அழிக்கப்பட்டது உட்பட குறிப்பிடத்தக்க சேதத்தை மருத்துவமனை சந்தித்துள்ளது.
டிசம்பர் 2024 தொடக்கத்தில், இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனைக்கு அருகில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் விளைவாக பொதுமக்கள் உயிரிழந்தனர். டிசம்பர் 11 அன்று, ஆஸ்பத்திரியின் மகப்பேறு பிரிவு இலக்கு வைத்து தாக்கப்பட்டது. இது இரண்டு தாய்மார்கள் மற்றும் அவர்களது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மரணத்திற்கு வழிவகுத்தது. அடுத்த நாள், இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனையை சோதனையிட்டு, கிட்டத்தட்ட 70 மருத்துவ ஊழியர்களை கைது செய்ததுடன், 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களையும் சோதனைக்கு செல்லுமாறு உத்தரவிட்டது.
இஸ்ரேலிய புல்டோசர்கள் மருத்துவமனைக்கு வெளியே தஞ்சமடைந்த மக்களை நசுக்கியதாகவும், இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தார். மேலும், மருத்துவமனை மீதான தாக்குதல்களின் மனிதாபிமான தாக்கங்கள் குறித்து சர்வதேச அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
கமால் அட்வான் மருத்துவமனை மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதும், மூடப்படுவதும் காஸாவில் மருத்துவ உள்கட்டுமானத்தை இஸ்ரேல் திட்டமிட்டு அழிப்பதன் ஒரு பகுதியாகும். அக்டோபர் 7, 2023 முதல், காஸாவில் ஏராளமான மருத்துவமனைகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், சுகாதார மருத்துவ வசதிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலானது, பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியின் வேண்டுமென்றே படுகொலை மற்றும் இன சுத்திகரிப்பு நடவடிக்கையின் மைய அங்கமாக இருந்து வருகிறது.
மத்திய காஸாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை, மத்திய காஸா நகரில் உள்ள அல்-வஃபா மருத்துவமனை, காஸா நகரில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனை, மத்திய காஸாவில் உள்ள துருக்கிய-பாலஸ்தீனிய நட்புறவு மருத்துவமனை மற்றும் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாலஸ்தீனிய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கட்டமைப்புகளை அழித்த அல்லது சேதப்படுத்திய இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு மத்தியில், மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால் எண்ணற்றவர்கள் இறந்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் குறைவாக இருந்தாலும், காயமடைந்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பது அல்லது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது உட்பட மருத்துவ உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் நேரடி விளைவாக குழந்தைகள் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உதாரணமாக, அக்டோபர் 22, 2023 அன்று, அல் ஷிஃபா மற்றும் அல் குட்ஸ் மருத்துவமனைகளுக்கு அருகில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் என்பன, அந்த நேரத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் “இரத்தக்களரி” இரவு என்று விவரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், காஸாவில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகள் மருத்துவ பணியாளர்களிடையே குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அக்டோபர் 2023 முதல் சுமார் 986 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 165 மருத்துவர்கள், 260 செவிலியர்கள், 300 மேலாண்மை மற்றும் உதவி பணியாளர்கள், 184 சுகாதார இணை வல்லுநர்கள், 76 மருந்தாளுநர்கள் மற்றும் 12 பிற சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
நவம்பர் 3, 2023 அன்று, காஸா சுகாதார அமைச்சகம் 136 துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாகவும், மோதல் தொடங்கியதிலிருந்து 25 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. அதே நாளில், அல்-ஷிபா மருத்துவமனைக்கு வெளியே ஒரு மருத்துவ தொடரணி மீது இஸ்ரேல் குண்டு வீசித் தாக்கியுள்ளது.
கமால் அட்வான் மருத்துவமனை மீதான சமீபத்திய தாக்குதலில் காவலில் வைக்கப்பட்டுள்ள டாக்டர் ஹுசாம் அபு சபியா, 1973ல் வடக்கு காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் பிறந்துள்ளார். இவர், பாலஸ்தீனிய குழந்தை மருத்துவரும் மனித உரிமைகள் பாதுகாவலரும் ஆவார். இஸ்ரேலிய இராணுவத்தினரின் உத்தரவுகள் இருந்தபோதிலும், டாக்டர் சஃபியா மருத்துவமனையை காலி செய்ய மறுத்துவிட்டார்.
அக்டோபர் 2024 இல், இடம்பெற்ற இஸ்ரேலிய சோதனை நடவடிக்கையின் போது, சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சஃபியா, பின்பு தனது பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது குடும்பத்துடன் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்த அவரது 15 வயது மகன் இப்ராஹிம், இஸ்ரேலிய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
டிசம்பர் 27, 2024 அன்று, டாக்டர் அபு சஃபியாவை மீண்டும் மருத்துவமனை மீதான சோதனையின் போது கைது செய்த இஸ்ரேலிய படைகள், அவர் ஹமாஸ் அமைப்பின் செயல்பாட்டாளர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையானது, மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. மோசமான சூழ்நிலைகளில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அவரது உறுதிப்பாட்டை இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.
காஸா மீதான இனப்படுகொலை முழுவதிலும், உலக சோசலிச வலைத் தளம் மருத்துவமனை வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான இஸ்ரேலிய அரசாங்கத்தின் தாக்குதல்களை அறிக்கையிட்டு வருவதோடு, பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் கட்டவிழ்ந்து வருகின்றன. வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த கொலைவெறி தாக்குதல்கள் குறித்து, இப்போது பைடென் நிர்வாகத்திடம் இருந்து கருத்துகள் இல்லை. ஏனெனில், இது இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இடம்விட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதில் கவனம் செலுத்துகிறது.
கடந்த வெள்ளியன்று, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி செய்தியாளர்களிடம், “மருத்துவமனைகள் சண்டை மற்றும் மோதல்களின் தீவிர காட்சிகளாக இருக்கக்கூடாது. மக்கள் மருத்துவமனைக்குச் செல்வதை பாதுகாப்பாக உணர வேண்டும், மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற வேண்டும்” என்று நயவஞ்சகமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஹமாஸ் மருத்துவமனைகளை “ஆயுதக் களஞ்சியங்களைச் சேமித்து வைப்பதற்கும், போராளிகளை வைப்பதற்கும், திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும்” பயன்படுத்துகிறது என்று, எந்தவித ஆதாரமும் இன்றி, இஸ்ரேலிய கூற்றுக்களை கிர்பி மீண்டும் வலியுறுத்தினார். இதையடுத்து, கமால் அட்வான் மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்த குறிப்பிடத்தக்க கேள்விகளுக்கு பதிலளிக்க கிர்பி மறுத்துவிட்டார்.