ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

From Cavaignac to Villiers: The class struggle in France and the lessons of history

கவன்னியாக் இல் இருந்து வில்லியே வரை: பிரான்சில் வர்க்க போராட்டமும் வரலாற்றுப் படிப்பினைகளும்

Alex Lantier
20 December 2019

தொழிலாளர்களின் ஓய்வூதிய நலன்களை வெட்டுவதற்கான பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் முயற்சிகளுக்கு எதிராக, நாட்டின் பெரும்பகுதிகளில் இரயில் மற்றும் தரைவழி போக்குவரத்து உள்கட்டமைப்பை முடக்கி, இம்மாதம் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுத்துறை வேலைநிறுத்தங்களில் பங்கெடுத்துள்ளனர்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரெஞ்சு இராணுவத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் பியர் டு வில்லியே, திங்களன்று, நடந்து வரும் நாடுதழுவிய வேலைநிறுத்த இயக்கத்திற்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறையை மேற்கொள்ளக் கோரினார்.


ஜூலை 14, 2017 கோப்பு புகைப்படத்தில், பிரெஞ்சு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே உம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் பாரீசில் சாம்ப்ஸ் எலிசே வீதியில் நடந்த வருடாந்தர பாஸ்டி தின இராணுவ அணிவகுப்பின் போது இராணுவ வாகனத்தில் பவனி வருகின்றனர் [படம்: அசோசியேடெட் பிரஸ் படத்தொகுப்பு/ எத்தியான லோரன்ட்]

அவரது இந்த அறிக்கை பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ சமூகம், ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு இணக்கமற்றவிதத்திலான சமூக சமத்துவமின்மையின் அளவினால் பிளவுபட்டுள்ள நிலையில், ஆளும் உயரடுக்கின் கன்னைகள் ஓர் இரத்தந்தோய்ந்த இராணுவ சர்வாதிகாரத்திற்கு அழுத்தம்கொடுத்து வருகின்றன.

கடந்தாண்டில் ஏற்கனவே மக்ரோன், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் இப்போது வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டுள்ளார். கவச வாகனங்களையும், நீர்ப்பீய்ச்சிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் இரப்பர் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கிகள் ஏந்திய ஆயிரக் கணக்கான கலகம் ஒடுக்கும் பொலிஸை போராட்டக்காரர்கள் எதிர்கொண்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரில் 1940-1944 இன் நாஜிகளின் ஆக்கிரமிப்பிற்க்குப் பின்னர் பிரான்சின் மிகப்பெரிய அரசு ஒடுக்குமுறை அலையில், 10,000 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், 4,000 க்கும் அதிகமானவர்கள் காயப்பட்டனர், இரண்டு டஜன் கணக்கானவர்கள் இரப்பர் தோட்டாக்களால் கண்களை இழந்தனர், பொலிஸ் கையெறி குண்டுகளுக்கு ஐந்து பேர் கரங்களை இழந்துள்ளனர், வீதியருகே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மார்ச்சில், பாரீஸ் மாவட்ட இராணுவ தளபதி ஜெனரல் புரூனோ லு ரே குறிப்பிடுகையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சிப்பாய்களுக்கு அவர் அதிகாரமளித்திருந்ததாக தெரிவித்தார். இதுபோன்ற உத்தரவு 1948 க்குப் பின்னர் பிரான்சில் முதல்முறையாக பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறிருக்கையிலும், டு வில்லியே சமூக போராட்டம் மீதான ஒடுக்குமுறை இன்னமும் அதிகளவில் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். செவ்வாய்கிழமை மில்லியன் கணக்கானவர்களின் பலமான போராட்ட ஆர்ப்பாட்டம் பற்றி விவாதிக்க மக்ரோனும் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பும் இராணுவ தளபதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இரகசிய கூட்டங்களுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருந்தபோது, டு வில்லியே RTL க்குப் பின்வருமாறு தெரிவித்தார்: “நாம் உறுதித்தன்மைக்கும் மனிதாபிமானத்திற்கும் இடையே முறையான சமநிலையை மீளஸ்தாபிக்க வேண்டும். … நம் நாட்டில் போதுமானளவுக்கு உறுதித்தன்மை இல்லை,” என்றார்.

2022 இல் நவபாசிசவாத ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாமென இப்போது பரிசீலிக்கப்பட்டு வரும் டு வில்லியே, தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் இடையே எழுந்து வரும் மோதல் குறித்து அவரின் அச்சத்தை வலியுறுத்தினார். “வழிநடத்துபவர்களுக்கும் கீழ்படிந்து நடப்பவர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி எழுந்துள்ளது. இந்த இடைவெளி ஆழமானது. ஏற்கனவே 'மஞ்சள் சீருடையாளர்கள்' இதன் முதல் அறிகுறியாக இருந்தனர்,” என்று கூறிய டு வில்லியே, “நாம் ஒழுங்கை மீளமைக்க வேண்டும்; விடயங்கள் இவ்விதத்தில் தொடரக் கூடாது,” என்றார்.

பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரால் எதிர்க்கப்படும் இந்த ஆழ்ந்த சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்களை நசுக்க, துல்லியமாக அவர்கள் இன்னும் எத்தனை பேரைக் கொல்ல இருக்கிறார்கள் மற்றும் முடமாக்கவும் சிறையில் அடைக்கவும் இருக்கிறார்கள் என்பதை டு வில்லியேயும் மக்ரோனும் கூறவில்லை. ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வன்முறை போராட்டத்தை அது தொடுத்து வருகிறது என்பதில் ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாக நனவுபூர்வமாக உள்ளது. டு வில்லியே எதற்கு வக்காலத்துவாங்குகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் டு வில்லியே இன் முன்னோடிகள் தொழிலாளர்களுக்கு எதிராக அதிக "உறுதித்தன்மை" உடன் நடந்து கொண்ட போது என்ன நடந்தது என்பதை நினைவுக்கூர வேண்டும்.

நெப்போலியனின் போர்களில் பிரான்சின் தோல்வியிலிருந்து உதித்திருந்த முடியாட்சிகளுக்கு எதிராக, 1848 இல், ஐரோப்பா எங்கிலுமான புரட்சியுடன் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஜூனில், முதலாளித்துவ குடியரசு, வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தேசிய தொழில்பட்டறைகளைத் திடீரென மூடுவதற்கு முயன்றபோது, பாரீசில் தொழிலாளர்கள் வறுமை மற்றும் பட்டினிக்கு வழிவகுக்கும் அந்த கொள்கையைத் தடுக்க வீதிகளில் இறங்கினர். இதற்கு விடையிறுப்பாக, ஜெனரல் எஜேன் கவன்னியாக் ஜூன் மாத தினங்களின் பாரிய படுகொலைக்காக ஆயுதப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். அதில் 3,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 25,000 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 11,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது அல்ஜீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

புரூஸ்சியாவுக்கு எதிரான பிரான்சின் போருக்கு மத்தியில், தற்காப்புக்காக பாரீஸ் நகரால் வாங்கப்பட்ட பீரங்கிகளை, மார்ச் 1871 இல், பிரெஞ்சு மூன்றாம் குடியரசு திருடியதன் மூலமாக அந்நகரை நிராயுதபாணிக்க முயன்றபோது, மீண்டும் புரட்சி வெடித்தது. தொழிலாள வர்க்க கம்யூன் பாரீசில் அதிகாரத்தைப் பிடித்தது. ஆனால், கால அவகாசம் கிடைத்ததும், மற்றும் புரூஸ்சிய இராணுவ தளபதியின் ஒத்துழைப்புடன், ஜெனரல் பாட்ரிஸ் டு மக்-மாஹோன் இன் கீழ் பிரெஞ்சு இராணுவம் மே மாதம் பாரீஸ் மீது படையெடுத்து கிளர்ச்சி செய்த தொழிலாளர்களைக் கொன்று குவித்தது.

தாராளவாத வரலாற்றாளர் அடோல்ஃப் தியேர் இன் ஆய்வுகளின்படி, பிரெஞ்சு மூன்றாம் குடியரசு 20,000 தொழிலாளர்களைக் கொன்றதாகவும், 60,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மே 24 இல், பாரீசில் இழிவார்ந்த இரத்தந்தோய்ந்த பாரிய படுகொலை வாரம் கட்டவிழ்ந்த போது, தியேர், “நான் இரத்தக் காட்டாற்றை ஓடவிட்டிருக்கிறேன்,” என்று தேசிய நாடாளுமன்றத்தில் பெருமைபீற்றினார்.

அந்த சகாப்திய தலைச்சிறந்த புரட்சியாளர்களால் மீளாய்வுசெய்யப்பட்ட இதுபோன்ற கசப்பான சர்வதேச வர்க்க போராட்ட அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட அரசும் புரட்சியும் என்ற மார்க்சிச தத்துவம் தான், அக்டோபர் 1917 புரட்சியின் போது ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிகாட்டி இருந்தது.

1884 இல் கார்ல் மார்க்ஸ் உடன் வாழ்ந்த தலைச்சிறந்த சக-சிந்தனையாளர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதினார், அரசு "மக்கள் தம்மை ஓர் ஆயுதப்படையாக ஒழுங்கமைத்துக் கொள்வதை அரசானது ஒரு பொது அதிகாரமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது". “இந்த சிறப்பு பொது அதிகாரம் தேவைப்படுவது ஏனென்றால், வர்க்கங்களாக பிளவுபட்ட பின்னர் மக்களின் ஆயுதமேந்திய சுய-நடவடிக்கை அமைப்பை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாமல் போய்விடுவதால் இந்த சிறப்பு பொது அதிகாரம் தேவைப்படுகிறது... இந்த பொது அதிகாரம் ஒவ்வொரு அரசிலும் நிலவுகிறது; இது வெறுமனே ஆயுதப்படைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை மாறாக சடரீதியில் உதவிகளையும், சிறைச்சாலைகள், மற்றும் அனைத்து வகையான அச்சுறுத்தும் அமைப்புகளையும் கொண்டுள்ளது... எவ்வாறாயினும் அரசுக்குள் வர்க்க முரண்பாடுகள் இன்னும் அதிக கூர்மையாகும் விகிதத்திற்கு ஏற்ப அதுவும் பலமாக அதிகரிக்கிறது.”

இதிலிருந்து தான், ஆளும் வர்க்கத்தின் எதிர்புரட்சிகர வன்முறையை நசுக்கி தொழிலாளர்களே அரசு அதிகாரத்தை கைப்பற்றவும், சோசலிச கொள்கைகள் மூலமாக சமூக சமத்துவத்தை உருவாக்கவும், அரசு உதிர்த்தெழுவதற்கு காரணமான சமூகம் வர்க்கங்களாக  பிளவுபட்டிருப்பதை முடிவிற்கு கொண்டுவரவும் வேண்டிய அவசியம் பெருக்கெடுக்கின்றது. பாரீஸ் கம்யூனுக்கு பின்னர் கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் ஏங்கெல்ஸின் பகுப்பாய்வு இன்று பிரான்சிலும் உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கமான கேள்விகளை இன்னமும் தெளிவாக எடுத்துக் காட்டி வருகிறது.

கடந்த இரண்டாண்டுகள், அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் முதல் அல்ஜீரியா, லெபனான், ஈராக், சிலி, பொலிவியா மற்றும் அதற்கு அப்பாலும் சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான வெகுஜன போராட்டங்கள் வரையில், போராட்டங்களின் ஒரு வெடிப்பைக் கண்டுள்ளன. வர்க்க போராட்டத்தின் இந்த உலகளாவிய மீளெழுச்சியானது, தசாப்தங்களாக முதலாளித்துவ பூகோளமயமாக்கலால் முதிர்ச்சியடைந்த சமூக முரண்பாடுகளின் விளைவாகும். 1991 ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய, அதுவும் குறிப்பாக 2008 நிதியபொறிவுக்குப் பிந்தைய சகாப்தம், தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட செல்வவளம் தயவுதாட்சண்யமின்றி நிதியியல் பிரபுத்துவத்திற்கு கைமாற்றப்பட்டதையும், ஆப்கானிஸ்தானில் இருந்து சிரியா, லிபியா மற்றும் மாலி வரையில் ஏகாதிபத்திய போர்களையும் கண்டுள்ளது.

இந்த வர்க்க எதிர்விரோதங்களினது தீவிரத்தன்மையின் அளவு, உலகெங்கிலும் இராணுவ மற்றும் பொலிஸ் படைகளின் அசாதாரண கட்டமைப்பால் எடுத்துக்காட்டப்படுகிறது. ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை வங்கிகளுக்குக் கைமாற்றும் மக்ரோனின் வெட்டுக்கள், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரங்கள் மெல்லிய திரைக்குப் பின்னால் எந்தளவுக்கு ஜனநாயக அரசுகள் என்று பெயரளவுக்கு உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. நீண்டகால முதலாளித்துவ-ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளிலேயே கூட, அரசு என்பது ஆயுதமேந்தியவர்களின் அமைப்பை கொண்டுள்ளது என்ற மார்க்சிச வலியுறுத்தலின் யதார்த்தத்தை காண வேண்டுமானால், ஒருவர் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு நாளில் பாரீஸ் வீதிகளில் நடந்து சென்றாலே போதுமானது.

சாம்ப்ஸலிசே 01 டிசம்பர் 2018

இது, தற்போதைய அரசு மற்றும் சமூக ஒழுங்குமுறையைப் பாதுகாக்கும் ஜோன் லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி போன்ற நடுத்தர வர்க்க, போலி-இடது சக்திகளின் திவால்நிலைமையை அடிக்கோடிடுகிறது. அவை மக்ரோனுடன் ஒரு பிற்போக்குத்தனமான உடன்படிக்கையை பேரம்பேசுவதற்கான தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முயற்சிகளை மட்டும் ஊக்குவிக்கவில்லை, மாறாக அவை அரசு எந்திரத்திற்கு உள்ளே நடக்கும் இராணுவ ஒடுக்குமுறை திட்டங்களையும் மூடிமறைக்கின்றன. டு வில்லியே குறித்து எச்சரிப்பதற்கு பதிலாக, மெலோன்சோன், வேலைநிறுத்தத்திற்கு நவபாசிச மரீன் லு பென்னின் வெற்று ஆதரவு அறிக்கையை ஒரு "மனிதாபிமான" திசையில் "முன்னேற்றத்திற்கு" ஒப்பானது என்ற பிரமைகளை ஊக்குவிப்பதில் அவர் நேரத்தைச் செலவிட்டு கொண்டிருக்கிறார்.

தொழிலாள வர்க்கத்தை எச்சரித்து அரசு ஒடுக்குமுறை அச்சுறுத்தலுக்கு எதிராக அரசியல்ரீதியில் அதை அணித்திரட்டுவதே இப்போதையே தீர்க்கமான பணியாகும். தொழிற்சங்கங்கள் மீதும் LFI போன்ற அவற்றின் அரசியல் கூட்டாளிகள் மீதும் எந்த அரசியல் நம்பிக்கையும் வைப்பதிற்கில்லை. நிதியியல் பிரபுத்துவம், மக்ரோன் அரசாங்கம் மற்றும் பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதை ஒருங்கிணைக்க, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பதே இப்போதைய முன்னோக்கிய வழியாகும்.