மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,
வாஷிங்டனில் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 6 பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முந்தைய வாரங்களில், நவ-நாஜி வட்டாரங்கள் ஐரோப்பாவில் அதிக அளவிலான ஆயுதங்களைக் கடத்தின. போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஆயுதக் களஞ்சியங்கள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் தீவிர வலதுசாரி சக்திகளால் மேற்கொள்ளப்படும் தீவிர துணை இராணுவ நடவடிக்கை குறித்த ஒரு கருத்தைத் தருகின்றது. சிலர் இன்னும் பதவியிலிருக்கும் மூத்த அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி 13, புதன்கிழமையன்று, காவல்துறையின் பாரிஸ் கொள்ளை அடக்கும் படைப் பிரிவு (Paris Banditry Repression Brigade) பிரான்சில் இதுவரை இல்லாத அளவுக்கு தேசியளவில் ஆயுதங்களை கைப்பற்றியது. பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் பாசிச அல்லது நவ-நாஜி குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக நம்பப்படுகிறது. “அசாதாரண” பிஸ்டல்கள், ரிவால்வர்கள், தாக்குதல் துப்பாக்கிகள், தானியங்கி கைத்துப்பாக்கிகள், வெடிமருந்து தொகுதிகள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு ஆயுதக் குவியல் தேடலில் கைப்பற்றப்பட்டது. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஒரு டன் அளவிலான ஆயுத தளவாடங்களை மேற்கோள் காட்டுகின்றன.
லு பிகாரோ பத்திரிகைக் கருத்துப்படி, போதைவஸ்த்து வர்த்தகத்தில் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை தீர்மானிக்க பெரும் தொலைவுடைய உந்துகை விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த செய்திப் பத்திரிகை மேலும் கூறியது: "இந்த வலைப்பின்னல் போதைவஸ்த்துக் கடத்தல்காரர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் அதி தீவிர வலதுசாரி அனுதாபிகளுக்கும் கூட என்று இது தொடர்பாக நெருக்கமான வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன."
பாரிசின் நீதித்துறை பொலிசார், நகரத்தை சுற்றியுள்ள Ile-de-France பிராந்தியத்திலும் பிரான்சின் கிழக்கிலும் தெற்கிலும் 10 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் இரண்டு இராணுவத்தினரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் தற்போது பாதுகாப்பு அமைச்சரகத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் தற்போது கிழக்கு பிரான்சில் ஒரு தளத்தில் நிலைகொண்டிருக்கிறார். தீவிர வலதுசாரிகளுக்கும், அரசாங்க கண்காணிப்பு பட்டியலில் மற்றொரு நபருக்கும் அவரது பாசிச தொடர்பு காரணமாக ஒரு ஆயுத ஆர்வலர் இருந்தார். மேலும், தனியார் துறையில் பணிக்குச் சென்ற ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர், உயர் அதிகாரி, மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மூவரும் கைது செய்யப்பட்டனர்.
எவ்வாறாயினும், நவ-நாஜி வட்டாரங்களை உள்ளடக்கிய இந்த வகையான "தரத்திற்குட்படா" ஆயுதப் பறிமுதல் ஐரோப்பா முழுவதும் விரிவடைந்து வருகிறது.
டிசம்பர் மாத நடுப் பகுதியில், 100,000 தோட்டாக்கள், 100 துப்பாக்கிகள், கைக்குண்டுகள், போதைவஸ்த்துக்கள் மற்றும் பணம் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் நாஜி ஆட்சியின் இராணுவப் (Wehrmacht) பொருட்கள் ஆஸ்திரியாவில் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதக் குவியல் ஜேர்மனியில் "ஒரு தீவிர வலதுசாரி வலையமைப்பை அமைப்பதை" நோக்கமாகக் கொண்டது என்று ஆஸ்திரிய உள்துறை மந்திரி கார்ல் நெஹம்மர் (Karl Nehammer) வியன்னாவில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
டிசம்பர் 29 ம் திகதி ஸ்பெயினில், நோன்கிராட்டா நடவடிக்கையின் (Operation Nongreta) ஒரு பகுதியாக செயற்படும் மலகாவின் சிவில் காவலர் (Malaga’s Civil Guard) போலீஸ் படையானது ஆயுதக் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு சர்வதேச வலைப்பின்னலை தகர்த்தனர். மொத்தம் 160 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன, அவற்றில் 121 சிறியரக ஆயுதங்கள், 22 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் 8 இயந்திர துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பல்வேறு காலிபர் துப்பாக்கிக்கான சுமார் 10,000 தோட்டாக்கள், எட்டு சைலன்சர்கள், 273 ரவைக்கூடுகள் மற்றும் ஒன்றரை கிலோ இராணுவ வெடிபொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஜேர்மனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள், அவர்கள் நவ-நாஜி இயக்கங்களுடனான தொடர்புகளுக்கு பெயர் பெற்றவர்கள்; மற்றவர் பிரிட்டிஷ்காரர்.
பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சரகத்தின் ஒரு அதிகாரி ஒருவர் இந்த கடத்தல் நடவடிக்கையில் சம்மந்தப்பட்டிருந்தார் என்ற உண்மையானது நவ-நாஜி ஆயுத வலைப்பின்னல்களுக்கும் ஐரோப்பிய நாடுகளின் இராணுவங்கள் அல்லது துணை இராணுவப் படைகளுக்கும் இடையேயுள்ள நெருக்கமான தொடர்புகளைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜேர்மனியில், ஆகஸ்ட் 2020ல் வெளியிடப்பட்ட ஜேர்மன் இராணுவ (Bundeswehr) அறிக்கையொன்றின்படி, 2010ம் ஆண்டிலிருந்து குறைந்தது 60,000 தோட்டாக்களாவது காணாமல் போயுள்ளன. ஜேர்மன் சிறப்புப் படையான KSK க்கு சொந்தமான 48,000 தோட்டாக்கள் மற்றும் 62 கிலோ கிராம் வெடிபொருட்கள் எங்கே என்று தெரியவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிர வலதுசாரி வலையமைப்புகளுடன் அதன் தொடர்புகளுக்காக இந்த பிரிவு அறியப்படுகிறது, இது ஜேர்மனிக்குள் படுகொலை செய்யப்பட வேண்டிய அரசியல் பிரமுகர்களின் பட்டியலைத் தயாரித்துள்ள முன்னாள் KSK உறுப்பினர் ஆண்ட்ரே எஸ் (André S) என்ற ஒரு முன்னாள் KSK உறுப்பினரின் தலைமையில் ஒரு வலையமைப்பிற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக ஊடுருவியுள்ளது.
இது குறித்து கேட்கப்பட்டதற்கு, பாராளுமன்றத்தில் (Bundstag) பாதுகாப்புக் கொள்கைக்கான பசுமைக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான டோபியாஸ் லிண்ட்னர், "எனவே, ஏற்கனவே ஜேர்மன் இராணுவத்தில் (Bundsewehr) உள்ள விதிகள் தொடர்பாக ஒவ்வொருவரும் மதித்தால் வெடிபொருட்களின் இழப்புக்கள் இருக்கக் கூடாது. கவனக்குறைவு மற்றும் சில நேரங்களில் கிரிமினல் நடவடிக்கைகளின் கலவையை நாம் கையாள்கிறோம்" என்று கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டார்.
பிரான்சில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எந்த நோக்கங்களுக்காக இருக்க முடியும் என்பது பற்றி Le Monde பத்திரிகை நொண்டிச் சந்தேகம் கொண்டுள்ளது. "பொலிஸ் விசாரணையால் உண்மைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு, இந்த ஆயுதங்கள் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமா என்ற கேள்வி எழுகிறது, இன்னும் சில கால வரையறைகளில், வன்முறை நடவடிக்கைக்கான திட்டம் இன்னும் நிறுவப்பட வேண்டும்."
அமெரிக்க வரலாற்றில் முதல் பாசிச ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் நவ-நாஜி ஆயுதக் களஞ்சியங்களின் "அசாதாரணமான" கண்டுபிடிப்புகள் ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூறுவது நம்பத்தகுந்ததல்ல. ஐரோப்பா முழுவதும், அரசு எந்திரத்தின் உச்சியிலுள்ள தொடர்புகளைக் கொண்ட பாசிச வலைப்பின்னல்கள் ஆயுதக் களஞ்சியங்களை உருவாக்கி பலப்படுத்துகின்றன. இந்த ஆயுதங்கள் சிலவைகள்தான் போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்று கருதவேண்டும்; மற்றவைகள் அல்ல. இவைகள் எந்தவொரு படுகொலை முயற்சிகளுக்கும் அல்லது அரசியல் ஆத்திரமூட்டல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் மத்தியில், முதலாளித்துவ அரசு எந்திரமானது அதன் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மற்றும் சிக்கன நடவடிக்கை கொள்கை மீதான வெகுஜன எதிர்ப்பால் பெருகிய முறையில் தன்னை மேலும் முற்றுகையிடப்பட்டதாக உணர்கிறது. அரசின் கன்னைகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் போராட, பாசிச கும்பல்களை ஆயுதபாணியாக்கத் தொடங்கியுள்ளன. ட்ரம்பின் சதி முயற்சி போன்ற ஒன்று ஐரோப்பாவில் நடக்கக்கூடும் என்பதை தீவிர வலதுசாரிகளுக்கு கிடைக்கக்கூடிய “அசாதாரண” அளவு ஆயுதங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ட்ரம்பின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இராணுவம், காவல்துறை, குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவை ஈடுபட்டன, அவர்கள் நாடாளுமன்றத்தில் பைடென் பெற்ற வாக்குகளை எண்ணுவதையும், ஏற்றுக் கொள்வதையும் தடுக்க விரும்பினர். நவ-நாஜி கலகக்காரர்கள் ஆயுதமேந்தியவர்களாகக் காணப்பட்டனர், அவர்களில் சிலர் பாராளுமன்ற பிரதிநிதிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்க கையிறுகளை வைத்திருந்தனர். இந்தச் சதி முயற்சி ஐரோப்பிய பாசிச வட்டாரங்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. ஸ்பானிய பாசிசக் கட்சியான வோக்ஸ் (Vox) மற்றும் ஸ்பெயின் இராணுவ அதிகாரிகள் மத்தியில் அதன் ஆதரவாளர்கள் இந்த சதித்திட்டத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
பிரான்சில், 2017 இல் "மஞ்சள் சீருடை" இயக்கத்தின் தொடக்கத்தில் பாசிச சர்வாதிகாரி பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று மக்ரோன் பாராட்டிய பின்னர், முன்னாள் ஜெனரல் பியர் டு வில்லியே ஒரு இராணுவ ஆட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஸ்பெயினில், ஓய்வு பெற்ற மற்றும் பணியிலிருக்கும் அதிகாரிகள், சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் அரசாங்கத்திற்கு எதிராக தங்களை ஆதரிக்குமாறு மன்னருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் ஸ்பெயினில் இடது-சாரி வாக்காளர்களின் எண்ணிக்கையான "26 மில்லியன் மக்களை" கொலை செய்ய அவர்களின் கூற்றுப்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜேர்மனியில், நவ-நாஜி வலைப்பின்னல்கள் கொலைப் படைகளால் தூக்கிலிடப்பட வேண்டிய அரசியல்வாதிகளின் பட்டியலை வரைந்துள்ளன. 2019 இல், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி வால்டர் லூப்க (Walter Lübcke), புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு கொடுக்கும் அவரது நடவடிக்கைகள் காரணமாக அதிவலது வலையமைப்புகளால் அவருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்கள் விடப்பட்டிருந்தன. பின்னர் ஒரு நவ-நாஜி வெறியனால் கொல்லப்பட்டார். ஸ்டீபன் ஏர்ன்ஸ்ட் என்ற கொலையாளியும் கூட்டாளிகளும் விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு தீவிர வலதுசாரி வலையமைப்பு பல ஆளுநர்களைக் கடத்தி, அவர்களை தூக்கிலிட திட்டமிட்டது. இன்று பைடென் பதவியேற்பு விழாவில் 50 அமெரிக்க மாநிலங்களில் ஆயுதமேந்திய குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் FBI குறிப்புக்களில் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியைப் போலவே, ஐரோப்பாவில் நடக்கும் நிகழ்வுகள் முதலாளித்துவ ஜனநாயகம் அதன் காலில் அழுகிக் கொண்டிருக்கிறது என்ற ஒரு எச்சரிக்கையாகும். சிக்கன நடவடிக்கைகள் மற்றும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கும் முதலாளித்துவம், தேசியவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான ஒரே வழி சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தில் ஒரு பலமான சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.
மேலும் படிக்க
- ஜேர்மன் போலீஸ் படையில் நவ-நாஜி வலையமைப்பு
- பொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது
- யூத-விரோத நவம்பர் படுகொலையின் ஆண்டு நிறைவையொட்டி ஜேர்மனியில் நவ-நாஜிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
- அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை 2019: ஜேர்மன் உளவுத்துறை நாஜி பயங்கரவாத ஆபத்தை குறைத்துமதிப்பிட்டு சோசலிச அரசியலை தாக்குகின்றது