மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை போலிக்காரணமாகக் கொண்டு, ஒரு விரிவான நேட்டோ கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஜேர்மனி கூடுதல் போர் துருப்புக்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்புகிறது. இதனால் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு முழு அளவிலான ஏகாதிபத்திய போரின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கடந்த புதன்கிழமை, புருஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் ஒரு பிரத்தியேகக் கூட்டம், இராணுவக் கூட்டணியின் 'கிழக்கு பக்கத்தை நீண்டகாலமாக வலுப்படுத்துவது' என்று முடிவு செய்தது. அதே நேரத்தில், ஜேர்மனியின் ஆயுதப் படைகள் (Bundeswehr) ஸ்லோவாக்கியாவிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை நகர்த்த தொடங்கியது. அதன் சரியான தொகை மற்றும் இடம் வெளியிடப்படவில்லை. ஜேர்மன் தலைமையின் கீழ் அந்நாட்டில் ஒரு புதிய நேட்டோ போரிடும்குழு அமைக்கப்பட உள்ளது.
பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டின லம்ப்ரெக்ட் (SPD) செய்தியாளர்களிடம் 'வியத்தகு முறையில் மோசமடைந்த பாதுகாப்பு நிலைமை' பற்றிப் பேசினார். அதற்கு 'நம்பகரமான தடுப்பு' மற்றும் 'விரைவான எதிர்வினை காட்டும் திறன்' தேவை. ரஷ்யாவை பற்றி குறிப்பிட்ட அவர், 'நாங்கள் ஜேர்மனியர்கள், பிரிவு ஐந்தின் படி தெளிவாக நிற்கிறோம்' என்று மிரட்டினார். கூட்டணி எல்லைக்குள் எந்த ஊடுருவலும் ரஷ்ய அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் 'பேரழிவு விளைவுகளை' ஏற்படுத்தும் என்றார்.
செவ்வாயன்று, ஒரு பெரிய பெரும்பான்மையுடன், ஸ்லோவாக்கிய பாராளுமன்றம் நாட்டில் நேட்டோ பிரசன்னத்தின் பாரிய விரிவாக்கத்திற்கு பச்சைக்கொடி காட்டியது. மேற்கு உக்ரேனின் எல்லையை ஒட்டிய ஸ்லோவாக்கியாவில் 700 பேர் உட்பட 2,100 நேட்டோ படையினர்கள் உள்ளனர். ஜேர்மன் துருப்புக்களுக்கு கூடுதலாக, செக் குடியரசில் இருந்து மேலும் 600 படையினர், அமெரிக்காவிலிருந்து 400, நெதர்லாந்தில் இருந்து 200 மற்றும் போலந்து மற்றும் ஸ்லோவேனியாவிலிருந்து தலா 100 படையினர் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
அனைத்து நேட்டோ முன்னணி நாடுகளின் மூலோபாய கணக்கீடுகளில் அமெரிக்க Patriot அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது எதிரி விமானங்கள் மற்றும் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் எதிரிகளின் தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்க்க ஈடுபடுத்த முடியும். Patriot வழிகாட்டுதல் ஏவுகணை அமைப்புகள் ஒரு நகரும் 'பாதுகாப்பு குவிமாடத்தை' உருவாக்குகின்றன. அதில் அவர்களின் சொந்த படைகள் தடையின்றி செயல்பட முடியும். ஒரு இராணுவ தகவல் பத்திரம் '68 கிலோமீட்டர்கள் வரையிலான பாரிய தூரத்தை அடைவது' பற்றி குறிப்பிடுவதுடன் மற்றும் ஒரே நேரத்தில் ஐந்து இலக்குகள் வரை தாக்குதலில் ஈடுபட முடியும் என்று கூறுகிறது.
ஸ்லோவாக்கியாவிற்கான ஜேர்மனியின் துருப்புக்கள் ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் பாரிய இராணுவக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். நேட்டோவின் மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் (Enhanced Vigilance Activities-eVA) முன்முயற்சியின் குடையின் கீழ், 2016க்குப் பின்னர் மேம்படுத்தப்பட்ட முன்னோக்கி இருப்பு (Enhanced Forward Presence -eFP) முன்முயற்சியின் போது பால்கன் நாடுகள் மற்றும் போலந்தில் ஏற்கனவே நிறுவப்பட்டதைப் போன்ற சுழல்முறையில் பன்னாட்டு போர் பிரிவுகளை உருவாக்க அவை உதவுகின்றன.
இது 1997 ஆம் ஆண்டின் நேட்டோ-ரஷ்யா ஸ்தாபகச் சட்டத்திற்கு முரணாக, கிழக்கு ஐரோப்பாவில் செயல்பாட்டு போர்ப் படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கு சமமானதாக இருப்பதால், தற்போதுள்ள eFP போர்ப்படைகள் ரஷ்யாவால் ஆத்திரமூட்டலாகக் கருதப்படுகின்றன. லித்துவேனியாவில், ஜேர்மன் கட்டளையின் கீழ் உள்ள 2017 இல் நிறுவப்பட்ட போர்க்குழு 1,200 படையினரை நிலைநிறுத்துவதற்கு ஒத்திருக்கிறது மற்றும் ஏனையவற்றுடன், கவச காலாட்படை மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் உள்ளடக்கியது. பீரங்கி, உளவு மற்றும் NBC அணுவாயுத, இரசாயன, உயிரியல் தாக்குதல் பாதுகாப்புத் பிரிவுகளைச் சேர்ந்த மேலும் 350 இராணுவத்தினரால் பெப்ரவரியில் அது வலுப்படுத்தப்பட்டது.
இப்போது, ஜேர்மன் இராணுவத்தின் தலைமையின் கீழ், அத்தகைய ஒரு போர்க்குழு ஸ்லோவாக்கியாவிலும் நிறுவப்பட்டுள்ளது. வலதுசாரி 'எதிர்ப்புக் கட்சி' OĽaNO வை சேர்ந்த ஸ்லோவாக் பாதுகாப்பு மந்திரி ஜரோஸ்லாவ் நாட், நேட்டோ துருப்புக்களின் நிலைநிறுத்தம் 'ஸ்லோவாக்கியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் அதன் பாதுகாப்பில் மிகப்பெரிய படி' என்று பாராட்டினார். ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி லம்ப்ரெக்ட் அவர்கள் 'எங்கள் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கவும்' தயாராக இருப்பதாக அறிவித்தார்.
eVA இன் போது, பிரெஞ்சு தலைமையின் கீழ் ஒரு போர்க்குழு ஏற்கனவே ருமேனியாவில் நிறுத்தப்பட்டது. ஏனையவற்றுடன், ஜேர்மன் மற்றும் இத்தாலிய விமானப்படைகள் மற்றும் பிரிட்டிஷ் ராயல் விமானப்படை ஆகியவை ருமேனிய நேட்டோ பணியின் மேம்படுத்தப்பட்ட தெற்கின் ஆகாய கண்காணிப்பு தெற்கில் பங்கேற்கின்றன.
பெப்ரவரி இறுதியில் உக்ரேனில் ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, லம்ப்ரெக்ட் உடனடியாக ஜேர்மன் பங்களிப்பை இரட்டிப்பாக்க ஏற்பாடு செய்தார். Tactical Air Wing 74 இலிருந்து மொத்தம் ஆறு யூரோஃபைட்டர்கள் குறைந்தபட்சம் மாத இறுதி வரை தென்கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ வான்வெளியைக் பாதுகாக்கும்.
இராணுவத்தின்படி கூடுதலாக ஒரு ஜேர்மன் A400M எரிபொருள் வழங்கும் விமானம் திங்களன்று அல்-அஸ்ராக்கில் உள்ள ஜோர்டானிய விமானத் தளத்திலிருந்து 'நேட்டோவின் கிழக்குப் பகுதியில்' விமான எரிபொருள் நிரப்பும் பணிகளுக்கு 'தற்காலிகமாக' பயன்படுத்தப்பட்டது. இப்போது வரை, இந்த ஜேர்மன் இராணுவ விமானங்கள் பல ஆண்டுகளாக சர்வதேச வான்வெளியில் ஈராக் மற்றும் சிரிய இலக்குகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களில் ISIS எதிர்ப்பு கூட்டணியின் போர் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கி வந்தது.
அடுத்து செல்லக்கூடிய துருப்புக்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, நேட்டோ மந்திரிகளின் கூட்டம் ஏனையவற்றுடன், 'கூட்டணியின் கிழக்குப் பகுதியில் அதன் தடுப்பு மற்றும் பாதுகாப்பு திறன்களில் நீண்டகால, மூலோபாய மாற்றங்களைச் செய்வதற்கு' உதவியது. 'ஒத்த எண்ணம் கொண்ட அரசுகள்' உள்ளடங்கிய ஒரு 'சிறப்பு வடிவத்தில்' ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மற்றும் பின்லாந்து, ஜோர்ஜியா, ஸ்வீடன் மற்றும் உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சர்கள் கிழக்கு ஐரோப்பாவில் 'மேலதிக தகமைகளை உருவாக்குவது' பற்றி விவாதித்தனர்.
இதன் விளைவாக 'கூட்டணியின் திறன்களின் மூலோபாய நோக்குநிலையின் மறுசீரமைப்பு', 'நேட்டோவின் மூலோபாய கருத்து 2022 பற்றிய முடிவோடு', ஜூன் இல் மாட்ரிட்டில் நடைபெறும் நேட்டோ நாடுகளினதும் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் மையத் தலைப்பாக இருக்கும்.
பல மாதங்களாக ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு 'கிழக்கு பகுதியில் நேட்டோ படைகளை மேலும் இராணுவ வலுவூட்டல்' மூலோபாயரீதியாக நின்றுபிடிக்கும் 'திறனால்' எடுத்துக்காட்டப்பட வேண்டும் என்று புருஸ்ஸல்ஸில் லம்ப்ரெக்ட் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அழிப்புப் போரை நடத்திய ஜேர்மன் ஆளும் வர்க்கம், இப்போது மீண்டும் தான் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவது போல் கருதிக்கொண்டு அதற்கேற்ப ஆயுதம் ஏந்துகிறது.
ஸ்லோவாக்கியாவிற்கு துருப்புக்கள் அனுப்பப்படுவதை லம்ப்ரெக்ட் அறிவிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) அடங்கிய ஜேர்மன் அமைச்சரவை 100 பில்லியன் யூரோக்கள் பிரமாண்டமான இராணுவத்திற்கான சிறப்பு நிதியை ஒதுக்க உத்தியோகபூர்வமாக முடிவு செய்தது. இது நாஜி சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜேர்மனியின் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் ஆகும். முதல் வாங்குவதற்கு அறிவிக்கப்பட்டதில் 15 யூரோஃபைட்டர் போர் விமானங்கள் மற்றும் 35 அமெரிக்க மறைமுகமான குண்டுவீச்சு விமானங்களை வாங்குவதாகும். மேலும் புதிய கொள்முதலுக்கான திட்டங்கள் ஒவ்வொரு நாளும் கசிந்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, விமானத்துறைப் பத்திரிகையான Flug Revue வெள்ளியன்று இராணுவம் Polaris aerospace நிறுவனத்திடம் 'Aurora' ஹைப்பர்சோனிக் அமைப்பின் ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கி, பறப்பதற்காகச் சோதித்துள்ளதாக அறிவித்தது. உற்பத்தியாளரின் கூற்றுப்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பல்தேவை விண்வெளி விமானம், 'பல டன்களின் பாவனைப்பொருட்களை ஏற்றும் திறன்' கொண்ட 'அதிகூடிய உயரம் அடையும்/ஹைப்பர்சோனிக் நடவடிக்கை' உட்பட பல்வேறு வகையான 'பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு' பயன்படுத்தப்படலாம்.