முன்னோக்கு

பொலிஸ் வன்முறை எல்லா இன, வம்சாவழி உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

  • சான் பெர்னார்டினோ உள்ளாட்சியின் நகரசபை அதிகாரி ஷெரீஃபின் துணை அதிகாரியால் 91 வயதான பெத்தி பிரான்சுவா கலிபோர்னியாவின் விக்டர்வில் வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜனவரி 11 இல் இறந்து போனார். சட்டப்படி பார்வையற்றவரும், காது கேளாதவருமான பிரான்சுவா அதிகாரிகளைச் சுட சிறிய ரக துப்பாக்கியை நீட்டியதாகவும், ஆயுதத்தைக் கீழே போட அவருக்கு அவர்கள் உத்தரவிட்டு பின்னர், அந்த வயதான பெண்ணை சுடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை என்று பொலிஸ் வாதிடுகிறது. அங்கே யாரோ ஊடுருவி இருப்பதாக கருதி பயந்து, உதவி தேவைப்படுவதாக பிரான்சுவா பொலிசை அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார்.
  • மார்ச் 11 இல் நியூயோர்க்கின் சைராகியூஸில் 17 வயதான ஜுட்சன் அல்பாமுக்காக மெழுகுவர்த்தி ஏந்திய விழிப்புணர்வு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது, அவர் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் புறநகர் டிவெட்டில் உள்ள அவர் வீட்டுக்கருகே பொலிஸால் கொல்லப்பட்டார். மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் அல்பாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பொலிஸ் தகவல்களின்படி, அந்த பதின்ம வயது இளைஞர் ஒரு கறுப்பு நிற கைத்துப்பாக்கியைக் காட்டி மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கி உலோக BB தோட்டாக்களை சுட்டதாகவும், சிறிது தூரம் ஓடி விரட்டிய பின்னர் அதை கீழே போடுமாறு அவர்களின் உத்தரவுகளை அவர் மறுத்ததால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அல்பாமுக்கு குழந்தையிலிருந்தே ODD (Oppositional Defiant Disorder) எனப்படும் எதிர்க்கும் மனோநிலை நோய் மற்றும் Asperger’s syndrome எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, அவர் மனோரீதியில் குழம்பி மனக்கவலை அல்லது அவதிகளுக்கு உள்ளாகும் போதெல்லாம் அவர் குடும்பத்தினர் அவ்வப்போது பொலிஸை அழைப்பார்கள் என்பதால் டிவிட் பொலிஸ் துறைக்கு அவர் நன்கறியப்பட்டவராக இருந்தார்.
  • அன் அருன்டெல் உள்ளாட்சி பொலிஸ் அதிகாரிகள், மார்ச் 18 இல், மேரிலாந்தின் பசடேனாவில் 79 வயதான லியோனார்ட் ஜான் போபாவை அவர் வீட்டில் கொன்றனர். போபா தொலைபேசியில் மருத்துவப் பணியாளரை அழைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதை அடுத்து ஒரு மருத்துவ மறுவாழ்வு அமைப்பின் உறுப்பினர் உடல்நல பரிசோதனைக்காக பொலிஸைத் துணைக்கு அழைத்திருந்தார். பூட்டாத கதவு வழியாக போபாவின் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ், மெத்தைக்கு நடுவில் ஒரு துப்பாக்கியோடு அவர் படுக்கையில் அமர்ந்திருப்பதைப் கண்டது. நிலைமையின் "தீவிரத்தைக் குறைக்க" முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் போபா துப்பாக்கியைத் தூக்கியதும் அந்த அதிகாரி "தன் உயிருக்கு உடனடி ஆபத்து இருந்ததால் அஞ்சி, அந்த வயதான முதியவரை அவர் படுக்கையிலேயே சுட்டுக் கொல்ல வேண்டியதாகி விட்டதாக பொலிஸ் கூறுகிறது.

இந்த ஒவ்வொரு படுகொலையிலும், பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளை இனத்தவர்களாவர். இந்த துயர மரணங்கள் ஒவ்வொன்றும் தேசிய ஊடகங்களில் அறிவிக்கப்படவே இல்லை, அந்த சம்பவங்களைக் குறித்த பொலிஸ் விபரங்கள் சவால் செய்யப்படவில்லை. பொலிஸ் அவர்களின் உயிருக்கு அஞ்சி, தற்காப்புக்காக கொல்ல வேண்டியிருந்ததாக கூறப்படும் பொலிஸின் வாதங்கள் அங்கே கேள்விக்குட்படுத்தப்படவில்லை. இந்த படுகொலைகள் ஏன் ஒழுங்கமைப்போடு நடந்துள்ளன, இந்த சம்பவங்களை வேறு விதத்தில் கையாண்டிருக்க முடியுமா என்பதும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

ஏப்ரல் 14 நிலவரப்படி, அமெரிக்கா முழுவதிலும் 2021 இல் குறைந்தது 265 பொலிஸ் படுகொலைகள் நடந்துள்ளன. பொலிஸ் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் இடைவிடாது கொன்று குவிக்கிறது, ஒருவருக்குப் பின் ஒருவர் கொல்லப்பட்டதன் மீது மக்கள் போராட்டங்களும் சீற்றங்களும் இருந்தாலும், அதற்கு மத்தியிலும் இந்த கொலை எண்ணிக்கை பல ஆண்டுகளாக ஒரே சீராக இருந்து வருகிறது.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கான நீதி விசாரணையின் போது பிலடெல்பியா போலீசார் ஒருவரைத் தடுக்கிறார்கள், பிலடெல்பியா எதிர்ப்பு, மே 30, 2020. (AP Photo/Matt Rourke)

மின்னிசோட்டாவின் மினெயாபொலிஸ் முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரிக் சோவன், வெள்ளையினத்தவரான இவர், ஒரு கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளோய்டை படுகொலை செய்ததற்காக அவர் மீதான வழக்கு, இப்போது நீதி விசாரணைக் குழுவின் விசாரணையில் இருக்கும் இது, அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை நிகழ்வுபோக்கை ஆராய்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சோவனின் ஈவிரக்கமற்ற படுகொலை மீதான கொடூர தடயவியல் மீளறிக்கை இந்த பிரச்சினையை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இனம் மற்றும் பொலிஸிற்கு இடையே நாடு ஒரு "தேசிய துவேஷத்தை" அனுபவித்து வருவதாக பிரதான ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும் அறிவிக்கின்ற அதேவேளையில், அவர்கள் எல்லா இன வம்சாவழி பின்னணி கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒதுக்கிவிட்டு, பொலிஸின் தடையற்ற கொடூர ஆட்சிமுறையை மொத்தமாக இனப் பிரச்சினை என்பதாக சித்தரிக்கின்றனர்.

CNN நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் குவாமோ, வெள்ளிக்கிழமை இரவு ஒரு தனிநபர் விரிவுரையின் போது, "வெள்ளை இனத்தவர்களின் குழந்தைகள் கொல்லப்படத் தொடங்கும் போது தான்" பொலிஸ் சீர்திருத்தம் நடக்கும் என்றார். அந்த அறிவற்ற சோம்பேறி செய்தி தொகுப்பாளர் ஏதாவது ஆராய்ச்சி செய்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை "வெள்ளையின குழந்தைகள்" சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். மார்ச் 19 இல் டென்னசியின் சட்டநூகாவில் பொலிஸால் கொல்லப்பட்ட வெள்ளை இனத்தவரான 29 வயது மைக்கெல் டெக்ஸ்டெர் ஜென்கின்ஸ் (Mykel Dexter Jenkins) என்பவரின் பெயரைக் கூகுளில் ஒருவர் தேடினால், அவர் மரணத்திற்குப் பின்னர் நிறுவப்பட்ட விருப்பப் பக்கத்தில் அவர் குடும்பமும் நண்பர்களும் பதிவிட்டிருக்கும் மனதைக் குடையும் பதிவுகளை வாசிக்கலாம்:

“என் அன்புக்குரிய மகனுக்கு! உன்னை நேசிக்கிறேன், எப்போதும் உன்னை என் இதயத்தில் வைத்திருப்பேன்! உன்னை விரும்புகிறேன்! இப்படிக்கு அம்மா”

"சகோதரரே, எங்கள் மீது தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருங்கள்"

"மைகெல் ஜென்கின்ஸ் எங்கள் வாழ்வில் நிறைய பரிசுகளை கொண்டு வந்தார். அவரை ஒருபோதும் மறக்க மாட்டோம்! அவர் எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாகவும், வாழ்க்கை நிறைந்தவராகவும் இருந்தார். அவர் யாரையும் சிரிக்க வைத்து விடுவார்!”

“நீ ஓர் உண்மையான நண்பன் மைக்கல், நான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன்! நான் உன்னை நேசிக்கிறேன், நாம் மீண்டும் சந்திக்கும் வரை உன் ஆன்மா அமைதியில் இருக்கட்டும். நான் விடைபெறவில்லை மீண்டும் பின்னர் சந்திப்போம்!!!”

“இனிய சகோதரனே, வாழ்க்கையெனும் இந்த மரம் உனக்கானது. உன்னை மிகவும் நேசித்தவர்களைப் பார்ப்பதற்காக அதன் உச்சியில் நீ ஏறுவதற்காக அது இந்தளவுக்கு பெரிதாக வளர்ந்திருக்கிறது.”

பாதிக்கப்பட்டவர் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்ற பெயரில் இருந்தாலும் சரி அல்லது மைக்கெல் ஜென்கின்ஸ் என்ற பெயரில் இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவரின் தோல் நிறம் வெள்ளையாக இருந்தாலும் சரி அல்லது கருப்பாக இருந்தாலும் சரி, பொறுப்பற்ற பொலிஸ் வன்முறை ஆழ்ந்த ஆறாத வடுக்களையே ஏற்படுத்துகிறது.

ஆனால் தேசிய ஊடகங்களில் பொலிஸ் படுகொலைகளின் விபரங்கள் இந்த விதத்தில் முன்வைக்கப்படுவதில்லை.

ஒரு இனவாத முப்பட்டகத்தின் வழியாக வரலாறைப் பொய்மைப்படுத்தும் திட்டமிட்ட பிரச்சாரத்தில் முன்னிலையில் இருக்கும் நியூ யோர்க் டைம்ஸ், அந்த பத்திரிகையின் தேசிய இன செய்தியாளரான ஜோன் எலிகன் இணைந்து எழுதிய, தொடரும் பொலிஸ் வன்முறை தொற்றுநோய் மீதான ஒரு பகுப்பாய்வை சனிக்கிழமை பிரசுரித்தது, அது பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் மீது ஒருமுனைப்படுவதுடன், பொலிஸால் கொல்லப்பட்டவர்களில் மிக அதிகமானவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்ற உண்மையை சூசகமாக மட்டுமே குறிப்பிடுகிறது. பொலிஸ் வன்முறையைப் பற்றி டைம்ஸ் இன் செய்திகளை வாசிக்கும் ஒரு சாதாரண வாசகர், பொலிஸால் கொல்லப்பட்ட எல்லோருமே இனரீதியில் சிறுபான்மையினர் என்ற எண்ணத்திற்கு வந்துவிடுவார்கள்.

வெள்ளையினத் தொழிலாளர்களும் இளைஞர்களும் கொல்லப்படுவதன் மீது தேசிய ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும் வேண்டுமென்றே மவுனமாக இருப்பது, அவர்கள் சட்டபூர்வமாகவே கொல்லப்படுகிறார்கள் என்பதைப் போலவும், அதை யாரும் கவனிக்க வேண்டியதில்லை என்பதைப் போலவும் அர்த்தப்படுத்துகிறது. பொலிஸ் வன்முறையை, கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளை இனத்தவர்களின் ஓர் இனப்பிரச்சினையாக முன்வைத்து, ஊடகங்கள், கொல்லப்படுபவர்களின் சமூக பொருளாதார பின்னணி மற்றும் அவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற சமூக செயல்முறைகளை மூடிமறைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் நோக்கம் கொள்கின்றன.

வாஷிங்டன் போஸ்ட் சேகரித்த தகவல்கள், ஜனவரி 2, 2015 மற்றும் ஏப்ரல் 14, 2021 க்கு இடையிலான காலகட்டத்தில் 6,214 பொலிஸ் படுகொலைகளை ஆவணப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெருவாரியானவர்கள் ஆண்கள் (95 சதவீதம்), அதுவும் பெரும்பான்மையாக வெள்ளை இனத்தவர்கள் (46 சதவீதம்). கறுப்பினத்தவர்கள் இரண்டாவது பெரிய குழுவில் (24 சதவீதம்) உள்ளனர், அதை தொடர்ந்து ஹிஸ்பானியர்கள் (17 சதவீதம்), ஆசியர்கள் (1.6 சதவீதம்), பூர்வீக அமெரிக்கர்கள் (1.4 சதவீதம்), ஏனைய அனைவரும் (0.7 சதவீதம்) உள்ளனர். பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் சராசரி வயது 37 ஆக உள்ளது. ஐந்து சம்பவங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், மனநோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருந்திருப்பார்.

பொலிஸ் அறிக்கைகளை நம்பப்பட வேண்டுமானால், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கி அல்லது கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் மற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பீர் பாட்டிலோ, ஒரு பேனா, தொலைநோக்கி, குளவி விரட்டும் தெளிப்பான் அல்லது ஒரு சங்கிலியை வைத்திருந்தனர். குறைந்தது 207 பேர், பொம்மை ஆயுதம் வைத்திருந்த போது, கொல்லப்பட்டிருந்தனர். பல சம்பவங்களில் இந்த படுகொலைகள் "பொலிஸ் அதிகாரியால் ஏற்பட்ட தற்கொலை” என்பதாக நியாயப்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 7 சதவீதம் பேர் நிராயுதபாணியாக இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பல பொலிஸ் படுகொலைகளில் இனவாதம் என்பது ஒரு காரணியாக இருக்கிறது, மேலும் கறுப்பினத்தவர்களும் பூர்வீக அமெரிக்கர்களும் தேசிய மக்கள்தொகையில் அவர்களின் பங்கிற்கு விகிதாசாரமற்ற விதத்தில் கொல்லப்படுகின்றனர் என்பதும் உண்மையில் சேர்கிறது தான். ஆனால், பொலிஸால் கொல்லப்படுபவர்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் உள்ளாட்சிகளின் பொருளாதார மற்றும் சமூக அமைவிடங்களைக் கணக்கில் எடுக்கும் போது, ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் கவனத்தைக் குவிக்கும் வெளிப்படையான இன வேற்றுமைகள் என்பது பெரிதும் மறைந்து விடுகிறது என்பதை பொலிஸ் வன்முறை பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் முந்தைய பகுப்பாய்வு கண்டறிந்தது.

தோல் நிறம், வம்சாவழி, பாலினம் மற்றும் தேசியம் என எதுவாக இருந்தாலும் பெருவாரியாக தொழிலாளர்களும் இளைஞர்களும் தான் பொலிஸ் தாக்குதலுக்குப் பலிக்கடா ஆக்கப்படுகிறார்கள். இந்த நிகழ்வுப்போக்கு அமெரிக்காவின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் துணைவிளைவாகும்.

அமெரிக்க சமூகம் அளப்பரிய சமத்துவமின்மையால் வரையறுக்கப்படுகிறது. வெறும் 664 பில்லியனர்கள் 4.1 ட்ரில்லியன் டாலரைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், இது சுமார் 165 மில்லியன் அடிமட்ட மக்களின் 2.4 ட்ரில்லியன் டாலரை விட மூன்றில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அல்லது அவர்களின் கூலிகள் குறைக்கப்பட்டதால், அதேவேளையில் பங்குச் சந்தைகள் உயர்ந்து (இதற்காக CARES சட்டத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும்) பில்லியனர்களின் செல்வவளத்தைச் சாதனை உயரங்களுக்கு உயர்த்தியதால், இந்த தொற்றுநோயின் போது சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்காக மைல் கணக்கில் நீண்ட உணவு வரிசைகளில் நிற்கின்றனர், இதில் பலர் முதல்முறையாக உதவி கேட்டு நிற்கின்றனர்.

பிரெடெரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டதைப் போல, பொலிஸ் என்பது முதலாளித்துவ அமைப்பையும் அது உருவாக்கும் சமத்துவமின்மையையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட “ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புகள்” ஆகும். இதன் பல அதிகாரிகள் மத்திய கிழக்கில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஏகாதிபத்திய போரின் முன்னாள் படைவீரர்களாக இருந்தவர்கள், பொலிஸ் துறைக்குப் போர் ஆயுதங்கள் வழங்கப்பட்டு அவற்றைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சி ஒடுக்கும் அனுபவத்துடன் சேர்ந்து, படுகொலை செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வறிய பகுதிகளிலும் எழும் அதிருப்தி மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்கவும் போராட்டங்களை ஒடுக்கவும், வேலைநிறுத்தங்களை முறிக்கவும் முதலாளித்துவவாதிகளால் நிலைநிறுத்தப்படும் பொலிஸ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதல் பாதுகாப்பு வரிசையாகும்.

பொலிஸ் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, பொலிஸ் எதைப் பாதுகாக்கிறதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமாகும். பொலிஸ் வன்முறை மற்றும் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க நனவு வளர்க்கப்பட வேண்டும். சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ உயரடுக்கிற்காக அல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்காக அதை மறுஒழுங்கமைப்பு செய்யும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கமே அதிகாரத்தைக் கைப்பற்றும் போது தான் மட்டுமே பொலிஸ் படுகொலைகள் முடிவுக்கு வரும்.

Loading