இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, 'சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிராகப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த விரிவுரை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் இரத்து செய்யப்பட்டதை கடுமையாக எதிர்க்கிறது.
நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவிருந்த இந்த விரிவுரைக்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் மாணவர் அமைப்பான அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் (அ.வி.மா.ச.) அனுசரணை வழங்கியது.
அ.வி.மா.ச., துறைத் தலைவர் பேராசிரியர் உபுல் அபேரத்னவிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்று, விரிவுரைக்காக அரசியல் விஞ்ஞானத் துறையின் அறை எண் 86ஐ ஒதுக்கியிருந்தது.
அ.வி.மா.ச. சிரேஷ்ட பொருளாளரும் அரசியல் விஞ்ஞான துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சுமுது வாலாகுலு, விரிவுரை இரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஒருங்கிணைப்பாளருக்கு பின்னவருமாறு அறிவித்திருந்தார்: “கூட்டமானது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் வேறு எதையும் சவால் செய்யாதவாறு அதன் தலைப்பை திருத்தி அதன்படி விளம்பரப்படுத்துமாறு அறிவுறுத்தும் செய்தியொன்று பதில் துணை வேந்தரிடமிருந்து, கலைப்பீட பீடாதிபதி, அரசியல் விஞ்ஞான துறையின் தலைவர் மூலமாக எனக்கு கிடைத்துள்ளதால், அதை கவனத்தில் கொண்டு மேற்குறித்த கூட்டம் உடனடயாக இடை நிறுத்தப்படுகிறது.”
துணைவேந்தரின் நடவடிக்கையானது அ.வி.மா.ச., சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் இலங்கைப் பிரிவான ஐ.வை.எஸ்.எஸ்.இ., அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
'செய்தியின் தீவிரம் காரணமாக' நிகழ்வை ரத்து செய்யுமாறு அ.வி.மா.ச. தலைவருக்கு அறிவுறுத்தியதாக வாலாகுலு கூறியுள்ளார். '... உண்மையான நெருக்கடி குறித்து பல்கலைக்கழக சமூகத்தினரிடையே அறிவைப் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்ற சங்கத்தின் நோக்கங்களுடன், இவ்வாறு தலைப்பைத் திருத்துவது பொருந்தவில்லை,' என அவர் மேலும் கூறினார்,
'எனக்கு வந்த செய்தியின் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் உள்நோக்கம் பற்றிய எனது புரிதலின் அடிப்படையில் கூட்டத்தை ரத்துசெய்யுங்கள்' என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடப்பட்ட கூட்டத்தை நடத்துவதில்லை என ஐ.வை.எஸ்.எஸ்.இ. முடிவு செய்தது. எவ்வாறாயினும், இந்த முக்கியமான கூட்டத்தை நடத்த மாணவர்கள், பல்கலைக்கழக அறிவுஜீவிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவைக் கோரி இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தால் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலை கண்டிக்குமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம், எங்களின் விரிவுரையை இரத்து செய்வதில் அதன் உயர் மட்டத்தில் இருந்து தலையீடு செய்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எமக்குக் கிடைத்த தகவலின்படி, கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவரது அலுவலகம் ஊடாக, இந்த விரிவுரையின் நோக்கம் மற்றும் அது எவ்வாறு நடத்தப்பட உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் முழுமையாக செயல்படுத்த உறுதிபூண்டுள்ள “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவது எப்படி” என்பது பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் நாம் நடத்திய கலந்துரையாடலின் தாக்கம் பற்றி ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடந்திருக்கும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நவம்பர் 21 அன்று பாராளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த போது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக திட்டவட்டமாக அறிவித்தார்.
“கூட்டம் அரசாங்கக் கொள்கைகளுக்கு சவால் விடுவதாகத் தோன்றாதவாறு… உரையின் தலைப்பை மாற்றியமைக்க வேண்டும்...” என்ற உத்தரவு குறிப்பிடத்தக்கது. அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளும் அரசாங்கக் கொள்கைகளும் ஒரே மாதிரியானவை ஆதலால், அவற்றை சவால் செய்ய அனுமதிக்கக் கூடாது, என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
செய்தி என்னவெனில்: “அரசாங்கத்திற்கு சவால் விடாத கூட்டங்களையோ அல்லது எந்த நிகழ்வையோ நடத்தலாம்!” ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு முழுமையாக அடிபணிவதையே அது விரும்புவது.
ஜனாதிபதியும் ஜே.வி.பி./தே.ம.ச.யும், ஒரு சில ஊழல் நிறைந்த செல்வந்த குடும்பங்களின் தலைமையிலான பாரம்பரிய கட்சிகள் மீதான வெகுஜன வெறுப்பை சுரண்டிக்கொண்டும், 'சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வோம்' என்பது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தும், சமீபத்திய தேர்தலில் ஆட்சிக்கு வந்தன. இந்த வலதுசாரி அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை கைவிட்டுவிட்டது. இந்த வலதுசாரி அரசாங்கம், அந்த வாக்குறுதிகளை கைவிட்டு, சிக்கன திட்டத்தை ஒன்றுவிடாமல் அமுல்படுத்துவதாக திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க-இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) இணைந்து பணியாற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மட்டுமே, 2023 மார்ச்சில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை எதிர்த்ததுடன் அதற்கு எதிராகப் போராடுவதற்கான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளது.
இந்த பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கமொன்றை, சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்கு நாங்கள் போராடினோம், போராடுகிறோம். இந்தப் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் இந்த வாரம் கூட்டத்திற்கான பிரச்சாரத்தை தொடங்கியதில் இருந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா தொழிலாளர்களிடமிருந்து உற்சாகமான ஆதரவைப் பெற்றனர். அவர்களில் சிலர் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கான வேலைத்திட்டம் பற்றி புரிந்து கொள்ள நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் கொடூரமான சுமைக்கு எதிராக, உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியொன்று 2022 ஏப்ரல்-ஜூலையில் வெடித்தது. பொங்கி எழும் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகினார்.
ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான இயக்கத்தையும் தடுக்க ஜே.வி.பி./தே.ம.ச. உட்பட முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒத்துழைத்தன. இதன் விளைவாக, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டு, அவர 2023 மார்ச்சில் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு திட்டத்தில் நுழைந்து, ஏற்கனவே சீரழிந்த வாழ்க்கையின் மேல், அதன் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளைத் தினிக்கத் தொடங்கினார். திசாநாயக்க அரசாங்கம் அதே வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்துகிறது.
17 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் நான்கு இலட்சம் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மீதான தாக்குதல், விடுதிகள் பற்றாக்குறை, கல்வி ஊழியர்களின் பற்றாக்குறை, போதிய தங்குமிட வசதிகள், சொற்ப சலுகைகள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் அரசியல் தலையீடு சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் தொழிலாள வர்க்கத்துடன் இணைவதற்கான பாதையை திறந்துவிடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. அதனால்தான், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உள்ள ஒரே சாத்தியமான வேலைத்திட்டம், அதாவது சோசலிச வேலைத்திட்டம் பற்றி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதற்கான ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரையைத் தடுத்துநிறுத்துவதற்கு அது தலையிட்டது.
ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் விரிவுரைக்கு பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகள் தடை விதித்துள்ளதை கண்டனம் செய்யவதற்காக மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பிற தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைரையும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு உங்கள் கண்டனக் கடிதங்களை அனுப்புவதோடு அதன் பிரதிகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ. அமைப்புக்கும் அனுப்பிவையுங்கள்.
கண்டனக் கடிதங்கள் அனுப்பவேண்டிய இடங்கள்:
பதில் துணை வேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம்
மின்னஞ்சல்: vc@pdn.ac.lk
ஐ.வை.எஸ்.எஸ்.இ. மின்னஞ்சல்: iysseslb@gmail.com
மேலும் படிக்க
- ஜே.வி.பி./தே.ம.ச. ஆதரவாளர் பேராதனை பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களை அச்சுறுத்தினார்
- இலங்கை பராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது
- இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?
- இலங்கைப் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் சிக்கனத் தாக்குதலைத் தொடரப்போவதாகக் கூறுகிறார்கள்
- பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்திற்கு செயலூக்கத்துடன் ஆதரவளிப்போம்! ஊதியம், வேலை வாய்ப்பு மற்றும் இலவசக் கல்வியையும் வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம்!