இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தெற்கில் சிங்கள இனவெறி முதலாளித்துவ அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய 26 ஆண்டுகால இனப் போரின் போது, குறிப்பாக அதன் கடைசிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தங்களது உறவினர்கள் மற்றும் போராளிகளை நினைவுகூரும் நிகழ்வு சம்பந்தமாக தனது முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த குறிப்புகளின் அடிப்படையில், இலங்கை பொலிசாரால் கைது செய்ப்பட்டுள்ள தமிழ் பத்திரிகையாளர் முருகபிள்ளை கோகிலன் தாசன் (கோகுலன்) சிறையில் அடைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று, கோகிலனின் வீட்டிற்குச் சென்ற வாளைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், அவர் வீட்டில் இல்லாத காரணத்தால், அதே நாள் மாலை அவரை பொலிசுக்கு கூட்டிச் சென்று கைது செய்தனர். அப்போதிருந்து அங்கு தடுத்து வைத்து விசாரணை நடத்திய பின்னர், டிசம்பர் 1 அன்று மாலை அவர் வாளைச்சேனை நீதவான் முன்நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட பி-அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்படும் வரை, தான் ஏன் கைது செய்யப்பட்டேன என்பது கோகிலனுக்கு சரியாகத் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பொலிசார் பி-அறிக்கையில், அவரை வீட்டிலேயே வைத்து கைது செய்ததாக பொய்யாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின்படி, அவர் “புலிகளை ஊக்குவிக்கும் குற்றங்களைச் செய்ததாக” பொலிசார் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஒடுக்குமுறை சட்டமாகப் பேர்போன பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜபக்ஷவினால் சுமத்தப்பட்ட 2011 இலக்கம் 1 கொண்ட பயங்கரவாத தடைச் சட்டமானது தமிழீழ விடுலைப் புலிகள் அமைப்பை தடை செய்யும் கட்டளைகளின் 3 வாக்கியத்தின் (அ), (இ), (ஓ) மற்றும் (க) மற்றும் 4 மற்றும் 5 விதிமுறைகளின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, மேல் நீதிமன்றமொன்றில் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், கோகிலனை 20 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைவைக்க முடியும்.
நவம்பர் 19 அன்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மூலம், போரில் இறந்த உறவினர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை சவால் செய்வதற்கான கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த பின்னர், கோகிலன் போரில் பாதிக்கப்பட்டவர்களின் எரியும் உணர்வுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார். கவிதை மொழியில் வெளியிடப்பட்ட அத்தகைய ஒரு குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: “பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களையிட்டு அரசாங்கம் ஏன் இன்னும் பயப்படுகிறது? ஏனெனில், அவர்கள் அடக்கம் செய்யப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.”
நாட்டில் எந்தவொரு சட்டத்தின் கீழும் எந்தவொரு குற்றமும் செய்யாத கோகிலன், தனக்கு எதிரான அனைத்து பொலிஸ் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
38 வயதான கோகுலன் என பிரபலமாக அறியப்பட்ட இவர், பெட்டிநியூஸ், டான் நியூஸ் மற்றும் ஐபிசி தமிழ் உள்ளிட்ட பல ஊடகங்களில் புகைப்படக் கலைஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் திருமணமாகாதவர். நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களையும் பல இளைய உடன்பிறப்புகளையும் கவனித்து வருகிறார். மட்டக்களப்பு, வாளைச்சேனை மற்றும் கின்னியடி ஆகிய பிரதேசங்களில் பாரம்பரிய குடியிருப்பாளர்களான அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் போரின் போது அரச இராணுவத்தால் அடிக்கடி துன்புறுத்தப்பட்ட பொதுமக்களில் அடங்குவர்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் போருக்குப் பின்னர் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, பொலிஸ் நடவடிக்கைகள், தேடல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றால் தங்கள் சுதந்திரத்தை மேலும் இழந்து கடுமையாக களைத்துப் போயுள்ளனர். தமிழ் மக்களின் நில அபகரிப்பு, மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை நிர்மாணித்தல் போன்ற ஆக்கிரமிப்பு தாக்குதல்களை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டின் நடுப்பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, “கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான ஜனாதிபதி செயலணியை” நிறுவினார். இதில் பௌத்த பிக்குகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் துணை பொலிஸ் மா அதிபர் மற்றும் இன்னும் பலர் அடங்குவர். இதன் கீழ், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கலாச்சார நிலங்களையும், பாரம்பரியத்தையும் கைப்பற்றுவதற்கான ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசாங்கம், சிங்கள-பௌத்த இனவெறி பிரச்சாரகர்களை உயர்மட்டத்தில் பேணி வருகிறது.
வாழ்நாள் முழுவதும் போரினால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள், இந்த தாக்குதல்களால் சம்பந்தமாக ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், போரின் போது தங்களுக்காக உயிரைத் தியாகம் செய்ததாக அவர்கள் கருதும் போராளிகள் மற்றும் உறவினர்களை நினைகூர்வதானது, அரசாங்கத்தின் இந்த ஒட்டுமொத்த தாக்குதலுக்கு எதிரான அவர்களது கொந்தளித்துக்கொண்டிருக்கும் எதிர்ப்பின் வெளிப்பாடாகும்.
நவம்பர் 27 அன்று, “மாவீரர் தினம்” சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அல்லது ஏற்பாடு செய்த ஏராளமானவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட கடுமையான ஒடுக்குமுறை சூழ்நிலையின் மத்தியிலேயே கோகிலன் கைது செய்யப்பட்டார். போர் நடந்த போது புலிகள் அமைப்பால் தங்களது மரணித்த போராளிகளை ஆண்டு தோறும் நினைவுகூருவதற்காக பயன்படுத்தப்படும் “மாவீரர் தினம்”, போரின் முடிவில் தங்களின் உயிரிழந்த அன்புக்குரியவர்கள் மற்றும் போராளிகளையும் நினைவுகூரும் ஒரு நாளாக கருதப்படுகிறது.
நவம்பர் 27 ஆம் திகதியை நெருங்கிய நாட்களில் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எண்ணிக்கை 19 ஆகும். மேலும் 55 பேருக்கும் எதிராக பொலிஸ் விசாரணை நடக்கின்றது.
2020 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும், மேற்கண்ட கைதுகளுக்கு இணையாக, ஊடகவியலாளர்கள் கைது, விசாரணைகள், அவர்களுக்கு எதிரான சரீர ரீதியான தாக்குதல்கள் நடத்துதல், மற்றும் மரண அச்சுறுத்தல்கள் விடுத்தல் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் ஆகியவை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை செய்யும் இன்ஃபோம் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிக்கை செய்துள்ளது.
போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்காக தமிழ் தொழிலாள ஒடுக்கப்பகட்ட மக்கள் ஆண்டுதோறும் மே 18 ஆம் திகதி ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளை குழப்புவதற்காக, அரசாங்கம் நீதிமன்றங்கள் மற்றும் கொவிட் தொற்று நோயையும் பயன்படுத்தியது. சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் கடைசி தாக்குதல்கள் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னத்தை படையினர் வேண்டுமென்றே உடைத்துவிட்டனர். நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்த இன்னும் 10 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மே 19 “வெற்றி நாள்” என்று இராணுவத்தை தூக்கிப் பிடித்து 2010 முதல் ஒவ்வொரு ஆண்டையும் கொழும்பு அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிரான இன அட்டூழியங்களின் இறுதி அடையாளமாக இனப்படுகொலை போரை கொண்டாடி வருகிறது.
வடக்கில் “பயங்கரவாதம்” மீண்டும் தலைதூக்குவதை தடுக்கும் போலிக்காரணத்தின் கீழ், தமிழ் மக்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்த இதே கொடூரமான இனவாதத் தாக்குதல்கள், 2019 இன் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை சுரண்டிக்கொள்வதன் மூலம் “முஸ்லிம் அடிப்படைவாதத்திடம் இருந்து” நாட்டை காப்பாற்றும் போர்வையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவை அரசியல் ரீதியாக ஒரே வடிவத்தைக் கொண்டவை.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தெற்கில் இந்த அடக்குமுறையை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் இதற்கு பலியாகியுள்ளனர். இலங்கையில் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் போரின்போதும் அதற்குப் பின்னரும் ஊடகவியலாளர்களை பட்டப் பகலில் படுகொலை செய்வது முதல், காணாமல் ஆக்குதல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற இரத்தக்களரி வரலாற்று பதிவுகளைக் கொண்டுள்ளது. வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்காக இராணுவ-பொலிஸ் தாக்குதல்களை முன்னெடுத்தல், பிரச்சாரகர்களை தேடி சென்று கைது செய்தல், கடத்தல்கள் மற்றும் தடுத்து வைத்தல் மற்றும் மாணவர் போராட்டத்தை நசுக்குதல் உட்பட பேர்போன சரித்திரமும் இதில் அடங்கும்.
மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல்களின் மூலம், உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடியே ஆகும். உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியின் அனைத்து சுமைகளையும் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் தோள்களில் சுமத்தி வருகின்றது. அதற்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை இராணுவம், பொலிஸ், குண்டர் கும்பல் மற்றும் நீதித்துறை உட்பட அடக்குமுறை இயந்திரங்களைக் கொண்டு நசுக்குவதானது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்களின் கொள்கையாக மாறியுள்ளது. “தேசிய பாதுகாப்பு” என்ற சாக்குப் போக்கின் கீழ் சிறுபான்மையினர் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதலின் நோக்கம், வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை இன ரீதியில் பிளவுபடுத்தி திசைதிருப்பி, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முதலாளித்துவ அரசுக்கு விடக்கப்படும் சவாலைத் தவிர்த்துக்கொறள்வதே ஆகும்.
இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், அதன் சலுகைகளுக்காக கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், இனவாத பிளவுபடுத்தல்களுக்கு எண்ணெய் வார்க்கும் வகையில் முன்னெடுக்கும் தமிழ் தேசியவாத பிரச்சாரம் மிகவும் விஷமத்தனமானதாகும். தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களின் வர்க்க வேர்களை மூடிமறைத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார், சமீபத்தில் முழு சிங்கள மக்களையும் தமிழ் மக்களின் எதிரியாக சித்தரித்தார்.
கோகிலன், 2018 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளியான டெலோ அமைப்பின் வேட்பாளராக வாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு தொடர்பை பேணியமை, பொலிஸ் மற்றும் ராணுவத்தின் இலக்காக இருப்பதற்கு அநேகமான வாய்ப்புக்கள் உள்ளன.
கோகிலனுடன் தொடர்பு கொண்டிருந்த முதலாளித்துவக் கட்சிகளின் தமிழ் தேசியவாத அரசியல், அதே போல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின், தமிழ் கல்வியாளர்கள் மத்தியில் மற்றும் தமிழ் முதலாளித்துவ ஊடகவியலாளர்களால் தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது. இது சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்கு குழி பறித்து முதலாளித்துவ அரசாங்கத்தின் தாக்குதல்களை பலப்படுத்துகிறது,.
தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தேசியவாத அரசியலுக்கும் அதே போல் புலிகளின் பிரிவினைவாத அரசியலுக்கும் இடமளிக்கவில்லை, போரின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக கொழும்பு ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத போரை எதிர்த்து வந்த, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பு துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையுமின்றியும் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மற்றும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) மட்டுமே.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவதுக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு, ஜனநாயக விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் கோகிலன் உட்பட, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் மற்றும் முஸ்லீம் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றது. தங்களது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை உரிமையை மீறி தமிழர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவெறி நடவடிக்கைகளை கண்டித்து கோகிலன் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சோ.ச.க. முன்வைக்கும் முன்நோக்கின் கீழ் போராடுவதற்கு ஒன்றிணையுங்கள்.