தடுப்பூசி விநியோகம் ஐரோப்பா முழுவதும் தாமதத்தில் சிக்கியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றானது ஐரோப்பிய கண்டம் முழுவதும் கட்டுப்பாட்டை மீறி பரவிக்கொண்டிருக்கிறது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் ஏற்கனவே ஒரு தோல்வியாக பரவலாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் தடுப்பூசிகளின் விநியோகம் உலகின் வேறு எந்த பிராந்தியத்தையும் விட மெதுவாக உள்ளது. தடுப்பூசியை சர்வதேச அளவில் விநியோகிப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கங்களுக்கு இல்லை, மேலும் பல ஆண்டுகளாக சுகாதார அமைப்புகளை சிதைத்ததால் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் பலவீனமடைந்துள்ளன. ஒவ்வொரு முடிவெடுக்கும் செயல்முறையும் மருந்து நிறுவனங்களின் இலாப நலன்களைப் பொறுத்தது என்பதே தோல்விக்கான காரணமாக உள்ளது.

வடக்கு ஸ்பெயினில் பம்புலோனாவிலிருந்து 38 கிலோமீட்டர் (23 மைல்கள்) தொலைவிலுள்ள எஸ்டலாவிலுள்ள சான் ஜெரோனிமோ நர்சிங் ஹோமில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்க ஒரு பைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அரச சுகாதார பணியாளர் ஆயத்தப்படுத்துகிறார், வியாழன், ஜனவரி 7. 2021. (AP Photo/Alvaro Barrientos)

பிரான்சில் தடுப்பூசி மெதுவாக விநியோகிக்கப்படுவது மக்ரோன் அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் அவதூறான நிலையை உருவாக்கியுள்ளது.

ஃபைசர் / பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்த அதே வார இறுதியில் டிசம்பர் 27 அன்று ஒரு வயதானவர்களின் பராமரிப்பு நிலையத்தில் முதல் தடுப்பூசி மிகுந்த ஆரவாரம் மற்றும் ஊடக திசைதிருப்பல்களுடன் நடந்தது.

அப்போதிருந்து, பிரான்சில் சுமார் 5,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் ஜனவரி 5 திகதியன்று வெளியிட்ட சமீபத்திய தகவல்களின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சராசரியாக 500 பேர்களாகும். இந்த வேகத்தில் தொடர்ந்தால், பிரெஞ்சு மக்களில் 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகும்.

தடுப்பூசியின் விநியோகம் வேறு நாடுகளிலும் கணிசமாக முன்னேறவில்லை. ஜேர்மனியில், ஜனவரி 5 ஆம் தேதிக்குள் வெறும் 367,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த விகிதத்தில் ஜேர்மனிய மக்களுக்கு தடுப்பூசி போட 2027 ஆண்டு வரை எடுக்கும். இத்தாலி 260,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது; ஸ்பெயின், 139,000; மற்றும் டென்மார்க், 63,000; இது ஜனவரி 5 ஆம் திகதி வரையாகும். நெதர்லாந்து இன்னும் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை, ஜனவரி 18 வரை தடுப்பூசிகளைத் தொடங்கப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

டிசம்பர் தொடக்கத்தில் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளித்த பிரிட்டன், டிசம்பர் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசியை வழங்கியது, வியாழக்கிழமைக்குள் 1.3 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த விகிதத்தில் மக்களுக்கு தடுப்பூசி போட நான்கு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

டிசம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, 447 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் முழுவதையும் விட இஸ்ரேல் 8.84 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

மக்கள் கோபத்தை எதிர்கொண்டு, திறமையற்ற மற்றும் குழப்பமான விநியோகத்திற்கான பொறுப்பை மாற்றுவதற்கு அரசாங்கங்கள் பரஸ்பர குற்றச்சாட்டுடன் பதிலளித்துள்ளன. கடந்த வார இறுதியில், ஜேர்மன் கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் தலைவர் மார்க்குஸ் சொய்டெர் (Markus Söder) ஐரோப்பிய ஆணையம் போதுமான அளவு ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியை ஆரம்பத்தில் வாங்கவில்லை என்று விமர்சித்தார். இதைத் தொடர்ந்து பயோஎன்டெக் தலைமை நிர்வாக அதிகாரியும் புதிதாக உருவான பில்லியனருமான Uğur Şahin, Der Spiegel பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வாங்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளால் தான் ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஆணையம் ஜூன் மாதத்திலிருந்து இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வாங்கியுள்ளது - முழு மக்களுக்கும் இரண்டு முறைக்கு மேல் தடுப்பூசி போடுவதற்கு போதுமானது. எவ்வாறாயினும், எந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில், ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட ஆறு வெவ்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடையே கொள்முதலை பரவலாக்கியது.

இந்த வாரம் புதன்கிழமை வரை, அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசியைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தபோது, ஃபைசர் / பயோஎன்டெக் ஐரோப்பாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஆகும்.

டிசம்பர் இறுதிக்குள் வாக்குறுதியளிக்கப்பட்ட 12.5 மில்லியன் தடுப்பூசி அளவை வழங்க முடியாது என்று ஃபைசர் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது ஐரோப்பாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளது, ஆனால் மருந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தொடர்பாக ஐந்து முதல் ஆறு தனியார் உற்பத்தியாளர்களுடன் தனியார் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக அறிவித்தது.

உலகளவில் பில்லியன் கணக்கான மக்கள் ஒரு தடுப்பூசியை விரைவாக பெறுவதை நம்பியிருந்தாலும், அப்போதுதான் வைரஸை ஒழிக்க முடியும் என்றாலும், மனிதகுலத்தின் மிக முக்கியமான தேவைகள் மருந்து நிறுவனங்களின் தனியார் இலாப நலன்களுக்கு அடிபணியப்படுகின்றன. மேலும் ஒரு சில முக்கிய பங்குதாரர்களும் நெருக்கடியிலிருந்து பில்லியன்களை சம்பாதித்துள்ளனர்.

ஏற்கனவே நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பயன்பாட்டில் ஒரு பெரிய முட்டுக்கட்டை உள்ளது என்று வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஐரோப்பாவில் எந்த நாடும் தாங்கள் ஏற்கனவே பெற்ற மருந்துகளில் பெரும் பகுதியை விநியோகிக்கவில்லை. இந்த நிலையில், கிடைக்கக்கூடிய அளவுகளில் பாதிக்கும் குறைவான அளவுதான் தற்போது ஜேர்மனிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில், மக்ரோன் அரசாங்கம் அதன் தடுப்பூசிகள் வழங்கும் மெதுவான வேகத்தில் ஒரு அவதூறை எதிர்கொண்டுள்ளது. இது ஆரம்பத்தில் வயதானவர்களின் பராமரிப்பு மையங்களில் தடுப்பூசிகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. இதைத் தவிர, நாடு முழுவதும் தடுப்பூசி மையங்களை உருவாக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதிகரித்துவரும் அரசியல் அவதூற்றை எதிர்கொண்டிருக்கும் போது, மக்ரோன் தனது அரசாங்கத்திலிருந்து மெதுவாக தடுப்பூசி போடும் வேகத்தை விமர்சித்து பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை கசியவிட்டார். சுகாதாரத் துறை மந்திரி ஒலிவியே வெரான் ஜனவரி 2ம் திகதி ட்டுவீட் செய்தார். அடுத்த வாரம் நாடு முழுவதும் 100 தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்படும் என்று உறுதி கூறினார்.

ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனைகளில் பரிந்துரைக்கப்பட்ட செயல்திறனைப் பெற நோயாளிகளுக்கு பல வாரங்களுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி விநியோக செயல்முறையை எளிதாக்குவதற்கும், தங்கள் சொந்த தளவாட தோல்விகளை மறைப்பதற்கும் இடையில் நேரத்தை நீட்டிக்க அரசாங்கங்கள் பெருகிய முறையில் நகர்கின்றன. அத்தகைய தாமதம் தடுப்பூசியின் செயல்திறனில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.

ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12 வாரங்களாக அதிகரிக்கும் என்று இங்கிலாந்து ஏற்கனவே அறிவித்துள்ளது, இது ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதே போன்ற நடவடிக்கைகள் ஜேர்மனியிலும் நெதர்லாந்திலும் விவாதிக்கப்படுகின்றன.

ஃபைசர் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "முதல் டோஸ் போடப்பட்ட, 21 நாட்களுக்குப் பின்னர் பாதுகாப்பு தொடர்கிறது என்பதை நிரூபிக்க எவ்வித தரவும் இல்லை." உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர். ஜோகிம் ஹோம்பாக் "இதுபோன்ற பரிந்துரையை ஆதரிப்பதற்கு, டோஸ்களுக்கு இடையில் காலத்தை அதிகரிக்க, சோதனைகளில் இருந்து சிறிய அனுபவ தரவும் இல்லை" என்றார்.

தடுப்பூசிகளின் குழப்பமான மற்றும் திறமையற்ற விநியோகமானது, ஆரம்பத்தில் இருந்தே தொற்றுநோய்க்கு முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்பை ஊக்குவித்த அதே நலன்களையே அடிப்படையாகக் கொண்டது. வைரஸ் பரவாமல் தடுக்கக்கூடும் என்றாலும், பள்ளிகளையும், அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூடுவதற்கும், தொழிலாளர்கள் ஊதிய இழப்புக்கு ஈடுசெய்யவும் அவர்கள் மறுத்துவிட்டனர். ஏனெனில் அத்தகைய நடவடிக்கைகள் பெருநிறுவன இலாபங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் முன்னுரிமை மனித உயிரைப் பாதுகாப்பது அல்ல, மாறாக பெருநிறுவன இலாபங்களாகும்.

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு தீவிர தடுப்பூசி கொள்கை முக்கியமானது. வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க, துல்லியமான விஞ்ஞான அறிவின் அடிப்படையில், மக்கள் தடுப்பூசிக்கு பாதுகாப்பான அணுகலைக் கொண்டிருக்க வேண்டும்.

Loading